4.22.2024

பதிவு. 83. கிடங்குத் தெரு.

 கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ்.

பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்து முடித்தேன். சில படைப்புகளை தேடி சென்று படிக்கும்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். ஆனால் இந்த நாவல் அப்படி என்னை ஏமாற்றவில்லை. தீவிர இலக்கிய வாசகன் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு நாள் இதை படிக்காமல் இருந்து இருக்கிறேனே என்று என்மீதே எனக்கு கோபம்தான் வந்தது.
இந்திய பிரிவினை சார்ந்து தமிழில் நேரடியாக பதிவு செய்த நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் பாகிஸ்தானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்த சிந்தி இன மக்களின் வாழ்க்கை குறிப்புகள் இந்த நாவலில் இருக்கிறது. குடோன் ஸ்ட்ரீட் என்று அறியப்பட்ட கிடங்குத் தெருவின் வரலாற்றையும், அங்கு முதலாளிகளாகவும் தொழிலாளிகளாவும் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்களின் கதைகளையும் இந்த நாவல் சிறப்பாக பதிவு செய்துள்ளது.
ராஜா என்ற தொழிலாளியின் வாழ்க்கை கதையாக சொல்லப்படும் இந்த நாவல் ஒருவகையில் சிந்தி இன மக்களின் முன்னோர்களின் அகதி வாழ்வையும், கிடங்கு தெரு முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களின் வாழ்வையும், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட முதலாளிகளின் வாழ்வையும் சுருக்காமாகவும் அதேசமயம் வீரியமாகவும் சொல்கிறது.
கிடங்குத் தெருவில் விற்பனை பிரதிநிதியாக இருக்கும் ராஜாவுக்கு அவன் விரும்பிய காதலும் காமமும் கிடைக்க வில்லை. தனிமையே அவன் துணைவன். ராஜா பல எளிய மனிதர்களின் பிரதிநிதியாகவே இருக்கிறான். இன்றும் பணம் சம்பாதிக்காததினால் காதலும் காமமும் கைக்கூடாமல் வெறுமையோடு அலையும் மனிதர்கள் ஏராளம். ஏராளம். வறுமை துரத்தும் வாழ்க்கையில் கலையும் இலக்கியமும் இல்லாமல் பலர் வாழ்ந்து மடிகிறார்கள். வறுமையிலும் நான் கலா ரசிகன், இலக்கிய உபாசகன் என்று ஒருவன் நினைத்தால் காலம் அவனை சும்மா விட்டுவிடுமா என்ன.. எத்தனை இழப்புகள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள் என்ற பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.
கிரேக்க நாடகத்தில் துன்பவியல் நாடகம் என்று வகமை உண்டாம். அதேபோல் நாவலில் வகமையை ஏற்படுத்தினால் கிடங்குத் தெரு ஒரு துன்பவியல் நாவல் என்றே சொல்வேன். மார்க்சிய பார்வையில் இந்த நாவல் உதிரி தொழிலார்களின் வாழ்வை சொல்கிறது என்றும் சொல்லலாம். பணமில்ல மனிதனின் காதல், காமம் சார்ந்து அவனுக்குள் எழும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சொல்லும் உளவியல் நாவல் என்றும் சொல்லலாம். இப்படி எல்லாவகையில் பார்க்க படிக்க தகுந்த படைப்பாக இந்த நாவல் இருக்கிறது.
செந்தூரம் ஜெகதீஷின் மொழிநடை எளிமையாகவும் தத்துவார்த்தம் நிரம்பியதாகவும் இருக்கிறது. எளிய சொற்களில் வலிமிகுந்த வாழ்வை எழுதிச் செல்கிறார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றிகளும்.
நாவலை சிறப்பான முறையில் JAIRIGI பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.


06.04.2024.

துளி.394.

ஒளிரும் கண்கள் ஒளிரும் கன்னம் ஒளிரும் நாசி ஒளிரும் இதழ்கள் ஒளிரும் சங்கு கழுத்து

எல்லாவற்றையும்
ஒளிர வைத்த நீ
உள்ளத்தை மட்டும்
ஏன் ஒளித்து
வைத்திருக்கிறாய்... 03.04.2024.

பதிவு. 82.

 ஏ.ஆர்.ரஹ்மான் (நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்) - விஜய் மகேந்திரன்.

நண்பர் விஜய் இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்யும்போது இதை “நீங்க ஒரே மூச்சில் படித்து விடுவீர்கள், மிகவும் சுவராசியாமானது” என்றார். இதை அப்போது நான் நம்பவில்லை, எல்லோரும் தம் படைப்புகள் குறித்து சொல்லும் வார்த்தை என்றே எண்ணினேன். ஆனால் இப்போது அவர் சொன்ன வார்த்தைகள் உண்மை என்று ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த புத்தகத்தை இரண்டு அமர்வில் படித்து முடித்தேன். ஏனேனில் உடனே அந்த உலகத்தை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான். இல்லையெனில் நானும் ஒரே மூச்சி படித்து முடித்திருக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட, நமக்கு நேரடியாக தெரிந்த அவரது இசைப்பயணம் குறித்த செய்திகள்தான் இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் விஜய் மகேந்திரன் தனித்து நிற்கிறார். நாம் கேள்வி படாத செய்திகளே இல்லையா என்றால் அதுவும் இருக்கிறது.
ஏ.ஆர்.ஆர்-ன் இசை மேதமைகளை வெளிப்படுத்தும் தகவல்கள், தனி மனிதராக அவர் ஒளிரும் தருணங்கள் என அனைத்தையும் மிக எளிமையாகவும் அழகாவும் தொகுத்து விஜய் மகேந்திரன் தந்திருக்கிறார். இந்த புத்தகம் பல பதிப்புகளை கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் விஜய் மகேந்திரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.


31.03.2024.

துளி. 393.

இருளையே வாழ்வாக கொண்டவன் மீது வெளிச்சத்தை பொழிகிறது நிலா. 24.03.2024.

துளி. 392.

ஊதா பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு

கருப்பு
நீலம்
கிளிப்பச்சை
ரத்த சிவப்பு
ஆகய நீலம்
என
எண்ணிலடங்கா வண்ணங்களில்
உன் உடைகளின்
வண்ணம் மாறிக்கொண்டே இருக்கிறது
ஏழு வண்ணங்களை மட்டுமே
கொண்ட வானவில்லை தோற்கடிக்கிறாய் நீ. 16.03.2024.

துளி. 391.

 இது என் தனிப்பட்ட கருத்து

நம் இருவருக்கும்
இடையேயான விவாதத்தில்
அது எதைப்பற்றியதாக
இருந்த போதிலும்
எதாவது ஒரு புள்ளியில்
நீ சொல்கிறாய்
இது என் தனிப்பட்ட கருத்து.
அப்படி நீ சொல்வதற்கு காரணம்
நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
என்பதினாலா இல்லை
அதை எனக்கு புரிய வைக்கமுடியாது
என்ற புரிதலா அல்லது
அது தனித்துவமானது
எல்லோருக்கும் புரியாது
என நம்புவதினாலா..
அது எப்படி இருப்பினும்
நமக்குள் இருப்பதாக நம்பிய
கருத்தொற்றுமை என்ற பிம்பம்
விழுந்து நொறுங்கவே செய்கிறது. 05.03.2024.

2.29.2024

துளி. 390.

முரண்

கண நேரத்தில் கைவிடுகிறேன்
நெடும் காலம் தேடி திரிந்து கைக்கொண்ட பொருளை. - 28.02.2024.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...