6.30.2025

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ்.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பிடித்துபோனது. அந்த சிறுகதையை சில நண்பர்களுக்கு கூட பரிந்துரை செய்தேன். அவர்களுக்கும் அந்த கதையை படித்துவிட்டு பிடித்து இருக்கிறது என்றார்கள்.
அதன்பின் அந்த ஆசிரியரின் மற்ற கதைகளை படிக்க வேண்டும் என்ற ஆவலில் இணையத்தில் தேடும்போது “நெட்டுயிர்ப்பு” என்ற சிறுகதை தொகுப்பை கனலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது தெரியவந்தது. அந்த புத்தகத்தை தேடிப்போனால் அது விற்பனையில் இல்லை. சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கலாம் என தேடிப்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை.
எதிர்பாராத விதமாக கலப்பை பதிப்பகத்திற்கு ஒரு புத்தகம் வாங்க சென்றபோது இந்த புத்தகம் பற்றி விசாரித்தேன். உடனே தோழர் ராமசாமி தேடிக்கண்டு பிடித்து கொடுத்தார். நீண்ட நாட்களாக தேடிய புத்தகம் கிடைத்த மகிழ்ச்சியில் உடனே படிக்க தொடங்கினேன். ஆனால் உடனே படித்து முடிக்காமல் ஒவ்வொரு கதை படித்தபின்புமும் அது பற்றி மனதில் மறுபடியும் ஓட்டிப் பார்த்து, பார்த்து பத்து கதைகளையும் சுமார் இருபது நாட்களில் படித்து முடித்தேன்.
அம்ருதா பதிப்பகம் பிரபலமான சிறுகதை ஆசிரியர்களின் பத்து சிறுகதைகளை தேர்ந்தெடுத்து “முத்துக்கள் பத்து” என்ற வரிசையில் பல புத்தகங்கள் கொண்டுவந்துள்ளார்கள். அதுப்போல் ஹேமி கிருஷின் “நெட்டுயிர்ப்பு” சிறுகதை தொகுப்பை முத்துக்கள் பத்து என்றே அழைக்கலாம். இதிலுள்ள பத்து சிறுகதைகளும் சிறப்பாக உள்ளது. தமிழின் முக்கியமான சிறுகதை தொகுப்புகளில் இதுவும் என்று துணிந்து சொல்லலாம்.
நாடகம், சினிமா என அலைந்து வாழ்வை தொலைத்தவன், ஒரு மளிகை கடைக்காரனால் பலாத்காரம் செய்யப்பட்ட தெருவோர நாடோடி பெண், கடவுள் நம்பிக்கை இல்லாதுபோனதால் திருமண வாழ்வை இழந்த பெண், அக்காவின் திருமண வாழ்க்கைக்காக தன் வாழ்வை தொலைத்த பெண், சிறுவயதில் தாயை இழந்து தந்தையின் கொடுமையால் வாழ்வை தொலைத்த மகன் என இப்படியான சில மனிதர்களின் வாழ்வு சொல்லப்படுகிறது.
மேலும், தவறான நபரை காதலித்ததால் வாழ்வை தொலைத்த பெண், தன் வாழ்வு போல் மகளின் வாழ்வு இருந்துவிட கூடாது என்பதற்காக கணவனை விட்டு விலகும் தாய், தன் குடும்பத்தின் நலனுக்காக இரவு பகல் பாராது அலைந்து பணம் தேடும் குடும்ப தலைவன், குழைந்தைகளோடு குழந்தையாய் வளந்த சிறு பூனையின் வாழ்வு, நேர்த்தி கடனை அடைக்க அல்லல்படும் ஒரு அபலை பெண்ணின் வாழ்வு என பலவிதமான மனித உணர்வுகளை ஹேமி கிருஷ் மிக அருமையாக பதிவு செய்துள்ளார்.
நம்பிக்கையும் அவநம்பிக்கையும் மாறி மாறி மனிதனை இயக்குகிறது. அதைப்போலவே இந்த கதைகளில் சிலரின் தோல்வியையும் சிலரின் வெற்றியையும் நாம் காண முடிகிறது. ஆசிரியர் எந்த உணர்வை எழுதினாலும் மிக சுருக்கமாகவும் அதேசமயம் சொல்ல வந்ததை மிக தெளிவாகவும் சொல்லிவிடுகிறார். ஹேமி கிருஷின் எழுத்து மிகவும் சுவராசியமாக இருக்கிறது.

இந்த புத்தகத்தை கனலி பதிப்பகம் (முதல் பதிப்பு 2022) சிறப்பான அட்டை படத்துடன் வெளியிட்டுள்ளது.

- 24.06.2025.



 

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....