3.31.2018

துளி . 162

உத்வேகம் பெறுகிறேன் 
உண்மையை விளக்கும் 
உன் சொற்க்களால்...

                                      31.03.2018.

துளி . 161

                           தரிசனம்
நேற்று இரவு
என் அறைக்கு
கடவுள் வந்திருந்தார்

சாப்பாட்டு நேரம் என்பதால் 
சாப்பிடலாமே என்றேன்

பேராவலோடு கேட்டார்
இட்லி கிடைக்குமா

நேற்றுதான் இட்லி செய்தேன் 
அதனால் இன்று 
உப்புமா செய்துள்ளேன்

கடவுள் தயக்கத்தோடு
என்னை பார்த்தார்

உப்புமா உடலுக்கு நல்லது 
சாப்பிடுங்கள் என்றேன்
உடனே உட்கார்ந்து விட்டார் 
சாப்பாட்டு தட்டு முன்

பரிமாறிக் கொண்டிருக்கும்
போது கடவுள் கேட்டார்
தொட்டுக்கொள்ள
வாழைப்பழம்
கிடைக்குமா

நாட்டு சக்கரையை
தூவியபடி சொன்னேன்
அருமையாக இருக்கும் சாப்பிடுங்கள்

வேகமாக சாப்பிட
ஆரம்பித்தார் கடவுள்
தாளமுடியா பசிபோலும்

சாப்பிட்டு முடித்து ஏப்பம் 
விட்டபடியே தயக்கத்தோடு
கடவுள் கேட்டார்
பாலில்லா டீ அல்லது காபி கிடைக்குமா

அதைவிடவும் இது நல்லது
என்றபடி வெந்நீர் டம்ளரை
அவர் முன் வைத்தேன்

மிதமான சூட்டிலிருந்த
வெந்நீரை நிதானமாக
குடித்து முடித்ததும்
சிரித்தபடியே கேட்டார்

என் கோரிக்கைகள்
எதையுமே நிறைவேற்ற
மாட்டாயா நீ

சிரித்தபடியே நானும்
கடவுளிடம் கேட்டேன்

வழிப்பாட்டுத் தலங்கள் 
அனைத்திலும் உம்மை
நோக்கி வைக்கப்பட்ட 
கோரிக்கைகளையெல்லாம் 
நிறைவேற்றி விட்டீரோ

கடவுள் நிதானமாக
என்னை மேலும்
கீழும் பார்த்தார்

உம்மோடு நிறைய
உரையாட வந்ததேன்
ஒற்றை கேள்வியால் 
எல்லாவற்றையும் 
நாசமாக்கி விட்டாய் வருகிறேன்
உணவுக்கு நன்றி 
என்றபடியே கதவை அடித்து 
சாத்திவிட்டு வெளியேறினார் கடவுள்

விக்கித்து போய்நின்றேன்
அடுத்த முறை வரும்போது 
கடவுளிடம் கேட்க வேண்டும்

நீண்ட உரையாடலுக்கா
வந்தீரா இல்லை
நீண்ட உபதேசம் செய்ய
வந்தீரா என்று....

                                                      30.03.2018

துளி . 160

          இரு துருவங்கள்

சந்தேகிக்கிறாய் நீ
உண்மையென நான்
நம்புவதையெல்லாம் ...

சந்தேகமேயில்லாமல்
நம்புகிறேன் நான்
நீ நம்புவதெல்லாம்
உண்மையல்ல என்று...

                                           29.03.2018

பதிவு . 06


புத்தக விளம்பரம் வரும்போதே இதை வாசித்துவிட வேண்டும் என நினைத்த ஒரு புத்தகத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் வாசித்து முடித்தேன். தமிழில் நிறைய திரைக்கதை புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அவையெல்லாம் பெரும்பாலும் நாம் பார்க்கும் படத்தின் எழுத்து வடிவமாகவே இருக்கும். அந்த படம் உருவான விதம் பற்றிய தகவல்கள் இல்லாமலே இருக்கும். இதிலிருந்து முற்றிலும் வேறுபடும் நூல் மிஷ்கினின் ’’ஓநாயும் ஆட்டுக்குட்டியும் – திரையாக்கமும் திரைக்கதையும்’’.
மிஷ்கின் இந்த புத்தகத்தில் முதல் காட்சியில் தொடங்கி கடைசி காட்சிவரை ஒவ்வொருக்காட்சியையும் எப்படி எழுதினேன், எப்படி படமாக்கினேன் என்பதை தெளிவாக விளக்கி சொல்லியுள்ளார். ஒருக்காட்சியில் நடிகனை ஏன் அங்கு நிற்கவைத்தேன், ஏன் அதுமாதிரியான உடல்மொழியை செய்ய சொன்னேன், ஒரு நடிகன் இயக்குனர் எதிர் பார்க்கும் நடிப்பை வெளிப்படுத்த எப்படி இயங்க வேண்டும், குழந்தைகளிடமிருந்து நாம் எதிர்பார்க்கும் நடிப்பை எப்படி வெளிக்கொண்டு வருவது, அந்த கதாபாத்திரத்துக்கு ஏன் அந்த பெயரை வைத்தேன், கதாபாத்திரத்தின் உளவியலுக்கும் செயலுக்கும் உள்ள உறவு என்ன, படபிடிப்புதளத்தில் ஏற்படும் எதிர்பாரா இடர்பாடுகளை எப்படி எதிர்கொள்வது என நேரில் உரையாடுவது போலவே எளிமையாக எழுதிசெல்கிறார்.
ஒரு காட்சியை விளக்கும் போது அந்த காட்சியின் தன்மையையோடு கூடிய தன் சொந்த கருத்துக்களையும், அந்த காட்சி மற்ற இயக்குனர்களிடமிருந்து எப்படி மாறுபடுகிறது என்றும் கூறுகிறார். இடையிடையே தன் ஆசான்கள் யார் யார் , அவர்களின் எந்த எந்த கருத்துகளோடு உடன் படுகிறேன், எதில் மாறுபடுகிறேன் என்பதையும் பதிவு செய்கிறார். ஒரு உதவி இயக்குனர் எப்படி சினிமாவைக் கற்றுக்கொள்ளவேண்டும் என்பதையும் கூறுகிறார்.
ஒரு சின்ன வசனத்தின் மூலம் எப்படி அரசியலை விமர்சிக்கிறேன், ஒரு சொல்மூலம் எப்படி என் பேரன்பை வெளிப்படுத்துகிறேன். பார்வையாளனுக்கு புரியாது என்று உடனிருப்பவர்கள் கூறும்போது அதை எப்படி எதிர்கொண்டேன் என தன் அனுபவங்களை முன் வைத்து விளக்குகிறார். இந்த புத்தகத்தின் மூலம் மிஷ்கினை பற்றியும் அவரது திரைப்பார்வை என்ன என்பது பற்றியும் இன்னும் நெருக்கமாக புரிந்துக்கொள்ளமுடிகிறது.
தமிழ் ஸ்டியோவின் உப அமைப்பான பேசாமொழி பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்நூலை வாசிப்பதற்கு முன்பு புத்தகத்தின் விலை அதிகமென தோன்றியது, வாசித்தப்பின் அந்தவிலை கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.
குறிப்பு :
1. புத்தகத்தின் விலை காரணமாகவே வாங்குவது தள்ளிக்கொண்டேபோனது. நல்வாய்ப்பாக இந்த புத்தாண்டு இரவு ப்யூர் சினிமா அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் இயக்குனர் மிஷ்கின் கையால் இந்த புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு அமைந்தது, அதற்கு காரணமான தமிழ் ஸ்டியோ அருணுக்கும், நல்ல சினிமா வரவேண்டும் என்ற நல்லெண்ணத்தின் காரணமாக நூலுக்கான பணத்தை கொடுத்து தன் பெயரைக்கூட வெளிப்படுத்திக் கொள்ள விரும்பாத அந்த வெளிநாட்டு வாழ் நண்பருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்...
2. இந்த நிகழ்வில் மிஷ்கினின் ஐந்து திரைக்கதை நூல்கள் பத்து நபர்களுக்கு இலவசமாக கொடுக்கப்பட்டது. நூல்களுக்கான பணத்தை வெளிநாட்டுவாழ் நண்பர் கொடுத்தார். பயனாளிகளை அருண் தேர்வு செய்தார்.

                                                                                                                                                                                                                             

26.03.2018


1

3.24.2018

துளி . 159

கனவுகளை 
விதைக்கிறேன்
தையல் உனக்காக....

                                       21.03.2018.

துளி . 158

அவமானத்தின் 
படிகளில் ஏறுகிறேன்
அசாதாரணத்தின் 
உச்சியை அடைய....

                                         21.03.2018.

துளி . 157

இதிகாச கதாப்பாத்திரத்தின் 
பெயர் தாங்கி நிகழ்கிறது
சாத்தானின் வருகை...

                                             20.03.2018.

துளி . 156

துண்டிக்கப்பட்டு 
வீழ்ந்தது சிலையின் 
தலை மட்டுமல்ல
தன்மானத்தின்
வீழ்ச்சியும்கூட ...

                                    20.03.2018.

திரை . 02

சென்ற வாரம் சவரக்கத்தி படம் பார்த்தேன். எனக்கு படம் பிடிக்கவில்லை. ஆனால் "ஏ தங்கக்கத்தி வெள்ளிக்கத்தி செம்புக்கத்தி இரும்புக்கத்தி சவரக்கத்தி ஈடாகுமா" பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தினம் இரண்டு அல்லது மூன்றுமுறை கேட்கிறேன், பலவித முகங்களை வைத்து காட்சிப்படுத்தப்பட்ட விதம் பற்றி வியக்குறேன். இணையத்தில் ஒரு வருடம் முன் பதிவேற்றம் செய்துள்ள இப்பாடலை இவ்வளவு காலதாமதமாக பார்க்க நேர்த்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.
இப்பாடல் எனக்கு ஒரு உலக சிறுகதையை நினைவூட்டுகிறது. அரசுக்கு எதிராக போராடும் போராளிகளை வேட்டையாடும் வேலைக்கு வந்துள்ள இராணுவ வீரன் அல்லது காவல்துறை அதிகாரி ஒருவன், போராளிகளின் ஆதரவாளர் என அறியப்பட்ட ஒரு சிகையலங்கார தொழிலாளியிடம் முகச்சவரம் செய்துக்கொள்ள வருவான். வந்திருப்பவன் யார்யென தெரிந்தும் அந்த சிகையலங்காரம் செய்யும் தொழிலாளி அவனுக்கு முகச்சவரம் செய்ய தொடங்குவார், அந்த அதிகாரியை தன் சவரக்கத்தியால் தொழிலாளி கொலை செய்ய போகிறாரா இல்லை அழகுப்படுத்தி அனுப்ப போகிறாரா என எதிர்பார்ப்புடன் செல்லும் வகையில் அந்த சிறுகதை எழுதப்பட்டிருக்கும்.
இந்த பாடலின் இடையில் வரும்
"கத்தி எதுக்குதான் தொப்புள் கொடி வெட்டத்தான்" வரியை மறுபடியும் மறுபடியும் நினைத்து பார்க்கிறேன். அது பலவிதமான சிந்தனைகளை தூண்டுகிறது. அந்த சிறுகதையிலும் அந்த சிகையலங்காரம் செய்யும் தொழிலாளி அந்த அதிகாரியை அழகுபடுத்தியே அனுப்புவார்.

 17.03.2018
YOUTUBE.COM
Song : Thangakathi Film : Savarakathi Year : 2016 Lyrics : Mysskin Music Director : Arrol Corelli Direction : G.…

துளி . 155

யாசகம் வேண்டி 
நீளும் கைகளை 
வெறுமனே கடந்து 
போகமுடியவில்லை 
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....


                                   14.03.2018.

3.12.2018

துளி . 154

கொடூரமாக
வேட்டையாட படுகிறேன் 
இரவு மிருகத்தால்....

                                        11.03.2018

துளி . 153

காதலிகள் இல்லா
நித்திய காதலன் 
அவன்....

                                  09.03.2018

துளி . 152

மிக சரியாக
செய்கிறாய்
நண்பா
மற்றவர்கள் 
செய்கையில்
எதையெல்லாம்
தவறு
சொன்னாயோ
அதையெல்லாம் ...
போதனை செய்வது
பெரும் போதை
போலும் உமக்கு...

                                      08.03.2018

உரையாடல் . 01

நபர் 1 : சகோ..அந்த படத்துல முதல் பாதி நேத்து பாத்துட்டேன் ... இன்னைக்கு அடுத்த பாதி பாத்துடுவேன்..
நபர் 2 : பாருங்க சகோ , அதுல பின்னியெடுத்திருப்பாரு, ரொம்ப impressive-ஆ பாத்தா... நாம தற்கொலை பண்ணிக்கலாம் ....
நபர் 1 : ஐயோ... சகோ.. நாம தற்கொலை பண்ணிக்க.. நம்மகிட்ட நிறைய காரணம் இருக்கே ... அத பாத்துட்டா தற்கொலை பண்ணிக்கனும்..
நபர் 2 : நிறைய கேள்விகள் கேட்டிருப்பாரு... எல்லாம் நம்மள நாமே கேட்டுக்க வேண்டிய கேள்விகள்...
நபர் 1 : சகோ.. இன்னைக்கு கண்டிப்ப முழுசா பாத்துடுறேன், நாளைக்கு நாம விரிவா பேசலாம்...
பின்குறிப்பு : இரு உதவி இயக்குனர்கள் ஒரு உலகம் பற்றி பேசியபோது...

                                                                                                                    06.03.2018

துளி . 151

ஒற்றை 
புன்னகையால் 
பல நூறு 
கனவுகளை 
உருக்குகிறாய்..

                                06.03.2018

துளி . 150

            தவிப்பு
தேடி அழிக்கிறேன்
அலைப்பேசியில்
மறுபடியும் பேசவிரும்பாத 
நபர்களின் பெயர்களை
எவ்வித நெருடலுமில்லாமல்
நீக்கி விடுகிறேன்
என்னை விலக்கி
சென்றவர்களின் பெயரையும்
செய்வதறியாது
திகைத்து நிற்கிறேன்
மரணித்தவரின்
எண்ணை கண்டதும் 

இனி பயனில்லை
என்றாலும் எளிதில்
நீக்க முடிவதில்லை
அந்த பெயரை...

                                             o5.03.2018.

3.03.2018

துளி . 149

பேரழகியின் 
விழிகள் 
பொழிகின்றன 
பேரன்பை....

                              03.03.2018

துளி . 148

          நிலா 

இருளை 
ஒளியாக்குகிறாய் 
உன் பேரழகால்...

                                  01.03.2018.

துளி . 147

ஈர்க்கப்படுவதைப் 
போலவே விலக்கவும் 
படுகிறேன் அன்பே
உன் பேரழகால்.....

                                      01.03.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...