10.08.2022

பதிவு. 62

 முன் கூறப்பட்ட சாவின் சரித்திரம் - காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்.

முதல் பகுதியை படிக்கும்போது பெரும் குழப்பமாக இருந்த இந்த குறுநாவல் மூன்றாவது பகுதியை படிக்கும்போதுதான் பிடிபட தொங்கியது.
அவர்கள் அவனைக் கொல்ல இருந்த அன்று... என்று தொடங்கும் நாவலின் முதல் பகுதியில் கொலை செய்யப்பட்டவனின் வாழ்வையும், இரண்டாம் பகுதியில் கொலைக்கான காரணத்தையும், மூன்றாவது பகுதியில் கொன்றவர்களைப் பற்றியும், நான்காவது பகுதில் அந்த கொலைக்கான நீதி விசாரணை எப்படி நடந்தது என்பது பற்றியும் கூறிவிட்டு இறுதி பகுதியில்தான் அவன் எப்படி கொலை செய்யப்படுகிறான் என்று விளக்கப்படுகிறது.
அவனை கொல்லபோவதாக அவர்கள் பொதுவெளியில் பலர் முன்னிலையில் கூறுகிறார்கள். ஆனால் யாராலும் அவனை காப்பாற்ற முடியாமல் போகிறது. அவனை காப்பாற்றுவதாக நினைத்து ஒருவர் செய்த செயல் அவன் எளிதாக கொல்லப்பட காரணமாகி போய்விடுகிறது. ஏன் இப்படி நடக்கிறது. எல்லாம் விதி(ஊழ்) என்பது இதுதானோ. இந்திய மனதுக்கு நெருக்கமான சிந்தனை.
கொல்லப்பட்ட அவன் பல குற்றங்கள் செயதவந்தான். ஆனால் அவன் கொலை செய்யப்படுவதற்கு காரணமான குற்றத்தை அவன் செய்தான் என்று இக்கதையில் உறுதியாக சொல்லப்படவில்லை. உழைப்பு பலன் கிடைக்கும் என்று நம்புவதுபோல் செய்த குற்றத்திற்காக தண்டனை கிடைக்கும் என்று நம்பிக்கை கொள்ள வேண்டுமோ.
அருமை செல்வமும் அசதாவும் சேர்ந்து நேரடியாக தமிழில் எழுதப்பட்டதை போன்ற நல்ல மொழிபெயர்ப்பை செய்துள்ளார்கள். அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
காலச்சுவடு பதிப்பகம் உலக கிளாசிக் நாவல் வரிசையில் இந்நாவலை சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டு உள்ளது. 07.10.2022.

பதிவு. 61

 எழுத்துக் கலை – விமலாதித்த மாமல்லன்.

இந்த புத்தகம் இணையத்தில் படைப்புகளை முன்வைத்து எழுதப்பட்ட எதிர்வினைகளின் தொகுப்பாகும்.
குறிப்பாக படைப்புகளில் மொழி எப்படி தவறாக பயன்படுத்தப் பட்டுள்ளது. படைப்பில் இருக்கும் தகவல் பிழைகள், வாக்கியத்தில் இருக்கும் தர்க்க பிழைகள் என எல்லாவற்றையும் சுட்டிக்காட்டி அது எப்படி எழுத பட்டிருக்க வேண்டும் என்பதை எளிமையாகவும் தேவையான அளவுக்கு விளக்கமாகவும் எழுதி இருக்கிறார்.
எஸ்.ராவின் ஆடுகளின் நடனம் மற்றும் புர்ரா, வண்ணநிலவனின் எஸ்தர், யூ.மா.வாசுகியின் வேட்டை, ஜி.குப்புசாமி சார்வாகன் கதை தொகுப்பு எழுதிய முன்னுரை, அழகியசிங்கரின் கட்டுரை ஒன்று என நாம் அறிந்த, படித்து வியந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களில் உள்ள குறைகளை நிறைகளை மிக அழகாக சுட்டிக்காட்டியுள்ளார். அது மொழியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற புரிதலை தருவதாக இருக்கிறது.
இந்த நூல் எழுத்துக் கலை சார்ந்து வாசகனின் புரிதலை இன்னும் கூடுதலாக்க உதவும் வகையில் எழுதியுள்ள ஆசிரியருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
சத்ரபதி வெளியீடு இந்த புத்தகத்தை சிறப்பாக வெளியிட்டுள்ளது. 03.10.2022.

துளி. 350

 உழைப்பு

உழைத்தால் எல்லோரும் உயரலாம்
என்பதெல்லாம் ஏமாற்று என்றவனுக்கு பதிலாக சொன்னேன்
இருக்கலாம் ஆனால்
நல்வழியோ தீயவழியோ
உழைக்காமல் ஒருவரும்
உயர்வது இல்லை. 18.09.2022.

துளி. 349.

அரை நிலவு.

அரைவட்ட நிலவை
மெல்ல மெல்ல
அணைத்து செல்கிறது
கருமேக கூட்டம்
அணைப்பு தோறும்
கண்மயங்கி கிறங்கியபின்
வெட்கத்தோடு ஒளிகிறது
அந்த அரைநிலவு. 16.09.2022.

பயணம். 01

 குன்றத்தூரும் சேக்கிழாரும்.

நேற்று நண்பரின் திருமண வரவேற்புக்காக குன்றத்தூர் சென்றேன். மண்டபத்தேடி சென்றுக்கொண்டு இருந்தபோது வழியில் ஒரு பெரிய குளத்தைப் பார்த்தேன். நீர் இல்லை இருந்தாலும் பார்க்க தூண்டியது. பக்கத்தில் எதாவது பழமையான கோவில் இருக்குமென நினைத்துக்கொண்டே நடந்தேன். நான் சாமி கும்பிடுவதில்லை என்றாலும் செல்லும் இடங்களில் இருக்கும் பழமையான அல்லது மக்கள் திரள் கூடக்கூடிய கோவில்களுக்கு செல்வதை பழக்கமாக கொண்டுள்ளவன்.
திருமண வரவேற்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது, இது என்ன கோவிலாக இருக்கும் போய் பார்க்கலாமா என யோசித்தப்படியே நடந்தேன். குளத்தினுள் ஒரு கோவில் இருக்கிறது. தூரத்தில் இருந்து பக்திப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. குளம் முடியும் இடத்தில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கோவிலைத்தேடி குளத்தின் பக்கவாட்டிலே சென்றேன். நான் சென்று சேர்ந்தது நாகேஸ்வரன் கோவில். இது எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கே என்று எண்ணியபடியே கோவிலை சுற்றி வந்தேன். மக்கள் கூட்டம் இல்லை. கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. காலை மாலை நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடம் என்று நினைத்தப்படியே கோவிலை விட்டு வெளியே வந்தேன்.
கோவிலுக்கு எதிரே அலங்கார மின்விளக்குகள். விரைவில் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதை சொல்லும் விளம்பர தட்டிகள் கண்ணில் பட்டது. பக்கத்தில் வேறு எதும் கோவில் இருக்கிறதா என்று பார்த்தவாறு நடந்தேன். சேக்கிழார் பெயரில் ஓர் கடை. பக்தி நூலகளை படிக்கும் இடம் என்று எதேதோ கண்ணில் படுகிறது. சற்று தூரம் நடந்ததும் சேக்கிழார் மணிமண்டபம் என்று ஓர் இடம் வந்தது. உள்ளே செல்லலாமா வேண்டாமா என ஒரு கணம் நிதானித்து பின் உள் சென்றேன்.
சேக்கிழார் மண்டபம் ஓர் பெரிய வளாகத்தினுள் தாரளமான இடவசதியோடு இருந்தது. உள்ளே சென்றேன். எதோ ஓர் பக்தி பாடலை ஓதுவார்கள் ஓதிய ஒலிகள் ஒலித்துக்கொண்டு இருந்தது. சுவர்களில் சேக்கிழாரின் வாழ்க்கை குறிப்புகள். ஒவ்வொன்றாக படித்தேன். குன்றத்தூரில்தான் சேக்கிழார் பிறந்துள்ளார். சோழமன்னனிடம் மந்திரியாக வேலைப் பார்த்துள்ளார். திருநாக்கேஸ்வரம் கோவிலைப்போலவே சிவனுக்கு ஆலையம் அமைத்து வட நாகேஸ்வரம் என பெயரிட்டுள்ளார்.
63 நாயன்மார்களின் கதைகளை சொல்லும் திருத்தொண்ட புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதிவரும் இவரே. அந்த அறுபத்து மூவரின் வரலாறை எழுத அவர் படித்த நூல்களின் விபரங்களை குறித்துள்ளார்கள். கடைசி குறிப்புக்கு முன்னுள்ள குறிப்பில் சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சிவனின் அடியார்களாக வாழமுடியும் என்று பெரிய புராணத்தை எழுதியவர் என்று சேக்கிழாரை புகழ்ந்து சொல்லிவிட்டு, அடுத்த குறிப்பில் இந்த மண்டபத்தையும் கோவிலையும் பராமரிப்பவர்கள் செங்குந்த மரபினர் என்று உரிமை கோரலை படிக்கும்போது மென்மையாக புன்னகைத்துக் கொண்டேன்.
சேக்கிழார் மணிமண்டப வளாகத்தினுள் ஒரு நூலகம், மற்றொரு தியான மண்டபம் சுற்றிலும் நல்ல நீளமான நடைப்பாதை, நடைப்பாதைக்கு பக்கத்தில் பசுமையான செடிகல், புற்கள் என நன்றாக பராமரித்து வைத்துள்ளார்கள்.
நண்பரின் மண்டபத்தை கண்டு பிடித்து பார்த்தால் இன்னும் மணமக்கள் வரவில்லை. மறுபடியும் பக்தி பாடல் ஒலிக்கும் திசைநோக்கி நடந்தேன். சிவாஜி கணேசனின் உருவம் பொதித்த சலூன் கடை, அகலமான வீதி, வீதியின் முடிவில் கோவில், வேறு ஒரு உலகத்திற்குள் வந்துவிட்டது போன்ற பிரமை எனக்கு. நாளைமறுநாள் நடக்க இருக்கும் முடமுழுக்கு விழாவிற்கா யாகம் வளர்க்கும் யாகசாலைக்குள் நுழைந்தேன். இப்போதுதான் தயார் செய்துகொண்டு இருந்தார்கள். சென்னைக்கு பக்கத்தில் இப்படி ஓர் ஆன்மீக பூமியா என வியந்தேன். எங்கும் மக்கள் கூட்டம். ஒருவர் மட்டும் செருப்பு காலோடு உலவிக்கொண்டு இருந்தார். மறதியில் வந்தவரா இல்லை மறுதலிக்க வந்தவரா தெரியவில்லை. அந்த சிறு கோவிலில் பூசை முடியும் தருவாயில் மக்கள் தீப ஆராதனையை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை வேடிக்கைப் பார்த்தபடி நான் வெளியேறி மண்டபத்தை நோக்கி நடந்தேன்.

07.09.2022.

பதிவு. 60

 புனலும் மணலும் – ஆ.மாதவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து வந்த லாரியிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அது நதியின் ரத்தமாகவே எனக்குப்பட்டது. அதன்பிறகே ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தேன்.
- ஒரு நேர்காணலில் தோழர் நல்லக்கண்ணு.
பல ஆண்டுகளாக படிக்க வேண்டும் என தேடிக்கொண்டிருந்த புனலும் மணலும் நாவலை இன்று படித்து முடிந்தேன். படிக்க வேண்டிய முதன்மையான தமிழ் நாவல்கள் என பலரின் பட்டியலில் இடம்பெற்ற நாவல் இது.
இந்த நாவலை படித்து முடித்ததும் தோழர் நல்லக்கண்ணு சொன்னதே என் நினைவுக்கு வந்தது. அவர் இதற்காக போராட ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே ஓடிக்கொண்டு இருக்கும் நதியிலிருந்து மணலை எடுத்து வந்து கரையில் குவித்து விற்பனை செய்துள்ளார்கள். அந்த தொழிலை மேற்பார்வையிடும் அங்குசாமி மூப்பனே இக்கதையின் நாயகன். அவன் மனைவி தங்கம்மை, தங்கம்மையின் முதல் திருமணத்தில் பிறந்த பங்கி, அங்குசாமியை போலவே அனாதையான தாமோதிரன் இந்த நான்கு கதாப்பாத்திரங்களை கொண்டு மனித மனதின் புதிர்களை ஆராய்கிறார் ஆ.மாதவன்.
சிறுவயதில் தூத்துக்குடியை விட்டு வெளியேறி உறவுகளின் தொடர்பு இல்லாத திருவனந்தபுரத்தில் மூட்டை தூக்கும் சுமையாளாக வாழ்வை துவங்கிய அங்குசாமி, வாலிபம் கடந்த வயதில் விதவை திருமணம் செய்துக்கொள்ளும் அவன், தன்னைப்போலவே தன்னிடம் வரும் தாமோதிரனை அரவணைத்துக் கொள்ளும் அவன், ஏன் பங்கியை மட்டும் கைவிடுகிறான். அவள் அழகாக இல்லை என்பது மட்டுதான் காரணமா. அங்குசாமியின் செயல் புதிராக இருக்கிறது.
ஆற்று மணலை அள்ளுகிறார்களே இதனால் என்ன அழிவு வருமோ என புலம்பவில்லை. போராடவில்லை. ஆனால் அதற்கு சாட்சியான படைப்பு இது. இன்று சுற்றுசூழல் சார்ந்து ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு இந்த படைப்பு ஆதார ஆவணமாகிறது.
ஆ.மாதவனின் மொழி மிகவும் யாதார்த்தமானது. திருவனந்தபுரத்து வரட்டாரத்தின் பேச்சு மொழி. எல்லாவற்றிருக்கும் மெளன சாட்சியாக இருப்பதை போன்ற அமைதியான மொழி. மிகவும் நிதானமாக செல்லும் ஆற்று நீரைப்போல் இந்த நாவல் நமக்குள் மிக நிதானமாக உள் நுழைகிறது. முடிவில் அது ஏற்படுத்தும் தாக்கம் தலைக்கீழானது.
இந்த நாவலின் முதல் பதிப்பு 1974-ல் வெளியாகியுள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகம் நவீன கிளாசிக் நாவல் வரிசையில் சிறப்பாக பதிப்பதித்து 2006-ல் வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் Livin -க்கு என் மனமார்ந்த நன்றிகள். 05.09.2022.

துளி. 348

யாருடைய வருகைக்காக காத்துக் கிடக்கின்றன இந்த பூக்கள். 26.08.2022.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...