8.16.2022

பதிவு. 59

வெட்டாட்டமும் நோட்டாவும்
நீண்ட நாட்களுக்கு பிறகு விறுவிறுப்பான ஒரு நாவலைப் அண்மையில் படித்து முடித்தேன். அந்த நாவல் ஷான் கருப்புசாமியின் “வெட்டாட்டம்”. இந்த புத்தகம் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 2017 ஜீலையில் வெளியாகி இருக்கிறது.
ஒரு துப்பறியும் கதையைப்போல் அடுத்த அடுத்த திருப்பங்கள் நிறைந்த கதை இது. திரைப்பட பாணியில் காட்சிகள் அடுக்கப்பட்டிருந்ததை நினைத்து வியந்து ஒரு நண்பரிடம் இந்த நாவல் குறித்து பேசினேன். இந்த கதையை ஏற்கனவே தமிழில் படமா எடுத்து விட்டார்கள் என்று அவர் சொன்னார். எனக்கு உடனே நாவலை முடித்துவிட்டு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. சுமார் ஒரு வார கால அளவில் நாவலை படித்து முடித்தேன். நாவல் அது எடுத்துக்கொண்ட தளத்திற்கு ஏற்ப சிறப்பாகவே எழுதப்பட்டிருந்தது. ஷானின் மொழிநடை மிக இயல்பாக, எந்த சிடுக்குகளும் இல்லாமல் இருந்தது.
இந்த நாவலைப் படமாக எடுக்கும்போது சிலவற்றை நீக்க வேண்டும், சிலவற்றை நீளமாக எழுத வேண்டும், சிலவற்றை முன்பே கூறவேண்டும் என்று என் மனதுக்குள் குறித்துக்கொண்டேன். அது என்ன என்பதை இறுதியில் எழுதுகிறேன்.
வெட்டாட்டம் நாவல் நோட்டா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் இயக்குனர் ஆனந்த் சங்கர். படத்தின் திரைக்கதையை இயக்குனரும் நாவலாசிரியரும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். நாவலுக்கு மிக நெருக்கமாகவே திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாவல் தந்த சுவாரசியத்தை படம் கொடுக்க வில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதில் ஒற்றை வரியில் சொல்லக்கூடியது அல்ல. ஆனால் இது ஏன் இப்படி நிகழ்ந்தது என யோசித்துப் பார்க்க நிறைய விசயங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
இது அந்த படத்தை குறைசொல்லும் நோக்கில் எழுதப்படவில்லை. நான் வியந்து படித்த பிரதி படமாகும்போது, ஏன் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற எண்ணத்தின் வெளிப்பாடகவே இதை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். நடிகர்கள் தேர்வில் விநோதன், கயல்விழி மற்றும் மகேந்திரன் பாத்திரங்களுக்கு பொருத்தமாக அமைந்ததுபோல் வருண், வாங் மற்றும் அவனுக்கு போன்றவர்களுக்கு அமையவில்லை. குறிப்பாக அவன் அடையாளம் ஏதுமில்ல கூலிக்கொலைக்காரன். அவனை வலிந்து முஸ்லீமாக காட்டியிருக்க தேவையில்லை. நர்மதாவை குழந்தையாக மாற்றியிருக்கவும் வேண்டியதில்லை. விநோதன் என்ற அரசியல்வாதியை இன்னும் உண்மைக்கு நெருக்கமான அரசியல்வாதியாயின் பிரதிநிதியாக உருவாக்கி இருக்கலாம்.
இப்போது நாவலை முடித்ததும் என்னுள் தோன்றிய எண்ணங்கள் :
1. மகேந்திரன் விநோதனின் கடந்த கால காதலை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக மகேந்திரன் மாற்று அரசியல் பார்வை உள்ளவர் என்றும் அந்த பார்வை என்ன என்பது அழுத்தமாக இருக்க வேண்டும்.
2. சுவாதியின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுதப்பட வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது ரொம்ப கெட்டவனாக தெரிந்த வருணின் வாழ்வை அவள் நெருக்கமாக பார்க்கும்போது, அவன் அப்படி ஆனதிற்கு அவன் மட்டுமே காரணமில்லை என்ற புரிதல் தோன்றி அதுபின் காதலாக மாறவேண்டும். அதை காட்சிகளாக மாற்ற வேண்டும்.
3. நாவலில் கதை போக்கில் மகேந்திரன், வாங், சில்வியா மற்றும் பல்வேறு பெயர்களில் செயல்படும் அவன் எல்லோரும் அவர்கள் வரும்போது அவர்களின் முன்கதை சொல்லப்பட்டிருக்கும் ஆனால் படத்தில் இவர்களை எல்லாம் முன்பே அறிமுகம் செய்துவிட வேண்டும். குறிப்பாக முதல் காட்சியில் அவனின் பிறந்தநாளுக்கு அவர்கள் வாழ்த்து சொல்வதுபோல் இருக்கலாம்.
தான் எழுதிய கதைக்கு தானே திரைக்கதை எழுதும் வாய்ப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் அமைந்து விடுவதில்லை. அந்த வகையில் ஷான் பெருமைப்படலாம். ஷான் கருப்புசாமிக்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஒரு நாவலை படமாக இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் போற்றுதலு உரியவரே ஆவார். இவர் மேலும் மேலும் நாவல்களையும் சிறுகதைகளையும் படமாக உருவாக்கும் காலம் அமையட்டும். இவருக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும். 16.08.2022.




 

பதிவு. 58.

குறத்தியம்மன் – மீனா கந்தசாமி.

தமிழக அரசியல்வாதிகளில் மிகச்சிறந்த சனநாயகவாதி என்று போற்றப்படும் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில்தான் கீழவெண்மணி படுகொலைகள் நடைப்பெற்றது. விவசாய கூலிகள் சம்பள உயர்வு கேட்டார்கள் என்பதற்காக பண்ணையார்கள் ஒன்று கூடி 44 உயிர்களை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். இதற்காக எந்த பண்ணையாரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவே இல்லை.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு (எனக்கு தெரிந்த அளவில் மட்டும்) தமிழில் இரண்டு நாவல்களும், ஆங்கிலத்தில் ஒரு நாவலும் வெளிவந்திருக்கிறது. இந்த மூன்றையும் படித்து இருக்கிறேன்.
முதலாவது இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல். இரண்டாவது சோலை சுந்திரப்பெருமாளின் செந்நெல். மூன்றாவதாக மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதிய The Gypsy Goddess. இதை பிரேம் தமிழில் குறத்தியம்மன் என மொழிப்பெயர்பு செய்துள்ளார். இந்த பதிவு குறத்தியம்மன் பற்றியது.
முதலில் மொழிப்பெயர்ப்பாளர் பிரேம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நாவல் இது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். எந்த இடத்திலும் மொழிப்பெயர்ப்பு நாவலை படிக்கிறேன் என்ற உணர்வே எனக்கு தோன்றவில்லை.
இ.பாவின் குருதிப்புனல் ப்ராயிடிய பார்வையோடு எல்லா சிக்கல்களுக்கும் அவன் பாலியல் பிரச்சனையே காரணம் என்று எழுதியிருப்பார். நாவல் படிக்க சுவராசியமாக இருந்தது என்றாலும் அந்த நாவல் கள உண்மையை முழுமையாக சொல்லவில்லையே என்று வருத்தமாக இருந்தது.
சோலை சுந்திரப்பெருமாளின் நாவல் முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாக இருந்தாலும் படைப்பாக அது எனக்கு எனக்கு நெருக்கமாக இல்லை. அதை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.
மீனா கந்தசாமியின் குறத்தியம்மன் நாவல் நேரடியாக அங்கிருந்த அரசியலையும் அசலான மனிதர்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. 44 உயிர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக, களத்தில் பிரச்சனைகள் மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூம் எடுத்தது எப்படி என்பதை விளக்கியதோடு, கீழ்வெண்மணியில் விவசாய கூலிகளான தலித்துக்கள் எப்படியெல்லாம் நெருக்கடிக்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். காவல்துறையும் அரசியல்வாதிகளும் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நேர்மையாக சொல்கிறது இந்த நாவல்.
மீனா கந்தசாமி நன்றாக கள ஆய்வு செய்து எல்லாவற்றையும் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அறவுணர்வோடும் இந்நாவலை ஒரு முழுமையான படைப்பாக உருவாக்கி இருக்கிறார்.
இந்த நாவலின் சொல்முறை பற்றியே தனியாக எழுதவேண்டும். ஒரு பின்காலனிய எழுத்தாளர் வாசகனோடு உரையாடும் வடிவில் இந்நாவல் எழுதப்பட்டு இருக்கிறது. பின்காலனிய சிந்தனைகள், பின்நவீனத்துவ சிந்தனைகள், தொன்ம கதைகள், வரலாறுகள், மனித உளவியல் என எல்லாவற்றைப் பற்றியும் நாவல் பேசுகிறது. குரூரம் நிறைந்த வாழ்க்கை சூழலைப் பற்றி பேசும் இப்படைப்பில், நாவலை சொல்லும் எழுத்தாளரின் கூற்றுகள் எள்ளல் தன்மையோடு இருக்கிறது.
இந்த புத்தகத்தை அணங்கு பெண்ணியப் பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. The Gypsy Goddess என ஆங்கிலத்தில் 2014-ஆம் ஆண்டு வெளியான இந்த நாவல் தமிழில் 2016 குறத்தியம்மனாக வெளியாகி இருக்கிறது. 14.08.2022.


பதிவு. 57

 விளக்கும் வெளிச்சமும் – விமலாதித்த மாமல்லன்.

2 சிறுகதைகள் + 2 நெடுங்கதைகள் + 2 குறுநாவல்கள் = ஒரு நாவல்.
விமலாதித்த மாமல்லன் இந்த பெயரை பல வருடங்களாக கேள்விப்பட்டுக் கொண்டே வந்தேன். ஆனால் இவருடைய படைப்புகள் எதையும் படித்திருக்கவில்லை. பிறகு தேடிப்பார்த்ததில் எஸ்.ராமகிருஷ்ணன் தொகுத்த தமிழின் சிறந்த நூறுகதைகளில் இவருடைய “சிறுமி கொண்டுவந்த மலர்” சிறுகதை படிக்க கிடைத்தது. அதைப் படித்ததும் இவரின் மற்ற படைப்புகளை படிக்க நினைத்து படிக்காமலே இருந்தது. இப்போது 2 சிறுகதைகள், 2 நெடுங்கதைகள் மற்றும் 2 குறுநாவல்கள் அடங்கிய விளக்கும் வெளிச்சமும் தொகுதியை படித்து முடித்தேன்.
ஆறு தனித்தனியான கதைகள் மூலம் ஒரு மனிதனின் அறுபது ஆண்டுகால வாழ்வை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார். அந்த மனிதன் சந்தித்த அவமானங்கள், அவன் பெற்ற வெகுமானங்கள் என அனைத்தையும் கூறுகிறார்.
அவனுக்கு ஊர் சுற்ற பிடிக்கும், சைக்கிள் ஓட்ட பிடிக்கும், கெட்ட வார்த்தைகள் பேச பிடிக்கும், அப்பா மாராத்தி அம்மா கன்னடம் என்றாலும் இவனுக்கு தமிழ்மொழி பிடிக்கும். அவன் கல்லூரி முடித்து மத்திய அரசின் வேலையில் சேர்ந்தப்பின் வேலையை விட்டுவிட்டு சாமிராக போக வீட்டைவிட்டு கிளம்பிச் சென்று பிறகு வீடு திரும்பி இருக்கிறான். அவன் மத்திம வயதில் முஸல்மான்களை வெறுத்ததிற்காக்க வயோதிகத்தில் வருத்தப் பட்டிருக்கிறான். அவன் அப்பா வாடகை வீட்டிலேயே வாழ்ந்து முடிய இவன் சொந்தமாக வீடு வாங்கியிருக்கிறான். இவனுக்கு குழந்தை பேறு இல்லையென்றாலும் பிறரின் குழந்தைகள் மேல் பிரியமாகத்தான் இருக்கிறான்.
அறுபது வயது மனிதனின் வாழ்வை சொல்லும் கதை என்றாலும் இந்த கதைகளில் பெரும்பகுதி குழந்தைகளின் உலகைத்தான் சொல்கிறது. அது என்ன அது என்ன என்று வேடிக்கை பார்க்க அலையும் அந்த வயத்தின் ஏக்கத்தையும் விளையட்டையும் அப்பாவால் ஏற்படும் அவமானங்களையும் மிக நேர்த்தியாக சொல்லியுள்ளார்.
விமலாத்த மாமல்லனின் எழுந்து எளிமையாகவும் படிக்க படிக்க சுவராசியம் மிக்கதாகவும் இருக்கிறது. மிக குறைவான சொற்கள் மூலம் கதாப்பாத்திரத்தின் வாழ்வையும் வாழ்க்கை சூழலையும் மனவோட்டங்களையும் கச்சிதமாக சொல்லிவிடுகிறார்.
சத்ரபதி வெளியீடு பதிப்பகம் இந்நூலை சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு ஜீன் 2022 –ல் வெளியாகியுள்ளது. 26.07.2022.


பதிவு. 56

 நட்சத்திரவாசிகள்.

நவீன தமிழ் இலக்கியத்தில் புத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் எழுதவந்த படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டுமென்று சில காலமாக திட்டமிட்டு வந்தேன். இந்த திட்டத்தை தொடங்கும் முதல் படியாக இந்த ஆண்டு யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவலான நட்சத்திரவாசிகள் நாவலைப் படிக்க தீர்மானித்தேன். இந்த நாவலை எழுதியவர் கார்த்திக் பாலசுப்பிரமணியன். இதுவரை இவருடைய எழுத்துக்கள் எதையும் படித்ததில்லை.
நட்சத்திரவாசிகள் நாவலின் கதைக்களம் தகவல் தொழில்நுட்ப துறை. இந்த துறைசார்ந்து ஏற்கனவே செல்லமுத்து குப்புச்சாமியின் “இரவல் காதலி” நாவல் படித்துள்ளேன். ஒருதுறை சார்ந்து பல நாவல்கள் எழுதப்படலாம். அவ்வளவு கதைகளும் பார்வைகளும் அங்கிருப்பது இயல்பானதுதானே. இந்தநாவலின் கதை நிகழும் காலம் ஒருநாள். கதை காலையில் தொடங்கி மாலையில் நிறைவுறுகிறது. மற்றொருவகையில் இக்கதை நிகழும் காலம் கால் நூற்றாண்டு என்றும் வரையறை செய்யலாம். அது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த தொடக்க காலமாகும்.
நவீன முதலாளித்துவம் மனிதர்களுக்கு குறிப்பாக கணிணித்துறை தொழிலாளர்களுக்கு ஏராளமான பொருளாதார சுதந்திரத்தை கொடுத்து அதற்கு பதிலீடாக அவர்களின் தனிமனித சுதந்திரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த துறையில் நுழையும் ஒரு தொழிலாளி குறைந்த காலத்தில் தன் திறமையால் அதிகமான பொருட்களை ஈட்டமுடியும். அதேமாதிரி எப்பொழுது வேண்டுமானாலும் தன் வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியில் வீழவும் வாய்ப்பு இருக்கிறது. இதுவொரு பரமபத விளையாட்டாகவே இருக்கிறது. இக்காலத்தில் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வாழவும் முடியாது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைப் பார்க்கும் ஆண்களும் பெண்களும் திருமண வாழ்வில் பணம் சார்ந்தும் குணம் சார்ந்தும் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகள், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் ஆளுமை சார்ந்து ஏற்படும் நெருக்கடிகள், பொருளீட்ட இடம் மாறுவதினால் ஏற்படும் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் அகபுற நெருக்கடிகள், அதிக பொருள் வரவினால் மனிதர்களுக்குள் திமிரி எழும் ஆசைகள், கோபங்கள் என பலவகையான மனிதர்களின் வாழ்வை இந்த நாவல் விவரித்து செல்கிறது.
கார்த்திக் பாலசுப்பிரமணியன் இந்த நாவலை மிக எளிமையாகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக, குறிப்பாக மூன்று இடங்களை சுட்ட விரும்புகிறேன். ஒரு நிறுவனத்தில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பெண்மணியின் நாட்குறிப்புகளை ஒரு அத்தியாமாக எழுதியுள்ளார். அதில் அந்த பெண்மணியின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கதையே சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக வீட்டைவிட்டு வெளியேறைய ஒரு மனைவி தன் கணவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறாள். அதில் அவள் பிறந்து வளர்ந்த கதை, கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் கணவனின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம். அதனால் தங்கள் உறவில் ஏற்பட்ட விரிசல் என எல்லாத்தையும் சுட்டிக்காட்டி, அவள் ஏன் அவனை பிரிந்து செல்ல நேர்ந்தது என முடிக்கிறாள். இந்த மின்னஞ்சலைப் படிக்கும்போது நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நவீன பெண் மற்றும் கிரமாத்தில் பிறந்து வளர்ந்து வேலையின் காரணமாக நகர வாழ்வினுள் நுழைந்த ஒரு ஆண், இவர்கள் வளர்ந்த சூழல் காரணமாக அவர்களின் செயல்களுக்கான காரணங்கள் என நம் கற்பனை விரிகிறது.
மூன்றாவதாக நம்மை வேலையைவிட்டு தூக்கமாட்டார்கள், நாம் வேலையைவிட்டு போவதாக சொன்னால் அழைத்து பேசுவார்கள், அப்போது கூடுதல் ஊதியம் கேட்கலாம் என்ற நம்பிக்கையையில் வேலையை விட்டு விலகுவதாக நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கிறான் ஒருவன். அவன் நினைத்ததிற்கு மாறாக அவனது வேலை விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட அடுத்து என்ன என்ற நிலையில் அவன் அமேசான் அலாக்ஸாவோடு ஒரு உரையாடல் நிகழ்த்துகிறான். அது தத்துவார்த்தமாக இருக்கிறது. மகாபாரத கதையில் காட்டில் வாழும்போது தண்ணீர் எடுக்க சென்ற தம்பிகள் திரும்பாததைக்கண்டு தர்மன் அவர்களை தேடிச்செல்கிறான். அவனது தம்பிகலள் ஒரு நச்சுப்பொய்கை கரையில் இறந்து கிடக்கிறார்கள். உன் தம்பிகள் உயிரோடு வேண்டுமானால் என் கேள்விகளுக்கு பதில் சொல் என ஒரு அசரீ ஆணையிடுகிறது. அசரீயின் கேள்விகளுக்கு தர்மன் பதில் சொல்வதாக ஒரு கதை இருக்கிறது. வேலையை இழந்த இவன் அலாக்ஸாவோடு உரையாடுவது அந்த கேள்வி பதிலை ஒத்ததாக இருக்கிறது.
இந்த நாவல் சின்ன சின்ன அத்தியாங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாம் என்பது சராசரியாக ஐந்து அல்லது ஆறு பக்கங்களுக்குள்ளாகவே இருக்கிறது. இது நாவலை தொடர்ந்து படிக்க தூண்டுதலாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாமமும் ஒரு சிறுகதைப்போல் இருகிறது. சில இடங்களை தவிர்த்து அத்தியாங்களை மாற்றி படித்தாலும் கதை புரியாமல் போகாது என்றே தோன்றுகிறது. சில நேரங்களில் விருதுகள் படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் வாசகனும் உத்வேகம் பெற்று படைப்பை படிக்க உதவியாக இருக்கிறது.
காலச்சுவடு பதிப்பகம் நாவலை சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் விவிக்கு என் மனமார்ந்த நன்றிகள். 18.07.2022.


துளி. 347

நம்பிக்கை

நான் நம்பாத செயல்
ஒன்றை செய்கிறேன்
என்னை நம்பியவருக்காக... 09.07.2022.

துளி. 346

தனிமை                                                                                                                                                                                                                                                                                                    பிரியமானவர்கள்                                                                                                                                பிரிந்து சென்றபின்னும்                                                                                                                  பிரியாது இருக்கிறது                                                                                                                        பிரிய தனிமை.                                                                                                                                                                                                                                                                                                                                                                           08.07.2022.

பதிவு. 55

 நீண்ட கால இடைவெளிக்கு பிறகு அண்மையில் நோர்வீஜியன் வுட் நாவலை படித்து முடித்தேன். ஜப்பான் எழுத்தாளர் ஹாருகி முரகாமி எழுதியது. 492 பக்கங்கள்.

ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் சுமார் மூன்று ஆண்டுகள் கால அளவில் நடக்கும் சம்பங்களையே கருப்பொருளாக இந்நாவல் கொண்டுள்ளது.
பதின்ம வயதில் ஏற்படும் காதல்கள், பாலியல் இச்சைகள், இசை கேட்டல், நண்பனிம் மரணத்தை எதிர்கொள்ளல், தோழியும் காதலியுமானவளின் மனபிறழ்வு, எதிலும் ஒழுங்கை கடைபிடிக்கும் அறைத்தோழன், மிக இளம் வயதிலேயே அதிகாரத்தின் சுவை அறிந்து அதை நோக்கி பயணிக்கும் மனிதன், பகுதி நேர வேலைகள், இலக்கியம் படித்தல், தொடர்ந்து நிறைய கடிதங்கள் எழுதுதல், ஊர் சுற்றல் என அவனுக்கு அந்த மூன்று வருட வாழ்வில் எத்தனை எத்தனை அனுபவங்கள். நாம் எல்லோரும் வியக்கும்படியான வாழ்க்கை அவனுக்கு அமைந்து இருக்கிறது.
நண்பனின் மறைவுக்கு பின் அவன் காதலி இவன் காதலியாகிறாள் ஒருத்தி, 13 வயது இளம்பெண் 31 பெண்மணியின் இன்பவாழ்வை மிக எள்தாக கொட்டி கவிழ்கிறாள் இன்னொருத்தி, பாலியல் பற்றி பேசியபடி உடலோடு உடல் பிண்ணிக்கொள்ளலாம் ஆனால் உறவு வேண்டாமென மறுக்கும் மற்றொருத்தி, எந்த வகையிலும் அவன் வாழ்க்கை முறையோடு ஒத்து போக முடியாத ஒருத்தி அவனையே தீவிரமாக காதலிக்கும் ஒருத்தி இந்த நான்கு பெண் கதாபாத்திரங்களும் வாழ்வின் பல ரகசியங்களையும் சிக்கல்களையும் புதிர்களையும் ஆச்சரியங்களையும் நமக்கு புரிய வைக்கிறார்கள்.
உண்மையில் இந்த நாவல் நவீன கிளாசிக்குதான். மனித மனங்களின் பல வகைமாதிரிகள் இந்த நாவலில் விரவி இருக்கிறார்கள். சின்ன காதபாத்திரமும் நம் சிந்தையை கவர்கிறது.
காவியங்களின் இயல்புகளில் ஒன்று எளிமை என்பார்கள். முரகாமி இந்த நாவலை இளம் வாசகனும் புரிந்துக்கொள்ளும் எளிய மொழிநடையில் எழுதியுள்ளார். ஆனால் அவர் நம்முன்னால் எழுதிக்காட்டும் உலகம் அல்லது வாழ்க்கை அவ்வளவு எளிமையானது அல்ல.
க.சுப்ரமணியன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து உள்ளார். சிறப்பான மொழிபெயர்ப்பு படிக்க இலகுவாக இருக்கிறது.
இந்நாவலை சிறப்பான முகப்பு ஓவியத்துடன் எதிர் வெளியீடு பதிப்பகம் பதிப்பித்துள்ளது. முதல் பதிப்பு ஜீன் 2014-ல் வெளியாகி இருக்கிறது.
இந்நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் லிவி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 09.06.2022.


துளி. 345

அன்பைப் போல் அனாதை வேறு ஏதுமில்லை இவ்வுலகில். 24.05.2022.

பதிவு. 54

2 comments

ரமாவும் உமாவும்
குறைவாக எழுதினாலும் தரமாக எழுதக்கூடியவர் திலீப் குமார். அவரின் கடவு சிறுகதை தொகுப்பு மிகவும் பிரபலமான ஒன்று. கடவு சிறுகதை தமிழில் எழுதப்பட்ட உலதரமான சிறுகதைகளில் ஒன்று. தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான குஜராத்திகளின் வாழ்க்கையை பிண்ணனியாக கொண்டு சொல்லும் கதைகளை திலீப் குமார் எழுதினாலும், அதில் வெளிப்படுவது, எல்லா இன மத மனிதர்களும் சந்திக்கும் வாழ்க்கைப்பாடுகள்தான்.
இப்போது ரமாவும் உமாவும் சிறுகதை தொகுப்பு குறித்து சில வார்த்தைகள். இந்த தொகுப்பில் மூன்று சிறுகதைகளும் இரண்டு நாடகங்களும் இருக்கின்றன.
ரமாவும் உமாவும் மற்றும் அவர்கள் வீட்டு கதவு இரண்டும் நாடகங்கள். ஒன்று பெண்ணியம் சார்ந்தும் மற்றது உணவு அரசியல் சார்ந்தும் எழுதப்பட்ட படைப்பாகும். இரண்டும் சமகாலத்தில் பெரும் சிக்கலை சந்தித்துக்கொண்டு இருக்கும் சூழலில் அந்த கருத்துக்களை அடைப்படையாக கொண்டு மிகவும் நாகரீகமாகவும் நேர்மையாகவும் கலைப்படைப்பாகவும் இந்த நாடகங்களை திலீப் குமார் எழுதியிருக்கிறார். கருத்துக்களை அடைப்படையாக கொண்டு எழுதினாலும், பிரச்சாரமோ அல்லது அறிவுரையோ சொல்லாமல் சிறப்பான படைப்பாக மாற்றியதில் திலீப் குமாரின் மேதமை வெளிப்படுகிறது.
ஒரு குமஸ்தாவின் கதை சிறுகதையும் மத அரசியலை மிக தெளிவாக படம்பிடிக்கிறது. மதத்தின் பேரால் அப்பாவிகள் கொலைச்செய்யப்படுவதை ஒரு குமஸ்தாவின் ஒரிரு நாள் வாழ்வை விளக்கி எழுதுவதின் மூலமே, அவர்களின் வேதனையை நமக்குள் இறக்கி விடுகிறார். காவிய சோகம் நிறைந்த சிறுகதை இது. இந்த சிறுகதையைத்தான் அருண் கார்த்திக் நசீர் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். அது வெகுமக்களை சென்றடையாமல் திரைப்படவிழா படமாகி போனதும் துயரம்தான்.
கடவுளையும் மனிதனையும் பாத்திரங்களாக கொண்டு எழுதப்பட்ட கதைகளில், நான் படித்த அளவில் புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” சிறுகதைக்கு இணையான சிறுகதை “ஒரு எலிய வாழ்க்கை”. இதில் எலியும் கடவுளும் உரையாடுகிறார்கள். இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் முடிவாகும். வாழ்வின் நிலையாமையை பேசும் இச்சிறுகதை தமிழின் முதன்மையான சிறுகதைகளில் ஒன்றாகும்.
நா காக்க அல்லது ஆசையும் தோசையும் சிறுகதை வறுமையைப்பற்றி பேசினாலும் நம்மை சிரிக்க வைக்கிறது. திலீப் குமாரின் நகைச்சுவை மிக எளிமையாக அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது.
வாசகனை மிரள வைக்காமல் மிக எளிமையான மொழியில் தன் கதைகளை திலீப் குமார் அற்புதமாக எழுதியுள்ளார்.
இந்த தொகுப்பினை க்ரியா பதிப்பகம் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளது.
இதன் முதல் பதிப்பை சந்தியா பதிப்பகம் 2011-லும் இரண்டாம் பதிப்பை க்ரியா பதிப்பகம் 2017-லும் வெளியிட்டுள்ளது.

    • 24.05.2022


துளி. 344

மேகமாய் மிதக்க ஆசைப்படுகிறேன் உன் மன வானில். 19.04.2022.

துளி. 343

அற்புதம் அம்மாள்.
பேரறிவுக்கும்
பேரன்புக்கும் பெருமையை ஈந்த பெருந்தாய். 18.05.2022. 

துளி. 342.

உனக்கு பிடித்த கவிதையை
நான் படிக்க,
எனக்கு பிடித்த பாடலை
நீ பாட,
முடிவில்
நாம் வீழவேண்டும் முடிவில்லா பேரின்பத்தில். 13.05.2022. 

திரை. 12

ஆணாதிக்கம் என்பது அகிலம் முழுவதும் வாழும் பெண்கள் எதிர்கொள்ளும் மிகவும் முதன்மையான பிரச்சனையாகும். இதைப் படைப்பாக மாற்றும் முயற்சிகள் காலந்தோறும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.
சென்ற ஆண்டு மலையாளத்தில் வெளியான தி கிரேட் இண்டியன் கிச்சன் அதற்கான சமீபத்திய உதாரணமாக கூறலாம். ஆனால் அமெரிக்காவில் சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பே இப்படியான கதையை படமாக எடுத்திருக்கிறார்கள்.
ஒரு பெண் ஒரே சமயத்தில் மூன்று ஆண்களோடு உறவில் இருக்கிறாள். முடிவில் அந்த உறவுகள் என்னவானது என்பதுதான் இப்படத்தின் கதையாகும். இந்திய சமூகத்தில் இன்றும் இப்படியான படம் எடுப்பது அறிதான ஒன்றாகத்தான் இருக்கிறது.
அமெரிக்காவில் வாழும் கருப்பின மக்களின் வாழ்வை திரையில் தொடர்ந்து பதிவு செய்துவரும் ஸ்பைக் லீ யின் முதல் முழுநீளபடம்.
குறைந்த பொருளாதார செலவில் எடுக்கப்பட்ட
அருமையான
படம். எப்பொழுதும் பணம் மட்டுமே படைப்பை உருவாக்குவதில்லை என்ற உண்மைக்கு சான்றாக இப்படத்தை கூறலாம்.
பெண்களின் உடல் பெண்களுக்கே சொந்தம் எந்த ஆணும் அதை கட்டுப்படுத்த முடியாது. நான் எப்படி வாழ்வேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் என்ற பெண்ணிய குரலை மிகவும் அழுத்தமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது. 11.05.2022.
May be an image of 4 people and text
 

திரை. 11

 King Richard.

அஞ்சு பொம்ளபுள்ள பொறந்தா அரசனும் ஆண்டியாவான் என்று நம்மூரில் சொல்வார்கள். ஆனால் அமெரிக்காவில் அஞ்சு பொம்பளபுள்ள பெத்த ஒருவர் அரசனாக மாறிய கதையை சொல்கிறது King Richard திரைப்படம்.
இந்த படத்தில் ரிச்சர்ட்டாக நடித்த வில் ஸ்மித்-க்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.
டென்னிஸ் வீராங்கனைகளான வீனஸ் வில்லியம்ஸ் மற்றும் ஜெரீனா வில்லியம்ஸ் இருவரின் தந்தைதான் ரிச்சர்ட். இவருக்கு மேலும் மூன்று பெண் குழந்தைகள். இவரும் இவருடைய மனையும் டென்னிஸ் பயிற்சியாளர்களாக இருந்து மகள்களை உலகம் போற்றும் டென்னிஸ் வீராங்கனைகளாக எப்படி மாற்றினார்கள். அந்த இலக்கை அடைய அவர்கள் அடைந்த அவமானங்கள் எத்தனை எத்தனையோ. ஆனாலும் எப்படி தொடர்ந்து நம்பிக்கையோடு போராடி தங்கள் இலக்கை அடைந்தார்கள் என்பதை சொல்லும் படமே King Richard.
இந்த படம் ஒருவகையில் வாழ்க்கை வரலாற்று படமாகவும் மற்றொரு வகையில் நமக்கு ஊக்கமளிக்கும் படமாகவும் இருக்கிறது. 19.04.2022.

திரை. 10

 டாணாக்காரன்.

காவல் துறையின் பெருமிதங்களை சொன்ன திரைப்படங்கள் ஏராளம். காவலர்கள் மற்றும் காவல்துறை உயரதிகாரிகளை கதாநாயகனாக அல்லது கதாநாயகியாக வைத்து அவர்களின் வீர தீரம், தியாகம், நேர்மை, துரோகம் இன்னும் பலவகையில் அவர்களின் பெருமைகளை சொன்ன படங்கள் அநேகம்.
டாணாக்காரன் மேற்சொன்ன படங்களில் இருந்து வேறுபடுகிறது. காவல்துறை என்ற அமைப்பின் உள் செயல்பாடுகளை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அந்த அமைப்பின் இயல்பையும் இயலாமையும் ஒருங்கே சொல்கிறது.
ஜெய்பீம் திரைப்படத்தில் குரூரமான காவலராக நடிப்பில் மிரட்டிய தமிழ், இந்த படத்தில் இயக்குனராக அசத்தி இருக்கிறார்.
ஒரு முன்னால் காவல்துறை அதிகாரியான தமிழ் இந்த படத்தில் கதைநாயகனுக்கு குடுத்திருக்கும் முடிவு முரணாகவும் வியப்பாகவும் இருக்கிறது.
இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். 15.04.2022.

துளி. 341

முன்பனி காலத்தில்
நீ நான் நிலா,
பின்பனி காலத்தில்
நான்
நிலா நீ... 16.04.2022.

துளி. 340

தனித்திருக்கும் நிலவுக்கு துணையாக உரையாடிக்கொண்டு இருக்கிறான் அவன். 14.04.2022

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...