8.16.2022

பதிவு. 56

 நட்சத்திரவாசிகள்.

நவீன தமிழ் இலக்கியத்தில் புத்தாயிரம் ஆண்டுகளுக்கு பின் எழுதவந்த படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டுமென்று சில காலமாக திட்டமிட்டு வந்தேன். இந்த திட்டத்தை தொடங்கும் முதல் படியாக இந்த ஆண்டு யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவலான நட்சத்திரவாசிகள் நாவலைப் படிக்க தீர்மானித்தேன். இந்த நாவலை எழுதியவர் கார்த்திக் பாலசுப்பிரமணியன். இதுவரை இவருடைய எழுத்துக்கள் எதையும் படித்ததில்லை.
நட்சத்திரவாசிகள் நாவலின் கதைக்களம் தகவல் தொழில்நுட்ப துறை. இந்த துறைசார்ந்து ஏற்கனவே செல்லமுத்து குப்புச்சாமியின் “இரவல் காதலி” நாவல் படித்துள்ளேன். ஒருதுறை சார்ந்து பல நாவல்கள் எழுதப்படலாம். அவ்வளவு கதைகளும் பார்வைகளும் அங்கிருப்பது இயல்பானதுதானே. இந்தநாவலின் கதை நிகழும் காலம் ஒருநாள். கதை காலையில் தொடங்கி மாலையில் நிறைவுறுகிறது. மற்றொருவகையில் இக்கதை நிகழும் காலம் கால் நூற்றாண்டு என்றும் வரையறை செய்யலாம். அது தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்த தொடக்க காலமாகும்.
நவீன முதலாளித்துவம் மனிதர்களுக்கு குறிப்பாக கணிணித்துறை தொழிலாளர்களுக்கு ஏராளமான பொருளாதார சுதந்திரத்தை கொடுத்து அதற்கு பதிலீடாக அவர்களின் தனிமனித சுதந்திரத்தை எடுத்துக்கொள்கிறது. இந்த துறையில் நுழையும் ஒரு தொழிலாளி குறைந்த காலத்தில் தன் திறமையால் அதிகமான பொருட்களை ஈட்டமுடியும். அதேமாதிரி எப்பொழுது வேண்டுமானாலும் தன் வேலையை இழந்து பொருளாதார நெருக்கடியில் வீழவும் வாய்ப்பு இருக்கிறது. இதுவொரு பரமபத விளையாட்டாகவே இருக்கிறது. இக்காலத்தில் இந்த விளையாட்டில் கலந்துக்கொள்ளாமல் வாழவும் முடியாது.
தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலைப் பார்க்கும் ஆண்களும் பெண்களும் திருமண வாழ்வில் பணம் சார்ந்தும் குணம் சார்ந்தும் எதிர்கொள்ளும் மனநெருக்கடிகள், நிர்வாகத்திற்கும் தொழிலாளர்களுக்கும் ஆளுமை சார்ந்து ஏற்படும் நெருக்கடிகள், பொருளீட்ட இடம் மாறுவதினால் ஏற்படும் சூழல் மாற்றத்தினால் ஏற்படும் அகபுற நெருக்கடிகள், அதிக பொருள் வரவினால் மனிதர்களுக்குள் திமிரி எழும் ஆசைகள், கோபங்கள் என பலவகையான மனிதர்களின் வாழ்வை இந்த நாவல் விவரித்து செல்கிறது.
கார்த்திக் பாலசுப்பிரமணியன் இந்த நாவலை மிக எளிமையாகவும் அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் எழுதியுள்ளார். அதற்கு எடுத்துக்காட்டாக, குறிப்பாக மூன்று இடங்களை சுட்ட விரும்புகிறேன். ஒரு நிறுவனத்தில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து திடீரென வேலையிலிருந்து நீக்கப்பட்ட ஒரு பெண்மணியின் நாட்குறிப்புகளை ஒரு அத்தியாமாக எழுதியுள்ளார். அதில் அந்த பெண்மணியின் தொழில் வாழ்க்கை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கைக்கதையே சொல்லப்படுகிறது.
இரண்டாவதாக வீட்டைவிட்டு வெளியேறைய ஒரு மனைவி தன் கணவனுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்புகிறாள். அதில் அவள் பிறந்து வளர்ந்த கதை, கல்யாணத்திற்கு முன்னும் பின்னும் கணவனின் செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றம். அதனால் தங்கள் உறவில் ஏற்பட்ட விரிசல் என எல்லாத்தையும் சுட்டிக்காட்டி, அவள் ஏன் அவனை பிரிந்து செல்ல நேர்ந்தது என முடிக்கிறாள். இந்த மின்னஞ்சலைப் படிக்கும்போது நகரத்தில் பிறந்து வளர்ந்த ஒரு நவீன பெண் மற்றும் கிரமாத்தில் பிறந்து வளர்ந்து வேலையின் காரணமாக நகர வாழ்வினுள் நுழைந்த ஒரு ஆண், இவர்கள் வளர்ந்த சூழல் காரணமாக அவர்களின் செயல்களுக்கான காரணங்கள் என நம் கற்பனை விரிகிறது.
மூன்றாவதாக நம்மை வேலையைவிட்டு தூக்கமாட்டார்கள், நாம் வேலையைவிட்டு போவதாக சொன்னால் அழைத்து பேசுவார்கள், அப்போது கூடுதல் ஊதியம் கேட்கலாம் என்ற நம்பிக்கையையில் வேலையை விட்டு விலகுவதாக நிர்வாகத்திடம் கடிதம் கொடுக்கிறான் ஒருவன். அவன் நினைத்ததிற்கு மாறாக அவனது வேலை விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட அடுத்து என்ன என்ற நிலையில் அவன் அமேசான் அலாக்ஸாவோடு ஒரு உரையாடல் நிகழ்த்துகிறான். அது தத்துவார்த்தமாக இருக்கிறது. மகாபாரத கதையில் காட்டில் வாழும்போது தண்ணீர் எடுக்க சென்ற தம்பிகள் திரும்பாததைக்கண்டு தர்மன் அவர்களை தேடிச்செல்கிறான். அவனது தம்பிகலள் ஒரு நச்சுப்பொய்கை கரையில் இறந்து கிடக்கிறார்கள். உன் தம்பிகள் உயிரோடு வேண்டுமானால் என் கேள்விகளுக்கு பதில் சொல் என ஒரு அசரீ ஆணையிடுகிறது. அசரீயின் கேள்விகளுக்கு தர்மன் பதில் சொல்வதாக ஒரு கதை இருக்கிறது. வேலையை இழந்த இவன் அலாக்ஸாவோடு உரையாடுவது அந்த கேள்வி பதிலை ஒத்ததாக இருக்கிறது.
இந்த நாவல் சின்ன சின்ன அத்தியாங்களாக பிரிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு அத்தியாம் என்பது சராசரியாக ஐந்து அல்லது ஆறு பக்கங்களுக்குள்ளாகவே இருக்கிறது. இது நாவலை தொடர்ந்து படிக்க தூண்டுதலாக இருக்கிறது. ஒவ்வொரு அத்தியாமமும் ஒரு சிறுகதைப்போல் இருகிறது. சில இடங்களை தவிர்த்து அத்தியாங்களை மாற்றி படித்தாலும் கதை புரியாமல் போகாது என்றே தோன்றுகிறது. சில நேரங்களில் விருதுகள் படைப்பாளிக்கு மட்டுமல்லாமல் வாசகனும் உத்வேகம் பெற்று படைப்பை படிக்க உதவியாக இருக்கிறது.
காலச்சுவடு பதிப்பகம் நாவலை சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் விவிக்கு என் மனமார்ந்த நன்றிகள். 18.07.2022.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...