3.25.2022

துளி. 339.

தீராவலிகளை தீர்க்கும் அருமருந்து நீ எனக்கு. 19.03.2022.

துளி. 338.

உன் புன்னகையின் சுடரிலிருந்து ஏற்றுகிறேன் ஆயிரம் நம்பிக்கை விளக்குகளை. 01.03.2022.

துளி. 337.

நாம் பிரிந்தது கசப்பான உண்மை, உண்மை கசந்ததால்தானே பிரிந்தோம் பேரன்பே. 27.02.2022.

துளி. 336.

தேவதைகளின் பேரன்பைப்பற்றி வியந்து வியந்து எழுதுகிறான் தேவதைகளால் கண்டுக் கொள்ளப்படாதவன். 25.02.2022.

துளி. 335

உன்னைப்பற்றிய கவிதையை எல்லோருக்கும் பிடித்திருக்கிறது உன்னைத் தவிர. 24.02.2022.

துளி. 334

பேராசையின் பிடியில் சிக்கியவனின் மேசையின் மீது தியானத்தில் இருக்கும் புத்தர் சிலை. 02.02.2022.

துளி. 333

 கேள்வி பதில்

என்னப்பா எப்போ சோறு போடபோற
என்கிறார் நண்பனின் அப்பா,
என்ன மருகமபுள்ள பட்டுபுடவை எப்போ கிடைக்கும்
புன்னகையோடு கேள்வியை வீசுகிறார் பக்கத்து வீட்டு அத்தை,
எதுன்னா விசேசம் உண்டா
நயமாக வினவுகிறார் மற்றொரு நண்பனின் அம்மா,
இதே தோரணையில் கேள்வி கேட்டபடியே
இன்னும் சில உறவினர்,
பலரிடம் இப்படியே இருக்கேனே இது நல்லாதானே இருக்கு,
சிலரிடம் ஒருநாள் உறுதியாக நடக்கும்,
சில தருணங்களில் புன்னகையை மட்டும் பதிலாய் தந்து செல்கிறான்,
கல்யாணத்துக்கு பெண்தேடி களைத்துப்போன ஒருவன். 15.01.2022.

துளி. 332

பெரும் துரோகத்தையும் தன் முன் மண்டியிட வைக்கிறது பேரன்பு. 25.12.2021.

துளி. 331

பிரிவைப்போல் பேரின்பம் வேறு ஏதுமில்லை. 20.12.2021.

துளி. 330

 சாலையை கடக்கும் ஓணான்.

பரபரப்பான மாநகர சாலையை
கடக்க முயல்கிறது
ஒரு ஓணான் பயம் ஏதுமின்றி.
அய்யோ பாவம் என்ற பாவனையோடு
பார்த்தபடியே கடந்து செல்கிறார்
முதுமை படிய தொடங்கிய பெண்ணொருவர்.
இரண்டு சக்கரகரங்களுக்கு இடைபுகுந்த
ஓணான்மீது சக்கரம் ஏறிவிடக்கூடாதே
கவனமாக இயக்குகிறான் வாகனத்தை இளைஞன் ஒருவன்.
தன் இலக்கு இதுவென தெரிந்து எதற்கும்
அஞ்சாமல் பயணிக்கும் பயணியைப்போல்
கணநேரத்தில் சாலையை கடந்தது ஓணான் பத்திரமாக. 18.12.2021.

துளி. 329

 பிரிவு

ஒருபோதும் நினைத்ததில்லை
ஒற்றைச் சொல்
நம்மை விலக்கி வைக்குமென… 12.12.2021.

துளி. 328

 பேரழகு                                                                                       பேரன்பு                                                                                    பெரும்துன்பம்.                                                                                                                                                                                                            25.10.2021.

பதிவு. 53



 மறக்க முடியாத மனிதர்கள் – வண்ணநிலவன்.

இலக்கிய ஆர்வத்தினால் தான் சந்தித்து பழகிய இலக்கியவாதிகள், திரைப்பட இயக்குனர்கள் மற்றும் திரைப்பட நடிகர்களில் சுமார் 19 ஆளுமைகள் குறித்த தன்னுடைய நினைவுகளை வண்ணநிலவன் இந்த புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
எழுபதுகளில் முகமறியா ஒருவருக்கு கடிதம் எழுதி அவர் பதில் தபால் எழுதினால் ஏற்படும் மகிழ்ச்சி என்பது இன்று வரலாறாகி போய்விட்டது. இலக்கியம் படிக்கும் பழக்கம் ஒருவனை எங்கெல்லாம் கொண்டு சேர்த்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. வாசகன் படைப்பாளியாக மாறிய கதையும் இதில் இருக்கிறது.
எழுபது எண்பதுகளின் இலக்கிய போக்குகள் எப்படியெல்லாம் இருந்திருக்கிறது. அன்றைய இலக்கியவாதிகள் இலக்கியத்தையும் மனிதர்களையும் எப்படியெல்லாம் நேசித்து இருக்கிறார்கள் என்ற உண்மை வரலாறும், சிறிய அளவில் அன்றைய சமூக சூழலையும் புரிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கிறது.
இந்தப் புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. 23.10.2021.

பதிவு. 52

 தெருவென்று எதனைச் சொல்வீர்..? – தஞ்சாவூர் கவிராயர்.

சகோ… நீங்க குடுத்த தெருவென்று எதனை சொல்வீர் புத்தகத்த படிச்சிட்டேன்.
எப்டி இருக்கு ப்ரோ.
ரொம்ப நல்லாயிருக்கு.
ஆமாம் ப்ரோ. நான் ரொம்ப சீக்கரமாவே படிச்சிட்டேன். கொஞ்சம் நேரம்தான் படிச்சேன் அதுக்குள்ள பாதிப்புத்தகத்துல இருந்தேன்.
உண்மைதான் சகோ. அவருக்குன்னு ஒரு மொழி, வாசிக்க எளிமையாவும் சுவராசியமாவும் இருக்கு. அதுக்கு காரணம் அவர் பேசுற விசயங்களோட நம்மளால மிக எளிதாக இணைச்சுக்க முடியுது. தெருவ பத்தி பேசுனாலும், ரயில் பயணத்தப்பத்தி பேசுனாலும், கிராமம், நகரம், படித்தவர்கள், படிக்காதவர்கள், உள்நாட்டினர், வெளிநாட்டினர், கலைஞர்கள், சிட்டுக்குருவி, யுவர் மெஸ், காகம், குரங்கு என யாரப்பத்தி அல்லது எதைப்பத்தி எழுதினாலும் அதை உணர்வுபூர்வமாகவும் நகைச்சுவையாகவும் எழுதுகிறார். உடனே அது நம்மள இழுத்துக்குது.
ஆமாம் ப்ரோ. அதுமட்டுமில்லாம… அவருக்கு நெறைய அனுபவம் இருக்கு பல விசயங்கள்ல..
உண்மைதான். அந்த அனுபவங்களை பிறர் ரசிக்கும்படியாகவும் இலக்கியதரமாகவும் எழுதவும் அவரால் முடிகிறது. ஒருவகையில் அவர் வாழ்க்கை ஆசீர்வதிக்கப்பட்ட வாழ்க்கை என்றே தோன்றுகிறது. எனக்கு இந்த கட்டுரைகளிலேயே யுவர் மெஸ் நடத்திய தஞ்சை ப்ரகாஷ், நடிகை பானுமதி நினைவுகள், அதிசயத் தமிழர் வ.அய்.சுப்பிரமணியம், காந்தி ஆவணப்படம் எடுத்த தமிழர் ஏ.கே.செட்டியார், பெருநிலக்கிழார் ஏ.கே.இராமகிருஷ்ண ரெட்டியார், மீசை வாத்தியார், சூரியகாந்திப் பூக்களின் தோழர் இவையெல்லாம் வெறும் நினைவுகள் மட்டுமல்ல. உண்மைகளின் வரலாறு. மரமாக மாறிவிட்டான், இலக்கிய வானில் இரு எரிநட்சத்திரங்கள் இரண்டும் காவியசோகம் நிறைந்த கதைகள். வெளிநாட்டு மனிதர்களைப் பற்றிய பதிவுகள் அருமை. தமிழ் மொழியின்பால், கலாச்சாரத்தின்பால் கொண்ட ஈடுபாட்டின் காரணமாக இங்கு வந்து சென்ற அல்லது இங்கேயே வாழ்கின்ற பல வெளிநாட்டு மனிதர்களின் குணநலங்களை புரிந்து கொள்வதே புதிய அனுபவமாக இருக்கிறது. ரொம்ப நன்றி சகோ.
ப்ரோ…
இந்த புத்தகத்த நீங்க சிபாரிசு பண்ணலன்னா படிச்சிருப்பேனான்னு தெரியல. தஞ்சாவூர் கவிராயர் பேர கேள்விப்பட்டிருக்கேன். முகநூல்ல சில கவிதைகள் படிச்சிருக்கேன். இப்போத்தான்.. உங்களால் அவருடைய புத்தகத்தத முதல் முறையாக படிச்சியிருக்கேன். மிக்க நன்றி சகோ.
இந்த புத்தகத்தை காலச்சுவடு பதிப்பகம் சிறப்பாக தயாரித்து வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2016. மூன்றாம் பதிப்பு 2017.
20.10.2021.

பதிவு. 51

 தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.

சில எழுத்தாளர்களின் பெயர்களை மட்டுமே நமக்குத் தெரியும். அவர்களின் எந்த எழுத்தையும் படித்திருக்க மாட்டோம். எனக்கு அப்படியான ஒரு எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். அண்மையில் அவருடைய சிறுகதைகள் தொகுப்பை படித்தேன். அந்த தொகுப்பில் மொத்தம் 31 சிறுகதைகள் இருக்கின்றன. தொகுப்பாசிரியர் பொன். வாசுதேவன். டிஸ்கவரி புக் பேலஸ் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இந்த கதைகளை இவ்வளவுகாலம் படிக்காமல் போனாயே, நீயெல்லாம் என்ன இலக்கிய வாசகனா என்ற கேலிக்குரல் என்னுள் கேட்கிறது.
தஞ்சை ப்ரகாஷ் சிறந்த கதைச்சொல்லி, மொழியை வசப்படுத்திய கலைஞன். பிராமண சமூகத்தை பிண்ணனியாக கொண்டகதையை படிக்கும்போது இவர் பிராமணரோ என்றும், கள்ளர் சமூக பிண்ணனியாக கொண்ட கதையை படிக்கும்போது இவர் கள்ளரோ என்றும், கிருஸ்துவ குடும்ப பிண்ணனியான கதைகளை படிக்கும்போது இவர் கிருஸ்துவரோ என்றும், முஸ்லீம் குடும்ப பிண்ணனியான கதையை படிக்கும்போது இவர் முஸ்லீமோ என்று எண்ணும்படியாக மொழியை கையாண்டுள்ளார்.
இவர் கதைகளில் மனித நேயம் மிக்கவர்களும், குரூர எண்ணம் கொண்டவர்களும், விபச்சாரிகளும், அரசு ஊழியர்களும், திருடர்களும் என சமூகத்தின் அனைத்து தட்டு மக்களும் வருகிறார்கள். சில கதைகளில் நிறைவேறாத காமம் பொங்கி வழிகிறது. கதாப்பத்திரங்களின் உரையாடல் வக்கனையாக இருக்கிறது. இந்த கதைகளை படிப்பது ஒரு பேரனுபவமாக இருக்கிறது.
திண்டி, அங்கிள், ஜானுப் பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள், நாகம், கொலைஞன், நியூஸன்ஸ், பள்ளத்தாக்கு, சோடியம் விளக்குகளின் கீழ், மேபல், வடிகால் வாரியம், பற்றி எரிந்த தென்னை மரம், கடைக்கட்டி மாம்பழம், வெட்கங்கெட்டவன், பொறா ஷோக்கு இவையெல்லாம் எனக்கு பிடித்த கதைகள். ஒரு தீவிர இலக்கிய வாசகன் தஞ்சை ப்ரகாஷ் கதைகளை தவற விடக்கூடாது என்று எண்ணுகிறேன். 17.10.2021.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...