மெக்ஸிக்கோ - இளங்கோ
மனித மனம் புதிர்கள் நிரம்பியது. ஒரு புதிரை விடுவித்தால் மற்றொன்று, அதை விடுவித்தால் இன்னொன்று என நீண்டு கொண்டே செல்லக்கூடியது. இந்த புதிர்களை படைப்பாளிகள் தங்கள் படைப்புகளில் தொடர்ந்து பதிவு செய்து வந்துள்ளனர். ஆனாலும் இந்த பயணம் முடிவே இல்லாமல் நீளக்கூடிது.
பிரபஞ்சன் நினைவு பரிசு போட்டியில் வென்ற நாவல்களில் ஒன்றான மெக்ஸிக்கோ நாவலை இன்று வாசித்து முடித்தேன். இதனை கனடாவில் வாழும் ஈழ தமிழரான இளங்கோ எழுதியுள்ளார். தமிழ் நாவல் பரப்பில் அ.முத்துலிங்கம், ஷோபா சக்தி போன்றோர் பல உலக நாடுகளை பின்புலமாக கொண்டு பல படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அந்த வரிசையில் இந்த நாவல் கனடா, மெக்ஸிக்கோ நாடுகளை பின்புலமாக கொண்டு எழுதப்பட்டுள்ளது. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் ஆண் பெண் உறவு சிக்கல் என்பது பெரும்பாலும் ஒன்றுபோலதான் இருக்கிறது.
இரண்டு வேறு வேறு தேசங்களில் இருந்து அகதியாக வாழ நிர்பந்திக்கப்பட்ட ஒரு ஆணும் பெண்ணும் ஒரு புள்ளியில் சந்திக்கின்றனர். அவர்களின் உறவை சொல்வதின்னூடாக இந்த நாவலில் மாயா இன மக்களின் கலாச்சாரமும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நாவலின் இறுதியில் நாம் எதிர்பாராத திருப்பம். இப்போது நாம் வாசிப்பது ஒரு நாவலா இரண்டு நாவலா என யோசனை தோன்றுவதை தவிர்க்க முடியாது.
ஒரே மூச்சில் வாசித்துவிட தூண்டும் மொழி நடையை இளங்கோ கையாண்டுள்ளார். எளிமையான வர்ணனைகளின் மூலமே இடத்தை மற்றும் கதாபாத்திரத்தை நம்முள் தோன்றுபடி செய்துவிடுகிறார்.
டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் இந்த புத்தகத்தினை சிறப்பான முறையில் வடிவமைத்து வெலியிட்டுள்ளது.
தமிழின் முதன்மையான எழுத்தாளர்களில் ஒருவரான பிரபஞ்சனின் நினைவை போற்றும் விதமாக நடந்த இந்த நாவல் போட்டி வரவேற்கவேண்டிய ஒன்றாகும். இதை சாத்தியமாக்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
வழக்கம்போல் இந்த நாவலை வாசிக்கும் வாய்ப்பை உருவாக்கிய நண்பர் Jega Deesan S - க்கு என் மனமார்ந்த நன்றிகள். 31.12.2019