6.30.2018

வரி . 03சுயக்கட்டுப்பாடுடன் வாழவிரும்பினால், முதலில் சுயமாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

                                                                      30.06.2018

துளி . 176

பேராவலுடன் 
காத்திருக்கிறேன்
தேவதையின் 
அலாதி அன்புக்காக....

                                    28.06.2018

வரி . 02

மனிதன் வினோதமானவன்,
மனித மனம் அதிவினோதமானது.
        
                                                     27.06.2018

துளி . 175

சிறைபடுத்தினால்
சிந்தனையை
தடுத்துவிடலாமென
நினைக்கிறனர்
மட மூடர்கள்
சுதந்திர சிந்தனையை
ஒருபோதும் புரிந்து
கொள்ள முடியாது
சுயநல அடிமைகளால்
காலம் மாறும்
காட்சிகளும் மாறும்
கோபுரத்தின் மீதுள்ள
தூசிகள் அகற்றபடும்
புயல் காற்றால்...

                                         27.06,2018

வரி . 01


மகிழ்ச்சி என்பது பொருள் சார்ந்தது அல்ல, உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் சார்ந்தது என முழுமையாக நம்புகிறேன்.

                                                                                    26.06.2018

துளி . 174

அற்பங்களை
அப்புறப்படுத்த
அதிமனிதனாகிறான்....

                                     26.06.2018

துளி . 173

ஆண்களும் பெண்களும்
ஆண்டாண்டு காலமாய்
காத்திருக்கிறார்கள்
மணக்கோலம் காண...

                                         25.06.2018

பதிவு . 10

மரம் - ஜீ.முருகன்
நவீன வாழ்க்கை மனிதனுக்கு பல வசதிகளை கொண்டு வந்தது போலவே பல நெருக்கடிகளையும் கொண்டு வந்ததுள்ளது. ஜீ.முருகன் எழுதியுள்ள "மரம்" நாவலும் அதைத்தான் பதிவு செய்துள்ளது.
எல்லா வகையான மனிதர்களுக்குள்ளும் ஒளிந்திருக்கும் பாலியல் இச்சைகளை அதன் சரி தவறுகளுக்கு அப்பால் நின்று
இந்நாவல் விவாதிக்கிறது.
அரசியல், ஆன்மீகம்,குடும்ப உறவுகள் என எந்த பக்கம் திரும்பினாலும் போலிகளையே தரிசிக்க வேண்டியுள்ளதை, இந்த நவீன வாழ்க்கையின் சில ஆண்களின் கதையையும், சில பெண்களின் கதையையும் சொல்வதின் மூலம் பதிவு செய்துள்ளார். சிறப்பான வாழ்வை சிக்கலாக்குவதுதான் மனிதனின் சிறப்பு இயல்பு போலும். ஜீ.முருகன் எளிய மொழியில் வலியான வாழ்வை தத்ரூபமாக பதிவு செய்துள்ளார்.
மரம் நாவலின் முதல் பதிப்பை உயிர்மை பதிப்பகம் 2007-ல் சிறப்பாக வெளியிட்டுள்ளது.

                                                                                                                                24.06.2018

துளி . 172

திசைகள் தோறும்
வளர்ந்து வருகிறார்கள்
வதம் செய்யப்பட
வேண்டியவர்கள்
தனியொருவனாய்
தொடங்குகிறான்
உண்மையான
தர்மயுத்தத்தை...

                                    23.06.2018

துளி . 171


ஒருபோதும் உனை
பிரியேன் என்றீர்
அன்று ஒருநாள்
அந்தி வானத்தை
சாட்சியாக வைத்து
அன்பே
நீலவானம் சாட்சியாக
மறுபடியும் சொல்கிறேன்
இந்த பிரிவு
தற்காலிகமானது
எந்தன் பிரியம்
நிரந்தரமானது...

                                    22.06.2018

துளி . 170


அடிமை தேசத்தில்
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
அலாதி அன்பை தொலைத்தவர்கள்...
அலைப்பேசி பொழியும் 
பேரன்பை பருகியபடி 
உழைத்துக் கொண்டு
இருக்கிறார்கள்
வரும் காலத்தை
வசந்தமாகும்
உன்னதமானவர்கள்...

                                                21.06.2018

பதிவு . 09

நானும் மெளனியும்
தமிழ் சிறுகதையின் தந்தை புதுமைபித்தன் மெளனியை "தமிழ் சிறுகதையின் திருமூலர்" என போற்றினார்.
"நான் புதிதாக கதை எழுத தொடங்குவதற்கு முன் மெளனியின் "மாறுதல்" சிறுகதையை வாசிப்பேன்" என ஒப்புதல் வாக்குமூலம் தந்துள்ளார் எழுத்தாளர் ஜெயகாந்தன்.
இந்த இரண்டு குறிப்புகள்தான் என்னை மெளனியை தேடி வாசிக்க தூண்டியது.
ஆனால் முதலில் வாசிக்க கிடைத்தது
சுந்தர ராமசாமி கொண்டு வந்த காலச்சுவடு ஆண்டு மலரில் வெளிவந்த மெளனியின் "சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதை பற்றிய கட்டுரையேயாகும். இதுவும் மெளனியை வாசிக்க தூண்டுதலாக இருந்தது.
நீண்ட தேடலுக்கு பிறகு சச்சிதானந்தன் தொகுத்த மெளனி கதைகள் புத்தகம் கிடைத்தது. நேஷனல் புக் டிரஸ்ட் அல்லது சாகித்திய அகாதெமி வெளியீடு. வாசித்து பார்த்தால் பெரும் ஏமாற்றம்.
"சாவில் பிறந்த சிருஸ்டி" சிறுகதைப்பற்றிய கட்டுரை கவர்ந்த அளவுக்கு கூட கதை பிடிக்காமல் போனது.
ஏன் இப்படி நிகழ்ந்தது என யோசித்தபோது நம் வாசிப்பு இன்னும் நுட்பமாக வேண்டுமோ என்னவோ என நினைத்துக்கொண்டேன். ஆனாலும் அவருடைய கதைகள் ஒன்று இரண்டை அவ்வப்போது வாசிப்பதுண்டு. மெளனியின் புகழ்பெற்ற கதைகளில் ஒன்றான "அழியாச் சுடர்" சிறுகதையை நான்கு ஐந்து முறை ( சில ஆண்டுகள் கால இடைவெளியில்) வாசித்தபின் எனக்கு அந்த கதை புரிந்தது, மிகவும் பிடித்துபோனது.
மெளனியை கொண்டாடும் கட்டுரைகளையும், நிராகரிக்கும் கட்டுரைகளையும் வாசித்து குழம்பும் வாசகனுக்கு மெளனியை சிறப்பான முறையில் எஸ்.ராமகிருஷ்ணன் அறிமுகம் செய்துள்ளார்.
அண்மையில் புத்தக நாளை முன்னிட்டு டிஸ்கவரி புக் பேலஸ்யில் நடந்த கூட்டத்தில் மெளனியை பற்றி பேசிய எஸ்.ரா "மெளனி எழுத்து அவரது சமகால படைப்பாளிகளின் படைப்புகளிலிருந்து எப்படி மாறுபடுகிறது, அவரை புரிந்துகொள்ள எப்படி வாசிக்க வேண்டும்" என நிறைய செய்திகளை சொல்லிக் கொண்டே செல்கிறார். இந்த உரையை கேட்ட பின் நான் மறுபடியும் மெளனியை வாசிக்க திட்டமிட்டுள்ளேன். மெளனியின் எழுத்துக்கள் புரியவில்லை என்றவர்களுக்கு இந்த உரை பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.

                                                                                                                           17.06.2018
YOUTUBE.COM
டிஸ்கவரி புக் பேலஸ் தேசாந்திரி பதிப்பகம்…

பதிவு . 08


நான் நீண்ட நாட்களாக தேடிக்கொண்டிருந்த சி.சு.செல்லப்பாவின் ஜீவனாம்சம் நாவலை அண்மையில் வாசித்தேன்.
எழுத்து பத்திரிகையில் 1959-1960 காலக்கட்டத்தில் தொடராக வெளிவந்த நாவல் இது. இப்போது வாசிக்கும் போது நாவல் உயிர்ப்புடன் உள்ளது.
இளம் விதவை பெண்ணான சாவித்திரியின் மனவோட்டமாக கதை சொல்லப்படுகிறது.
குடும்ப உறவுகளைவிட பணம்தான் பிரதானம் என்னும் வாழ்க்கையை பெரும்பாலான மனிதர்கள் தேர்வு செய்யும் இன்றைய சூழலில் பணத்தை விட உறவுகள் முதன்மையானது என வாழ்ந்த சாவித்திரியின் குணம் அல்லது கதை இன்றும் பொருத்தமான ஒன்றாக உள்ளது.
நாவலுக்கு சி.சு.செல்லப்பா எழுதியுள்ள முன்னுரை ஒரு படைப்பை உருவாக்க படைப்பாளன் எந்த அளவுக்கு மெனக்கிட வேண்டும், பொறுமை காக்க வேண்டும் என்பதனை சொல்லும் கையேடாக உள்ளது.
காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவலுக்கு பெருமாள் முருகன் ஒரு சிறப்பான முன்னுரையும் வழங்கியுள்ளார்.

                                                                                              09.06.2018

துளி . 169

அவயங்களின் 
வடிவம் சார்ந்தது 
மட்டுமல்லவே 
தேவதையின்
அழகென்பது....

                               08.06.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...