4.22.2024

பதிவு. 83. கிடங்குத் தெரு.

 கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ்.

பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்து முடித்தேன். சில படைப்புகளை தேடி சென்று படிக்கும்போது ஏமாற்றம் அடைந்து இருக்கிறேன். ஆனால் இந்த நாவல் அப்படி என்னை ஏமாற்றவில்லை. தீவிர இலக்கிய வாசகன் என்று சொல்லிக்கொண்டு இவ்வளவு நாள் இதை படிக்காமல் இருந்து இருக்கிறேனே என்று என்மீதே எனக்கு கோபம்தான் வந்தது.
இந்திய பிரிவினை சார்ந்து தமிழில் நேரடியாக பதிவு செய்த நாவல் இதுவாகத்தான் இருக்கும். இந்திய பாகிஸ்தான் பிரிவினையால் பாகிஸ்தானிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்து சேர்ந்த சிந்தி இன மக்களின் வாழ்க்கை குறிப்புகள் இந்த நாவலில் இருக்கிறது. குடோன் ஸ்ட்ரீட் என்று அறியப்பட்ட கிடங்குத் தெருவின் வரலாற்றையும், அங்கு முதலாளிகளாகவும் தொழிலாளிகளாவும் வாழ்ந்த வாழ்கின்ற மனிதர்களின் கதைகளையும் இந்த நாவல் சிறப்பாக பதிவு செய்துள்ளது.
ராஜா என்ற தொழிலாளியின் வாழ்க்கை கதையாக சொல்லப்படும் இந்த நாவல் ஒருவகையில் சிந்தி இன மக்களின் முன்னோர்களின் அகதி வாழ்வையும், கிடங்கு தெரு முதலாளிகளால் சுரண்டப்படும் தொழிலாளர்களின் வாழ்வையும், பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாக கொண்ட முதலாளிகளின் வாழ்வையும் சுருக்காமாகவும் அதேசமயம் வீரியமாகவும் சொல்கிறது.
கிடங்குத் தெருவில் விற்பனை பிரதிநிதியாக இருக்கும் ராஜாவுக்கு அவன் விரும்பிய காதலும் காமமும் கிடைக்க வில்லை. தனிமையே அவன் துணைவன். ராஜா பல எளிய மனிதர்களின் பிரதிநிதியாகவே இருக்கிறான். இன்றும் பணம் சம்பாதிக்காததினால் காதலும் காமமும் கைக்கூடாமல் வெறுமையோடு அலையும் மனிதர்கள் ஏராளம். ஏராளம். வறுமை துரத்தும் வாழ்க்கையில் கலையும் இலக்கியமும் இல்லாமல் பலர் வாழ்ந்து மடிகிறார்கள். வறுமையிலும் நான் கலா ரசிகன், இலக்கிய உபாசகன் என்று ஒருவன் நினைத்தால் காலம் அவனை சும்மா விட்டுவிடுமா என்ன.. எத்தனை இழப்புகள், எத்தனை வலிகள், எத்தனை அவமானங்கள் என்ற பட்டியல் முடிவில்லாமல் நீள்கிறது.
கிரேக்க நாடகத்தில் துன்பவியல் நாடகம் என்று வகமை உண்டாம். அதேபோல் நாவலில் வகமையை ஏற்படுத்தினால் கிடங்குத் தெரு ஒரு துன்பவியல் நாவல் என்றே சொல்வேன். மார்க்சிய பார்வையில் இந்த நாவல் உதிரி தொழிலார்களின் வாழ்வை சொல்கிறது என்றும் சொல்லலாம். பணமில்ல மனிதனின் காதல், காமம் சார்ந்து அவனுக்குள் எழும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சொல்லும் உளவியல் நாவல் என்றும் சொல்லலாம். இப்படி எல்லாவகையில் பார்க்க படிக்க தகுந்த படைப்பாக இந்த நாவல் இருக்கிறது.
செந்தூரம் ஜெகதீஷின் மொழிநடை எளிமையாகவும் தத்துவார்த்தம் நிரம்பியதாகவும் இருக்கிறது. எளிய சொற்களில் வலிமிகுந்த வாழ்வை எழுதிச் செல்கிறார். அவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் நன்றிகளும்.
நாவலை சிறப்பான முறையில் JAIRIGI பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.


06.04.2024.

துளி.394.

ஒளிரும் கண்கள் ஒளிரும் கன்னம் ஒளிரும் நாசி ஒளிரும் இதழ்கள் ஒளிரும் சங்கு கழுத்து

எல்லாவற்றையும்
ஒளிர வைத்த நீ
உள்ளத்தை மட்டும்
ஏன் ஒளித்து
வைத்திருக்கிறாய்... 03.04.2024.

பதிவு. 82.

 ஏ.ஆர்.ரஹ்மான் (நவீன இந்தியத் திரையிசையின் அடையாளம்) - விஜய் மகேந்திரன்.

நண்பர் விஜய் இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்யும்போது இதை “நீங்க ஒரே மூச்சில் படித்து விடுவீர்கள், மிகவும் சுவராசியாமானது” என்றார். இதை அப்போது நான் நம்பவில்லை, எல்லோரும் தம் படைப்புகள் குறித்து சொல்லும் வார்த்தை என்றே எண்ணினேன். ஆனால் இப்போது அவர் சொன்ன வார்த்தைகள் உண்மை என்று ஒப்புக்கொள்கிறேன். நான் இந்த புத்தகத்தை இரண்டு அமர்வில் படித்து முடித்தேன். ஏனேனில் உடனே அந்த உலகத்தை விட்டு வெளியே சென்று விடக்கூடாது என்பதற்காகத்தான். இல்லையெனில் நானும் ஒரே மூச்சி படித்து முடித்திருக்கலாம்.
ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி பெரும்பாலும் நாம் கேள்விப்பட்ட, நமக்கு நேரடியாக தெரிந்த அவரது இசைப்பயணம் குறித்த செய்திகள்தான் இந்த புத்தகத்தில் இருக்கிறது. ஆனால் அது சொல்லப்பட்ட விதத்தில்தான் விஜய் மகேந்திரன் தனித்து நிற்கிறார். நாம் கேள்வி படாத செய்திகளே இல்லையா என்றால் அதுவும் இருக்கிறது.
ஏ.ஆர்.ஆர்-ன் இசை மேதமைகளை வெளிப்படுத்தும் தகவல்கள், தனி மனிதராக அவர் ஒளிரும் தருணங்கள் என அனைத்தையும் மிக எளிமையாகவும் அழகாவும் தொகுத்து விஜய் மகேந்திரன் தந்திருக்கிறார். இந்த புத்தகம் பல பதிப்புகளை கண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்த நண்பர் விஜய் மகேந்திரனுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் நன்றிகளும்.


31.03.2024.

துளி. 393.

இருளையே வாழ்வாக கொண்டவன் மீது வெளிச்சத்தை பொழிகிறது நிலா. 24.03.2024.

துளி. 392.

ஊதா பச்சை மஞ்சள் ஆரஞ்சு சிவப்பு

கருப்பு
நீலம்
கிளிப்பச்சை
ரத்த சிவப்பு
ஆகய நீலம்
என
எண்ணிலடங்கா வண்ணங்களில்
உன் உடைகளின்
வண்ணம் மாறிக்கொண்டே இருக்கிறது
ஏழு வண்ணங்களை மட்டுமே
கொண்ட வானவில்லை தோற்கடிக்கிறாய் நீ. 16.03.2024.

துளி. 391.

 இது என் தனிப்பட்ட கருத்து

நம் இருவருக்கும்
இடையேயான விவாதத்தில்
அது எதைப்பற்றியதாக
இருந்த போதிலும்
எதாவது ஒரு புள்ளியில்
நீ சொல்கிறாய்
இது என் தனிப்பட்ட கருத்து.
அப்படி நீ சொல்வதற்கு காரணம்
நான் அதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்
என்பதினாலா இல்லை
அதை எனக்கு புரிய வைக்கமுடியாது
என்ற புரிதலா அல்லது
அது தனித்துவமானது
எல்லோருக்கும் புரியாது
என நம்புவதினாலா..
அது எப்படி இருப்பினும்
நமக்குள் இருப்பதாக நம்பிய
கருத்தொற்றுமை என்ற பிம்பம்
விழுந்து நொறுங்கவே செய்கிறது. 05.03.2024.

2.29.2024

துளி. 390.

முரண்

கண நேரத்தில் கைவிடுகிறேன்
நெடும் காலம் தேடி திரிந்து கைக்கொண்ட பொருளை. - 28.02.2024.

பதிவு. 81

 திமிங்கல வேட்டை – ஹெர்மன் மெல்வில் / மோகன ரூபன்.

பெருந்தொற்று காலக்கட்டத்தில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷணனின் இலக்கிய பேருரைகளை கேட்டபோதுதான் ஹெர்மன் மெல்வில்லின் மோபிக் டெக் என்ற நாவல் பற்றி தெரிந்து கொண்டேன். இந்தநாவல் குறித்த எஸ்.ராவின் உரை எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. அதை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு முறை கேட்டு இருக்கிறேன். அந்த நாவலின் கதைச்சுருக்கம் தமிழில் திமிங்கல வேட்டை என்ற பெயரில் வெளியாகி இருப்பதாக எஸ்.ரா தன் உரையில் கூறியிருந்தார். அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து இந்த புத்தக கண்காட்சியில்தான் வாங்கினேன்.
மோபி டிக் நாவல் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இது ஏற்கனவே கேட்ட கதை. இந்த புத்தகம் நாவலின் கதைச்சுருக்கம் மட்டுமே. படிக்க எப்படி இருக்குமோ என்ற தயக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன். நாவலின் முதல் அத்தியாமே என்னை உடனே உள்ளே இழுந்துக்கொண்டது. நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற மொழிப்பெயர்ப்பை மோகன ரூபன் சிறப்பாக செய்துள்ளார்.
இந்த நாவலில் கதைச்சொல்லியின் பெயர் இஸ்மாயில். பள்ளிக்கூட ஆசிரியரான இவர் திமிங்கவேட்டைக்கு போகிறார். உடன் சென்றவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்துவிட இவர்மட்டும் உயிர் பிழைத்து வந்து இந்த கதையை சொல்கிறார்.
திமிங்கல வேட்டையில் யாரெல்லாம் பெயர் பெற்றவர்கள், அதற்கான முன் தாயாரிப்புகள் என்ன, மாலுமிகளுக்கான சம்பளம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது, கப்பலில் கேப்டன் மற்றும் உதவி கேப்டன்களின் வேலைகள் என்ன என்ன, அவருக்கு யாரெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள், கடலின் காலநிலைகள் எப்படி இருக்கும், திமிங்கல வேட்டை எப்படி நடக்கும், கொல்லப்பட்ட திமிங்கலத்தின் உடலில் இருந்து எப்படி எண்ணெய் காய்ச்சி எடுத்தார்கள், மோபிடிக் என்ற வெள்ளை திமிங்கலத்தின் கதை என்ன, அதற்கும் கப்பலின் கேப்டன் ஆகாப்புக்கும் இருக்கும் தொடர்பு என்ன, ஆகாப் திமிங்கலத்தை வேட்டையாடினாரா இல்லை திமிங்கலம் ஆகாப்பை வேட்டையாடியதா, கப்பல் ஏன் கடலில் மூழ்கியது என எல்லாவற்றையும் கதையாக இஸ்மாயில் நமக்கு சொல்கிறார்.
வெள்ளை திமிங்கலம் என்பது திமிங்கலத்தை மட்டும்தான் குறிக்கிறாதா..? இயற்கையை மனிதனால் வெல்ல முடியுமா.? என்ற கேள்விக்கான பதிலை யோசிக்க தூண்டுவதே இந்த நாவலின் அடிநாதமான இருக்கிறது.
இது நாவலின் கதைச்சுருக்கம் என்றாலும் படிக்க சுவராசியம் குறையவில்லை. கடலைப்பற்றி எழுதப்பட்ட நாவல்களில் இதற்கென ஒரு சிறப்பான இடம் என்றும் இருக்கும்.
இந்த புத்தகத்தை பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுயுள்ளது. இதன் முதல் பதிப்பு 2012-ல் வெளியாகி இருக்கிறது.


- 20.02.2024.

துளி. 389

தீராத் துயரம்.
உதிப்பதும் உதிர்வதும்
உயிர்களுக்கு மட்டுமல்ல
உறவுகளுக்கும் உண்டு.
நம்பிக்கை வைக்கையில்
ஓர் உறவு தோன்றுகிறது
நம்பிக்கை இழக்கையில்
ஓர் உறவு உதிகிறது.
நம்புவதும் நம்பாமல் போவதும்
அவரவர்
உள்ளுணர்வு சார்ந்தது
உள்ளுணர்வை மறுபதற்கில்லை
ஏனெனில்
அதுவே அவரவர்
பாதுகாப்பு அரண்
அரணை மீறினால்
மரணம் உறுதி.
எதன் பெயரால் நிகழ்ந்தாலும்
பிரிவு துயரத்தையே பரிசளிக்கும்.  - 18.02.2024.

பதிவு. 80

 அநாமதேயக் கதைகள் – மயிலன் ஜி சின்னப்பன்.

இரண்டாயிரத்துக்கு பிறகு எழுத வந்த படைப்பாளிகளின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற தேடலில் அண்மையில் படித்த புத்தகம் அநாமதேயக் கதைகள். இந்த சிறுகதை தொகுப்பை எழுதியவர் மயிலன் ஜி சின்னப்பன். இதற்கு முன் இவருடைய படைப்புகள் எதையும் படித்ததில்லை. இவர் 2017-ல் எழுத தொடங்கியுள்ளார். மிகவும் குறுகிய காலத்திலேயே ஒரு நாவல் மற்றும் இரண்டு சிறுகதை தொகுப்புகளை கொண்டுவந்துள்ளார்.
இந்த சிறுகதை தொகுப்பில் மொத்தம் பன்னிரெண்டு சிறுகதைகள் இருக்கிறது. ஒவ்வொரு சிறுகதையும் சுமார் 15 முதல் 20 பக்கங்கள் வரையுள்ளது.
தொழில் சார்ந்து புதிய வெளியில் சந்திக்கும் மனிதர்களுக்கிடையேனா முரண்கள், ஆண் பெண் உறவில் இருக்கும் சிக்கல்கள், தொழில் சார்ந்த இடங்களில் வெளிப்படும் சாதிய உணர்வுகள், ஆண் பெண் மற்றும் இரண்டு ஆண்களுக்கு இடையே ஏற்படும் உளவியல் கோளாறுகள், மருத்துவமனைக்குள் நோயாளிக்கும் மருத்துவருக்குமான உறவுகளில் ஏற்படும் நெகிழ்ச்சியாண தருணங்கள் அல்லது இயலாமையின் வெளிப்பாடுகள் என பலவகையான உள்ளடக்கத்தை கொண்ட கதைகளை இத்தொகுப்பு கொண்டுள்ளது.
மயிலன் ஜி சின்னப்பனின் மொழிநடை படிக்க சுவராசியம் மிக்கதாக இருக்கிறது. எளிமையான மொழியில் தான் சொல்லவந்த விசயத்தை சிறப்பாக சொல்லிவிடுகிறார். மருத்துவம், ரியல் எஸ்டேட், மனித உளவியல் என எந்த துறை சார்ந்த கதையை எழுதினாலும் அந்த துறை சார்ந்த மிகவும் நுட்பமான தகவல்களுடன் எழுதியுள்ளார்.
மயிலன் ஜி சின்னப்பனின் படைப்புகளின் சிறப்பை விளக்கி கவிஞர் பெருந்தேவி “உணர்வுகளை எழுத்தில் இசைத்தல்” என்ற தலைப்பில் ஒரு சிறுகட்டுரையை முன்னுரையாக எழுதியுள்ளார்.
இந்த புத்தகத்தினை தமிழினி பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2021-ல் வெளியாகியுள்ளது. - 12.02.2024.


பதிவு. 79

 ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி.

டிஸ்கவரி புத்தக கடையில் இருக்கும் பிரஞ்சன் அரங்கத்தில் நடந்த ஒரு இலக்கிய சந்திப்பில் அறிமுகமானார் நண்பர் விஜய் மகேந்திரன். இவர் எழுத்தாளர் என்று மட்டும் நினைத்திருந்தேன். கடல் பதிப்பகத்தின் உரிமையாளரும் இவர்தான் என்பது பிறகுதான் தெரிந்தது. சென்ற மாதம் திடீரென ஒருநாள் உங்கள் முகவரியை அனுப்புங்கள் புத்தகம் அனுப்புகிறேன் என்றார். முதலில் தயங்கினாலும் அவர் வற்புறுத்தலுக்கு இணங்கி முகவரியை அனுப்பி வைத்தேன். மறுநாளே ஐந்து புத்தகங்கள்(நான்கு கவிதை தொகுப்பு மற்றும் ஒரு நாவல்) அனுப்பி வைத்தார்.
எனக்கு கவிதைகளை விட நாவல் பிடிக்கும் என்பதினால் முதலில் நாவலை படிக்க தொடங்கினேன். நாவலின் பெயர் ஹமார்ஷியா. இதை எழுதியவர் கண்ணன் ராமசாமி. இந்த பெயரை இப்போதுதான் கேள்விப்படுகிறேன். நாவலின் தலைப்புக்கு பொருள் என்னவாக இருக்கும் ஆர்வத்துடன் நாவலைப் படிக்க தொடங்கினேன்.
இந்த உலகத்தை மாற்ற வேண்டும் என்ற கனவு எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்துபவர்கள் மிகச்சிலரே. அந்த சிலரும் எப்படிப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் அந்த எண்ணங்களுக்கு கலைவடிவம் கொடுப்பவர்கள் மிகவும் சிலரே இருப்பார்கள். கண்ணன் ராமசாமி எழுதியுள்ள ஹமார்ஷியா நாவல் அந்த வவையில்தான் இருக்கிறது.
போர் இல்லாத உலகை, மக்களுக்கான அரசை கனவு காணதவர்கள் யார் இருக்கமுடியும். இவ்வளவு தீவிரமான சிந்தனையை நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளை கொண்டு நிறைவேற்றினால் எப்படி இருக்கும் என்பதை மிகவும் எளிமையாகவும் அதே சமயம் விறுவிறுபான கதையாகவும் எழுதியுள்ளார் கண்ணன் ராமசாமி.
மனிதனின் புத்திசாலித்தனம் மானுடத்தின் மேன்மைக்கு பயன்படுத்த எத்தனிக்கும் கதைமாந்தர்களை உருவாக்கி உலவ விட்டுள்ளார். நாவலின் தலைப்புக்கான பொருள் மிகவும் ஆழமானதாகவும் அர்த்தம் மிகுந்ததாகவும் இருக்கிறது. இந்த நாவலின் கதைக்களம் புதுமையும் புத்திசாலிதனமும் நிறைந்த ஒன்றாக இருக்கிறது.
விஜய் மகேந்திரனின் கடல் பதிப்பகம் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2022-ல் வெளியாகியுள்ளது.
இந்த நாவலை அறிமுகப்படுத்தி படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த நண்பர் விஜய் மகேந்திரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.


- 09.01.2024.

பதிவு. 78

 ஹிட்ச்காக் & த்ரூபோ உரையாடல் பாகம்.1

இந்த ஆண்டின் முதல் புத்தகமாக ஹிட்ச்காக் உடன் த்ரூபோ நடத்திய நேர்காணலின் புத்தக வடிவமான இந்த புத்தகத்தை படித்து முடித்தேன். இந்த நேர்காணல் குறித்து ஏற்கனவே கேள்வி பட்டிருந்தாலும் தமிழில் இல்லாததினால் படிக்க முடியாமல் இருந்தது. தமிழ் ஸ்டுடியோ அமைப்பின் பேசாமொழி இணைய இதழில் இதன் மொழிப்பெயர்ப்பு வந்தபோது ஆர்வமாக இரண்டு பகுதிகள் மட்டும் படித்து இருந்தேன். இப்போது முழுமையாக இரண்டே அமர்வில் படித்து முடித்தேன்.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்ச்காக் தனது திரை பயணத்தை தொடங்கி இருக்கிறார். மெளனப்பட காலத்தில்(1922) தொடங்கி அவர் இறப்பதற்கு நான்கு ஆண்டுகளுக்கு(1976) முன்புவரை திரைப்படம் இயக்கி இருக்கிறார். இந்த புத்தகத்தில் அவரின் பிறப்பு முதல், அவரின் படிப்பு, வேலை, அவர் எப்படி சினிமாவுக்குள் வந்தார், அவரின் முதல் பட அனுபவம் மற்றும் ஆரம்பகால திரைப்படங்கள் வரை உரையாடல் நீள்கிறது.
ஒரு கதையை சஸ்பென்ஸூடன் எப்படி சொல்வது என்பதற்கு ஹிட்ச்காக் கொடுக்கும் விளக்கம் அற்புதமானது. அவரின் முதல் பட படபிடிப்புக்கு சென்று வந்த அனுபவம் மிகவும் சிக்கலானது. அந்த சிக்கல்களை அவர் எப்படி எதிர்கொண்டார் என்பதில்தான் அவரின் மேன்மை வெளிப்படுகிறது. சுமார் 85 பக்கங்களே உள்ள இந்த புத்தகத்தில் ஏராளமான தகவல்கள் நிறைந்துள்ளது.
தீஷாவின் மொழிபெயர்ப்பு சிறப்பாக இருக்கிறது. இந்த புத்தகத்தினை பேசாமொழி பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2022-ல் வெளியாகியுள்ளது.
இந்த புத்தகம் படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த நண்பர் பாபு கோவிந்தராஜ் -க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

- 03.01.2024.


திரைப்படங்கள் - 2023.

 நான் இந்த ஆண்டு (2023 ) பார்த்த படங்கள்:

01. The Banshees Of Inisherin – Martin McDonagh.
02. Mukundan Unni Associates – Abhinav Sunder Nayak.
03. The Lovely Bones – Peter Jackson
04. The Whale – Alrick Riley.
05. Moby Dick – John Huston.
06. Vadhandhi : The Fable of Velonie – Andrew Louis.
07. A Man Called OTTO – Marc Forster.
08. அயலி – முத்துக்குமார்.
09. Avatar : The Way Of Water – James Cameron.
10. நண்பகல் நேரத்து மயக்கம் – லிஜோ ஜோஸ் பெலிச்சேரி.
11. துணிவு – H.விநோத்.
12. பரோல் – துவராகத் ராஜா.
13. The Travelling Players – Theo Angelopoulos.
14. டாடா – கணேஷ் ஜி. பாபு.
15. Iratta – Rohit M.G.Krishnan.
16. விடுதலை பாகம்.1 – வெற்றிமாறன்.
17. Thalappavu – Madhupal.
18. Ankur – Shyam Benegal.
19. All That Breathes (documtary) – Shaunak Sen.
20. Why so straight? – Malini Jeevarathinam.
21. Tora’s Husband – Rima Das.
22. 18 Feet (documentary) – Renjith Kuzhur.
23. The Seventh Continent – Michael Haneke.
24. State of Siege – Costa-Gavras.
25. கண்ணை நம்பாதே – மு.மாறன்.
26. யாத்திசை – தரணி இராஜேந்திரன்.
27. Yavanika – K.G.George.
28. Ee Kanni Koodi – K.G.George.
29. வாரிசு – வம்சி பைடிபைலி.
30. பொன்னியின் செல்வன் (பாகம்.2) – மணிரத்னம்.
31. Ottal – Jayaraj.
32. Good Night – Vinayak Chandrasearan.
33. Jaya Jaya Jaya Jaya Hey – Vipin Das.
34. My Wife is a Gangstar – Jo Jin–Kyu.
35. Thangam – Saheed Arafath.
36. ராமன் தேடிய சீதை – ஜெகன்.
37. மாமன்னன் – மாரி செல்வராஜ்.
38. பம்பர் – செல்வகுமார்.
39. The Secret - Drew Heriot.
40. கழுவேத்தி மூர்க்கன் – சை.கெளதமராஜ்.
41. Lunana : A Yak in the Classroom – Pawo Choyning Dorji.
42. 2018 - Jude Anthany Joseph.
43. அநீதி – வசந்தபாலன்.
44. Sisu – Jalmari Helander.
45. Saudi vellakka – Tharun Moorthy.
46. டைனோசார் – எம்.ஆர்.மாதவன்.
47. டிடி ரிட்டன்ஸ் – எஸ்.பிரேம் ஆனந்த்.
48. Oppenheimer – Christopher Nolan.
49. கடவுளுக்கு முன் பிறந்தவன் – ஆவணப்படம் - பா.விடுதலை சிகப்பி.
50. The Invisible Other : The Caste in Tamil Cinema – Documetnary - Suresh. E.T.
51. The Elephant Whisperers – Documentary – Kartiki Gonsalves.
52. ஜெயிலர் – நெல்சன் திலீப்குமார்.
53. போர் தொழில் – விக்னேஷ் ராஜா.
54. மாவீரன் – மடோனா அஸ்வின்.
55. Kaalkoot – Sumit Saxena.
56. Laura – Otto Preminger.
57. kohraa – Randeep Jha.
58. செப்டம்பர் – துரிதம் – வி.சீனிவாசன்.
59. காரி – ஹேமந்த் குமார்.
60. Balagam – Venu Yeldandi.
61. மாமனிதன் – சீனு ராமசாமி.
62. Padmini – Senna Hegde.
63. நூடுஸ் – மதன் தஷிணாமூர்த்தி.
64. அரங்காரகன் – மோகன் டச்சு.
65. Shaadi Mubarak – Padmasri.
66. Everybody Knows – Asghar Farhadi.
67. Land of Mine – Martin Zandvliet.
68. jawan – Attly.
69. மார்க் ஆண்டனி – ஆதிக் ரவிச்சந்திரன்.
70. சித்தா – அருண்குமார்.
71. Let the Right One In – Tomas Alfredson.
72. The Equalizer 3 - Antoine Fuqua.
73. The History of Violence - David Cronenberg.
74. The Equalizer 1 - Antoine Fuqua.
75. Brief encounter – David Lean.
76. லியோ – லோகேஷ் கனகராஜ்.
77. தண்டட்டி – ராம் சங்கையா.
78. அடியே – விக்னேஷ் கார்த்திக்.
79. இராவண கோட்டம் – விக்ரம் சுகுமாரன்.
80. Battle Royale - Kinji Fukasaku.
81. Killer of the Flower Moon – Martin Scorese.
82. Farha - Darin J. Sallam.
83. இறுகப்பற்று – யுவராஜ் தயாளன்.
84. A Clockwork Orange – Stanley Kubrick.
85. Kaala paani – Sameer Sazena & Amit Golani.
86. Kannur Squad – Roby Varghese Raj.
87. Aftersun - Charlotte Welles.
88. பார்க்கிங் – ராம்குமார் பாலகிருஷ்ணன்.
89. Celluloid – Kamal.
90. Little Forest – Soon-rye Yim.
91. Empty Nets – Behrooz Karamizade.
92. Melody – Behrouz Sebt Rasoul.
93. Club Zero – Jessica Hausner.
94. Perfect Days – Wim Wenders.
95. Pedro, Between the Devil and the Deep Blue Sea – Lais Bodanzky.
96. Last in the Night – Amat Escalante.
97. Inshallah A Boy – Amjad Al Rasheed.
98. La Chimera – Alice Rohrwacher.
99. Kidnapped – Marco Bellocchio.
100. Evil Does Not Exist – Ryusuke Hamaguchi.
101. A Brighter Tomorrow – Nanni Moretti.
102. Last Country – Vladimir Perisic.
103. Sweet Dreams – Ena Sendijarevic.
104. How to Have Sex – Molly Manning Walker.
105. Just Like Our Parents – Lais Bodanzky.
106. 20,000 Species of Bee – Estibaliz Urresola Solaguren.
107. Living Soul – Cristele Alves Meira.
108. Embryo Larva Butterfly – Kyros Papavassiliou.
109. The Old Oak – Ken Loach.
110. The Reeds - Cemil Agacikoglu.
111. Totem - Lila Aviles.
112. The Teacher’s Lounge – llker Catak.
113. The Doll – Asghar Yousefinejad.
114. The Palace – Roman Polanski.
115. Afire – Christian Petzold.
116. My Daughter My Love – Eitan Green.
117. That Afternoon – Nafiss Nia.
118. Fallen Leaves – Aki kaurismaki.
119. Heroic – David Zonana.
120. Footprints on Water – Nathalia Syam.
121. A Blue Bird – Ariel Rotter.
122. We are Still there / 2022 – Ten Directors.
123. Do not expect too much from the end of the world – Radu Jude.
124. A Letter From Helga – Asa Helga Hjorleifsdottir.
125. Anatomy of a Fall – Justine Triet.
126. கேப்டன் பிரபாகரன் – ஆர்.கே.செல்வமணி.
127. கண்ணகி – யஷ்வந்த் கிஷோர். - 31.12.2023.

புத்தகங்கள் - 2023

 நான் இந்த ஆண்டியில்(2023) படித்த புத்தகங்கள் :

01. மூக்குத்தி காசி(முப்பாலி) – புலியூர் முருகேசன்.
02. தொல்பசிக் காலத்து குற்றவிசாரணை அறைக்குள் மூடி முத்திரையிடப்பட்ட 8 தடயக்குறிப்புகள் – பாவெல் சக்தி.
03. மழைக்கண் – செந்தில் ஜெகன்நாதன்.
04. மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின்.
05. கோசலை – தமிழ் பிரபா.
06. வர்ளக் கெட்டு - வறீதையா கான்ஸ்தந்தின்.
07. பருந்து – அமுதா ஆர்த்தி.
08. ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குரூஸ்.
09. முறிந்த பாலம் – தோர்ண்டன் ஒயில்டெர் / தமிழாக்கம் : ரா.நடராசன்.
10. புனைவு என்னும் புதிர் – விமலாதித்த மாமல்லன்.
11. வேளம் – வறீதையா கான்ஸ்தந்தின்.
12. காடோடி – நக்கீரன்.
13. இரும்பு குதிரைகள் – பாலகுமாரன்.
14. கோடிமுனை முதல் ஐ.நா வரை – வறீதையா கான்ஸ்தந்தின்.
15. விலாஸம் – பா.திருச்செந்தாழை.
16. தூவானம் – ஆ.மாதவன்.
17. தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம் – தஞ்சாவூர் கவிராயர்.
18. திரெளபதியின் கதை – பிரதிபாராய் – இரா.பாலசந்திரன்.
19. ஆண்டாள் பாடல்கள் – ஆண்டாள்.
20. துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை – பாலசுப்ரமணியன் பொன்ராஜ்.
21. சு.தமிழ்செல்வியின் சிறுகதைகள் – சு.தமிழ்செல்வி.
22. உயிர் வலை.1 – ம.ஜியோடாமின்.
23. நாமும் நம் உறவினர்களும்.2 – ம.ஜியோடாமின்.
24. ஏற்றத் தாழ்வுகளின் கதை.3 – ம.ஜியோடாமின்.
25. பற்றி எரியும் பூமி.4 – ம.ஜியோடாமின்.
26. பூமிக்கு நெருப்புக்கு தீ வைத்தவர்கள்.5 – ம.ஜியோடாமின்.
27. மீனின் சிறகுகள் – தஞ்சை ப்ரகாஷ்.
28. பச்சை வியாபாரம்.6 - ம.ஜியோடாமின்.
29. எந்திரன்.7 – ம.ஜியோடாமின்.
30. விளக்கை சுற்றும் விட்டில் பூச்சிகள்.8 – ம.ஜியோடாமின்.
31. குறைவே நிறைவு.9 – ம.ஜியோடாமின்.
32. வளம்குன்றா வளர்ச்சி அல்ல; தேவை, மட்டுறு வளர்ச்சி.10 – ம.ஜியோடாமின்.
33. பூமிக்குள் ஓடுகிறது நதி – சு.வேணுகோபால்.
34. புத்தரின் தம்மபதம் அறவழி – மொழிபெயர்ப்பு: நவாலியூர் சோ.நடராஜன் / பதிப்பு: போதி.பெ.தாட்ஸ்மேன். - 30.12.2023.

திரை. 22

 திரைப்பட விழா அனுபவம் – 1

சென்னை திரைப்பட விழாவில் படம் பார்ப்பது என்பது என்னளவில் அது ஓர் உலக சுற்றுப்பயணம். பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். சில ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாமலும் போயிருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் பார்க்கும் சூழல் இருந்ததினால் டிசம்பர் மாதம் வேறு எந்த படங்களும் பார்க்க கூடாது என திட்டமிட்டேன், ஆனாலு இடையில் இரண்டு படங்கள் பார்த்தேன். அவை இரண்டும் தமிழ், மலையாளம் என்பது ஆறுதலாக இருந்தது.
திரைப்பட விழா தொடங்க இரண்டு நாட்கள் முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த தோழர் வசந்த சுசீலாவின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு சென்றேன். அவர் என் முகனூல் நண்பர் என்றாலும் அவரைப்பற்றி அதிகம் தெரியாது. அந்த நிகழ்வில் அவருடைய நண்பர்களின் பேச்சிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
தோழர் சுசிலா சிறந்த மனிநேயம் கொண்டவர், வழக்கறிஞர், அரசியல் தெளிவுள்ள களப்போராளி என அவரின் பிம்பம் என்னுள் உயர்ந்து கொண்டே சென்றது. ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவிய ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிர் இழந்துள்ளார் என்பது பெரும்சோகமாக இருந்தது. அன்று இரவு என்னால் சரியாக உறங்கவே முடியவில்லை. அவருக்கு ஏன் அப்படி நடந்தது என்ற கேள்வி என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. மறுநாள் பகலில் நண்பர்களை தேடிபோயி வேறு விசயங்களை பேசினாலும் உள்ளுக்குள் அந்த கேள்வியும் சோகமும் இருந்துகொண்டே இருந்தது. இரண்டாவது நாள் இரவும் தூக்கம் வர நெடுநேரமாகி போனது.
மறுநாள் காலை சென்னை திரைப்பட விழாவுக்கு செல்லும்போது உடலும் மனமும் சோர்ந்து காணப்பட்டது. அன்று பகலில் நான்கு படங்கள் பார்த்தேன். முதல் இரண்டு படங்களும் பிடித்து இருந்தது. ஆனாலு மனதுக்குள் தோழர் சுசிலாவுக்கு ஏன் அப்படி நிகழ்ந்தது, அவர் இருந்தால் இன்னும் எத்தனைபேர் பயன்பெறுவார்கள் என்றெல்லாம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாலையில் இன்றும் சரியாக தூங்க முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் என்னுள் எழுந்தது. திரைப்படவிழாவின் தொடக்க விழா நடந்து கொண்டு இருக்கும்போது சத்தியம் தியேட்டர் வளாகத்துள்ளே நான் நடந்து கொண்டே இருந்தேன். விழா முடிந்தது என்பதை நண்பர் மூலம் தெரிந்துக்கொண்டுதான் திரையரங்கினுள் சென்றேன்.
திரைப்பட விழாவின் தொடக்க படமாக Perfect Days என்ற ஜப்பானிய திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தினை ஜெர்மன் இயக்குனர் Wim Wenders இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகன் அலாரம் அடித்து அதிகாலையில் எழுகிறான். படுக்கையை சுருட்டி வைத்தல், இரவு பாதியில் படித்த புத்தகத்தை எடுத்து வைத்தல், பல் துலக்குதல், முகசவரம் செய்தல், பால்கனியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் தெளித்தல், குளித்தல், டோக்கியோ நகர கழிவறை சுத்தம் செய்யும் பணியாளருக்கான சீருடையை அணிதல், வேலைக்கான உபகரணம் மற்றும் கார் சாவியுடம் வீட்டை விட்டு வெளியே வருதல், வெளியே வந்ததும் உடனடியே அண்ணாந்து வானத்தை பார்த்து ரசித்தல், தானியங்கி இயந்திரத்தில் பணம் போட்டு குளிர்பானம் எடுத்தல், காரில் அமர்ந்து காரின் டேப்பில் கேசட்டை போட்டு இசையை ஒலிக்க விடுதல், குளிர் பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு காரை இயக்க தொடங்குகிறான். வசனமே இல்லாமல் காட்சி கோவையாக ஒரு மனிதரின் அன்றாம் தொடங்குவதை பார்க்க பார்க்க என்னை மறந்து படத்துக்குள் சென்று விட்டேன்.
ஜப்பான் என்றால் ஜென் தத்துவம் நினைவுக்கு வரும். எதை செய்கிறாயோ அதில் நீ முழுமையாக இரு என்பற்கு ஏற்ப இந்த திரைப்படத்தின் நாயகன் தினசரி செய்யும் வேலைகளை புதிதாக செய்வது போல் ஆவர்மாக செய்கிறான். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை அறிந்தவனாக இருக்கிறான். நான் மேலே விவரித்தது அதிகாலை மட்டுமே, அவன் வேலைக்கு சென்று அங்கு கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகளில் கூட அவன் முகத்தில் அசூசை ஏற்படுவதில்லை. நாம் வீட்டை சுத்தம் செய்வதுபோல் பொது கழிவறையை சுத்தம் செய்கிறான், வேலை முடிந்து பொது குளியலறைக்கு சென்று ஆற அமர குளிந்த்துவிட்டு வந்து, உணவகத்தில் உணவு அருந்துகிறான். மாலையில் மதுக்கடைக்கு சென்று மதுக்குடிக்கிறான். இரவு தூங்க செல்லும் புத்தகம் படிக்கிறான்.
இப்படி குழப்பம் இல்லாமல் செல்லும் வாழ்வில் ஏதோ குழப்பம் ஏற்பட போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தால் அப்படி அல்லாமல் வேறு வேறு உணர்வுபூர்வமான தருணங்கள் கவித்துவ காட்சிகளாக படத்தில் பல இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு இயற்கையை ரசிக்க தெரிகிறது, அந்த அபூர்வ கணங்களை படம் பிடிக்க தெரிகிறது, அந்த படங்களை வரிசைப்படுத்தி பாதுகாக்க தெரிகிறது. இசை தெரிகிறது, இலக்கியம் தெரிகிறது, இதையெல்லாம் விட அவனால் சக மனிதனை நேசிக்கவும் முடிகிறது. இதனால் இந்த நாயகனையும் இந்த படத்தையும் எனக்கு மிகவும் பிடித்து போகிறது.
Perfect Days படத்தை பார்த்துவிட்டு வந்த இரவு நன்றாக தூங்கினேன். கனவில்கூட மென்மையான உணர்வுகளே கனவுகளாக வந்தது. இந்த திரைப்படத்தினால் உடனடியாக என் மனம் சாந்த நிலைக்கு சென்றதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இதன் பிறகு தோழர் சுசிலாவின் வாழ்வு பற்றி நினைக்கையில் அவர் சிந்தனைகளை பின்பற்றி, அவரைப்போல சகமனிதர்களில் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதே நான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
சென்னை உலக திரைப்பட விழாவின் தொடக்க விழா படத்தை பார்த்ததுமே இந்த ஒரு படம் போதும் இந்த விழாவில் கலந்து கொண்டதுக்கு என எனக்குள் தோன்றியது. - 26.12.2023.


பதிவு. 77

புத்தரின் தம்மபதம் அறவழி

பாலி மூலத்திலிருந்து தமிழ் செய்தவர் – நடவாலியூர் சோ.நடராஜன்.
வெளியீட்டாளர் – போதி.பெ.தாட்ஸ்மேன்.
சார்பதிவாளர் அலுவலக விசயமாக நண்பருக்கு தெரிந்த ஒரு எழுத்தரின் அலுவலகத்திற்கு சென்றேன். எங்களுக்கு தேவையான தகவல்களை பொறுமையாக விளக்கி சொன்னார். விடைபெறும்போது அவரது முகவரி அட்டையையும் கொடுத்தார், அதில் அவர் பெயர் தாட்ஸ்மேன் என்று இருந்தது அது எதோ தொழில் சார்ந்த பெயர் என நினைத்துக் கொண்டேன்.
இரண்டு மாத இடைவெளியில் மறுபடியும் அவரை சந்திக்க சென்றோம். இப்பொழுதும் முன்புபோலவே எங்கள் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொன்னார். அப்பொழுதுதான் அவர் அலுவலக சுவற்றில் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் இருப்பதை கவனித்தேன். இது எனக்கு சற்று வித்தியாசமாக பட்டது.
தேநீர் அருந்த சென்றபோது அவரிடம் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் குறித்து கேட்டேன். அவர் மிகவும் ஆர்வமாகி பேசதொடங்கினார். புத்தரின் போதனைகள் குறித்தும் அவருக்கும் புத்த போதனைகள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும், புத்தருக்கும் வள்ளுவருக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும், வள்ளலாரின் மேன்மைகள் குறித்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னார். எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு மனிதரை இந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லை.
தாட்ஸ்மேன் ஒருமுறை மலேசியா என்றபோது அங்கு விமான நிலையத்தில் “புத்தரின் தம்மபதன் அறவழி” என்ற சிறுநூலை பார்த்து வியந்து வாங்கி வந்துள்ளார். அந்த புத்தகத்தின் கருத்துகள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் சுமார் ஆறாயிரம் பிரதிகள் பதிப்பித்து விலை இல்லாமல் மக்களுக்கு கொடுத்துள்ளார். எனது நண்பருக்கு ஏற்கனவே அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார் என்ற செய்தியை அப்பொழுது அறிந்தேன். அவரை விட்டு விலகி வந்த உடனே நண்பர் சொன்னார் தாட்ஸ்மேன்–னு சரியாதான் பேரு வச்சிருக்காருன்னு, Thoughts Man-ஐதான் தமிழில் தாட்ஸ்மேன் என வைத்துள்ளார் என்பது எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
புத்தரின் தம்மபதம் அறவழி புத்தகத்தை படிக்க தொடங்கியதுமே எனக்குள் தோன்றியது திருக்குறளுக்கு இந்த கருத்துகளுக்கு இருக்கும் ஒற்றுமைதான். திருக்குறளை சமணம் துறவி எழுதினார் என ஒரு கருத்து உண்டு என்பது தெரியும். ஆனால் இது புத்தரின் கோட்பாட்டோடு ஒத்து போகிறதே என வியந்தபடியே படித்து முடித்தேன். ஆதி கருத்து யாருடையதாக இருக்கும் என்பதை அறியும் ஆவல் எனக்குள் தோன்றியது. யார் காலத்தால் முந்தையவர்கள் என பார்க்க கூகுள் செய்து பார்த்தேன். அதன்படி,
மகாவீரர் – பொ.ஊ.மு. 599 – 527.
புத்தர் – பொ.ஊ.மு. 563 – 483.
வள்ளுவர் – பொ.ஊ.மு. 31 அல்லது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். சரியான ஆண்டு தெரியவில்லை.
மகாவீரர் சமணமத்தில் 24-வது அருகன். ஏற்கனவே 23 மூன்று பேர் பின்பற்றி வந்த கருத்துக்களை வளப்படுத்துகிறார். அவருக்கு பின் வந்த புத்தர் மகாவீரின் கருத்துக்களை வளப்படுத்தி வேறு ஒரு மார்க்கமாக பிரிகிறார். புத்தர் சொன்ன அறவழி கருத்துக்களை செம்மை படுத்தி வள்ளுவர் ஒரு அறநூலாக திருக்குறளை இயற்றியுள்ளார் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.
குறிப்பாக மூவரும் சொல்வது: புறதோற்றத்தை விட அகம் முதன்மையானது, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், சத்தியம் பேசுதல் என எல்லாமே ஒத்து போகிறது.
அந்தணன் என்போன் அறவோன் – வள்ளுவர்.
பிராமணத் தாய் வயிற்றில் உதித்தவன் என்பதனால் மாத்திரம் ஒருவனை நான் அந்தணன் என்று கூறுவதில்லை. எல்லாப் பிராணிகளுடைய தோற்றமும் முடிவும் தெரிந்தவன், பற்றற்றவன், நன்னெறி படர்வோன், அறிவொளி பெற்றவன், அவனே அந்தணன் என்று கூறுவேன். – புத்தர்.
தம்மபதம் இயல் இயலாக எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இயலும் சொல்லும் கருத்துக்கள் பல அதிகாரங்களில் சொல்லப்பட்டு தெளிவாக வரிசைப் படுத்தப்பட்டு இருக்கிறது. இது பக்கத்தால் சிறு புத்தகம் ஆனால் பெரும் அறிவுச்செல்வம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தாட்ஸ்மேன் தம்மபதம் படிக்கும்போது திருக்குறளையும் பக்கத்திலேயே வைத்து படிக்க வேண்டும் என்று சொன்னதின் அர்த்தமும் புரிந்தது.
நவாலியூர் சோ.நடராஜன் மிகவும் சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்டது போலவே இருக்கிறது.


- 25.12.2023.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...