11.30.2018

பதிவு . 16

பெருவலி – சுகுமாரன்.
பெண் மென்மையானவள், பிரியமானவள், அழகானவள் ஆனால் நாதியற்றவள்.
_ அன்னா கரினீனா நாவலில்...
சில புத்தகங்களைப் பற்றி அறிய நேர்ந்ததும் உடனே அது வாசிக்க கிடைப்பது அபூர்வமான அனுபவமாகும். அப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்த்தது. அது பற்றிய சிறு விளக்கமே இப்பதிவின் நோக்கமாகும்.
காலதாமதமாக செப்டம்பர் மாத காலச்சுவடு இதழை இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாசித்தேன். அதில் சுகுமாரனின் ‘’பெருவலி’’ நாவலுக்கு திவ்யா மதிப்புரை எழுதியிருந்தார். நாவலுக்கு ஒரு சிறப்பான அறிமுகம். மதிப்புரையை வாசித்த உடனே பெருவலி நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. அதற்கான காரணம் சென்ற ஆண்டு துவக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தை வாசித்து இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நாடகம். அது முதல் மொகலாய சரித்திரத்தின் மீது ஆவல்.
அந்தவகையில் ஒளரங்கசீப் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜஹனாராதான் பெருவலி நாவலின் பிரதான கதாபாத்திரம் என்று தெரிந்ததும் வாசிக்க ஆவலாகிவிட்டேன்.
ஒளரங்கசீப்பின் அந்திமகாலத்தை களமாக கொண்டு எழுதியுள்ள ’’இடக்கை’’ வாசிக்க ஓராண்டாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் வாசிக்க முடியவில்லை. அதுபொல் பெருவலிக்கு நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் எண்ணினேன். ஆனால் நல்வாய்ப்பாக நேற்று இந்த புத்தகம் எனக்கு ஒரு நண்பரிடமிருந்து கிடைத்தது. இன்று வாசித்து முடித்துவிட்டேன்.
மொகலாய சாம்ராச்சியத்தில் தந்தை மகனை சித்திரவதை செய்தும், மகன் தந்தையை சிறையில் வைத்தும், உடன் பிறப்புகளை கொலை செய்தும்தான் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளார்கள். நூற்றாண்டுகள் கடந்தும் அதிகாரத்திற்காக துரோகம் செய்வது என்ற துயரம் இன்றும் தொடர்கிறது.
மதத்தின் பேரால் அரசியலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஏராளம் அன்றும் இன்றும். மொகலாய பேரரசுக்கு முன்னுரை எழுதிய பாபர் முதல் முடிவுரை எழுதிய ஒளரங்கசீப் வரை. எல்லாக் காலத்திலிலும் மதம் அரசியலோடு கலந்தே வந்திருக்கிறது. அக்பர் ஒருபடி மேலே சென்று எல்லா மதத்திலிருக்கும் நற்கருத்துக்களை ஒன்று திரட்டி தீன்இன்லாகி என்று ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்தார்.
மக்களின் மேன்மைக்காக புதிய மதத்தை உருவாக்கிய அக்பர்தான் அதிகார சண்டை வரக்கூடாது எனக்கருதி முகலாய குலத்தில் பிறக்கும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற விதியையும் உருவாக்கியது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மேன்மையை விரும்பியவருக்குள்ளும் பெண்கள் பற்றி ஒரு மேம்படாத எண்ணமா என வியப்பாகவும் உள்ளது.
கலையுணர்வும் காதலுணர்வும் மிக்க இளவரசியான ஜஹனாராவின் மனவலிகளைதான் சுகுமாரனின் பெருவலி நாவல் சிறப்பாக பதிவு செய்துள்ளது. பல்வேறுபட்ட மன உணர்வுகளை மிக துல்லியாமாக எளிமையான முறையில் சுகுமாரன் அழகாக பதிவு செய்துள்ளார்.
சமகால அரசியலை நேரடியாக பேசமுடியாது என்பதினால் கடந்தகால அரசியலை முன்வைத்து சமகால அரசியலை பரிசீலனை செய்வதாக சுகுமாரன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கு என்னவோ இந்த நாவலில் அரசியல் சூழ்ச்சிகள் பற்றி பதிவு இருந்தாலும், இந்நாவல் இளவரசியாக பிறந்தும் ஒரு சாதாரண பெண்ணைப்போல் மகிச்சியாக வாழ முடியவில்லையே, அதற்கு அக்பர் உருவாக்கிய விதி ஒத்துக்கொள்ளவில்லையே, என்ற ஜஹனாராவின் மனவலிகளைத்தான் நம்முள் பெருவலியாக இறக்குகிறது. அதுதான் தீவிரமாக பதிவாகியுள்ளதாகவும் நான் கருதுகிறேன்.
உண்மையில் சமகால அரசியலை பிரதிபலிக்கும் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தைதான் சொல்லமுடியும் என நம்புகிறேன்.
இந்நாவலின் கதைக்கருக்கு ஏற்ற அட்டைப்படத்தை ரோகிணி மணி வடிவமைத்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 2017 டிசம்பரில் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் வாக்கிய பிழைகளை சுட்டிக்காட்டுமாறு வாசகர்களை பதிப்பகம் கேட்ட்குக்கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். எதாவது எழுத்து பிழையை கண்டுவிட வேண்டும் என்று எண்ணியபடிதான் வாசிக்க தொடங்கினேன் ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் சுகுமாரன் தன் மொழிவளத்தால் என்னை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

                                                                                                                     28.11.2018

துளி . 200

மூழ்கவிருந்த 
திரியை
தூண்டி தூண்டி
சுடர் விட செய்யும் 
தேவதை 
நீ
எனக்கு


                        27.11.2018

துளி . 199

உன் விழி 
ஈர்ப்பு 
விசையிலிருந்து
விலக 
முடியாத 
காதல் துகள்
நான்


                      27.11.2018

துளி . 198

இல்லாத ஒன்றை 
இருப்பதாக காட்டி 
ஏன் விலகி 
செல்கிறாய் 
பேரன்பே...

                              25.11.2018

துளி . 197

அழகின் சிரிப்பை
ரசிக்க நீண்ட 
நெடும் நேரம் 
காத்திருந்தேன் 
கிடைத்ததோ 
பேரழகின்
தரிசனம்...


                        23.11.2018

துளி . 196

சாதி

சாதி மனிதர்களை
குரூரம் மிக்கவர்களாக
மாற்றுகிறது,
சாதி பெருமை பெற்ற 
மகளை பிணமாக்கி
வேடிக்கை பார்க்கிறது,
சாதி சகமனிதனை
சத்ருவாக பார்க்க
வைக்கும்
மனநோயாளிகளை
உருவாக்குகிறது,
சாதி ஆணவ படுகொலையில் 
ஈடுபட்டவருக்கு
தண்டனை உறுதி
என்ற நிலை
எப்போதுதான் வருமோ,
சாதியினால் பெருமையில்லை
சகமனிதனை நேசித்தால்
துயரில்லை

                                                         17.11.2018

                                                                                         

அனுபவம்.01

முன்பொருகாலத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு நண்பர் அஜந்தன் அறையில் சில நண்பர்கள் ஒன்று கூடி விடியவிடிய அரசியல்,சினிமா,இலக்கியம் பற்றி கலந்துரையாடல் செய்வதுண்டு. சில நேரங்களில் விவாதமாக பல விசயங்களை கற்றுக்கொண்டும், பல நேரங்களில் வாதங்கள் அதிகாமாகி ஈகோ முட்டிக்கொண்டும் விடிந்ததும் பிரிந்து சென்ற அந்த நாட்கள் இன்றும் இனிமையான நினைவுகளாக எனக்குள்/எங்களுக்குள் இருக்கின்றன.
அப்படி நடந்த கூட்டம் ஒன்றில்தான் “பெரியார் ஒரு தத்துவவாதியா” என நண்பர் பாலாஜி கேட்டார். பல நண்பர்கள் ஆமாம் என பதில் சொன்னோம். அதற்கான விளக்கங்களை சொன்னோம். ஆனால் பாலாஜி எங்கள் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கோவமான நாங்கள் கேட்டோம் தத்துவவாதி என நீங்கள் யாரை சொல்வீர்கள். உடனே பாலாஜி சீனாவின் கான்ஃபூசியஸ் ஒரு தத்துவவாதி என்றார். நிறைய விளக்கங்களும் சொன்னார். எங்கள் குழுவில் அரசியல் சார்ந்து நிறைய வாசிக்க கூடியவர் என்பதினால் அவர் கூறியதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தோடு பிரிந்து சென்றோம்.
இந்த உரையாடல் நடந்த கொஞ்சநாட்களுக்குள் பத்திரிக்கையாளர் ஞாநி வீட்டில் நடந்த கேணி கூட்டத்திற்கு தோழர் வ.கீதா பேசவந்தார். என்ன தலைப்பில் பேசினார் என இப்போது நினைவில்லை. ஆனால் பெரியார்,அம்பேத்கர் பற்றிதான் அதிகம் பேசினார். அப்போது நடந்த கலந்துரையாடலில் மேல கூறிய சம்பவத்தை விலக்கி விட்டு பெரியார் தத்துவாதியா என கேட்டேன். பெரியார் தத்துவவாதிதான் என உறுதிபட தோழர் வ.கீதா கூறினார். பத்திரிக்கையாளர் ஞாநியும் இதே கருத்தை ஏற்கனவே கூறியுள்ளதும் எனக்கு நினைவு வந்தது.
பெரியார் தத்துவவாதி என்பதனை நிரூபிக்கும் கட்டுரை ஏதும் வாசித்திருக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் ராஜன்குறை Rajan Kurai Krishnan பகிந்த ஒரு முகநூல் பதிவில் பெரியார் தத்துவாதிதான் என்பதை நிறுவும் கட்டுரையை வாசித்தேன். தமிழ் காமராசன்எழுதியுள்ள (சுமார் பத்து பக்கங்கள் கொண்ட) கட்டுரையில் இவ்வளவு தகவல்களா என வியந்தேன் நீங்களும் வாசித்து பாருங்கள். 
                                                                                                                     14.11.2108

திரை.04

பரியேறிய பெருமாள்
இந்திய ஒன்றியத்திலும், தமிழகத்திலும் சாதிய ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் பரியேறும் பெருமாளின் வருகை மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதிய பெருமிதம் பேசுபவர்களின் மனசாட்சியை தொட்டு கேள்வியை எழுப்புகிறது இப்படம். கதாநாயகனின் அவமானம் அவனுக்கு மட்டுமானது அல்லவே, அதற்காக மொத்த சமூகமும்தானே வெட்கப்பட வேண்டும். சாதியினால் பெருமையில்லை என்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக செய்ய வேண்டியது என்ன ஆணவ கொலைகளா இல்லை ஆன்மசுத்தியுடன் சகமனிதனை நேசிப்பதா, பழிவாங்குதலா இல்லை பரிசுத்த அன்பை பரிமாறுவதா. எண்ணிலடங்கா கேள்விகளை உருவாக்குகிறது பரியேறும் பெருமாள்.
மேசையின் மீது இரண்டு டீ குவளைகள், ஒன்று கறுப்பு டீ மற்றது பால் சேர்த்த டீ இருந்த குவளைகள் இவற்றுக்கிடையே ஒற்றை மல்லிகை பூ இருக்கும் இந்த பிம்பம் ஏற்படுத்தும் சிந்தனைகள் குறித்து மட்டுமே ஏராளமாக எழுதலாம்,பேசலாம். இதை ஒரு பிம்பமாக உருவாக்க தேவைப்படும் சமூக புரிதல் சாதாரணமானது அல்ல. இயக்குனர் மாரி செல்வராஜ் தன் முதல் பட்ததிலேயே முத்திரை பதித்துள்ளார். சமகாலத்தில் சாதி ஆணவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவூட்டும் காட்சிகள் கதைப்போக்கில் அங்க அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படம் ஒருவகையில் சமகால ஆவணமாகவும் உள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பாளராக இல்லையென்றால் இப்படம் வெளிவருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
பரியேறும் பெருமாள் படம் வெளியாகும் போது சென்னையில் இல்லாத்தினால் படத்தை உடனே பார்க்க வாய்பில்லாமல் போனது, சென்னை வந்தபின் பார்க்கலாம் என்றால் பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதினால் பார்க்கவில்லை. ஒருவழியாக நேற்று இரவு அமேசான் பிரைமரில் பார்த்துவிட்டேன். இதை சாத்தியமாக்கிய நண்பர் நரேஸ்க்கு மிக்க நன்றி...

                                                                                                                  14.11.2108

நிகழ்வு.01

ரித்விக் கட்டக் – பயிலரங்கம்
ரித்விக் கட்டக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பியூர் சினிமா புத்தக அரங்கில் நடைப்பெற்ற ஒரு நாள் பயிலரங்கில் நேற்று(4.11.2018) கலந்து கொண்டேன். காலை பத்து மணிக்கு நிழல் திருநாவுகரசின் நிதானமான உரையுடன் தொடங்கிய நிகழ்வு இரவு ஒன்பது மணிக்கு மிஷ்கினின் உணர்ச்சிபூர்வமான உரையுடன் நிறைவு பெற்றது. இந்த நாள் சிறப்பான நாள் என்ற புத்துணர்வுடன் அரங்கை விட்டு வெளியேறினேன்.
இந்திய திரை இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ரித்விக் கட்டக் என்ற அளவில் மட்டும்தான் இதற்குமுன் இவர் பெயர் எனக்கு அறிமுகம். அவருடைய எந்த படமும் பார்த்த்தில்லை. இன்று கட்டக்கின் இரண்டு படங்களை( meghe Dhaka Tara / Ajantrik) பார்த்தேன். ரித்விக் கட்டக்கின் மற்ற படங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் நிறைய செய்திகளை இன்றைய பயிலரங்கு மூலம் தெரிந்து கொண்டேன். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்த படம் குறித்தும், கேட்ட உரைகள் குறித்தும் தனித்தனி பதிவுகளாக வெளியிடுகிறேன்.

Meghe Dhaka Tara / மேகம் கவிந்த தாரகை
மேகா தாகா தாரா இந்த படத்தின் பேரை பல வருடங்களாக கேள்வி பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியிலேயே படத்துக்குள்/கதைக்குள் மிக இயல்பாக சென்றுவிட்டேன். நேரடி தமிழ் படம் பார்ப்பது போலவே கதையும் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளும் எனக்கு புரிய தொடங்கிவிட்டது. கதையின் நாயகி துயரத்தை எதிர் கொள்ளும்போதெல்லாம் என் கண்களும் பனிக்க தொடங்கிவிட்டன.
குடும்பம் தனிமனிதனை பாதுகாப்பது போலவே அவனை/அவளை சுரண்டவும் செய்கிறது. வறுமை எல்லா புனிதங்களை கறைப்படுத்தும் போலும். வேலைக்கு போய் குடும்ப பாரத்தை சுமக்கும் கதைநாயகி, உடனே திருமணம் செய்துக்கொள்ள துடிக்கும் காதலன், வயோகத்தின் காரணமாக வருமானம் இல்லா தந்தை, இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட தாய், இலட்சியத்தை/இசையை கனவுகாணும் ஒரு சகோதரன், ஆடம்பரத்தையும் அழகையும் தேடும் தங்கை, வேலை கிடைத்ததும் குடும்பத்திலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்பும் மற்றொரு சகோகதரன் மற்றும் ஒரு மளிகைக்கடைகார் இவ்வளவு குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கட்டக் மிக காத்திரமான ஒரு திரைப்படைப்பை உருவாக்கியுள்ளார். உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சி போராட்டங்களை மிக துள்ளியமாக/கவித்துவமாக பதிவு செய்துள்ளார்.


பயிலரங்கின் முதல் நிகழ்வாக நிழல் திருநாவுகரசு கட்டக்கின் படங்களோடு தனக்கான உறவு பற்றி பேசினார். என்பதுகளில் கட்டக்கின் படங்களை திரைப்பட சங்கத்தில் பார்த்ததையும் பிறகு கல்கத்தா சென்று கட்டக் படத்தில் நடித்த நடிகர்களை சந்தித்ததையும், கட்டக் படம்பிடித்த இடங்களை சுற்றி பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சத்திய்ஜித் ரே நடுத்தர வர்க்கத்தில் மேல்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் உயர்குடினரின் வாழ்வைப் பதிவு செய்தார். கட்டக் நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்துள்ளார் என்றும் நிழல் திருநாவுக்கரசு கூறினார்.
கட்டக்கின் இரண்டு படங்கள் திரையிடலுக்கு பிறகு
இயக்குனரும்,கவிஞருமான லீனா மணிமேகலை ரித்விக் கட்டக்கின் படங்கள் குறித்து பேசினார். கட்டக் இயக்குனர் மட்டுமல்ல நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர். அவருடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டும் என்று கூறினார், கட்டக் இயக்கி எட்டு படங்கள் வெளியாகியுள்ளது. நிறைய படங்கள் பாதியிலேயே நின்று போயிருக்கின்றன. கட்டக் தன் சிந்தனையை வெளிப்படுத்தவே படைங்களை இயக்கினார், பொருளுக்காகவோ இல்லை புகழுக்காகவோ கட்டக் படங்களை இயக்கவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் உலகம் அவரை கொண்டாட தொடங்கியது. கடக்கிற்கு முன் மாதிரி யாருமில்லை. அவருக்கான சினிமாவை அவரே சுயமாக உருவாக்கினார் என்று கூறினார், லீனாவின் உரையிலிருந்து கட்டக்கின் அரசியில் பார்வையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

இம்மாத படச்சுருள் இதழ் ரித்விக் கட்டக் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டு விழாவில் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி கலந்துகொண்டு ரித்விக் கட்டக் பற்றி சிறப்புரையாற்றினார்.
கட்டக் பற்றி அவர் தெரிந்துகொண்ட விததையும், கட்டக்கின் படங்களை பார்த்து தனக்குள் ஏற்பட்ட மனமாற்றங்கள் பற்றியும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசினார். கட்டக்கின் காதல் திருமணம், கட்டக் இரு இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதியது, ரே உடன் இருந்த நட்பு மற்றும் முரண், கட்டக் இயக்கிய படங்கள் பெற்ற வெற்றி தோல்விகள், கட்டக்கின் தீவிர ரசிகையான இந்திரா காந்தின் அழைப்பின் பேரில் பூனே திரைப்பட கல்லூரில் பதவி வகித்தது பிறகு அதிலிருந்து விலகி படம் எடுக்க போனது, படங்களின் தோல்வி மற்றும் பொருளாதர நெருக்கடியின் காரணமாக குடிக்க தொடங்குதல் என கட்டக்கின் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய பேசினார்.
ரித்விக் கட்டக் பயிலரங்கில் பார்த்த இரண்டு படங்கள், நிழல் திருநாவுகரசு,லீனா மணிமேகலை,ஷாஜி மற்றும் அருண்மொழி ஆகியோரின் கருத்துக்கள் மூலம் எனக்குள் கட்டக் பற்றி ஒரு சித்திரம் உருவாகியுள்ளது. என்னை கட்டக்கின் மற்ற படங்களை தேடிப்பார்க்க தூண்டியுள்ளது. எல்லாவகையிலும் இன்றைய நிகழ்வு கட்டக்கை சிறப்பாக நினைகூர்ந்துள்ளது.

                                                                                                                        05.11.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...