தலைமுறைகள் கடந்தும் ஒளிரும் தலைமுறைகள்.
சிங்கவினாயக தேவஸ்தானத்துப் பிள்ளையார் கோயில் நிர்மால்ய பூஜையின் தீபாராதனையில் எழும்பிய மணியோசைச் சிதறல்கள் மார்கழிமாத வைகறைக்குளிரின் ஊடே கன்னங்கரு இருளில் பிரவகித்துக் கிழக்கு நோக்கி நின்ற கோவிலை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி, கிழக்கு மேற்கில் கிடந்த நெடுந்தெரு முனையில் சென்று சேருகையில், ஆன்மீகத்தின் அடக்கத்தொனி மட்டுமே மிஞ்சியிருந்தது.
- நாவலின் முதல் பாரா.
இலக்கியம் படிக்க தொடங்கிய காலத்தில், பிரபலமான எழுத்தாளர்களின் நேர்காணலில் அவரது பார்வையில் சிறந்த படைப்புகள் என்று சொல்லும் படைப்புகளைத் தேடித்தேடி படித்திருக்கிறேன். பல எழுத்தாளர்களின் பட்டியலிலும் சிறந்த நாவலாக சொல்லப்பட்ட நீல.பத்மநாபனின் தலைமுறைகள் நாவலும் ஒன்றாகும்.
பல ஆண்டுகள் தேடி கிடைக்காமல் இருந்த இந்த நாவல், சில ஆண்டுகளுக்கு முன்பு கையில் கிடைத்தும் ஏனோ படிக்காமல் இருந்தேன். கடந்த இரண்டு நாட்களில் படித்து முடித்து பிரமித்துப் போனேன். இவ்வளவு நாள் படிக்காமல் விட்டதிற்காக வருத்தப்பட்டேன்.
நாவல் காட்சிபூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் இருக்கிறது. சில இடங்களில் சினிமாப்போல் shot by shot-ஆகவும் இருக்கிறது. நாவலின் முதல் பத்தியும் கடைசி பத்தியுமே இதற்கு சாட்சியாகும்.
திரவியத்தின் பதின்பருவத்தி மத்தியில் தொடங்கி வாலிப பருவ தொடக்கம் வரையிலான பத்து ஆண்டுகளே கதை நிகழும் காலமாகும். அது இந்திய சுதந்திரத்துக்கு முந்திய காலமும்கூட.
தமிழக கேரள எல்லையோர பகுதி. மலையாளிகளும் தமிழர்களும் ஒன்றாக வாழும் நிலப்பகுதியில் வாழும் ஒரு தமிழ் குடும்பத்தின் கதையாகும்.
திரவியம், அவன் பாட்டி உண்ணாமலை ஆச்சி ஆகிய இருவரிம் மூலமும் மூன்று தலைமுறைகளின் கதைகள் இந்த நாவலில் சொல்லப்படுகிறது.
ஒரு குறிப்பிட்ட சமூகத்தை பின்புலமாக கொண்டு அவர்களின் பழக்க வழக்கங்கள் குறிப்பாக சிறுவர்களின் விளையாட்டு, தாலாட்டு, ஒப்பாரி, கல்யாண மற்றும் சாவு வைபவ முறைகள் என எல்லா பண்பாட்டு கூறுகளும் இந்த நாவலில் பதிவாகி இருக்கிறது.
வட்டார வழக்கு மொழியாக இருப்பதினால் சில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும் அது சொல்லும் உணர்வுகள் நம்மை கதை விட்டு விலகாமல் பார்த்துக் கொள்கிறது.
பழமைக்கும் புதுமைக்குமான போர் காலம் காலமாக நடந்துக்கொண்டேதான் இருக்கிறது. எல்லா சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் அருகருகேத்தான் வாழ்கிறார்கள். அப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கான சாட்சி இந்த கதையிலும் இருக்கிறது.
எழுத்தாளர் வண்ணநிலவன் இந்த நாவலை ஒரு நவீன இதிகாசம் என்கிறார். அது முற்றிலும் உண்மைத்தான். எளிமையும் உண்மையும் இதிகாசத்திற்கான ஆதார பண்புகளாக சொல்வார்கள். அவை இந்த நாவலில் நிறைந்து இருக்கிறது.
1968 ஆண்டு வெளியான இந்த நாவலை, காலச்சுவடு பதிப்பகம் தனது நவீன தமிழ் கிளாசிக் நாவல் வரிசையில் 2013 ஆண்டில் நல்ல அட்டைப் படத்துடன் சிறப்பான வெளியிட்டுள்ளது.
கீழத்தெரு சிங்கவிநாயக தேவஸ்தான பிள்ளையார் கோவில் மணியோசைச் சிதறல்கள் காற்றில் நீந்தி அங்கே வந்து சேர்ந்தபோது, ஆலையமிருந்த திசையைப் பார்த்து, மனமொன்றிக் கரங்கூப்பித்தொழ, அப்பா மறக்கவில்லை.
- நாவலின் கடைசி பாரா.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் தனவேல் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
26.06.2021.