7.31.2020

பதிவு . 39

வந்தேறிகள் - இரா.பாரதிநாதன்.
Bharathi Nathan
அகதி வாழ்வு குறித்து நிறைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் அகதி வாழ்வு குறித்து குறைவான நாவல்களே படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் டெல்லியில் வாழும் அல்லது வாழ்ந்த தமிழர்கள் குறித்து சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். ஆனால் வந்தேறிகள் நாவல் அந்த படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறொரு படைப்பாக இருக்கிறது. அதற்கு காரணம் படைப்பாளியின் அரசியல் பார்வை மற்றும் கள அனுபவமாகும்.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலிருந்து ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து சென்ற விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கை கதையே வந்தேறிகள் நாவலாகும்.
ஏன் விசைத்தறி தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்களின் பிரச்சனைகள் என்ன. அவர்களின் பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாக்கள் யார் யார். அவர்களின் பிரச்சனைகளுக்காக முகம் கொடுத்தவர்கள் யார் யார். உண்மையில் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா இல்லையா இதுபோன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் படைப்பாகவே வந்தேறிகள் நாவல் படைக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை பேசும் நாவல் என்ற போதிலும் பிரச்சார தன்மை இல்லை. கதைகளில் வரும் ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் ரத்தமும் சதையுமான மனிதர்களாகவே இருக்கின்றனர்.
நெசவுத்தொழில் தொழிலாளர்கள், முதலாளிகள், கடை வியாபாரிகள், காவலர்கள், ரவுடிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என ஒரு நகரத்தின் எல்லாத் தரப்பு மக்களும் இந்நாவலில் நடமாடுகிறார்கள். சிலந்தி வலைப்பின்னல் போல இந்த மனிதர்களை தொடர்பு படுத்தி, அதேசமயம் சிக்கல் இல்லாமல், பாரதிநாதன் இந்நாவலை சிறப்பாக படைத்துள்ளார்.
தறியுடன் நாவல் வெளிவந்த அதே ஆண்டின் (2014) இறுதியில் இந்நாவல் வெளியாகியுள்ளது.
மதி நிலையம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை படிக்க உதவிய தோழர் இரா.பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

13.07.2020.

பதிவு . 38

ஆண்டோ எனும் மாயை - இரா.பாரதிநாதன்.
இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவலை வாசித்தப்பின் அவருடைய மற்ற படைப்புகளையும் வாசிக்க வேண்டும் என்று ஆவலாக இருந்தேன்.
அந்தத் தேடலில் அடுத்ததாக எனக்கு வாசிக்க கிடைத்தது "ஆண்டோ எனும் மாயை" சிறுகதை தொகுப்பாகும். இந்தத் தொகுப்பில் மொத்தம் ஏழு சிறுகதைகள் உள்ளன.
நெசவு, விவசாயம், தென்னை மரமேறுதல், முடித்திருத்துவோர் மற்றும் பாலியல் தொழில் சார்ந்த தொழிலாளர்கள்தான் கதைமாந்தர்கள். அவர்களில் பெரும்பாலும் விளிம்புநிலை மனிதர்களே அதிகம். அவர்களின் வாழ்க்கை பாடுகளை, அவர்களின் நற்குணங்கள் மற்றும் அறியாமைகள் என அனைத்தும் இக்கதைகளில் சிறப்பாகப் பதிவாகியுள்ளன.
இந்த தொகுப்பின் சிறந்தக் கதையாக தோழர் சிறுகதையைக் கூறுவேன். பலவிதமான மனிதர்கள் சந்திக்க வாய்ப்புள்ள இடம் காவல் நிலையம். அங்கு ஒரு மக்கள் நல போராளியும் பாலியல் தொழில் செய்யும் பெண்ணும் சந்திக்கிறார்கள். ஒருவர் பார்வையில் மற்றவர் எப்படி தென்படுகிறார். அவர்களின் உறவு எதுவரை. அவர்களின் சமூகப் புரிதல் என்ன. இப்படியான பல கேள்விகளைத் தூண்டி பதில் தேடும் கதை. மிகவும் சுவாரசியமான கதையாகும்.
இக்கதைகளை மிகவும் எளிமையாக, அனைவரையும் கவரும்வண்ணம் ஆசிரியர் எழுதியுள்ளார்.
இந்த நூலின் முதல் பதிப்பை 2017-ல் களம் வெளியீட்டகம் வெளியிட்டுள்ளது.
இந்த நூல் வாசிப்பை சாத்தியமாக்கிய தோழர் இரா.பாரதிநாதனுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
11.07.2020.


துளி . 299

தூண்டில்.
வேண்டும் என்றால்
வெளிப்படையாக பேசிவிடலாம்
வேண்டாம் என்றால்
மெளனமாக விலகிவிடலாம்.
உள்ளொன்று வைத்து
வேறொன்றை பேசுவதான
பாவனைகள் எதற்கு
சொற்களை தூண்டிலாக
வீசும் நண்பனே
என்னுளிருக்கும் உண்மை
மீன் அல்லவே.

09.07.2020

துளி . 298

உன்னை நான்
கட்டாயபடுத்த போவதில்லை
எனது அன்பை ஏற்கச் சொல்லி,
நீண்ட நெடுங்காலமாகவே
எனது அன்பு
தனித்தே இருக்கிறது
சுடர்விடும் சூரியனைப் போல்.
உன்னை நான்
கட்டாயப்படுத்த போவதில்லை
என்னை விட்டுவிலகி விடாதே என்று,
சூரியனை பிரதிபலிக்கும்
சந்திரனை போல்
என் மனம் எப்பொழுதும்
பறைசாற்றி கொண்டேயிருக்கும்
உனது பேரன்பை.

07.07.2020

துளி . 297

நம்பிக்கை
ஒருபோதும் என்னை
நீ பிரிந்து செல்லமாட்டாய் என
மூடநம்பிக்கையோடு இருந்தேன்
முன்பொரு காலத்தில்,
பிரிவு என்பது
வாழ்வின் ஓர் அங்கம் என
புரியவைத்தாய் பிரிதொரு சமயம்,
கொடும்துன்பத்தின் போதும்
தன்னை காக்காத கடவுளை
நம்பும் பக்தனைபோல்
நம்பிக்கையோடு இருக்கிறேன்
உனது பேரன்பு மட்டுமே
என்னை வாழவைக்கும் என்று...

07.07.2020.

துளி . 296

உன்னை
பிரிவதில்லையென
பிடிவாதமாகவே
இருக்கிறேன்
பிரியத்தோடு...

01.07.2020.

துளி . 295

மிளிரும் அறை
காலை எழும்போதே
மனம் புத்துணர்ச்சியாகயிருந்தது,
என்னென்ன செய்யலாமென
திட்டமிட தொடங்கியபோது கண்ணில்பட்டது படுக்கையை சூழ்ந்திருந்த தூசிபடலம்
கூடவே அடியிழந்த முடிகளும்.
சட்டென எழுந்து படுக்கையை சுருட்டி வெளியில் வெயில்காய வைத்தேன்.
துடப்பம் கொண்டு தூசிகளை பறக்கவிடாமல் பெருக்கி குப்பைத்தொட்டியில் அள்ளிப்போட்டேன்.
இரண்டு நாட்களாக குளியலறையில்
குடியிருந்த துணிகளை அலசி அறைக்கு வெளியே கொடியில் போட்டேன்.
நீண்ட நாட்களாக காய்ந்து கிடந்த மாப்பு கட்டையை எடுத்து பக்கெட் தண்ணீரில்
நனைத்து அறையிங்கும் தவழவிட்டேன்.
மறுபடியும் டெட்டால் கலந்த தண்ணீரில் நனைத்து தவழவிட்டேன் மாப்பை.
காற்றாடியை சுழலவிட்டுவதற்கு
முன்பாக கொளுத்தி வைத்தேன் முன்பொருகாலத்தில் பார்வையில்லாதவரிடம் வாங்கிய
சந்தன அதர்பத்தியை.
சன்னலை திறந்து வைத்தேன்
சூரிய ஒளியில் மிளிரும் அறை என்னுடையதுதானா
சந்தேகம் எனக்கே தோன்றியது.


எவ்வளவு நன்றாக இருக்கும்
இந்த அறையை
சுத்தபடுத்தியதுபோல்
மன அறையை எளிதில்
சுத்தபடுத்த முடிந்தால்.

27.06.2020

துளி . 294

அவர்கள் சொல்வதையெல்லாம்
புகழ்ந்தே பேசும் விசுவாசத்தை
விட்டொழி
நண்பா
வா
விவாதிக்கலாம்.
எல்லா கருத்தியலையும்
விமர்சனத்துக்கு உட்படுத்த
திறந்த மனதோடு
காத்திருக்கிறேன்.

20.06.2020

துளி . 293

காத்திருக்கிறோம்
துயரங்களை
மறக்க செய்யும்
இன்ப நாளின்
வருகைக்காக...

11.06.2020.

துளி . 292

அம்மா
ஆயிரம் அர்த்தங்கள்
பொதிந்த
ஒற்றை சொல்.

10.05.2020

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...