வந்தேறிகள் - இரா.பாரதிநாதன்.
Bharathi Nathan
அகதி வாழ்வு குறித்து நிறைய திரைப்படங்கள் பார்த்திருக்கிறேன். ஆனால் அகதி வாழ்வு குறித்து குறைவான நாவல்களே படித்திருக்கிறேன். தமிழ் இலக்கியத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மும்பை மற்றும் டெல்லியில் வாழும் அல்லது வாழ்ந்த தமிழர்கள் குறித்து சில படைப்புகளை வாசித்திருக்கிறேன். ஆனால் வந்தேறிகள் நாவல் அந்த படைப்புகளிலிருந்து முற்றிலும் வேறொரு படைப்பாக இருக்கிறது. அதற்கு காரணம் படைப்பாளியின் அரசியல் பார்வை மற்றும் கள அனுபவமாகும்.
தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களிலிருந்து ஆந்திராவிற்கு இடம் பெயர்ந்து சென்ற விசைத்தறித் தொழிலாளர்களின் வாழ்க்கை கதையே வந்தேறிகள் நாவலாகும்.
ஏன் விசைத்தறி தொழிலாளர்கள் இடம் பெயர்ந்து செல்கிறார்கள். சென்ற இடத்தில் அவர்களின் பிரச்சனைகள் என்ன. அவர்களின் பிரச்சனைகளுக்கு காரணகர்த்தாக்கள் யார் யார். அவர்களின் பிரச்சனைகளுக்காக முகம் கொடுத்தவர்கள் யார் யார். உண்மையில் அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைத்ததா இல்லையா இதுபோன்ற எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லும் படைப்பாகவே வந்தேறிகள் நாவல் படைக்கப்பட்டுள்ளது.
பிரச்சனைகளை பேசும் நாவல் என்ற போதிலும் பிரச்சார தன்மை இல்லை. கதைகளில் வரும் ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் ரத்தமும் சதையுமான மனிதர்களாகவே இருக்கின்றனர்.
நெசவுத்தொழில் தொழிலாளர்கள், முதலாளிகள், கடை வியாபாரிகள், காவலர்கள், ரவுடிகள், பாலியல் தொழில் செய்யும் பெண்கள் என ஒரு நகரத்தின் எல்லாத் தரப்பு மக்களும் இந்நாவலில் நடமாடுகிறார்கள். சிலந்தி வலைப்பின்னல் போல இந்த மனிதர்களை தொடர்பு படுத்தி, அதேசமயம் சிக்கல் இல்லாமல், பாரதிநாதன் இந்நாவலை சிறப்பாக படைத்துள்ளார்.
தறியுடன் நாவல் வெளிவந்த அதே ஆண்டின் (2014) இறுதியில் இந்நாவல் வெளியாகியுள்ளது.
மதி நிலையம் இந்நாவலை வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை படிக்க உதவிய தோழர் இரா.பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
13.07.2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக