9.03.2020

பதிவு - 41

 ஆக்காட்டி – இரா.பாரதி நாதன்.

ஒரு படைப்பைப் படித்துவிட்டு, அது தனக்குப் பிடித்துவிட்டால், அந்த படைப்பாளனின் மற்ற படைப்புகளைத் தேடித்தேடி படிப்பது என்பது தீவிரவாசகனின் இயல்புகளில் ஒன்றாகும். அப்படி தேடிச் செல்லும்போது அந்த படைப்புகள் வாசகனுக்கு உடனே கிடைக்கும் என்பது உறுதியில்லை. ஆனால் சில அபூர்வமான தருணங்களில் தேடல் தொடங்கிய உடனே படைப்புகள் வாசகனின் கைகளுக்கு கிடைத்துவிடும். அப்படியான அபூர்வமான காலம் அண்மையில் எனக்கு அமைந்தது.
பல வருடங்களாக படிக்க வேண்டுமென நினைத்தும், படிக்காமலிருந்த இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவலை இந்த ஊரடங்கு காலத்தின் தொடக்கத்தில் படித்து முடித்தேன். அந்த நாவலைப் படித்து முடிக்கும்போது அது எனக்கு பிடித்தமான நாவல்களில் ஒன்றாகிப்போனது. அவரின் மற்ற படிப்புகளைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த படைப்புகளைத் தேடத் தொடங்கிய உடனேயே அவை என் கைகளுக்கு கிடைத்தது. இரண்டாவதாக வந்தேறிகள் நாவலையும் இப்போது மூன்றாவதாக ஆக்காட்டி நாவலையும் படித்து முடித்தேன்.
தறியுடன் மற்றும் வந்தேறிகள் இரண்டும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வைச் சொன்னவை. படைப்பாளியும் நெசவாளியாக வாழ்ந்தவர். அதன் நுட்பங்களை அறிந்தவர். ஆனால் ஆக்காட்டியின் கதைக்களம் விவசாயிகளின் வாழ்வு சார்ந்த பகுதியாகும். இதை எப்படிச் சொல்லியுள்ளார் என்று ஆவலுடன் நாவலுக்குள் சென்றால் நமக்கு பெரும் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
அந்த மண்ணிலே பிறந்து வளர்ந்த படைப்பாளியைப் போல ஒரு விவசாயிக்கும் நிலத்துக்குமான உறவை மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளார். நவீன தொழில் வளர்ச்சியால் அதிகமும் பாதிக்கப்பட்ட இல்லை பாதிப்படைந்து கொண்டேயிருப்பது விவசாயமாகும். விவசாயம் பாதிக்கப்படும்போது விவசாயியும் பாதிக்கப்படுகிறான். அப்படி பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் ஒருகாலக்கட்டத்தில் பிரச்சனைக்கு எதிராக போராடுகிறார்கள். விவசாயிகளின் உழைப்பால் உருவான உணவுப்பொருட்களை சாப்பிடும் பொது சமூகம் அவனது பாதிப்பு குறித்து கவலைக்கொள்வது இல்லை.
வீட்டு வாசல் முன்னின்று காகம் கத்தினால் விருந்தினர் வருவர், இரவில் வீட்டுக்குப் பக்கத்தில் கோட்டான் கத்தினால் துக்கம் சம்பவிக்கும் என்று மக்களிடம் சில நம்பிக்கைகள் உண்டு. அதையெல்லாம் அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்த முடியாவிட்டாலும் மக்கள் நம்பவே செய்கின்றனர். ஆக்காட்டி நாவலில் ஆக்காட்டி பறவையும் அப்படியான ஒரு செய்தியை கொண்டுவருகிறது. அது என்ன செய்தி என்பதை நாவலை முழுதாக படித்தால் மட்டுமே உணரமுடியும்.
மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றார் ஜி.நாகராஜன். சமகாலத்தில் பலரின் அரசியல் வாழ்க்கை அதை நிரூபிக்கும் வகையினதாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமில்லை கிராமத்தின் புழுதியிலிருந்து படித்து வளர்ந்து நகரம் வந்த பல சாதாரண மனிதர்கள் கூட நன்றிக் கெட்டவர்களாக மாறிப்போனார்கள். அவர்களின் பிரதிநிதி ஒருவரையும் இந்த நாவலில் நாம் காணமுடியும்.
பிரச்சனைகள் இருக்கும்வரை போராட்டங்கள் இருக்கும். போராளிகள் இல்லாமல் போராட்டங்கள் இல்லை. ஒரு மருத்துவர் எங்கு சென்றாலும் சுகாதாரத்தில் கவனம் கொள்வார். முன்னாள் களம் போராளியும் இன்றைய படைப்பு போராளியுமான இரா.பாரதிநாதனும் அந்த மருத்துவரைப்போல் இந்த சமூகத்தின் பிரச்சனைகள் மீது தன் படைப்புகள் மூலம் கவனத்தை குவிக்கிறார். பிரச்சனைக்கான தீர்வுகளை முன்வைத்து பரந்துப்பட்ட விவாத்தை ஆக்காட்டி நாவல் மூலம் முன்னெடுக்கிறார்.
ஆக்காட்டி நாவல் காவிரிப்படுகை மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு போராட்டத்தினை இலக்கியமாக்கியுள்ளது. போராடியவர்கள் விவசாயிகள் என்றாலும் அவர்களின் போராட்டமும் வாழ்வும் இலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டுமென கருத்திய படைப்பாளிக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த நாவலைப் புலம் பதிப்பகம் முதல் பதிப்பாக 2016 ஆண்டில் சிறப்பாக வெளியிட்டுள்ளது.



13.08.2020.

திரை - 08

 பித்துநிலை.

Trance என்ற சொல்லுக்கு மெய்மறதி அல்லது நினைவிழந்த நிலை என்று கூகுள் மொழிப்பெயர்ப்பு சொல்கிறது.
கடவுள் என்பது கற்பனை. மனிதனை நல்வழிப்படுத்த ஏற்படுத்தப்பட்டது கடவுள். ஒருசாரர் தாம் அதிகாரம் பெற உருவாக்கப்பட்ட ஒன்றே கடவுள். இப்படி கடவுள் பற்றி நிறைய கருத்துக்கள் உள்ளன. அறிவியல்பூர்வமாக கடவுள் இல்லை. ஆனால் எல்லா அறிவியல் கண்டுபிடிப்புகளும் கடவுளை போற்றவும் தூற்றவும் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து மத நிறுவனங்களும் மக்கள்மீது அதிகாரம் செலுத்தவும், மக்களிடமிருந்து பணம் வசூலிக்கவும் கடவுளை பயன்படுத்தினர், இப்பவும் பயன்படுத்திக்கொண்டுள்ளனர். மனிதந்தான் கடவுளை காப்பாற்றிக்கொண்டே வந்துள்ளான் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன.
பெரும்முதலாளித்துவ கனவில் இருப்பவர்கள் கடவுளை வைத்து எப்படியெல்லாம் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதை சொல்லுகிறது Tance என்ற மலையாள திரைப்படம். குடும்பத்தை இழந்து அல்லது குடும்பத்தை விட்டு வெளியேறி தனியாக வசிக்கும் ஆண் அல்லது பெண்ணை கண்டுபிடித்து அவர்களை கடவுளின் பிரதிநிதிகளாக மக்கள் முன்னிருத்தி மக்களிடமிருந்து பணத்தை பறிப்பதே இவர்களின் நோக்கம். இதுவே அவர்களின் தொழில். இந்தப்படத்தில் ஒரு குறிப்பிட்ட மதத்தை முன்வைத்து பிரச்சனையை பேசியிருந்தாலும் இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.
இப்படம் இந்த ஆண்டில்தான் வெளியாகியுள்ளது. சமகாலத்துக்கு அவசியமான படம்.

07.08.2020.

துளி - 301

 யார்..?!

மாநகரத்தின் பிரதான சாலை
முன்னிரவு நேரம்,
சாலையெங்கும் பரவியிருக்கும்
பொன்னிற ஒளியை கிழித்துக்கொண்டு
செல்கிறது வீடுதிரும்பும் வாகனங்களின் வெண்ணிற முகப்பு விளக்கொளி,
சாலை விதிக்கு கட்டுப்பட்டு சீரான இடைவெளியில் ஒன்றபின் ஒன்றாக வரிசையாக சில வாகனங்கள்,
மீறலையே விதியாக கொண்டு சீறி செல்லும் வாகனங்கள் பல,
சாலைக்கும் நடைமேடைக்கும் இடையே
மனப்பிறழ்வான ஒருவன் எதிர்திசையில் பயணிக்கிறான் பயமறியாமல்,
அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாதே என்று
பதறுகிறான் பேருந்தில் சன்னலோர இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒருவன்,
அழுக்கான உடையை சீரமைத்தபடி
அங்களின் தேவைக்கு ஏற்ப சொறிந்தபடி
பொருளற்ற பாடலை மகிழ்ச்சியோடு பாடியபடி சென்றவன் திடீரென தாவுகிறான் நடைமேடைக்கு,
எதிரே ஒருவன் இருசக்கர வாகனத்தை ஒரு கையால் இயக்கியபடி
மற்றொரு கையினால் காற்றில் கத்திசண்டையிட்டபடியே விரைந்து வருகிறான்,
பேருந்திலிருப்பவனுக்கு ஒரு சந்தேகம்
இந்த இருவரில் மனம் பிறழ்ந்தவர்கள் யார்...?!

01.08.2020.

துளி - 300

கணக்காலமாக நம்பிக்கையோடு

காத்திருக்கிறார்கள்

கனவுலகவாசிகள்

கனவுகள் மெய்ப்படும் நாளுக்காக...

30.07.2020.

பதிவு - 40

 மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி… - இரா.பாரதிநாதன்.

Bharathi Nathan
ஒரு படைப்பை ( கவிதை, சிறுகதை, நாவல், … ) உருவாக்குவது எப்படி..? என்பதை ஒருவர் மற்றவருக்கு சொல்லித்தர முடியுமா என்று கேள்வி எழுப்பினால் நமக்கு பலவிதமான பதில்கள் கிடைக்கும். அதில் இரண்டு வகை முதன்மையான பதில்கள் நமக்கு கிடைக்கும். ஒன்று சொல்லித்தர முடியும் மற்றது சொல்லித்தர முடியாது. இதுவே கலை மக்களுக்கா, கலை கலைக்காக என்ற இருப்பெரும் பிரிவுகளாக இருந்து படைப்பாளிகள் வாதிட்டுக்கொண்டேயுள்ளனர்.
இரா.பாரதிநாதன் மார்க்சிய பார்வையில் கதை எழுதுவது பற்றி… என்ற இந்த புத்தகம் முதல் வகையை சேர்ந்தது. கலை மக்களுக்காக. படைப்பாளனின் பணி மக்களுக்காக சிந்திப்பது. மக்களுக்காக சிந்திப்பவர்களின் படைப்புகள் எப்படி இருக்க வேண்டும் கேள்விக்கான பதிலே இந்த புத்தகம் என்றால் அது மிகையாகாது.
பாரதிநாதன் மூன்று நாவல்களும் ஒரு சிறுகதை தொகுப்பும் வெளியிட்டுள்ளார். ஒரு படைப்பாளியாக தன் படைப்புகளை உருவாக்கிய அனுபத்திலிருந்தும், வாசகனாக அவர் வாசித்த படைப்புகளிலிருந்தும், அவர் கவனித்த, அவர் கவனத்தோடு இருந்த இடங்களிலிருந்தும் பெற்ற அனுபவங்களை இந்த புத்தகத்தில் பதிவுசெய்துள்ளார். அரசியல் பார்வையோடு மக்களுக்கா எழுத வரும் இளம் எழுத்தாளனுக்கு இந்த புத்தகம் சிறந்த வழிக்காட்டியாகும்.
இந்த புத்தகத்தை வாசித்து முடிக்கும்போது நமக்கு இரண்டு பட்டியல் கிடைக்கும். ஒன்று சிறந்த சிறுகதைகளின் பெயர்கள் மற்றது சிறந்த நாவல்களின் பெயர்கள். பட்டியல் என்றதும் தரவரிசை பட்டியல் என்று எண்ண வேண்டாம். இந்த பட்டியல் அப்படியானது அல்ல. ஒரு படைப்பு எப்படி நல்ல படிப்பாக இருக்கிறது அல்லது மோசமான படைப்பாக இருக்கிறது என்பதை பல உதாரணங்களோடு எல்லாருக்கும் புரியும் எளிமையாக எழுதியுள்ளார். அதிலிருந்து பட்டியலை நாம் உருவாக்கி கொள்ளமுடியும்.
2017 ஆண்டு இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு வெளியாகியுள்ளது. இந்த புத்தகத்தினை களம் வெளியீட்டகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகத்தை எனக்கு படிக்க தந்து உதவிய தோழர் பாரதிநாதன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.07.2020.


திரை - 07

 சூஃபியும் மகத்தான மரணமும்

மகத்தான மரணம் என்ற சொற்றொடர் நேற்று காலையில் மனதுக்குள் தோன்றியது. இதை துவக்க வரியாக வைத்து ஒரு சிறுகவிதை எழுத வேண்டுமெனவும் தோன்றியது. உடனே எது மகத்தான மரணம் என்ற கேள்வி யோசிக்க தொடங்கினேன், அதுப்பற்றி பலவாறு யோசித்தும் எந்த முடிவுக்கும் வராமல் அந்த சிந்தனையிலிருந்து விலகி, ஒருகட்டத்தில் அதை மறந்தும் விட்டேன்.
கடந்த சில நாட்களாக எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் முகனூல் பதிவுகளில் சூஃபியும் சுஜாதாவும் என்ற வார்த்தைகளை பார்த்தேன். அது எதும் சூஃபிகள் பற்றிய கட்டுரையாக இருக்கும், பிறகு படித்துக்கொள்ளலாமென அதைப்படிக்காமலே விட்டுவிட்டேன். நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருக்கும்போது சூஃபியும் சுஜாதாவும் என்பது அண்மையில் வெளியான ஒரு மலையாள திரைப்படம் என தெரியவந்தது. அப்படியானால் கெளதம சித்தார்த்தன் எழுதியது திரைவிமர்சனமாக இருக்கும், முதலில் படத்தை பார்த்துவிட்டு பிறகு விமர்சனத்தை படிக்கலாம் என திட்டமிட்டேன்.
நேற்று மதிய உணவுக்கு பிறகு சூஃபியும் சுஜாதாவும் திரைப்படத்தை பார்த்தேன். ஒரு அதிகாலை பொழுதில் கதை துவங்குகிறது. சிறுகாடு போன்ற பின்புலத்தில் ஒரு பாதை, பாதையின் முடிவில இரண்டு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இடி இடிக்கிறது. காற்று வீசுகிறது. மரத்திலிருந்து இலைகள் விழுகிறது. ஒரு கதாபாத்திரம் அந்த பதையில் நடந்து செல்கிறது. நடந்து செல்வது ஆணா பெண்ணா தீர்மானமான முடிவு வருவதற்கு முன்பாக, வீசிய காற்றில் பழுத்த இலையொன்று காற்றில் மிதந்து செல்வதை பார்க்கிறோம். மிதந்து செல்லும் பழுத்த இலை ஒரு கட்டிடத்துக்கு செல்லும் பழைய படிக்கட்டுகளில் விழுந்து புரண்டு இறுதியில் காற்றில் பறந்து செல்கிறது. முடிவாக அந்த கதாபாத்திரம் ஒடை அல்லது சிற்றாறு ஒன்றில் இறங்கி நடக்கும் பிண்ணனியில் பழுத்த இலை அந்த நீரோட்டத்தில் விழுந்து நீர் செல்லும் போக்கில் மிதந்து செல்கிறது.
நீரிலிருந்து நிலத்தில் கால் வைக்கும்போதுதான் அந்த கதாபாத்திரம் ஆண் என்றும் அவன் ஒரு முஸல்மான் என்று நமக்கு தெரிய வருகிறது. அவன் மேலும் நடந்து சென்று ஒரு மரத்தடியின் கீழ் செடிகளுக்கு இடையேயிருக்கும் நடுகல் அல்லது சமாதி போன்ற ஒன்றை வணங்குகிறான். அப்போது அவனுக்கு பக்கத்தில் ஒரு நாவல் பழம் விழுகிறது. மேலே அண்ணாந்து பார்த்துவிட்டு அந்த பழத்தை எடுத்து சாப்பிடுகிறான். அப்பொழுது அந்த கட்டிடத்தினுளிருந்து ஒரு பெரியவர் சன்னல் வழியே அவனை பார்க்கிறார். யாரென கேட்கிறார். நான் சூஃபி என பதில் கூறுகிறான்.
சூஃபி வந்திருப்பது ஒரு பள்ளிவாசல். அந்த பெரியவர் அந்த பள்ளிவாசலின் தற்போதைய இமாம். மரத்தடியில் சூஃபி வணங்கியது அவனுடைய குருநாதரின் சமாதி. அவன் பத்து வருடங்களுக்கு பிறகு அவன் அங்கு வந்திருக்கிறான் என்பதெல்லாம் அவர்களின் உரையாடலிருந்து நமக்கு தெரியவருகிறது. இமாம் பாங்கு சொல்ல தயாராகிறார். நான் சொல்கிறேன் என சூஃபி முன்வருகிறான். இமாம் சலிப்போடு இங்கு பத்துபேர் வந்தாலே பெரிய விசயம் என்கிறார். பத்துப்பேர் போதுமா என்று கேட்டபடியே சூஃபி பாங்கு சொல்ல தயாராகிறான்.
சூஃபியின் பாங்கு ஒலிக்கேட்டு கடையில் டீ குடிக்கும் இஸ்லாமியர்கள் ஆச்சரியப் படுகின்றனர். ஒரு வீட்டு வாசலில் கோலமிடும் மத்திய வயதான பெண்மணி பாங்கு சொல்லும் குரலை கேட்டதும் யோசனையோடு அதை கவனிக்கிறார். சந்தையிருக்கும் மக்களும் குரலை இனம் காணுகின்றனர். அந்த நீர்வழியை கடந்து தொழுகைக்கு ஆட்கள் வர தொடங்குகின்றனர்.
பத்து பேர் வருவார்களா என்ற நிலைமாறி நிறைய பேர் தொழுகைக்கு வந்துள்ளனர். இமாம் தொழுகையை தொடங்குகிறார். சூஃபி முதல் வரிசையில் இருந்து தொழுகிறான். அனைவரும் நின்ற நிலையிருந்து உட்கார்ந்து முழங்காலிட்டு முன்னே தரையில் தலைவைத்து தொழுகின்றனர். சூஃபியும் தரையை தொட்டு தொழுகிறான்.
பள்ளிவாசலுக்கு வெளியே உடல் சுத்தம் செய்யும் நீர் தொட்டி அருகே தரையிலிருந்த தவளையொன்று தண்ணீரில் தாவி குதிக்கிறது. தரையில் தலைவைத்து தொழ தொடங்கிய சூஃபி மறுபடியும் எழவேயில்லை. உடனிருந்தவர்கள் அவனை திருப்பி தரையில் படுக்க வைக்கின்றனர். இமானின் கை சூஃபின் மூச்சுக்காற்றை பரிசோதிக்கிறது.
சூஃபி சுழன்று சுழன்று நடமாடுகிறான். அந்தரத்தில் மிதக்கிறான். கணவன் மற்றும் குழந்தையோடு படுத்திருக்கும் ஒரு பெண் கனவு காண்கிறாள். அந்தரத்தில் மிதந்த சூஃபி தரையில் வீழ்கிறான். அந்த பெண் திடுக்கிட்டு எழுகிறாள்.
பள்ளிவாசலில் சூஃபி இறந்து விட்டதாக அறிவிக்கின்றனர். அந்த செய்தியை எல்லாருக்கும் சொல்ல சொல்கின்றனர். சுஜாதாவின் கணவனுக்கும் சொல் என்று ஒரு குரல் சொல்கிறது. இந்த தொடக்க காட்சிகள் எல்லாமே படத்தில் சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு நிமிடங்களுக்குள் வந்துவிடுகிறது.
அதிகாலை கனவில் சூஃபி அந்தரத்திலிருந்து வீழ்வதை கனவு கண்டவள்தான் சுஜாதா. அவள் வசிப்பது துபையில். செய்தி அறிந்த அவள் கணவன் அவளை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறான். அப்போது பழைய கதை விரிகிறது.
சுஜாதா யார், சூஃபிக்கும் சுஜாதாவுக்குமான உறவு என்ன, சூஃபிக்கும் சுஜாதாவுக்கு கலைசார்ந்து சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன கலை, சூஃபிக்கும் அவனது குருவுக்கும்மான பந்தம் எப்படிப்பட்டது இப்படியான எல்லா கேள்விகளுக்குமான பதில்களே சூஃபியும் சுஜாதாவும் திரைப்படம்.
படத்தின் பெரும்பகுதி வசனம் இல்லாமல் காட்சிகளே கதை சொல்கின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை இசை மயமாக இருக்கிறது. உணர்வுபூர்வமாக படத்தோடு ஒன்றி போய்விட்டேன்.
சூஃபி மரணிக்குமிடம் ஒரு பள்ளிவாசல். அது அவன் வாழ்வில் ஓர் அங்கம். அங்குதான் அவன் முதலில் இறையை தொழ தொடங்கினான், அங்குதான் அவன் குருநாதரிடம் இசை கற்றான், அங்குதான் சுஜாதாவை சந்தித்தான். அந்த இடத்தில்தான் அவன் வாழ்வின் மகிழ்ச்சியான பொழுதுகளையும் துயரமான பொழுதுகளையும் இனம் கண்டுக்கொண்டான்.
ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அவன் இறைவனை தொழும்போதே மரணம் வாய்க்கப் பெற்றால் அதுவே அவனுக்கு மோட்சம், குருபக்தி மிகுந்த சீடன் குருவோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த இடத்திலே அவனுக்கு மரணம் சம்பவிக்கபெற்றால் குருவின் ஆசியைபெற்றதாக எண்ணக்கூடும், காதலியை முதன்முதலில் சந்தித்த இடத்திலேயே மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு எத்தனை காதலனுக்கு வாய்க்கும். இந்த மூன்று அம்சமும் சூஃபின் மரணத்தில் இருக்கிறது. அதனால் சூஃபியின் மரணத்தை மகத்தான மரணம் என்று கருதலாம் என்று எனக்கு தோன்றுகிறது. சூஃபிக்கு யார்மீதும் துவேசமில்லை. துவேசமிருந்தால் எதற்கு பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அங்கு வருகிறான்.
சூஃபி அறிமுகமாகும்போது பழுத்த இலை காற்றில் பறந்து ஆற்றின் நீரில் சங்கமித்ததும், குருவை வணங்கும்போது மரத்திலிருந்து மரணித்து விழுந்த கனியை எடுத்து அவன் விருப்பத்தோடு உண்பதும், அவன் தரையில் தலையை வைத்து தொழ தொடங்கும்போது தரையிலிருந்து தண்ணீரில் துள்ளிக்குதிக்கும் தவளை இதெல்லாம் அவனின் மரணத்தை முன்கூறத்தானோ.
மரணம் பற்றிய எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்கிறது. கொடும்நோயில் மாந்தர்கள் திரளாக செத்தும் விழும் காலத்தில் மரணத்தை அசைபோடாமல்தான் வாழமுடியுமா என்ன. காலையில் தோன்றிய எண்ணத்திற்கு பதில்போல் சூஃபின் மரணத்தை பார்க்கிறேன். சூஃபின் மரணம் மகத்தானதுதான் என்று எனக்கு தோன்றுகிறது.
சூஃபியும் சுஜாதாவும் படக்குழுவினருக்கு பாராடுகளும் நன்றிகளும்.
இந்த படம் அமேசான் பிரேமில் உள்ளது. எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் இந்தப்படம் பற்றி விரிவான விமர்சம் எழுதியுள்ளார். வாய்ப்புள்ளவர்கள் படம் பார்த்துவிட்டு அந்த விமர்சனத்தையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

21.07.2020.

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...