ஆக்காட்டி – இரா.பாரதி நாதன்.
ஒரு படைப்பைப் படித்துவிட்டு, அது தனக்குப் பிடித்துவிட்டால், அந்த படைப்பாளனின் மற்ற படைப்புகளைத் தேடித்தேடி படிப்பது என்பது தீவிரவாசகனின் இயல்புகளில் ஒன்றாகும். அப்படி தேடிச் செல்லும்போது அந்த படைப்புகள் வாசகனுக்கு உடனே கிடைக்கும் என்பது உறுதியில்லை. ஆனால் சில அபூர்வமான தருணங்களில் தேடல் தொடங்கிய உடனே படைப்புகள் வாசகனின் கைகளுக்கு கிடைத்துவிடும். அப்படியான அபூர்வமான காலம் அண்மையில் எனக்கு அமைந்தது.
பல வருடங்களாக படிக்க வேண்டுமென நினைத்தும், படிக்காமலிருந்த இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவலை இந்த ஊரடங்கு காலத்தின் தொடக்கத்தில் படித்து முடித்தேன். அந்த நாவலைப் படித்து முடிக்கும்போது அது எனக்கு பிடித்தமான நாவல்களில் ஒன்றாகிப்போனது. அவரின் மற்ற படிப்புகளைப் படிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. அந்த படைப்புகளைத் தேடத் தொடங்கிய உடனேயே அவை என் கைகளுக்கு கிடைத்தது. இரண்டாவதாக வந்தேறிகள் நாவலையும் இப்போது மூன்றாவதாக ஆக்காட்டி நாவலையும் படித்து முடித்தேன்.
தறியுடன் மற்றும் வந்தேறிகள் இரண்டும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்வைச் சொன்னவை. படைப்பாளியும் நெசவாளியாக வாழ்ந்தவர். அதன் நுட்பங்களை அறிந்தவர். ஆனால் ஆக்காட்டியின் கதைக்களம் விவசாயிகளின் வாழ்வு சார்ந்த பகுதியாகும். இதை எப்படிச் சொல்லியுள்ளார் என்று ஆவலுடன் நாவலுக்குள் சென்றால் நமக்கு பெரும் ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
அந்த மண்ணிலே பிறந்து வளர்ந்த படைப்பாளியைப் போல ஒரு விவசாயிக்கும் நிலத்துக்குமான உறவை மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லியுள்ளார். நவீன தொழில் வளர்ச்சியால் அதிகமும் பாதிக்கப்பட்ட இல்லை பாதிப்படைந்து கொண்டேயிருப்பது விவசாயமாகும். விவசாயம் பாதிக்கப்படும்போது விவசாயியும் பாதிக்கப்படுகிறான். அப்படி பாதிப்புக்கு உள்ளாகும் விவசாயிகள் ஒருகாலக்கட்டத்தில் பிரச்சனைக்கு எதிராக போராடுகிறார்கள். விவசாயிகளின் உழைப்பால் உருவான உணவுப்பொருட்களை சாப்பிடும் பொது சமூகம் அவனது பாதிப்பு குறித்து கவலைக்கொள்வது இல்லை.
வீட்டு வாசல் முன்னின்று காகம் கத்தினால் விருந்தினர் வருவர், இரவில் வீட்டுக்குப் பக்கத்தில் கோட்டான் கத்தினால் துக்கம் சம்பவிக்கும் என்று மக்களிடம் சில நம்பிக்கைகள் உண்டு. அதையெல்லாம் அறிவியல்பூர்வமாக உறுதிபடுத்த முடியாவிட்டாலும் மக்கள் நம்பவே செய்கின்றனர். ஆக்காட்டி நாவலில் ஆக்காட்டி பறவையும் அப்படியான ஒரு செய்தியை கொண்டுவருகிறது. அது என்ன செய்தி என்பதை நாவலை முழுதாக படித்தால் மட்டுமே உணரமுடியும்.
மனிதன் மகத்தான சல்லிப்பயல் என்றார் ஜி.நாகராஜன். சமகாலத்தில் பலரின் அரசியல் வாழ்க்கை அதை நிரூபிக்கும் வகையினதாகவே இருக்கிறது. அரசியல்வாதிகள் மட்டுமில்லை கிராமத்தின் புழுதியிலிருந்து படித்து வளர்ந்து நகரம் வந்த பல சாதாரண மனிதர்கள் கூட நன்றிக் கெட்டவர்களாக மாறிப்போனார்கள். அவர்களின் பிரதிநிதி ஒருவரையும் இந்த நாவலில் நாம் காணமுடியும்.
பிரச்சனைகள் இருக்கும்வரை போராட்டங்கள் இருக்கும். போராளிகள் இல்லாமல் போராட்டங்கள் இல்லை. ஒரு மருத்துவர் எங்கு சென்றாலும் சுகாதாரத்தில் கவனம் கொள்வார். முன்னாள் களம் போராளியும் இன்றைய படைப்பு போராளியுமான இரா.பாரதிநாதனும் அந்த மருத்துவரைப்போல் இந்த சமூகத்தின் பிரச்சனைகள் மீது தன் படைப்புகள் மூலம் கவனத்தை குவிக்கிறார். பிரச்சனைக்கான தீர்வுகளை முன்வைத்து பரந்துப்பட்ட விவாத்தை ஆக்காட்டி நாவல் மூலம் முன்னெடுக்கிறார்.
ஆக்காட்டி நாவல் காவிரிப்படுகை மீத்தேன் எரிவாயு எதிர்ப்பு போராட்டத்தினை இலக்கியமாக்கியுள்ளது. போராடியவர்கள் விவசாயிகள் என்றாலும் அவர்களின் போராட்டமும் வாழ்வும் இலக்கியத்தில் பதிவு செய்ய வேண்டுமென கருத்திய படைப்பாளிக்கு எமது பாராட்டுகளும் நன்றிகளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக