12.31.2018

பதிவு . 19

இந்த ஆண்டில் நான் பார்த்த தமிழ் படங்களில் எனக்கு பிடித்த படங்கள்..
01. ஒரு குப்ப கதை - காளி ரங்கசாமி.
02. மேற்குத் தொடர்ச்சிமலை - லெனின் பாரதி.
03. 96. - பிரேம்குமார்.
04. பரியேறும் பெருமாள் - மாரி செல்வராஜ்.
05. சீதக்காதி - பாலாஜி தரணிதரன்.

                                                                                                                                       31.12.2018

பதிவு .18

இந்த ஆண்டு நான் வாசித்தவற்றில் எனக்கு பிடித்த புத்தகங்கள்
நாவல்கள்
01. காதுகள் - எம்.வி.வெங்கட்ராமன்.
02. ஜீவனாம்சம் - சி.சு.செல்லப்பா.
03. . செல்லாப் பணம் - இமையம்.
04. கோவேறு கழுதைகள் - இமையம்.
05. பெருவலி - சுகுமாரன்.
06. காச்சர் கோச்சர் - விவேக் ஷான்பாக்/கே.நல்லதம்பி.
07. நிலவறைக் குறிப்புகள் - ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி/எம்.ஏ.சுசிலா.
சிறுகதைகள் தொகுப்பு
08. கு.பா.ரா கதைகள் பாகம் 1
09. சாவு சோறு - இமையம்.
10. கொலை சேவல் - இமையம்.
சினிமா
11. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - மிஷ்கின்.
அரசியல்
12. நான் ஒரு இந்துவாக சாக மாட்டேன் - பி.ஆர்.அம்பேத்கர்.
13. ரோசா லக்சம்பர்க் வாழ்வும் பணிகளும் - பால் ப்ராலிச்/கொற்றவை.
சுயமுன்னேற்றம்
14. உச்ச கட்ட வெற்றிக்கான வழிகாட்டி - ராபின் ஷர்மா.
15. சாக்குப்போக்குகளை விட்டொழிங்கள் -
பிரையன் டிரேசி.
16. நேர நிர்வாகம் - பிரையன் டிரேசி.
மற்றவை
17. வினயா - மொ.பு. குளச்சல் மு.யூசப்.
18. உடலினை உறுதி செய் - செ.சைலேந்திர பாபு.
19. தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் -
அக்குஹீலர் அ.உமர்பாரூக்.

                                                                                                                          31.12.2018

திரை . 06

இருளான
பன்னிரெண்டு ஆண்டுகள்
A twelve year night - Alvaro Brechner - Uruguay - 2018
இந்த திரைப்படம் பாலுமகேந்திரா நூலக அமைப்பு சார்பாக இன்று காலை டிஸ்கவரி புக் பேலஸில் திரையிடப்பட்டது. சென்னை திரைப்பட விழாவில் தவறவிட்ட இந்த படத்தை இன்று பார்த்தேன்.
மூன்று அரசியல் கைதிகள் பன்னிரண்டு ஆண்டுகள் சிறைவாசத்தில் அரசால் எந்தளவு கொடுமைக்கு உள்ளாகுகிறார்கள் என்பதை மிகவும் உணர்வுபூர்வமாக சொல்லும் படமாகும்.
எல்லா நாடுகளிலும் அரச வன்முறை என்பது மிக கொடுமையானதுதான் போலும். தள்ளாத வயதிலும் சிறையிலிருக்கும் மகனை பார்க்க அளைந்து திரியும் தாய், பல சித்தரவதைகளுக்கு இடையில் வாழ்ந்தாலும் தன்னை காணவரும் மகளை மகிழ்ச்சி படுத்தும் தந்தை என படம் நம் உணர்வோடு கலந்து விடுகிறது.
இது போன்ற ஒரு அரசியல் படம் இந்தியாவில் எடுக்கப்பட்டால் பார்த்து விட்டு மகிழ்ச்சியாக சாவேன் என திரை விமர்சகர் சுரேஷ் கண்ணன் எழுதிய முகநூல் பதிவுதான் என்னை இந்த படத்தை தேடி பார்க்க தூண்டியது. அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த திரையிடல் சாத்தியமாக காரணமான இருந்த அனைவருக்கும் என் நன்றிகள்.

                                                                                                                                      30.12.2018.

பதிவு . 17

ஃபியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் "நிலவறைக் குறிப்புகள் " நாவலை வாசித்தேன். பல உளவியல் நூல்கள் வாசித்து தெரிந்து கொள்ளவேண்டிய செய்திகளை இந்த நாவல் ஒரேயொரு பிரதான கதாப்பாத்திரம் வாயிலாக மனித உளவியல் பற்றி காத்திரமாக பதிவு செய்துள்ளது.
சுமார் இருநூறு பக்கங்கள் மட்டுமேயுள்ள இந்தநாவலில் பொருளும்,அன்பும்,அதிகாரமும் அற்ற ஓர் எளிய மனிதனின் ஒற்றை குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டேயுள்ளது. ஒருவன் கண்ணாடி முன் நிற்கும்போது அவன் உடலில் உள்ள அழகு,அசிங்கம் அவனுக்கு தெரிவதுபோல் இந்நாவல் மானுடத்தின் உளவியலை பிரதிப்பலிக்கிறது.
நாவலை எம்.ஏ.சுசீலா சிறப்பாக மொழிபெயர்ப்பு செய்துள்ளார். நேரிடையாக தமிழில் எழுதப்பட்ட நாவலை வாசிக்கும் அனுபவத்தை தருகிறது.
நற்றிணை பதிப்பகம் கிளாசிக் உலக நாவல் வரிசையில் இந்நாவலை சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது.

                                                                                                                                                     29.12.2018

பதிவு . 16

ஒரு படம் ஒரு புத்தகம்
The Wild Pear Tree – Nuri Bidge Ceylen – Turkey. இந்த படத்தை சென்னை திரைப்படவிழாவில் பார்த்தேன். ஒரு நாவலை படித்த அனுபவம் ஏற்பட்டது. பட்டபடிப்பை முடித்த இளைஞன் ஒருவன் எதிர்கொள்ளும் வாழ்வியல் அனுபவமே கதையாகும். ஒரு எழுத்தாளருடன் அவன் இலக்கியம் பற்றி மேற்கொள்ளும் உரையாடல், அவனது நண்பர்களுடன் நீண்டநேரம் நடந்தபடியே கடவுள் பற்றி அவர்களுக்குள் நடக்கும் விவாதம், அவனது அம்மா மற்றும் அப்பாவுடன் வாழ்வுப்பற்றி அவன் மேற்கொள்ளும் உரையாடல் என அனைத்தும் ரஷ்ய நாவல்களை வாசிப்பது போன்ற மயக்கத்தை என்னுள் உருவாக்கியது.
அண்மையில் கன்னட மொழிபெயர்ப்பு நாவலான ”காச்சர் கோச்சர்” –ஐ வாசித்தேன், இதை விவேக் ஷான்பாக் கன்னடத்தில் எழுதியுள்ளார். தமிழில் கே.நல்லதம்பி மொழியாக்கம் செய்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இந்நாவலின் கதைநாயகன் ஒரு காபி ஹவுஸில் அமர்ந்து கொண்டு தன் குடும்பகதையை சொல்லுகிறான். மனிதர்களை காப்பாற்றும் இந்த குடும்ப அமைப்புதான் தன்னை கேள்விக்குட்படுத்தும் மனிதர்களை காவுவாங்கவும் செய்கிறது. இந்தநாவல் குடும்ப அமைப்பை விமர்சனத்துக்கு உள்ளாக்குகிறது. ஒரு திரைப்படத்தை பார்த்த உணர்வு இந்நாவலை வாசித்து முடித்ததும் எனக்குள் தோன்றியது.

                                                                                                                                    25.12.2018

துளி . 205

அலைந்து 
திரிகிறது 
மனம்
தேவதையின்
விழிகள்
உருளும்
திசையெங்கும்...


                                  22.12.2018.

திரை . 05

கடந்த ஒரு வாரமாக நடந்த16வது சென்னை திரைப்பட விழாவில் கலந்து கொண்டு ஏழு நாட்களில் சுமார் 25 திரைப்படங்கள் பார்த்தேன். சிறப்பான அனுபவமாக இருந்தது. பல நண்பர்களை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திக்க முடிந்தது. நான் பார்த்த படங்களில் எனக்கு பிடித்த படங்களின் பட்டியல் இது.
01. In the fade - Faith Akin - Germany.
02. Shoplifters - Hirokazu Koreeda - japan.
03. 3 Faces - Jafer Panahi - Iran.
04. Bingo : The King of the Mornings - Brazil.
05. Woman at War - Benedikt Erilingsson - Iceland.
06. Toni Eradmann - Maren Ade - Germany.
07. Western - Valeska Grisebach - Germany.
08. At War - Stephane Brize - France.
09. Stefan Zweig - Maria Schrader - Germany.
10. Killing Jesues - Laura Mora Otenga - Colombia.
11. 53 wars - Ewa Bukowska - Poland.
12. What will people say - Iram Haq - Norway.
13. IRO - Hadi Mohanhegh - Iran.
14.The Wild Pear Tree - Nuri Bilge Ceylan - Turkey.
15. Eternal Winter - Attila Szasz - Hungary.
16. Yomeddine - A.B.Shawky - Egypt.
17. A Family Tour - Liang Ying - Taiwan.
18. The Rib - Zhang Wei - China.

                                                                     21.12.2018.

துளி . 204

எதிர்பாராத 
இன்பம்
எதிர்பாராத 
துன்பம்
எப்படி 
எதிர்கொள்ள
இவ்வாழ்வை...

                                    17.12.2018

துளி . 203

மாமழையில் 
நனைந்த
பேரானந்தத்தை 
தருகிறது
தேவதையின் 
புன்சிரிப்பு...


                          14.12.2018

துளி . 202

நீண்ட நெடும்காலம்
தேடி கண்டடைந்த
பொய்கையில்
நீராடி திளைக்கிறான்
தன் ஆசைதீர...
ஆசை தீரக்கூடியதானா
தீராது யோசிக்கிறான்
நீராடிக் கொண்டே...

                                                 09.12.2018.

துளி . 201

பேரன்புடன் 
பரிசளித்து 
செல்கிறாய்
தூக்கமில்லா
இரவு ஒன்றை...

                               08.12.2018.

பதிவு . 17

வாசிக்க தொடங்கி பல வருடங்களுக்கு பிறகும் ஏனோ எனக்கு சுயமுன்னேற்றம் சார்ந்த நூல்களை வாசிக்க விருப்பம் இல்லாமலேயிருந்தேன்.
எதிர்பாராதவிதமாக சில ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ராபின் ஷர்மாவின் புத்தகம் ஒன்றை வாசித்தேன். அதில் எண்ணங்களை மேம்படுத்துவது பற்றி எழுதியிருந்தது எனக்கு பிடித்தது. அதிலிருந்து இது போன்ற வேறு சில புத்தகங்களையும் அவ்வப்போது வாசிக்கிறேன்.
அப்படி அண்மையில் வாசித்து முடித்த நூல்தான் பிரையன் டிரேசியின் "சாக்கு போக்குகளை விட்டொழிங்கள்". டிரேசி மிகத் தெளிவாக மனிதனுக்கு அவசியம் தேவையான சுய ஒழுங்கு சுமார் 21 அத்தியாங்களில் விரிவாக விளக்கியுள்ளார்.
சுயமுன்னேற்ற நூல்கள் வாசிப்பதில் ஆர்வமுள்ள அனைவரும் அவசியம் வாசித்து பார்க்கலாம்.
நிறைய சுயமுன்னேற்ற நூல்களை மொழிபெயர்ப்பு செய்துள்ள நாகலட்சுமி சண்முகம் தான் இந்நூலையும் மொழிபெயர்ப்பு செய்துள்ளார். இந்நூலை மஞ்சள் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்டுள்ளது.
என் அனுபவத்தில் எல்லா சுய முன்னேற்றம் பற்றிய நூல்களும் சொல்ல வரும் செய்தி திருவள்ளுவரின் "வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது
உயர்வு" என்பதைதான். இந்த குறளுக்கு விளக்கம் சொல்ல எழுதப்பட்ட நூல்களாகத்தான் எல்லா சுயமுன்னேற்ற நூல்களும் உள்ளன.
                                                                                                                            05.12.2018

11.30.2018

பதிவு . 16

பெருவலி – சுகுமாரன்.
பெண் மென்மையானவள், பிரியமானவள், அழகானவள் ஆனால் நாதியற்றவள்.
_ அன்னா கரினீனா நாவலில்...
சில புத்தகங்களைப் பற்றி அறிய நேர்ந்ததும் உடனே அது வாசிக்க கிடைப்பது அபூர்வமான அனுபவமாகும். அப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்த்தது. அது பற்றிய சிறு விளக்கமே இப்பதிவின் நோக்கமாகும்.
காலதாமதமாக செப்டம்பர் மாத காலச்சுவடு இதழை இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாசித்தேன். அதில் சுகுமாரனின் ‘’பெருவலி’’ நாவலுக்கு திவ்யா மதிப்புரை எழுதியிருந்தார். நாவலுக்கு ஒரு சிறப்பான அறிமுகம். மதிப்புரையை வாசித்த உடனே பெருவலி நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. அதற்கான காரணம் சென்ற ஆண்டு துவக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தை வாசித்து இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நாடகம். அது முதல் மொகலாய சரித்திரத்தின் மீது ஆவல்.
அந்தவகையில் ஒளரங்கசீப் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜஹனாராதான் பெருவலி நாவலின் பிரதான கதாபாத்திரம் என்று தெரிந்ததும் வாசிக்க ஆவலாகிவிட்டேன்.
ஒளரங்கசீப்பின் அந்திமகாலத்தை களமாக கொண்டு எழுதியுள்ள ’’இடக்கை’’ வாசிக்க ஓராண்டாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் வாசிக்க முடியவில்லை. அதுபொல் பெருவலிக்கு நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் எண்ணினேன். ஆனால் நல்வாய்ப்பாக நேற்று இந்த புத்தகம் எனக்கு ஒரு நண்பரிடமிருந்து கிடைத்தது. இன்று வாசித்து முடித்துவிட்டேன்.
மொகலாய சாம்ராச்சியத்தில் தந்தை மகனை சித்திரவதை செய்தும், மகன் தந்தையை சிறையில் வைத்தும், உடன் பிறப்புகளை கொலை செய்தும்தான் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளார்கள். நூற்றாண்டுகள் கடந்தும் அதிகாரத்திற்காக துரோகம் செய்வது என்ற துயரம் இன்றும் தொடர்கிறது.
மதத்தின் பேரால் அரசியலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஏராளம் அன்றும் இன்றும். மொகலாய பேரரசுக்கு முன்னுரை எழுதிய பாபர் முதல் முடிவுரை எழுதிய ஒளரங்கசீப் வரை. எல்லாக் காலத்திலிலும் மதம் அரசியலோடு கலந்தே வந்திருக்கிறது. அக்பர் ஒருபடி மேலே சென்று எல்லா மதத்திலிருக்கும் நற்கருத்துக்களை ஒன்று திரட்டி தீன்இன்லாகி என்று ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்தார்.
மக்களின் மேன்மைக்காக புதிய மதத்தை உருவாக்கிய அக்பர்தான் அதிகார சண்டை வரக்கூடாது எனக்கருதி முகலாய குலத்தில் பிறக்கும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற விதியையும் உருவாக்கியது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மேன்மையை விரும்பியவருக்குள்ளும் பெண்கள் பற்றி ஒரு மேம்படாத எண்ணமா என வியப்பாகவும் உள்ளது.
கலையுணர்வும் காதலுணர்வும் மிக்க இளவரசியான ஜஹனாராவின் மனவலிகளைதான் சுகுமாரனின் பெருவலி நாவல் சிறப்பாக பதிவு செய்துள்ளது. பல்வேறுபட்ட மன உணர்வுகளை மிக துல்லியாமாக எளிமையான முறையில் சுகுமாரன் அழகாக பதிவு செய்துள்ளார்.
சமகால அரசியலை நேரடியாக பேசமுடியாது என்பதினால் கடந்தகால அரசியலை முன்வைத்து சமகால அரசியலை பரிசீலனை செய்வதாக சுகுமாரன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கு என்னவோ இந்த நாவலில் அரசியல் சூழ்ச்சிகள் பற்றி பதிவு இருந்தாலும், இந்நாவல் இளவரசியாக பிறந்தும் ஒரு சாதாரண பெண்ணைப்போல் மகிச்சியாக வாழ முடியவில்லையே, அதற்கு அக்பர் உருவாக்கிய விதி ஒத்துக்கொள்ளவில்லையே, என்ற ஜஹனாராவின் மனவலிகளைத்தான் நம்முள் பெருவலியாக இறக்குகிறது. அதுதான் தீவிரமாக பதிவாகியுள்ளதாகவும் நான் கருதுகிறேன்.
உண்மையில் சமகால அரசியலை பிரதிபலிக்கும் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தைதான் சொல்லமுடியும் என நம்புகிறேன்.
இந்நாவலின் கதைக்கருக்கு ஏற்ற அட்டைப்படத்தை ரோகிணி மணி வடிவமைத்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 2017 டிசம்பரில் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் வாக்கிய பிழைகளை சுட்டிக்காட்டுமாறு வாசகர்களை பதிப்பகம் கேட்ட்குக்கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். எதாவது எழுத்து பிழையை கண்டுவிட வேண்டும் என்று எண்ணியபடிதான் வாசிக்க தொடங்கினேன் ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் சுகுமாரன் தன் மொழிவளத்தால் என்னை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

                                                                                                                     28.11.2018

துளி . 200

மூழ்கவிருந்த 
திரியை
தூண்டி தூண்டி
சுடர் விட செய்யும் 
தேவதை 
நீ
எனக்கு


                        27.11.2018

துளி . 199

உன் விழி 
ஈர்ப்பு 
விசையிலிருந்து
விலக 
முடியாத 
காதல் துகள்
நான்


                      27.11.2018

துளி . 198

இல்லாத ஒன்றை 
இருப்பதாக காட்டி 
ஏன் விலகி 
செல்கிறாய் 
பேரன்பே...

                              25.11.2018

துளி . 197

அழகின் சிரிப்பை
ரசிக்க நீண்ட 
நெடும் நேரம் 
காத்திருந்தேன் 
கிடைத்ததோ 
பேரழகின்
தரிசனம்...


                        23.11.2018

துளி . 196

சாதி

சாதி மனிதர்களை
குரூரம் மிக்கவர்களாக
மாற்றுகிறது,
சாதி பெருமை பெற்ற 
மகளை பிணமாக்கி
வேடிக்கை பார்க்கிறது,
சாதி சகமனிதனை
சத்ருவாக பார்க்க
வைக்கும்
மனநோயாளிகளை
உருவாக்குகிறது,
சாதி ஆணவ படுகொலையில் 
ஈடுபட்டவருக்கு
தண்டனை உறுதி
என்ற நிலை
எப்போதுதான் வருமோ,
சாதியினால் பெருமையில்லை
சகமனிதனை நேசித்தால்
துயரில்லை

                                                         17.11.2018

                                                                                         

அனுபவம்.01

முன்பொருகாலத்தில் வாரம்தோறும் சனிக்கிழமை இரவு நண்பர் அஜந்தன் அறையில் சில நண்பர்கள் ஒன்று கூடி விடியவிடிய அரசியல்,சினிமா,இலக்கியம் பற்றி கலந்துரையாடல் செய்வதுண்டு. சில நேரங்களில் விவாதமாக பல விசயங்களை கற்றுக்கொண்டும், பல நேரங்களில் வாதங்கள் அதிகாமாகி ஈகோ முட்டிக்கொண்டும் விடிந்ததும் பிரிந்து சென்ற அந்த நாட்கள் இன்றும் இனிமையான நினைவுகளாக எனக்குள்/எங்களுக்குள் இருக்கின்றன.
அப்படி நடந்த கூட்டம் ஒன்றில்தான் “பெரியார் ஒரு தத்துவவாதியா” என நண்பர் பாலாஜி கேட்டார். பல நண்பர்கள் ஆமாம் என பதில் சொன்னோம். அதற்கான விளக்கங்களை சொன்னோம். ஆனால் பாலாஜி எங்கள் பதிலை ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் கோவமான நாங்கள் கேட்டோம் தத்துவவாதி என நீங்கள் யாரை சொல்வீர்கள். உடனே பாலாஜி சீனாவின் கான்ஃபூசியஸ் ஒரு தத்துவவாதி என்றார். நிறைய விளக்கங்களும் சொன்னார். எங்கள் குழுவில் அரசியல் சார்ந்து நிறைய வாசிக்க கூடியவர் என்பதினால் அவர் கூறியதில் உண்மை இருக்குமோ என்ற சந்தேகத்தோடு பிரிந்து சென்றோம்.
இந்த உரையாடல் நடந்த கொஞ்சநாட்களுக்குள் பத்திரிக்கையாளர் ஞாநி வீட்டில் நடந்த கேணி கூட்டத்திற்கு தோழர் வ.கீதா பேசவந்தார். என்ன தலைப்பில் பேசினார் என இப்போது நினைவில்லை. ஆனால் பெரியார்,அம்பேத்கர் பற்றிதான் அதிகம் பேசினார். அப்போது நடந்த கலந்துரையாடலில் மேல கூறிய சம்பவத்தை விலக்கி விட்டு பெரியார் தத்துவாதியா என கேட்டேன். பெரியார் தத்துவவாதிதான் என உறுதிபட தோழர் வ.கீதா கூறினார். பத்திரிக்கையாளர் ஞாநியும் இதே கருத்தை ஏற்கனவே கூறியுள்ளதும் எனக்கு நினைவு வந்தது.
பெரியார் தத்துவவாதி என்பதனை நிரூபிக்கும் கட்டுரை ஏதும் வாசித்திருக்கவில்லை. இந்நிலையில் அண்மையில் ராஜன்குறை Rajan Kurai Krishnan பகிந்த ஒரு முகநூல் பதிவில் பெரியார் தத்துவாதிதான் என்பதை நிறுவும் கட்டுரையை வாசித்தேன். தமிழ் காமராசன்எழுதியுள்ள (சுமார் பத்து பக்கங்கள் கொண்ட) கட்டுரையில் இவ்வளவு தகவல்களா என வியந்தேன் நீங்களும் வாசித்து பாருங்கள். 
                                                                                                                     14.11.2108

திரை.04

பரியேறிய பெருமாள்
இந்திய ஒன்றியத்திலும், தமிழகத்திலும் சாதிய ஆணவ படுகொலைகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில் பரியேறும் பெருமாளின் வருகை மிக முக்கியமானதாக இருக்கிறது. சாதிய பெருமிதம் பேசுபவர்களின் மனசாட்சியை தொட்டு கேள்வியை எழுப்புகிறது இப்படம். கதாநாயகனின் அவமானம் அவனுக்கு மட்டுமானது அல்லவே, அதற்காக மொத்த சமூகமும்தானே வெட்கப்பட வேண்டும். சாதியினால் பெருமையில்லை என்ற நிலை உருவாக வேண்டும். அதற்காக செய்ய வேண்டியது என்ன ஆணவ கொலைகளா இல்லை ஆன்மசுத்தியுடன் சகமனிதனை நேசிப்பதா, பழிவாங்குதலா இல்லை பரிசுத்த அன்பை பரிமாறுவதா. எண்ணிலடங்கா கேள்விகளை உருவாக்குகிறது பரியேறும் பெருமாள்.
மேசையின் மீது இரண்டு டீ குவளைகள், ஒன்று கறுப்பு டீ மற்றது பால் சேர்த்த டீ இருந்த குவளைகள் இவற்றுக்கிடையே ஒற்றை மல்லிகை பூ இருக்கும் இந்த பிம்பம் ஏற்படுத்தும் சிந்தனைகள் குறித்து மட்டுமே ஏராளமாக எழுதலாம்,பேசலாம். இதை ஒரு பிம்பமாக உருவாக்க தேவைப்படும் சமூக புரிதல் சாதாரணமானது அல்ல. இயக்குனர் மாரி செல்வராஜ் தன் முதல் பட்ததிலேயே முத்திரை பதித்துள்ளார். சமகாலத்தில் சாதி ஆணவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவூட்டும் காட்சிகள் கதைப்போக்கில் அங்க அங்கே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப்படம் ஒருவகையில் சமகால ஆவணமாகவும் உள்ளது.
பா.ரஞ்சித் தயாரிப்பாளராக இல்லையென்றால் இப்படம் வெளிவருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு.
பரியேறும் பெருமாள் படம் வெளியாகும் போது சென்னையில் இல்லாத்தினால் படத்தை உடனே பார்க்க வாய்பில்லாமல் போனது, சென்னை வந்தபின் பார்க்கலாம் என்றால் பெரும்பாலும் இரவு காட்சிகள் என்பதினால் பார்க்கவில்லை. ஒருவழியாக நேற்று இரவு அமேசான் பிரைமரில் பார்த்துவிட்டேன். இதை சாத்தியமாக்கிய நண்பர் நரேஸ்க்கு மிக்க நன்றி...

                                                                                                                  14.11.2108

நிகழ்வு.01

ரித்விக் கட்டக் – பயிலரங்கம்
ரித்விக் கட்டக்கின் பிறந்த நாளை முன்னிட்டு பியூர் சினிமா புத்தக அரங்கில் நடைப்பெற்ற ஒரு நாள் பயிலரங்கில் நேற்று(4.11.2018) கலந்து கொண்டேன். காலை பத்து மணிக்கு நிழல் திருநாவுகரசின் நிதானமான உரையுடன் தொடங்கிய நிகழ்வு இரவு ஒன்பது மணிக்கு மிஷ்கினின் உணர்ச்சிபூர்வமான உரையுடன் நிறைவு பெற்றது. இந்த நாள் சிறப்பான நாள் என்ற புத்துணர்வுடன் அரங்கை விட்டு வெளியேறினேன்.
இந்திய திரை இயக்குனர்களில் மிக முக்கியமானவர் ரித்விக் கட்டக் என்ற அளவில் மட்டும்தான் இதற்குமுன் இவர் பெயர் எனக்கு அறிமுகம். அவருடைய எந்த படமும் பார்த்த்தில்லை. இன்று கட்டக்கின் இரண்டு படங்களை( meghe Dhaka Tara / Ajantrik) பார்த்தேன். ரித்விக் கட்டக்கின் மற்ற படங்கள் குறித்தும் அவரது வாழ்வு குறித்தும் நிறைய செய்திகளை இன்றைய பயிலரங்கு மூலம் தெரிந்து கொண்டேன். இதை சாத்தியமாக்கிய அனைவருக்கும் என் மனம்மார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பார்த்த படம் குறித்தும், கேட்ட உரைகள் குறித்தும் தனித்தனி பதிவுகளாக வெளியிடுகிறேன்.

Meghe Dhaka Tara / மேகம் கவிந்த தாரகை
மேகா தாகா தாரா இந்த படத்தின் பேரை பல வருடங்களாக கேள்வி பட்டிருந்தாலும் நேற்றுதான் பார்த்தேன். படத்தின் முதல் காட்சியிலேயே படத்துக்குள்/கதைக்குள் மிக இயல்பாக சென்றுவிட்டேன். நேரடி தமிழ் படம் பார்ப்பது போலவே கதையும் கதாப்பாத்திரங்களின் உணர்வுகளும் எனக்கு புரிய தொடங்கிவிட்டது. கதையின் நாயகி துயரத்தை எதிர் கொள்ளும்போதெல்லாம் என் கண்களும் பனிக்க தொடங்கிவிட்டன.
குடும்பம் தனிமனிதனை பாதுகாப்பது போலவே அவனை/அவளை சுரண்டவும் செய்கிறது. வறுமை எல்லா புனிதங்களை கறைப்படுத்தும் போலும். வேலைக்கு போய் குடும்ப பாரத்தை சுமக்கும் கதைநாயகி, உடனே திருமணம் செய்துக்கொள்ள துடிக்கும் காதலன், வயோகத்தின் காரணமாக வருமானம் இல்லா தந்தை, இருப்பதை வைத்து குடும்பம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்ட தாய், இலட்சியத்தை/இசையை கனவுகாணும் ஒரு சகோதரன், ஆடம்பரத்தையும் அழகையும் தேடும் தங்கை, வேலை கிடைத்ததும் குடும்பத்திலிருந்து துண்டித்துக்கொள்ள விரும்பும் மற்றொரு சகோகதரன் மற்றும் ஒரு மளிகைக்கடைகார் இவ்வளவு குறைவான கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு கட்டக் மிக காத்திரமான ஒரு திரைப்படைப்பை உருவாக்கியுள்ளார். உறவுகளுக்குள் நிகழும் உணர்ச்சி போராட்டங்களை மிக துள்ளியமாக/கவித்துவமாக பதிவு செய்துள்ளார்.


பயிலரங்கின் முதல் நிகழ்வாக நிழல் திருநாவுகரசு கட்டக்கின் படங்களோடு தனக்கான உறவு பற்றி பேசினார். என்பதுகளில் கட்டக்கின் படங்களை திரைப்பட சங்கத்தில் பார்த்ததையும் பிறகு கல்கத்தா சென்று கட்டக் படத்தில் நடித்த நடிகர்களை சந்தித்ததையும், கட்டக் படம்பிடித்த இடங்களை சுற்றி பார்த்த அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சத்திய்ஜித் ரே நடுத்தர வர்க்கத்தில் மேல்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் உயர்குடினரின் வாழ்வைப் பதிவு செய்தார். கட்டக் நடுத்தர வர்க்கத்தில் கீழ்நிலையில் உள்ளவர்களையும் மற்றும் அடித்தட்டு மக்களின் வாழ்வை பதிவு செய்துள்ளார் என்றும் நிழல் திருநாவுக்கரசு கூறினார்.
கட்டக்கின் இரண்டு படங்கள் திரையிடலுக்கு பிறகு
இயக்குனரும்,கவிஞருமான லீனா மணிமேகலை ரித்விக் கட்டக்கின் படங்கள் குறித்து பேசினார். கட்டக் இயக்குனர் மட்டுமல்ல நாடக ஆசிரியர், சிறுகதையாசிரியர். அவருடைய எழுத்துக்கள் தமிழில் வரவேண்டும் என்று கூறினார், கட்டக் இயக்கி எட்டு படங்கள் வெளியாகியுள்ளது. நிறைய படங்கள் பாதியிலேயே நின்று போயிருக்கின்றன. கட்டக் தன் சிந்தனையை வெளிப்படுத்தவே படைங்களை இயக்கினார், பொருளுக்காகவோ இல்லை புகழுக்காகவோ கட்டக் படங்களை இயக்கவில்லை. அவர் இறந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் உலகம் அவரை கொண்டாட தொடங்கியது. கடக்கிற்கு முன் மாதிரி யாருமில்லை. அவருக்கான சினிமாவை அவரே சுயமாக உருவாக்கினார் என்று கூறினார், லீனாவின் உரையிலிருந்து கட்டக்கின் அரசியில் பார்வையை புரிந்துக் கொள்ள முடிந்தது.

இம்மாத படச்சுருள் இதழ் ரித்விக் கட்டக் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது. அதன் வெளியீட்டு விழாவில் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி கலந்துகொண்டு ரித்விக் கட்டக் பற்றி சிறப்புரையாற்றினார்.
கட்டக் பற்றி அவர் தெரிந்துகொண்ட விததையும், கட்டக்கின் படங்களை பார்த்து தனக்குள் ஏற்பட்ட மனமாற்றங்கள் பற்றியும் விரிவாகவும் உணர்வுபூர்வமாகவும் பேசினார். கட்டக்கின் காதல் திருமணம், கட்டக் இரு இந்தி படங்களுக்கு திரைக்கதை எழுதியது, ரே உடன் இருந்த நட்பு மற்றும் முரண், கட்டக் இயக்கிய படங்கள் பெற்ற வெற்றி தோல்விகள், கட்டக்கின் தீவிர ரசிகையான இந்திரா காந்தின் அழைப்பின் பேரில் பூனே திரைப்பட கல்லூரில் பதவி வகித்தது பிறகு அதிலிருந்து விலகி படம் எடுக்க போனது, படங்களின் தோல்வி மற்றும் பொருளாதர நெருக்கடியின் காரணமாக குடிக்க தொடங்குதல் என கட்டக்கின் தனிப்பட்ட வாழ்வு குறித்து நிறைய பேசினார்.
ரித்விக் கட்டக் பயிலரங்கில் பார்த்த இரண்டு படங்கள், நிழல் திருநாவுகரசு,லீனா மணிமேகலை,ஷாஜி மற்றும் அருண்மொழி ஆகியோரின் கருத்துக்கள் மூலம் எனக்குள் கட்டக் பற்றி ஒரு சித்திரம் உருவாகியுள்ளது. என்னை கட்டக்கின் மற்ற படங்களை தேடிப்பார்க்க தூண்டியுள்ளது. எல்லாவகையிலும் இன்றைய நிகழ்வு கட்டக்கை சிறப்பாக நினைகூர்ந்துள்ளது.

                                                                                                                        05.11.2018

10.31.2018

துளி . 195

சாதிவெறி
சமாதியாகும்
நாளும் வராதோ....

                                  25.10.2018

பதிவு . 15

தடுப்பூசி வெளிப்படும் உண்மைகள் – அக்குஹீலர் அ.உமர்பரூக்
சுமார் நாற்பது பக்கங்களேயுள்ள இச்சிறுப்புத்தகம் நம்மை அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது. உயிர் காக்க போடப்படுவதாக சொல்லப்படும் தடுப்பூசியின் வரலாறு நம்மை நிலைகுலைய வைக்கிறது. மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் பணதிகாரம் உலகின் எல்லா அரசுகளையும் அடிபணிய வைப்பதாகவே உள்ளது.
பருவநிலை மாற்றதினால் புதுப்புது நோய்கள் உருவாகுவதும் பிறகு காணாமல் போவதும் இயல்பாக உள்ள நிகழ்வை மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமாக்கி மக்கள் மனதில் உயிர் பயத்தை விதைத்து எப்படியெல்லாம் அதை பெரும் வியபாரமாக மாற்றுகிறது என்பதை இச்சிறுநூல் விளக்குகிறது.
அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் தடுப்பூசிகள் போடுவதற்கு முன்பிருந்த நிலையையும் அதற்குபிறகான மாற்றங்களையும் அந்த நாட்டு அரசுகளின் புள்ளிவிவரங்களோடு தடுப்பூசியின் உண்மை நிலவரத்தையும் இந்நூல் பதிவு செய்துள்ளது.
தடுப்பூசி போடாமல் ஆரோக்கியமாக எப்படி வாழ்வது என்பதனை இந்நூல் இன்னும் விளக்கமாக கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்நூலை எதிர் வெளியீடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2015 வெளியாகியுள்ளது.
இந்த புத்தகத்திலிருந்து சில தகவல்கள்...
‘’ 1961 ஆம் ஆண்டிற்குப்பின் அமெரிக்காவில் ஏற்பட்ட அனைத்து போலியோவிற்கும் காரணம் – போலியோ சொட்டு மருந்து தான் ‘’ என்று அமெரிக்க செனட் கமிட்டியில் ஒத்துக்கொண்டார் ஜோனல் சால்க். இவர் யார் தெரியுமா ? இவர் தான் போலியோ சொட்டு மருந்தைக் கண்டுபிடித்தவர்.
‘’ போலியோவிலிருந்து பாதுகாத்துக் கொள்ள கொடுக்கப்பட்ட தீவிர தடுப்பு மருந்து முயற்சிகளுக்குப் பின்னரும், அரசு ஆவணங்களை உற்று நோக்குகையில் இம்மருந்தால் பெருமளவு பலன் ஏதுமில்லை என்பது தெளிவாக தெரிகிறது’’ என்று சொன்னார் போலியோ தடுப்பு மருந்தை உருவாக்கிய சாபின்.
அமெரிக்காவில் 1983 இல் 10 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டன. அப்போது மூளை வளர்ச்சிக்குறைவு உள்ள அமெரிக்க குழந்தைகள் பத்தாயிரத்தில் ஒருவர்(1/10000), 2008 ஆம் ஆண்டு குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 36. இப்போது அமெரிக்க குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்குறைவு விகிதம் நூற்றைம்பதில் ஒருவர்(1/150). 3000 மடங்கு அதிகரிப்பு.
இந்தியாவில் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதை தடை செய்யவேண்டும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் டாக்டர்.சத்யமாலா MBBS தொடுத்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

                                                                                                      19.10.2018

துளி . 194

என் எல்லா 
துயரையும் 
போக்கிடும் 
மாமருந்து
தேவதையின்
இதழ் முத்தம்....


                         19.10.2018

பதிவு . 14

சாவு சோறு – இமையம்
எழுத்தாளர் இமையத்தின் சாவு சோறு சிறுகதை தொகுதியை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் உள்ளன. நவரசம் என்பது போல ஒவ்வொருகதையும் தனித்தனி சிறப்புடையது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களே இந்த கதைகள் நிகழும் களனாகும்.
கடவுளை/பேயியை சக மனிதன் போல பாவித்து திட்டுவதும், கொஞ்சுவதும், ஆசைக்காட்டுவதும், தன் சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்வதும் இயல்பாக இமையத்தின் கதைகளில் பதிவாகியுள்ளது. களவுக்கு போக கடவுளின் உத்தரவு வேண்டி கடவுளோடு உறையாடும் மனிதனின் கதையை சொல்லும் ஆகாசத்தின் உத்தரவு,
கடவுளிடம் வரம் கேட்பது வாழ்வதற்கு மட்டுமல்ல போலும், உறவுமுறை மாறி காதலித்து ஓடிப்போன பெண் இறந்து போக வேண்டுமென வேடப்பரிடம் வரம் கேட்கும் அம்மாவின் கதையை சொல்லும் வரம்,
பேயிக்கும் பூசாரிக்குமான உறையாடல் அற்புதமாக பதிவு செய்திருக்கும் பத்தினி இலை,
தன் முன்னாள் காதலியை சந்திக்க மிக ஆவலுடன் செல்லும் ஆசிரியரின் கதையான ராணியின் காதல், காசில்லாதவருக்கு காதல் காவியம் அல்ல என்பதை முகத்தில் அடித்து சொல்கிறது இந்தகதை,
மனித உரிமையின் பெயரால் மாணவர்களை அடிக்கக்கூடாது என சட்டம் வந்தபின் ஆசிரியர்களின் நிலமையை அதுவும் அரசாங்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையை விளக்கும் அரசாங்க பள்ளிக்கூடம்,
தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியா சுத்தமாகிவிட்டது என விளம்பர பலகைகள் சொன்னாலும் கிராமங்களில் இன்னும் பெரும்பாலும் திறந்தவெளியில்தான் மக்கள் மலம் கழித்துக்கொண்டுள்ளார்கள். இந்த துயரிலிருந்து மீள ஆசைப்படும் ஒரு இளம்பெண்ணின் கதையை சொல்லும் பேராசை,
பொருள் திருட்டு போகும் பொண்ணு திருட்டு போகுமா என வியக்க வைக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ள திருட்டுபோன பொண்ணு கதை நம் கண்களில் கண்ணீரை வரவைக்க கூடிய கதையாகும்,
தலைமுறை இடைவெளியினால் மனிதர்கள் மிகவும் வன்மமான மனநிலைக்கு சென்று விடுகின்றனர். பேரன்பால் வளர்க்கப்பட்ட மனிதர், பெரும் நன்றியுணர்வோடு வாழ்கிறார் ஆனால் அவரின் மகனின் முன் வீழ்ந்துதான் போகிறார். கடந்தகாலம் இனிமையானதாகவும் நிகழ்காலம் கசப்பானதாகவும் தோன்றும் வாழ்வியலை சொல்லும் பரிசு,
இந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான சாவு சோறு வேறு சாதி ஆணை காதலித்து அவனோடு ஓடிப்போன பெண்ணை தேடி அலையும் அம்மாவின் கதை. இந்த சமூகத்தில் சாதி வன்மம் எப்படி செயல்பட்டது, இப்போதும் எப்படி செயல்படுகிறது அதனால் பெண்கள் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கபடுகிறார்கள் என்பதை ஒரு பெண்ணின் வாக்குமூலமாகவே இந்த கதையில் பதிவாகியுள்ளது.
பரிசு,சாவு சோறு இரு சிறுகதைகளும் தமிழின் மிக முக்கியாமான சிறுகதைகள் என நான் நம்புகிறேன்.
பலரும் காண தவறிய உண்மைகளை தன் படைப்புகளில் இமையம் நேர்மையாக பதிவு செய்துள்ளார். இதனாலேயே இவரின் படைப்புகள் மிக முக்கியமானதாக மாறுகிறது.
இமையம் தமிழ் இலக்கியவுலகில் பிரவேசித்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் நாம் அவருடைய படைப்புகளை தேடி வாசிப்பதே நாம் அவருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்குமென நம்புகிறேன்.
இமையத்தின் படைப்புகளை தொடர்ந்து வெளியிடும் க்ரியா பதிப்பமே இந்நூலையும் சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2014-ல் வெளிவந்துள்ளது.

                                                                                                                         08.10.2018.


Image may contain: bird

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...