11.30.2018

பதிவு . 16

பெருவலி – சுகுமாரன்.
பெண் மென்மையானவள், பிரியமானவள், அழகானவள் ஆனால் நாதியற்றவள்.
_ அன்னா கரினீனா நாவலில்...
சில புத்தகங்களைப் பற்றி அறிய நேர்ந்ததும் உடனே அது வாசிக்க கிடைப்பது அபூர்வமான அனுபவமாகும். அப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்த்தது. அது பற்றிய சிறு விளக்கமே இப்பதிவின் நோக்கமாகும்.
காலதாமதமாக செப்டம்பர் மாத காலச்சுவடு இதழை இரண்டு நாட்களுக்கு முன்புதான் வாசித்தேன். அதில் சுகுமாரனின் ‘’பெருவலி’’ நாவலுக்கு திவ்யா மதிப்புரை எழுதியிருந்தார். நாவலுக்கு ஒரு சிறப்பான அறிமுகம். மதிப்புரையை வாசித்த உடனே பெருவலி நாவலை வாசிக்க வேண்டும் என்ற ஆவல் என்னுள் எழுந்தது. அதற்கான காரணம் சென்ற ஆண்டு துவக்கத்தில் இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தை வாசித்து இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த நாடகம். அது முதல் மொகலாய சரித்திரத்தின் மீது ஆவல்.
அந்தவகையில் ஒளரங்கசீப் நாடகத்தில் வரும் கதாபாத்திரங்களில் ஒன்றான ஜஹனாராதான் பெருவலி நாவலின் பிரதான கதாபாத்திரம் என்று தெரிந்ததும் வாசிக்க ஆவலாகிவிட்டேன்.
ஒளரங்கசீப்பின் அந்திமகாலத்தை களமாக கொண்டு எழுதியுள்ள ’’இடக்கை’’ வாசிக்க ஓராண்டாக நினைத்துக் கொண்டிருக்கிறேன் இன்னும் வாசிக்க முடியவில்லை. அதுபொல் பெருவலிக்கு நிகழ்ந்துவிடக்கூடாது என்றும் எண்ணினேன். ஆனால் நல்வாய்ப்பாக நேற்று இந்த புத்தகம் எனக்கு ஒரு நண்பரிடமிருந்து கிடைத்தது. இன்று வாசித்து முடித்துவிட்டேன்.
மொகலாய சாம்ராச்சியத்தில் தந்தை மகனை சித்திரவதை செய்தும், மகன் தந்தையை சிறையில் வைத்தும், உடன் பிறப்புகளை கொலை செய்தும்தான் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டியுள்ளார்கள். நூற்றாண்டுகள் கடந்தும் அதிகாரத்திற்காக துரோகம் செய்வது என்ற துயரம் இன்றும் தொடர்கிறது.
மதத்தின் பேரால் அரசியலில் நிகழ்ந்த கொடூரங்கள் ஏராளம் அன்றும் இன்றும். மொகலாய பேரரசுக்கு முன்னுரை எழுதிய பாபர் முதல் முடிவுரை எழுதிய ஒளரங்கசீப் வரை. எல்லாக் காலத்திலிலும் மதம் அரசியலோடு கலந்தே வந்திருக்கிறது. அக்பர் ஒருபடி மேலே சென்று எல்லா மதத்திலிருக்கும் நற்கருத்துக்களை ஒன்று திரட்டி தீன்இன்லாகி என்று ஒரு புதிய மதத்தையே தோற்றுவித்தார்.
மக்களின் மேன்மைக்காக புதிய மதத்தை உருவாக்கிய அக்பர்தான் அதிகார சண்டை வரக்கூடாது எனக்கருதி முகலாய குலத்தில் பிறக்கும் பெண்கள் திருமணம் செய்யக்கூடாது என்ற விதியையும் உருவாக்கியது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது. மேன்மையை விரும்பியவருக்குள்ளும் பெண்கள் பற்றி ஒரு மேம்படாத எண்ணமா என வியப்பாகவும் உள்ளது.
கலையுணர்வும் காதலுணர்வும் மிக்க இளவரசியான ஜஹனாராவின் மனவலிகளைதான் சுகுமாரனின் பெருவலி நாவல் சிறப்பாக பதிவு செய்துள்ளது. பல்வேறுபட்ட மன உணர்வுகளை மிக துல்லியாமாக எளிமையான முறையில் சுகுமாரன் அழகாக பதிவு செய்துள்ளார்.
சமகால அரசியலை நேரடியாக பேசமுடியாது என்பதினால் கடந்தகால அரசியலை முன்வைத்து சமகால அரசியலை பரிசீலனை செய்வதாக சுகுமாரன் பின்னுரையில் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கு என்னவோ இந்த நாவலில் அரசியல் சூழ்ச்சிகள் பற்றி பதிவு இருந்தாலும், இந்நாவல் இளவரசியாக பிறந்தும் ஒரு சாதாரண பெண்ணைப்போல் மகிச்சியாக வாழ முடியவில்லையே, அதற்கு அக்பர் உருவாக்கிய விதி ஒத்துக்கொள்ளவில்லையே, என்ற ஜஹனாராவின் மனவலிகளைத்தான் நம்முள் பெருவலியாக இறக்குகிறது. அதுதான் தீவிரமாக பதிவாகியுள்ளதாகவும் நான் கருதுகிறேன்.
உண்மையில் சமகால அரசியலை பிரதிபலிக்கும் பிரதியாக இந்திரா பார்த்தசாரதியின் ஒளரங்கசீப் நாடகத்தைதான் சொல்லமுடியும் என நம்புகிறேன்.
இந்நாவலின் கதைக்கருக்கு ஏற்ற அட்டைப்படத்தை ரோகிணி மணி வடிவமைத்துள்ளார். இந்நூலை காலச்சுவடு பதிப்பகம் 2017 டிசம்பரில் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தில் உள்ள எழுத்து பிழை மற்றும் வாக்கிய பிழைகளை சுட்டிக்காட்டுமாறு வாசகர்களை பதிப்பகம் கேட்ட்குக்கொண்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய முயற்சியாகும். எதாவது எழுத்து பிழையை கண்டுவிட வேண்டும் என்று எண்ணியபடிதான் வாசிக்க தொடங்கினேன் ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் சுகுமாரன் தன் மொழிவளத்தால் என்னை இழுத்துக்கொண்டு சென்றுவிட்டார்.

                                                                                                                     28.11.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...