8.31.2023

பதிவு. 74.

 திரெளபதியின் கதை – பிரதிபாராய்.

கதைகளின் தொகுப்பான இதிகாசம் மகாபாரதம். அந்த கதைகளை நவீன எழுத்தாளர்கள் பலர் மறுபடியும் எழுதியுள்ளார்கள். மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பீமனின் பார்வையில் மகாபாரதத்தை சொல்கிறது. அதே போன்று ஒரிய எழுத்தாளர் பிரதிபாராய் யக்ஞசேனி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பாஞ்சாலியின் பார்வையில் மகாபாரத கதையை சொல்கிறது. இதுவே தமிழில் இரா.பாலச்சந்திரனால் திரெளபதியின் கதையாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
திரெளபதி தனது ஐந்து கண்வன்மார்களுடன் பூத உடலுடன் சொர்க்கம் செல்லும் வழியில் மயங்கி விழுகிறாள். “அவள் நம் ஐவரையும் சமமாக நேசிக்கவில்லை, அர்சுனன் மீது அதிக நேசம் கொண்டிருந்தாள் அதனால் அவள் சொர்க்கம் புகமுடியாது, யாரும் திரும்பி பார்க்காமல் என்னை பிந்தொடருங்கள்” என்று அவளின் மூத்த கணவன் தருமன் தன் தம்பிகளிடம் சொல்கிறான். இமையமலையில் அடிவார பொன்மணலில் மயங்கி கிடக்கும் திரெளபதி தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதையை நினைத்துப் பார்க்கிறாள் என்ற வடிவத்தில் இக்கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
மன்னன் துருபதன் ஏழை துரோணரை அவமதிக்கிறான். இளவரசர்களின் குருவாக துரோணர் தன் மாணவர்களை கொண்டு துருபதனை பழிவாங்குகிறார். பழிக்கு பழி வாங்க துருபதன் யாகம் வளர்த்து வரமாக ஒரு மகனையும் ஒரு மகளையும் பெறுகிறான். அந்த மகளின் பெயர் யக்ஞசேனி. அவளுக்கு கிருஷ்ணா, பாஞ்சாலி, திரெளபதி என பல பெயர்கள் இருக்கிறது. அவளுக்கு குழந்தை பருவமே கிடையாது.
திரெளபதி அறிவாற்றலும் கலைமனமும் கொண்ட இளவரசியாக வாழ்க்கை தொடங்குகிறாள். கனவுகள் மிகும் இளம்பருத்தில் அவள் கிருஷ்ணனையும், கர்ணனையும் நினைத்து மயங்குகிறாள். சுயம்வரத்தில் அர்சுனால் வெல்லப்பட்டு குந்தியால் ஐவருக்கும் மனைவியாக பகிர்ந்து அளிக்கப்படுகிறாள். இங்கு தொடங்கும் அவளின் துயரம் அவள் மரணிக்கும் கடைசி கணம் வரை அவளைப் பிந்தொடர்கிறது.
திரெளபதியின் மனம் எவ்வளவு இலகுவானதாக இருந்தது, பிறகு எப்படியெல்லாம் இறுகிபோனது, மறுபடியும் அது எப்படி கருணைமிக்கதாக மாறியது என அவளின் மன உணர்வுகளை இந்தநாவலில் பிரதிபாராய் மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார். ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு தோழியாக, ஒரு மகாராணியாக, அவமானத்தை தாங்கும் பெண்ணாக, பழிவாங்க துடிக்கும் பெண்ணாக, விருந்தினாக வந்த எதிரியையும் மன்னிக்கும் பெண்ணாக என திரெளபதியின் பல முகங்களை நாம் இக்கதையில் தரிசிக்கலாம். பெண்ணிய பார்வையில் இக்கதை போர் எதிர்ப்பு மனநிலையும் பதிவு செய்கிறது.
இந்தநாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரா.பாலச்சந்திரன் மிக நேர்த்தியாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்ட நாவல் போன்று இருக்கிறது.
இந்தநாவலை சாகித்திய அகாதெமி குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.


- 30.08.2023.

துளி. 387.

அனுமதிக்காக காத்துகிடக்கின்றன என் ஆசைகள் உன் இதயவாசலில்... - 25.08.2023.

துளி. 386.

உண்மையாக சொன்னதை பொய் என்றும் பொய்யாக சொன்னதை உண்மை என்றும் புரிந்துக்கொள்ளும் உன்னை புரிந்துக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறேன் தனிமையில். - 24.08.2023.

துளி. 385.

மழையை பார்த்ததும் கவிதை எழுத தோன்றுகிறது.

காதல் இல்லாதவன்
காற்றையும் மழையும் பார்த்துதான் கவிதை எழுத வேண்டும்.
கவிதையின் தலைப்பு
மழையை வேடிக்கைப் பார்ப்பவன்.
மழையை மட்டுமா
வேடிக்கை பார்க்கிறாய்
வாழ்க்கையே வேடிக்கைதானே.
அகமும் புறமும்
முட்டி மோதியதில்
கவிதைக்கு ஓர் முற்றும். - 23.08.2023.

துளி. 384.

ரசித்து உண்ண தெரிந்தவனு(ளு) பட்சணம் கிடைப்பதில்லை.

காதலையும் காமத்தையும்
கட்டுடலில் வைத்து
கண்ணாமூச்சு ஆடுகிறது காலம்.
அதை வெல்வேனா
அல்லது
அதனால் வெல்லப்படுவேனா..
போற்றுமின் போற்றுமின்
எல்லாம் கைகூடும்
களிப்பு களியிடும்
கனவை. - 22.08.2023.

துளி. 383.

உன் நினைவுகளால் உருண்டோடுகிறது என் காலம்... - 21.08.2023.

பதிவு. 73.



 விலாஸம் – பா.திருச்செந்தாழை.

பா.திருச்செந்தாழையின் “விலாஸம்” சிறுகதை தொகுப்பை கடந்த இரண்டு வாரங்களில் படித்து முடித்தேன். இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றில் 11 கதைகள் 2021 ஆண்டில் எழுதப்பட்டவையாகும். இந்த ஆண்டில் அவர் மிகுந்த படைப்பு மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இச்சிறுகதைகள் இருக்கிறது.
2021 ஆண்டில் எழுதப்பட்ட 11 சிறுகதைகளில் எனக்கு எட்டு கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. அவற்றில் இருந்து என் எண்ணங்களை இங்கு தொகுத்தளிக்க முயல்கிறேன். இந்த பதினொரு கதைகளில் பா.திருச்செந்தாழையின் கதை உலகம் தோராயமாக மூன்றாக உள்ளது.
ஒன்று நவீன உலகத்தில் ஆண் பெண் உறவு சார்ந்த கதைகள். இதில் டீ-ஷர்ட், திராட்சை மணம் கொண்ட பூனை, த்வந்தம், மஞ்சள் பலூன்கள் மற்றும் வேர் என ஐந்து சிறுகதைகள் உள்ளன. இவற்றில் உச்சமான கதையாக நான் “த்வந்தம்” சிறுகதையை சொல்வேன். நெடும் காலமாக ஆண் பெண் உறவில் ஒருவரையொருவர் வெல்ல துடிக்கும் மல்யுத்தம் தொடந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இந்த கதையில் ஆண் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு களத்தைவிட்டு வெளியேறுகிறான்.
இரண்டாவது நவதானிய வியபார மண்டி மற்றும் அந்த பின்புலம் சார்ந்த கதைகள். இதில் விலாஸம், அசபு மற்றும் ஆபரணம் என மூன்று கதைகள். இதில் விலாஸம் கதை பரவலாக அறியப்பட்ட கதையாகும். இந்த படைப்பாளி எனக்கு அறிமுகமானதும் இந்த கதை வழியேதான். ஆனால் எனக்கு ஆபரணம் கதை மிகவும் பிடித்திருக்கிறது. வியபார தளத்தில் தம்பியை அண்ணன் எப்படி நயவஞ்சகாக வெல்கிறான் என்பதை சொல்லும் கதை. ஆனால் காலம் அண்ணனை வேறுவிதமாக வஞ்சித்து விடுகிறது. நீ ஒருவன் பொருளை திருடினால் இன்னொருவன் உன் பொருளை திருடி விடுவான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் எளிய மக்கள் மனதில் பதிந்த நீதியாகும். அதை இந்த கதையில் உணர முடிந்தது.
மூன்றாவது உலகம் வறுமையில் இருக்கும் மனிதர்கள் சார்ந்த கதைகள். சிலர் அதிலிருந்து மீள படும் பாடுகளையும், சிலரை அது எப்படி குற்றவாளியாக மாற்றுகிறது என்பதையும் சொல்லும் கதைகள். இதில் துடி, துலாத்தான் மற்றும் காப்பு என மூன்று கதைகள். இதில் எனக்கு துடி கதை பிடித்திருக்கிறது. வறுமை ஒருவனை எப்படி வன்முறையாளனாக மாற்றுகிறது என்பதை சொல்லு கதையாகும்.
பா.திருச்செந்தாழையின் மொழி, கதைச்சொல்லல் முறை சில இடங்களில் மயக்கம் தருவதாகவும் சில இடங்களில் மிகவும் எளிமையாகவும் இருக்கிறது. இரண்டுமே மனதை கவர்வதாகவும் படிக்க இன்பம் அளிப்பதாகவும் இருக்கிறது.
கடைசி எட்டு கதைகளை இந்த தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டியதில்லை. முதல் 11 கதைகளுக்கும் கடைசி எட்டு கதைகளுக்கும் அவ்வளவு இடைவெளி. ஆனால் இந்த எட்டு கதைகளை எழுதிய பிறகுதான் இந்த 11 கதைகளையும் எழுதியிருக்கிறார். ஒன்று காலவரிசையில் தொகுத்து இருக்கலாம் அல்லது 2021-ல் எழுதிய கதை ஒன்று அதற்கு அடுத்து பழைய கதை ஒன்று என தொகுத்து இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இப்போது இருக்கும் தொகுப்பு முறை முடிவில் திருப்தியாக இல்லை.
இந்த புத்தகத்தினை எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான அட்டைப் படத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஜனவரி 2022 வெளியாகி இருக்கிறது.
- 20.07.2023.

All reaction

துளி. 382.

கலங்காது காத்திருங்கள் காதல் வரும் கண்டிப்பாக... - 20.07.2023.

துளி. 396.

மழைச்சாரலின் இன்னிசையில் நீண்ட நெடுநேரம் ...