8.31.2023

பதிவு. 73.



 விலாஸம் – பா.திருச்செந்தாழை.

பா.திருச்செந்தாழையின் “விலாஸம்” சிறுகதை தொகுப்பை கடந்த இரண்டு வாரங்களில் படித்து முடித்தேன். இந்த தொகுப்பில் மொத்தம் 19 சிறுகதைகள் இருக்கின்றன. அவற்றில் 11 கதைகள் 2021 ஆண்டில் எழுதப்பட்டவையாகும். இந்த ஆண்டில் அவர் மிகுந்த படைப்பு மனநிலையில் இருந்திருக்கிறார் என்பதற்கு அடையாளமாக இச்சிறுகதைகள் இருக்கிறது.
2021 ஆண்டில் எழுதப்பட்ட 11 சிறுகதைகளில் எனக்கு எட்டு கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது. அவற்றில் இருந்து என் எண்ணங்களை இங்கு தொகுத்தளிக்க முயல்கிறேன். இந்த பதினொரு கதைகளில் பா.திருச்செந்தாழையின் கதை உலகம் தோராயமாக மூன்றாக உள்ளது.
ஒன்று நவீன உலகத்தில் ஆண் பெண் உறவு சார்ந்த கதைகள். இதில் டீ-ஷர்ட், திராட்சை மணம் கொண்ட பூனை, த்வந்தம், மஞ்சள் பலூன்கள் மற்றும் வேர் என ஐந்து சிறுகதைகள் உள்ளன. இவற்றில் உச்சமான கதையாக நான் “த்வந்தம்” சிறுகதையை சொல்வேன். நெடும் காலமாக ஆண் பெண் உறவில் ஒருவரையொருவர் வெல்ல துடிக்கும் மல்யுத்தம் தொடந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இந்த கதையில் ஆண் தன் தோல்வியை ஒப்புக்கொண்டு களத்தைவிட்டு வெளியேறுகிறான்.
இரண்டாவது நவதானிய வியபார மண்டி மற்றும் அந்த பின்புலம் சார்ந்த கதைகள். இதில் விலாஸம், அசபு மற்றும் ஆபரணம் என மூன்று கதைகள். இதில் விலாஸம் கதை பரவலாக அறியப்பட்ட கதையாகும். இந்த படைப்பாளி எனக்கு அறிமுகமானதும் இந்த கதை வழியேதான். ஆனால் எனக்கு ஆபரணம் கதை மிகவும் பிடித்திருக்கிறது. வியபார தளத்தில் தம்பியை அண்ணன் எப்படி நயவஞ்சகாக வெல்கிறான் என்பதை சொல்லும் கதை. ஆனால் காலம் அண்ணனை வேறுவிதமாக வஞ்சித்து விடுகிறது. நீ ஒருவன் பொருளை திருடினால் இன்னொருவன் உன் பொருளை திருடி விடுவான் என்றும் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்றும் எளிய மக்கள் மனதில் பதிந்த நீதியாகும். அதை இந்த கதையில் உணர முடிந்தது.
மூன்றாவது உலகம் வறுமையில் இருக்கும் மனிதர்கள் சார்ந்த கதைகள். சிலர் அதிலிருந்து மீள படும் பாடுகளையும், சிலரை அது எப்படி குற்றவாளியாக மாற்றுகிறது என்பதையும் சொல்லும் கதைகள். இதில் துடி, துலாத்தான் மற்றும் காப்பு என மூன்று கதைகள். இதில் எனக்கு துடி கதை பிடித்திருக்கிறது. வறுமை ஒருவனை எப்படி வன்முறையாளனாக மாற்றுகிறது என்பதை சொல்லு கதையாகும்.
பா.திருச்செந்தாழையின் மொழி, கதைச்சொல்லல் முறை சில இடங்களில் மயக்கம் தருவதாகவும் சில இடங்களில் மிகவும் எளிமையாகவும் இருக்கிறது. இரண்டுமே மனதை கவர்வதாகவும் படிக்க இன்பம் அளிப்பதாகவும் இருக்கிறது.
கடைசி எட்டு கதைகளை இந்த தொகுப்பில் சேர்த்திருக்க வேண்டியதில்லை. முதல் 11 கதைகளுக்கும் கடைசி எட்டு கதைகளுக்கும் அவ்வளவு இடைவெளி. ஆனால் இந்த எட்டு கதைகளை எழுதிய பிறகுதான் இந்த 11 கதைகளையும் எழுதியிருக்கிறார். ஒன்று காலவரிசையில் தொகுத்து இருக்கலாம் அல்லது 2021-ல் எழுதிய கதை ஒன்று அதற்கு அடுத்து பழைய கதை ஒன்று என தொகுத்து இருக்கலாம் என எனக்கு தோன்றுகிறது. இப்போது இருக்கும் தொகுப்பு முறை முடிவில் திருப்தியாக இல்லை.
இந்த புத்தகத்தினை எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான அட்டைப் படத்துடன் வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு ஜனவரி 2022 வெளியாகி இருக்கிறது.
- 20.07.2023.

All reaction

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...