8.31.2023

பதிவு. 74.

 திரெளபதியின் கதை – பிரதிபாராய்.

கதைகளின் தொகுப்பான இதிகாசம் மகாபாரதம். அந்த கதைகளை நவீன எழுத்தாளர்கள் பலர் மறுபடியும் எழுதியுள்ளார்கள். மலையாளத்தில் எம்.டி. வாசுதேவன் நாயர் இரண்டாம் இடம் என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பீமனின் பார்வையில் மகாபாரதத்தை சொல்கிறது. அதே போன்று ஒரிய எழுத்தாளர் பிரதிபாராய் யக்ஞசேனி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறார். அது பாஞ்சாலியின் பார்வையில் மகாபாரத கதையை சொல்கிறது. இதுவே தமிழில் இரா.பாலச்சந்திரனால் திரெளபதியின் கதையாக மொழிப்பெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.
திரெளபதி தனது ஐந்து கண்வன்மார்களுடன் பூத உடலுடன் சொர்க்கம் செல்லும் வழியில் மயங்கி விழுகிறாள். “அவள் நம் ஐவரையும் சமமாக நேசிக்கவில்லை, அர்சுனன் மீது அதிக நேசம் கொண்டிருந்தாள் அதனால் அவள் சொர்க்கம் புகமுடியாது, யாரும் திரும்பி பார்க்காமல் என்னை பிந்தொடருங்கள்” என்று அவளின் மூத்த கணவன் தருமன் தன் தம்பிகளிடம் சொல்கிறான். இமையமலையில் அடிவார பொன்மணலில் மயங்கி கிடக்கும் திரெளபதி தன் பிறப்பு முதல் இறப்பு வரையிலான கதையை நினைத்துப் பார்க்கிறாள் என்ற வடிவத்தில் இக்கதை சொல்லப்பட்டு இருக்கிறது.
மன்னன் துருபதன் ஏழை துரோணரை அவமதிக்கிறான். இளவரசர்களின் குருவாக துரோணர் தன் மாணவர்களை கொண்டு துருபதனை பழிவாங்குகிறார். பழிக்கு பழி வாங்க துருபதன் யாகம் வளர்த்து வரமாக ஒரு மகனையும் ஒரு மகளையும் பெறுகிறான். அந்த மகளின் பெயர் யக்ஞசேனி. அவளுக்கு கிருஷ்ணா, பாஞ்சாலி, திரெளபதி என பல பெயர்கள் இருக்கிறது. அவளுக்கு குழந்தை பருவமே கிடையாது.
திரெளபதி அறிவாற்றலும் கலைமனமும் கொண்ட இளவரசியாக வாழ்க்கை தொடங்குகிறாள். கனவுகள் மிகும் இளம்பருத்தில் அவள் கிருஷ்ணனையும், கர்ணனையும் நினைத்து மயங்குகிறாள். சுயம்வரத்தில் அர்சுனால் வெல்லப்பட்டு குந்தியால் ஐவருக்கும் மனைவியாக பகிர்ந்து அளிக்கப்படுகிறாள். இங்கு தொடங்கும் அவளின் துயரம் அவள் மரணிக்கும் கடைசி கணம் வரை அவளைப் பிந்தொடர்கிறது.
திரெளபதியின் மனம் எவ்வளவு இலகுவானதாக இருந்தது, பிறகு எப்படியெல்லாம் இறுகிபோனது, மறுபடியும் அது எப்படி கருணைமிக்கதாக மாறியது என அவளின் மன உணர்வுகளை இந்தநாவலில் பிரதிபாராய் மிக அழகாக படம்பிடித்து காட்டியுள்ளார். ஒரு மனைவியாக, ஒரு தாயாக, ஒரு தோழியாக, ஒரு மகாராணியாக, அவமானத்தை தாங்கும் பெண்ணாக, பழிவாங்க துடிக்கும் பெண்ணாக, விருந்தினாக வந்த எதிரியையும் மன்னிக்கும் பெண்ணாக என திரெளபதியின் பல முகங்களை நாம் இக்கதையில் தரிசிக்கலாம். பெண்ணிய பார்வையில் இக்கதை போர் எதிர்ப்பு மனநிலையும் பதிவு செய்கிறது.
இந்தநாவலை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு இரா.பாலச்சந்திரன் மிக நேர்த்தியாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்ட நாவல் போன்று இருக்கிறது.
இந்தநாவலை சாகித்திய அகாதெமி குறைந்த விலையில் வெளியிட்டுள்ளது.


- 30.08.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...