9.07.2023

பதிவு. 75.

 

நான் படித்த மகாபாரத கதைகள். 

இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். இதில் குறிப்பாக மகாபாரதம் எனக்கு தெருக்கூத்து மற்றும் திரைப்படம் பார்த்ததிலும் மூலமே அறிமுகமாகிய நினைவு இருக்கிறது. பின்னாட்களில் தொலைக்காட்சி தொடர்கள் மூலம் பரிச்சம் ஏற்படுகிறது.

புத்தகம் படிக்க தொடங்கிய பின் எனக்கு அறிமுகமான மற்றும் இன்றும் என் நினைவில் உள்ள சில புத்தங்கள் குறித்து நினைவு கூறுவதே இந்த பதிவின் நோக்கம்.

01.     மகாபாரதம் – வாரியார் சுவாமிகள்.                              இது பக்தர்களுக்கான மகாபாரதம். கிருஷ்ணன் கடவுள். அவன் தர்மத்தை காப்பாற்றவும் அதர்மத்தை வெல்லவும் நடத்திய லீலைகளே மகாபார யுத்தம். பாண்டவர்களுக்கும் கெளரவர்களுக்கும் முன்வாழ்ந்த பல தலைமுறைகளுக்கு முன்பு இருந்தே வாரியார் கதையை ஆரம்பித்து விடுகிறார்.

02.     மகாபாரதம் – ராஜாஜி.                                              இது குழந்தைகளுக்கான மகாபாரதம். குழந்தைகளுக்கு பக்தியையும் தர்மத்தையும் போதிக்க எழுதப்பட்டதாக உணர்ந்தேன். எளிய மொழியில் சிறப்பாக கதை சொல்லியிருப்பார். கதைசொல்லியாக இந்த கதையை அவர் தொடங்கிய இடம் படித்து பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் என் நினைவில் இருக்கிறது. பீஷ்மரின் அம்மாவை அவரது தந்தை பார்க்கும் காட்சியே இதன் தொடக்கம்.

03.     மஹாபாரதம் பேசுகிறது – சோ.ராமசாமி.                         இது அரசியலுக்கான மகாபாரதம். இது வியாசனின் கதையை நேரடியாக பின்பற்றி எழுதப்பட்டதாக சோ சொல்கிறார். மகாபாரத கதையில் இன்றைக்கு நெருடலாக நாம் உணரும் சில இடங்களுக்கு சோ ஒரு விளக்கம் தருகிறார். சிலது ஒத்து போகும். பலது ஒத்து போகாது. அவரின் அரசியல் நிலைப்பாடுகள் இதில் பிரதிபலிப்பதாக உணர்ந்தேன். இது இரண்டு பாகம். நான் முதல் பாகம் மட்டுமே படித்துள்ளேன்.

04.     பாஞ்சாலி சபதம் – பாரதியார்.                                   இது மகாபாரதத்தில் ஒரு சிறுபகுதி. இது கவிதையாக எல்லாருக்குமானது. இதில் பீமன், அர்சுனன் மற்றும் பாஞ்சாலி சபதம் ஏற்கும்போது பேசும் வசனங்கள் மனதை கொள்ளைக் கொள்ளும் தன்மையுடையது. இந்த கதையை அடிப்படையாக கொண்டு இயக்குனர் அஞ்ஞனா பூரி இயக்கிய நாடகம் இனிமையான நினைவாக இருக்கிறது.

05.     யயாதி – வி.எஸ்.காண்டேகர் – மாரத்தி.                       இதுவும் மகாபாரத கதையின் ஒரு சிறுபகுதி. பாண்டவர்களின் முன்னோர்களில் ஒருவனான யயாதியின் காதல்கள் மற்றும் காமங்களை மையமிட்ட கதையாகும். மனம் அமைதியடையாத வரை காமம் நிறைவு பெறுவதில்லை. எவ்வளவு அனுபவித்தாலும் அந்த அனுபவத்தில் இருந்து புதிதாக ஒன்றை கண்டுபிடிப்பதே காமத்தின் இயல்பு என்றும் அதனால் மன அடக்கத்தின் மூலமே காமத்தை வெல்ல முடியும் என்பதை யயாதி உணரும் இடம் மிகவும் அற்புதமானது. இந்த கதையை மட்டும் இரண்டுமுறை படித்துள்ளேன். மறுபடியும் படிக்கும் திட்டமும் இருக்கிறது.

06.     உப பாண்டவம் – எஸ்.ராமகிருஷ்ணன்.                          இது நவீன மொழியின் மகாபாரதம். இவ்வளவு சின்ன புத்தகத்தில் அவ்வளவு பெரிய கதையை எப்படி சொல்லி இருப்பார் என இந்த புத்தகத்தை பார்த்ததும் எனக்குள் வியப்பாக தோன்றியது. ஆனால் கதையை படிக்க பிடித்துப்போனது. எஸ்.ராவின் நாவல்களில் எனக்கு மிகவும் பிடித்த நாவல் இது. காலத்தில் முன்னும் பின்னுமான இதன் கதை சொல்லல் முறை மிகவும் உவப்பானதாக இருந்தது. இதில் எஸ்.ரா மொழியை கையாண்ட விதம் பிரமிப்பாக இருந்தது.

07.     பருவம் – எஸ்.எஸ்.பைரப்பா – கன்னடம்.                         இது யாதார்த்தமான மகாபாரதம். நான் படித்த மகாபாரத பிரதிகளில் என்னை மிகவும் கவர்ந்தது இது. மகாபாரத கதையில் இருக்கும் கடவுள் அல்லது அதீத சக்திகளை நீக்கிவிட்டு இக்கதை மனிதவாழ்வில் நடந்து இருந்தால் எப்படி இருக்கும் என்பதன் விளைவே இந்த நாவல். நாவலாசிரியர் எஸ்.எஸ்.பைரப்பா பல ஆராய்சிகள் மேற்கொண்டு, தகவல்களை மனித வாழ்வாக மாற்றி சிறப்பான படைப்பாக பருவம் நாவலை உருவாக்கி இருக்கிறார்.

08.    இரண்டாம் இடம் – எம்.டி.வாசுதேவன் நாயர் – மலையாளம்.           இது பீமனின் பார்வையிலான மகாபரதம். பாண்டவர்களில் இரண்டாவதாக பிறந்த பீமனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தனக்கு பிடிக்காவிட்டாலும் அண்ணன் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுண்டு வாழவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கும் தம்பியின் பார்வையில் பாண்டவர்களின் வாழ்வு விரித்து சொல்லப்படுகிறது.

09.     திரெளபதியின் கதை – பிரதிபாராய் – ஒரியா.                     இது பாஞ்சாலியின் பார்வையிலான மகாபாரதம். ஐந்து பாண்டவர்களின் மனைவியான திரெளபதி அரசவையில் வைத்து அவமானப்படுத்தும்போது கிருஷ்ணன் வந்துதான் அவளின் மானம் காப்பற்றபட வேண்டியிருக்கிறது. கணவர்(கள்) இருந்தும் ஒரு பெண்ணின் மானத்தை இன்னொருர் வந்து காப்பற்ற வேண்டிய சூழலில் அந்த பெண்ணின் மனநிலைகள் என்ன..? ஆண்கள் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்ட ஏற்படுத்தும் போரினால் பாதிக்கப்படுவது இருதரப்பிலும் பெண்ணாகவே இருக்கிறாள். இதற்கான காரணம் என்ன..? பெண்ணிய பார்வையில் குடும்பம், அரசு, போர் என எல்லாவற்றையும் கேள்விக்கு உட்படுத்தும் நாவலாக இது இருக்கிறது.

நீங்கள் படித்து வியந்த மகாபாரதம் சார்ந்த கதைகள் குறித்து பதிவிட்டால் அதை தேடி படிக்க நான் விருப்பமாக இருக்கிறேன். 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...