2.28.2023

பதிவு. 68

 மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின்

வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழுதுவார் என்று தெரியும். சில கட்டுரைகளை படித்தும் இருக்கிறேன். இப்பொழுதுதான் முதல் முறையாக அவருடைய புத்தகத்தை முழுதாக படித்தேன்.
மூதாய் மரம் கட்டுரை தொகுப்பாகும். இதில் பெரும்பாலான கட்டுரைகள் நெய்தல் சார்ந்ததாகவே இருக்கிறது. வளர்ச்சியின் பெயரால் விளைநிலங்கள் தொழிற்சாலைகளாக மாறுவதை கண்ணால் கண்டு இருக்கிறேன். பூமிக்கு அடியில் இருக்கும் கனிம வளங்களுக்குகாக காடுகள் அழிவதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் கடல் சார்ந்து அதிகம் தெரியாது. இலங்கை இராணுவத்தினால் மீனவர்கள் சுடப்படும்போதும், சுனாமியில் உயிர்கள் பலியான போதும், புயல் தாக்கும்போதும் மட்டுமே மீனவர்கள் பற்றிய செய்திகளை கேள்விப்படுவதுண்டு. மற்றபடி அவர்களின் வாழ்வு குறித்து அதிகம் தெரியாது. இந்த புத்தகம் அந்த அறியாமையின் மீது சிறிது வெளிசத்தை பாய்ச்சுகிறது.
காடுகள் அழிக்கப்படுவதினாலும், அணைகள் கட்டப்படுவதினாலும் மழைநீர் கடலுக்கு சென்று சேராததினால் கடலில் ஏற்படும் பாதிப்பு என்ன, நவீன படகுகளினால் கட்டுமர படகுகளுக்கு ஏற்படும் இழப்பு என்ன, நவீன படகுகளை குறிப்பிட்ட எல்லைக்கு மேல் செல்லக்கூடாது என்ற கட்டுப்பாட்டினால் யார் பயனடைகிறார்கள், நவீன வழிகாட்டி கருவிகளின் வருகையாலும் வளர்ச்சியின் பேரால் சுற்றுசூழல் சமநிலை பேணிபாதுகாக்க படாததினால் ஏற்படும் இழப்புகள் என்ன, நிலம் மற்றும் காடுகளில் பன்னாட்டு நிறுவனங்கள் சட்டங்களை வளைப்பதுபோல் கடலில் எப்படி சட்ட மீறல் செய்கிறது, அதனால் இந்திய ஒன்றியத்திற்கு ஏற்படும் இழப்புகள் என்ன, கடலில் இருந்து கிடைக்கும் மீன்களினால் மக்களின் உணவு தேவை எந்த அளவுக்கு பூர்த்தியாகிறது, அந்த மீன்களை வாங்க விற்க என எத்தனை உதரி தொழிலாளர்கள் பயனடைகிறார்கள், வளர்ச்சியின் பெயரால் கடலில் கொட்டப்படும் கழிவுகளினால் மீன்வளம் பாதிக்கிறது, மீன்வளம் பாதித்தால் எத்தனை தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என எண்ணிலடங்கா தகவல்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது.
வறீதையா கான்ஸ்தந்தின் எழுத்துநடை மிக எளிமையானது, வாசகனை கவரக்கூடியதாக இருக்கிறது. இவர் நெய்தல் சார்ந்து மேலும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். அதெல்லாம் படிக்கவேண்டிய புத்தகங்கள் பட்டியலில் சேர்த்துக்கொண்டேன்.
இந்த புத்தகத்தை தடாகம் வெளியீடு சிறப்பான முறையில் வெளியிட்டு இருக்கிறது. இதன் முதல் பதிப்பு 2017 ஆண்டு வெளி வந்துள்ளது. 28.02.2023.
All reactions

திரை. 18

அயலி
அயலி இணைய தொடரை இன்று பார்த்து முடித்தேன். மிக நன்றாக இருக்கிறது. பெண்களுக்கான சுதந்திரத்தை பற்றி பேசுகிறது.
ஆண்டாண்டு காலமாய கடவுளின் பேராலும் கலாச்சாரத்தின் பேராலும் சாதிய பெருமையின் பேராலும் பெண்கள் எப்படி ஒடுக்கபடுகிறார்கள் என்பதையும் அவர்களுக்கான மீட்சி எது என்பதையும் மிக தெளிவாகவும் அழகாகவும் சுவாரசியமாவும் சொல்கிறது.
சிறு சிறு விமர்சனங்கள் இருந்தபோதிலும் அதைக்கடந்து இத்தொடரை ரசித்துப் பார்க்க முடிகிறது.
27.02.2023
May be an image of 3 people and text

துளி. 364.

நம்பிக்கை.

காதல் கவிதைகள்
படிக்கிறாய்
காதல் கவிதைகளும்
எழுதுகிறாய்
எனக்கு தெரிந்து
நீ யாரையும் காதலிக்கவில்லை
உன்னையும் யாரும் காதலிக்கவில்லை,
பிறகு ஏன்
இந்த காதல் கவிதைகள்...
நீ சொல்வது நூறு சதம் உண்மைதான்,
என் கடந்த காலம் அப்படியானதே
என் எதிர்காலமும் அப்படியானதுதானா...
கோடைக்குப்பின் வசந்தம் வரும்தானே,
என்ன...
என் கோடைகாலம் கொஞ்சம் நீளமானது அவ்வளவுதான்.

26.02.2023.

துளி. 363

 

ஒரு மலர்

அல்லது

புன்னகைக்கும் குழந்தை

அல்லது

அடர் வனம்

அல்லது

கடல்

அல்லது

வானம்

அல்லது

நட்சத்திரம்

எதாவது ஒன்றின் புகைப்படத்தை

வைக்கலாமே பகரியின்

முகப்பு படமாக

ஏனிந்த வெறுமை

 

அது வெறுமையல்ல

அது முதலும் முடிவுமில்ல

ஆகாயம்.

 

24.02.2023.

துளி. 362

சுதந்திர காதல்

கொஞ்சம் கவிதை

கொஞ்சம் காதல்

கொஞ்சம் காமம்

கொஞ்சமும் அதிகாரமில்லாத

ஆனால்

ஆற்றும்படுத்தும் ஓர் இன்சொல்

இதெல்லாம் சாத்தியப்படாதபோது

மரத்தை பிரியும் பழுத்த இலையாய்

உதிர்ந்து போகுதல் உசிதம்.

 

21.02.2023.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 


துளி. 361.

கணம்தோறும் காற்றிடம்விசாரணைசெய்தபடி காத்திருக்கின்றனசெவிகள் பேரன்பின்ஒற்றைசொல்லுக்காக... 16.02.2023.

பதிவு. 67

 மழைக்கண் – செந்தில் ஜெகன்நாதன்.

எட்டுத் தோட்டாக்கள் இயக்குனர் ஸ்ரீகணேஷ் மூலம் அவரின் இணை இயக்குனராக நண்பர் செந்தில் ஜெகன்நாதன் எனக்கு அறிமுகமானார். அப்போதே அவரின் சிறுகதை ஆனந்த விகடனில் வெளிவந்திருப்பதாக ஸ்ரீகணேஷ் சொன்னார். அதை படிக்கும் வாய்ப்பு அமையவில்லை. ஆனாலும் செந்தில் ஒரு எழுத்தாளராக வளர்ந்து வருகிறார் என்ற தகவல் வந்து சேர்ந்துக்கொண்டே இருந்தது.
இந்த புத்தக கண்காட்சியில் 2000 ஆண்டுக்கு பிறகு எழுத வந்த படைப்பாளிகளின் சிறுகதைகளை வாங்க திட்டமிட்டதும் அதில் செந்தில் ஜெகநாதனின் மழைக்கண் சிறுகதை தொகுப்பை சேர்த்துக்கொண்டேன்.
இந்த தொகுப்பில் மொத்தம் ஒன்பது சிறுகதைகள் இருக்கின்றன. மயிலாடுதுறை வட்டார கிராமபுற வாழ்வும் சென்னை மாநகர வாழ்வும் இக்கதைகளின் களமாக இருக்கிறது. சிறுகதைகளின் பெயர்களே வசிகரிக்க கூடியதாக இருக்கிறது. உதாரணமாக எவ்வம், நெருநல் உளலொருத்தி, காகளம், மழைக்கண் போன்றவற்றை சொல்லலாம்.
அப்பாவின் நலனுக்காக அப்பாவை கட்டிப்போட வேண்டிய சூழலுக்கு தள்ளப்படும் மகன், பிறந்தநாள் அன்று பிணமாக நடிக்க வேண்டியிருக்கும் நடிகன், தனக்கு பிள்ளைபேறு வாய்க்கவில்லை என்பதற்காக அண்ணனின் பிள்ளையை தானமாக கேட்கும் தங்கை, இசையை ரசிக்கும் மளிகைக்கடகாரர், நாய்மீது ப்ரியமாக இருக்கும் கர்ப்பிணி பெண், நாற்பது வயதை நெருங்கிய பின்னும் ஒரு முத்தத்திற்காக அள்ளாடும் ஆண், தன் தொழிலை முன்வைத்து வேண்டாமென விலகி சென்ற முன்னால் காதலியை அதே தொழில் நிமித்தமாக சந்தித்து சங்கடப்படும் சினிமா உதவி இயக்குனர் என பலவிதமான மனிதர்கள் ரத்தமும் சதையுமாக இந்த கதைகளில் உலவுகிறார்கள்.
இந்த ஒன்பது கதைகளில் எனக்கு காகளம் சிறுகதை ரொம்பவும் பிடித்திருக்கிறது. மளிகை கடை நடத்தினாலும் இசையை ரசிக்கும் நபரை(முதலாளி ராமஜெயம்) நான் இங்குதான் கேள்வி படுகிறேன். அத்துடன் அக்கதையின் மையம் ஒரு மனிதனின் குற்றவுணர்ச்சியை பேசுகிறது. முதலாளியின் சாவுக்கு செல்லும் முன்னாள் தொழிலாளியும் இன்றைய முதலாளியுமான செல்வத்தின் மனவோட்டம்தான் இக்கதை. ஒரு மனிதனிடம் குற்றவுணர்ச்சி இருக்கும் வரை அவன் பெரும் தவறுகளை செய்யமாட்டான் என நம்புகிறேன். நம்பிக்கைதானே வாழ்க்கை. இவ்வாறாக பலவித சிந்தனையை தூண்டுவதாக இக்கதை இருக்கிறது.
காகளம் என்றால் எக்காளம், எக்காளம் என்றால் ஓர் ஊது சின்னம் என்று ந.சி.கந்தையாவின் செந்தமிழ் அகராதி சொல்கிறது. காகளம் என்பது கிளாரினெட்-க்கான தமிழாக்கம் என நண்பர் செந்தில் சொல்கிறார். இந்த கதையில் முதலாளியின் சாவு வீட்டில் இசைக்கப்படும் கிளாரினெட்டின் இசை செல்வத்தை நிலைகுலைய செய்கிறது. அது அவனுள் என்னன்னவோ செய்கிறது. முதலாளியின் மரண செய்தியை கேட்டது முதல் அவன் மனம் சமநிலை குலைந்து எக்காளமிட்டுக்கொண்டே இருக்கிறது. கதையின் மைய சரடும் தலைப்பும் ஒன்றோடு ஒன்று பிண்ணி பிணைந்துள்ளது.
சில கதைகளின் முடிவு வேறு மாதிரி இருந்து இருக்கலாம் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. கதைகள் வெளிவந்த காலம், அது வெளிவந்த இதழ்களின் குறிப்புகளை கதையின் கீழே அடிக்குறிப்பாக இருந்திருக்கலாம் என்றும் தோன்றுகிறது.
செந்தில் ஜெகன்நாதனின் மொழிநடை மிக இயல்பாக இருக்கிறது. இந்த ஒன்பது கதைகளின் மூலம் தன் எழுத்து வாழ்க்கையை சிறப்பாக தொடங்கி இருக்கிறார். அவர் மேலும் மேலும் உயரங்களை தொட வாழ்த்துக்களும் பாரட்டுகளும்.
இந்த புத்தகத்தின் அட்டைப்படத்தை இரா.தியாகராஜன் நன்றாக வடிவமைத்துள்ளார். வம்சி புக்ஸ் இந்த புத்தகத்தை சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு டிசம்பர் 2021-ல் வெளியாகியுள்ளது.
13.02.2023.

All reaction

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...