9.27.2018

பதிவு . 13

கு.ப.ரா எழுத்துக்கள் – பாகம்.1
மணிக்கொடி எழுத்தாளர்களில் ஒருவரான கு.ப.ரா வின் படைப்புகளை அங்கொன்றும் இங்கொன்றும்மாக ஒரு சில மட்டுமே வாசித்திருந்தேன். அண்மையில் கு.ப.ரா வின் படைப்புகள் நண்பர் ஜெகதீஸ் மிகவும் வியந்து சொன்னார். அத்துடன் கு.ப.ரா பற்றி சாரு.நிவேதிதாவும், எஸ்.ரா வும் பேசிய இணைய இணைப்புகளும் அனுப்பி வைத்தார், அவர் அனுப்பி பல நாட்களுக்கு பிறகு அவர்களுடைய பேச்சை கேட்டதும் கு.ப.ரா. வுடைய படைப்புகளை உடனே வாசிக்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. நூலகத்தில் பல நாட்கள் கு.பா.ரா படைப்புகளை பார்த்திருந்தும் அப்பறம் படிக்கலாம் என தள்ளிவைத்திருந்தேன். இப்போது அவற்றிலிருந்து முதல் பாகத்தை எடுத்து வந்து சுமார் மூன்று மாத கால அவகாசத்தில் வாசித்து முடித்துள்ளேன்.
கு.ப.ரா எழுத்துக்கள் முதல் பாகத்தில் மொத்தம் 38 சிறுகதைகள் உள்ளன. இவற்றில் சமூக கதைகள் 21, சரித்திர கதைகள் 17. மிக குறைவான பக்கங்களில் ஒரு உணர்ச்சியை அல்லது சம்பவத்தை அதன் உளவில் தன்மையோடு சிறப்பாக பதிவு செய்துள்ளார். தமிழ் சிறுகதை வளர்ந்து வந்த பாதையை இச்சிறுகதைகளை வாசிப்பதன் மூலம் அறியலாம். கிராமம், நகரம், சமகாலம், சரித்திர காலம், படித்தவர்கள், படிக்காதவர்கள் என பல தளத்திலும் கு.ப.ரா எழுதி பார்த்துள்ளார்.
சமூக கதைகளில் விடியுமா, பெண் மனம், வீரம்மாளின் காளை, குரலும் பதிலும், மின்னக்கலை, காதலே சாதல், திரை, விசலாட்சி ஆகிய கதைகளும், சரித்திர கதைகளில் புத்தர், அசோகர்,அக்பர் ஆகியோரின் சரித்திரத்தை களமாக கொண்ட கதைகள் எனக்கு பிடித்துள்ளன.
இந்த நூலை அல்லயன்ஸ் பதிப்பகம் தன் நூற்றாண்டு வெளியீடாக கொண்டு வந்ந்துள்ளது. இதை தொகுத்தவர் என யார் பெயரையும் குறிப்பிடவில்லை. நான் இதை பல காலம் படிக்காமல் தள்ளிவைத்தற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்த சிறுகதைகள் எந்த ஆண்டு, எந்த இதழில் வெளிவந்தது போன்ற தகவல்கள் இல்லை. ஒரு வாசகனாக இதையெல்லாம் தெரிந்துக் கொள்ள ஆசைப்படுகிறேன். இந்த தகவல்கள் அந்த கதைகளை இன்னும் கொஞ்சம் கூடுதலாக புரிந்துக்கொள்ள உதவுமென நம்புகிறேன்.

                                                                                                  25.09.2018

துளி . 191

வேகாத வெயிலில் 
அலைந்து திரிந்து 
பூஞ்சோலையை தஞ்சமடையும் 
யாத்ரீகன் போல 
மனம் 
இளைப்பாருகிறது 
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...


                                                 24.09.2018

துளி . 190

எண்ணிலடங்கா கனவுகள் 
பூக்கின்றன தேவதையின் 
சிறுவிழி அசைவில்...

                                                   24.09.2018

துளி . 189

காத்துக் கிடக்கிறேன்
தேவதையின் குரலில் 
என் பெயர்
உச்சரிக்கப்பட போகும்
மந்திர கணத்துக்காக...

                                        23.09.2018

துளி . 188

பொய் 
கூறுவதில்லை
என்ற
சத்தியத்தை 
கைவிடுகிறேன்
தேவதையைக்
கண்ட
இக்கணமே....


                               23.09.2018

பதிவு . 12

கோவேறு கழுதைகள்

எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ” கோவேறு கழுதைகள் “ வெளிவந்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைய போகிறது. பல வருடங்களாகவே வாசிக்கப்பட வேண்டிய நூல்கள் பட்டியலில் இருந்த போதிலும் வாசிக்கப்படாமலேயிருந்த இந்நாவலை இப்போதுதான் வாசித்து முடித்துள்ளேன்.
கிராமங்களில் துணி வெளுக்கும் வண்ணார சாதி பெண்ணான ஆரோக்கியத்தின் வாழ்க்கை கதையை சொல்வதினூடாக இந்திய சமூகத்தின் பெரும் சாபமான சாதியின் கொடூரமுகத்தை / அதன் ஆணவத்தை ஆவணமாக இந்நாவலில் இமையம் பதிவு செய்துள்ளார்.
அழுக்கு துணிகளையும், அழுக்கு நீக்கப்பட்ட துணிகளையும் பொதி பொதியாக சுமக்கும் கோவேறு கழுதைகள் போலவே இச்சமூகத்தில் சாதிய ஒடுக்கு முறைக்கு உள்ளாகும் மனிதர்களும் துன்பத்தின் பொதி மூட்டைகளை சுமக்க வெண்டிய சாபக்கேடு உள்ளது. அதிலிருந்து சிலர் வெளியேறினாலும், புற சூழலால், அகவமைப்பை மாற்ற முடியாத பலரும் அதிலிருந்து வெளியேற முடியாமல் தத்தளிக்கின்றனர்.
மதம் மாறினாலும் சாதியின் இழிவை சுமக்க வேண்டிய சூழல், கிராமங்கள் உணவு பயிர்களை விளைவிப்பதிலிருந்து பணப்பயிர் விவசாயத்துக்கு மாறிய சூழல், அரசியல் மற்றும் சினிமாவின் கவர்ச்சியால் மனிதர்களுக்குள் ஏற்பட்ட மன மாற்றங்கள் என பலவகையான பதிவுகள் இந்நாவலில் பதிவாகியுள்ளது.
இமையம் எளிய மனிதர்களின் ஆசாபாசங்களை அவர்களது மொழியிலேயே சிறப்பாக பதிவு செய்துள்ளார். இந்நூலை க்ரியா பதிப்பகம் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளது. இந்நாவலின் முதல் பதிப்பு ஜீலை 1994 வெளியாகியுள்ளது.

                                                                                                        22.09.2018

துளி . 187

தூது அனுப்பினேன்
என் சொற்களை
உன் துயர்துடைக்க...

                                           22.09.2018

துளி . 186

காதலித்துக் கொண்டே 
இருப்பேன் நீ என்னைக் 
காதலிக்காதபோதும்....

                                                     22.09.2018

வரி . 14

அறிவுக்கும் ஆசைக்குமான போராட்டத்தில் 
ஆசையே வென்று கொண்டிருக்கிறது.

                                                                                  17.09.2018

பதிவு . 11நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று ஒரே நாளில் ஆகஸ்ட் மாட படச்சுருள் இதழை (சுற்றுச் சூழல் சினிமா சிறப்பிதழ்) வாசித்து முடித்தேன். சுற்றுச் சூழல் சார்ந்து உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படங்கள் மற்றும் ஆவணப் படங்கள் குறித்து பத்து கட்டுரைகள் இந்த இதழில் வந்துள்ளன. அவற்றில் சில கட்டுரைகள் பற்றிய என்னுடைய எண்ணங்களை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

யமுனா ராஜேந்திரனின் ”பூப்பூக்கும் மரம், விஷம் பரவும் காற்று, சபிக்கப்பட்ட மழை’’ என்ற கட்டுரை கன்னடம்,தமிழ்,மராத்தி மொழிகளில் வெளிவந்த மூன்று திரைப்படங்களில் சுற்றுச் சூழல் சீர்கேட்டை எப்படியெல்லாம் பதிவு செய்துள்ளார்கள் என்பதை சிறப்பாக விளக்குகிறது. அந்த கன்னடப்படத்தை உடனே பார்க்கும் ஆவல் எனக்குள் ஏற்பட்டுள்ளது.

அவதார் திரைப்படத்தை முன்வைத்து தி.குலசேகர் எழுதியுள்ள கட்டுரையில் பேராசை பிடித்த மனிதர்கள் எப்படியெல்லாம் பேரன்போடு வாழும் மக்களை அடிமைகொள்ள நினைக்கிறார்கள் என்பதை கவிதை மொழியில் அழகாக பதிவு செய்துள்ளார். 
போபால் விஷ வாயு பேரழிவு பற்றி லெட்சுமி நாராயணன் பி எழுதியுள்ள “வஞ்சிக்கப்பட்ட நீதியும், மழைக்காண வேண்டுதலும்” கட்டுரையை வாசித்து முடித்துமே என் மனம் பேரமைதியை உணர்ந்தது. நிம்மதியை குலைக்கும் பேரமைதியிது. போபால் கொலைகள் பற்றி ஒரு படம் வந்திருக்கிறது என்பதே எனக்கு புதுசெய்தி, இந்த கட்டுரையை வாசித்ததும் அந்தப்படத்தை உடனே பார்க்க வேண்டுமென திட்டமிட்டுள்ளேன்.

உணவுக்காக உருவாக்கப்படும் மாடு,கோழி,பன்றி பண்ணைகளில் ஏற்படும் சீரழிவுகள், பாலித்தீன் குப்பைகள் மூலம் சூழல் சீர்கேடு, வளர்ச்சியின் பெயரால் அரசுகள் நிலம் கைப்பற்றுவதினால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் டால்பின் வேட்டை என பல ஆவணப்படங்கள் பற்றிய கட்டுரைகளும் இந்த இதழில் வெளிவந்துள்ளன. படச்சுருள் குழுவினருக்கும் கட்டுரையாளர்களுக்கும் பாராட்டுகள்.

                                                                                                              16.09.2018துளி . 185

அந்தியில் பூமியோடு 
உரத்து பேச துவங்கிய மழை 
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை 
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....

                                                              16.09.2018

வரி . 13

திட்டமிட்ட வேலையை செய்துமுடித்தால் அது எவ்வளவு சின்ன வேலையாக இருந்தபோதிலும் மனதுக்கு பெரும் மகிழ்ச்சியை தருகிறது.

                                                                                              16.09.2018

வரி . 12

வரும்காலம் சிறப்பாக அமைய வேண்டுமானால் சிந்தனைகளை அடிக்கடி சீர்படுத்த வேண்டும்.

                                                                                                            14.09.2018

துளி . 184

இந்தபகலை பதற்றமாக்குகிறது
அறிமுகமில்லா தேவதையின் 
எண்ணிலிருந்து வந்திருந்த 
இரவு வணக்கங்கள்....

                                                 13.09.2018

உரையாடல் . 03

பெண் : நீ என்ன காதலிக்கிறீயா....
ஆண் : ஆமாம்... எப்போதும்
காதலிப்பேன்...
பெண் : ஓ...அப்டியா..
ஆண் : ஆமாம்... நீ....
பெண் : நா காதலிக்கல... ஆனா
ஒன்ன பிடிக்கும் எனக்கு..
ஆண் : ஓ....எனக்கு பைத்தியம்
பிடிக்குது இப்போ...
பெண் : என் கிட்ட பேசாத போ 
ஆண் : ??? ????

                                                  11.09.2018

வரி . 11

எத்தனை ஏமாற்றங்கள் 
நிகழ்ந்த போதிலும் 
இலக்கை அடையாமல் ஓயப்போவதில்லை.

                                                                            10.09.2018

வரி . 10

ஒரு ஆரோக்கியமான செயலை செய்துமுடித்த அடுத்த கணமே ஒரு ஆரோக்கியமற்ற செயலையும் செய்துவிடுகிறேன்

                                                           08.09.2018

வரி . 09

வாழ்க்கையில் ஏதும் பெருமாற்றம் நிகழவில்லை, ஏமாற்றத்தை தவிர...

                                                                                                                   02.09.2018

துளி . 183

அஞ்சலி 

மாலைகள்சூடி கரம்பிடித்து 
இல்வாழ்க்கை பயணத்தை 
தொடங்கும் ஒரு
சுபமுகூர்த்த நாளில்
தன் இறுதிபயணத்தை 
தொடங்கினாள் 
எம்
பள்ளித்தோழி ஒருத்தி
உன் கழுத்தில்
கயிற்றை மாலையாக
சூடுவதற்கு முன்
ஏது நினைத்தாய் தோழி
பள்ளிக்கு சீராட்டி
அனுப்பி வைத்த
உன் பாலகனைப்பற்றி 
நினைத்திருக்கலாம்
உன் ஆசிர்வாதத்துடன்
வெளியூருக்கு வேலை
பார்க்க சென்ற
மற்றொரு மகனைப்
பற்றி யோசித்திருக்கலாம்
அயல்தேசத்தில் உங்களுக்காக
உழைக்க சென்ற
உனக்கு மாலைசூடியவரை
நினைத்திருக்கலாம்
அம்மாவை இழந்த
பிள்ளைகள் படும்
துயரை அனுபவித்திருந்தும்
உன் பிள்ளைகளின்
வாழ்வில் அம்மா
இல்லாது போகும்படி
ஏன் செய்தாயோ
செய்யதூண்டுயது எதுவோ
இனி யார் அறிவர்
கடன் பிரச்சனை
உடல்நிலை காரணம்
உறவுகளின் உதாசீனம்
உன் மறைவுக்கு ஆயிரம்
காரணங்களை சொல்லும்
ஊராரின் நாக்குகளை
கட்டுப்படுத்த முடியுமா
உன் மனம் நினைத்ததை
அறியா ஊர்மக்கள்
தம் மனம் நினைத்தை எல்லாம் 
பேசிதிரிவர் இனி
உன் உபசரிப்பில்
மகிழ்ந்த பெண்ணொருத்தி
உன் இழப்பின் துயர் தாளாது
உன் வீட்டு முற்றத்தில்
அலறுகிறாள் சுயமிழந்து
அந்த கூக்குரல்
உன் நினைவை சுமந்து 
காற்றில் பரவுகிறது
நீ விடைகாண விரும்பிய 
கேள்விகளும் பதில்தேடி
அலைகின்றன உனக்காக...
குறிப்பு :
நேற்று மரணத்தை தழுவிகொண்ட
எம் பள்ளித்தோழியும், உடன் பிறவா சகோதிரியுமான ரீட்டாவின் நினைவாக....

                                                                                           31.08.2018

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...