10.31.2018

பதிவு . 14

சாவு சோறு – இமையம்
எழுத்தாளர் இமையத்தின் சாவு சோறு சிறுகதை தொகுதியை அண்மையில் வாசித்து முடித்தேன். இந்த தொகுதியில் ஒன்பது சிறுகதைகள் உள்ளன. நவரசம் என்பது போல ஒவ்வொருகதையும் தனித்தனி சிறப்புடையது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களே இந்த கதைகள் நிகழும் களனாகும்.
கடவுளை/பேயியை சக மனிதன் போல பாவித்து திட்டுவதும், கொஞ்சுவதும், ஆசைக்காட்டுவதும், தன் சுகதுக்கங்களை பகிர்ந்துக்கொள்வதும் இயல்பாக இமையத்தின் கதைகளில் பதிவாகியுள்ளது. களவுக்கு போக கடவுளின் உத்தரவு வேண்டி கடவுளோடு உறையாடும் மனிதனின் கதையை சொல்லும் ஆகாசத்தின் உத்தரவு,
கடவுளிடம் வரம் கேட்பது வாழ்வதற்கு மட்டுமல்ல போலும், உறவுமுறை மாறி காதலித்து ஓடிப்போன பெண் இறந்து போக வேண்டுமென வேடப்பரிடம் வரம் கேட்கும் அம்மாவின் கதையை சொல்லும் வரம்,
பேயிக்கும் பூசாரிக்குமான உறையாடல் அற்புதமாக பதிவு செய்திருக்கும் பத்தினி இலை,
தன் முன்னாள் காதலியை சந்திக்க மிக ஆவலுடன் செல்லும் ஆசிரியரின் கதையான ராணியின் காதல், காசில்லாதவருக்கு காதல் காவியம் அல்ல என்பதை முகத்தில் அடித்து சொல்கிறது இந்தகதை,
மனித உரிமையின் பெயரால் மாணவர்களை அடிக்கக்கூடாது என சட்டம் வந்தபின் ஆசிரியர்களின் நிலமையை அதுவும் அரசாங்க பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் நிலையை விளக்கும் அரசாங்க பள்ளிக்கூடம்,
தூய்மை இந்தியா திட்டம் மூலம் இந்தியா சுத்தமாகிவிட்டது என விளம்பர பலகைகள் சொன்னாலும் கிராமங்களில் இன்னும் பெரும்பாலும் திறந்தவெளியில்தான் மக்கள் மலம் கழித்துக்கொண்டுள்ளார்கள். இந்த துயரிலிருந்து மீள ஆசைப்படும் ஒரு இளம்பெண்ணின் கதையை சொல்லும் பேராசை,
பொருள் திருட்டு போகும் பொண்ணு திருட்டு போகுமா என வியக்க வைக்கும் வகையில் சொல்லப்பட்டுள்ள திருட்டுபோன பொண்ணு கதை நம் கண்களில் கண்ணீரை வரவைக்க கூடிய கதையாகும்,
தலைமுறை இடைவெளியினால் மனிதர்கள் மிகவும் வன்மமான மனநிலைக்கு சென்று விடுகின்றனர். பேரன்பால் வளர்க்கப்பட்ட மனிதர், பெரும் நன்றியுணர்வோடு வாழ்கிறார் ஆனால் அவரின் மகனின் முன் வீழ்ந்துதான் போகிறார். கடந்தகாலம் இனிமையானதாகவும் நிகழ்காலம் கசப்பானதாகவும் தோன்றும் வாழ்வியலை சொல்லும் பரிசு,
இந்த சிறுகதை தொகுப்பின் தலைப்பு கதையான சாவு சோறு வேறு சாதி ஆணை காதலித்து அவனோடு ஓடிப்போன பெண்ணை தேடி அலையும் அம்மாவின் கதை. இந்த சமூகத்தில் சாதி வன்மம் எப்படி செயல்பட்டது, இப்போதும் எப்படி செயல்படுகிறது அதனால் பெண்கள் எப்படியெல்லாம் கொடுமைக்கு உள்ளாக்கபடுகிறார்கள் என்பதை ஒரு பெண்ணின் வாக்குமூலமாகவே இந்த கதையில் பதிவாகியுள்ளது.
பரிசு,சாவு சோறு இரு சிறுகதைகளும் தமிழின் மிக முக்கியாமான சிறுகதைகள் என நான் நம்புகிறேன்.
பலரும் காண தவறிய உண்மைகளை தன் படைப்புகளில் இமையம் நேர்மையாக பதிவு செய்துள்ளார். இதனாலேயே இவரின் படைப்புகள் மிக முக்கியமானதாக மாறுகிறது.
இமையம் தமிழ் இலக்கியவுலகில் பிரவேசித்து இருபத்தைந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்த சூழலில் நாம் அவருடைய படைப்புகளை தேடி வாசிப்பதே நாம் அவருக்கு அளிக்கும் வெகுமதியாக இருக்குமென நம்புகிறேன்.
இமையத்தின் படைப்புகளை தொடர்ந்து வெளியிடும் க்ரியா பதிப்பமே இந்நூலையும் சிறப்பான அட்டை ஓவிய வடிவமைப்புடன் வெளியிட்டுள்ளது. இந்நூலின் முதல் பதிப்பு 2014-ல் வெளிவந்துள்ளது.

                                                                                                                         08.10.2018.


Image may contain: bird

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...