9.03.2020

திரை - 07

 சூஃபியும் மகத்தான மரணமும்

மகத்தான மரணம் என்ற சொற்றொடர் நேற்று காலையில் மனதுக்குள் தோன்றியது. இதை துவக்க வரியாக வைத்து ஒரு சிறுகவிதை எழுத வேண்டுமெனவும் தோன்றியது. உடனே எது மகத்தான மரணம் என்ற கேள்வி யோசிக்க தொடங்கினேன், அதுப்பற்றி பலவாறு யோசித்தும் எந்த முடிவுக்கும் வராமல் அந்த சிந்தனையிலிருந்து விலகி, ஒருகட்டத்தில் அதை மறந்தும் விட்டேன்.
கடந்த சில நாட்களாக எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் முகனூல் பதிவுகளில் சூஃபியும் சுஜாதாவும் என்ற வார்த்தைகளை பார்த்தேன். அது எதும் சூஃபிகள் பற்றிய கட்டுரையாக இருக்கும், பிறகு படித்துக்கொள்ளலாமென அதைப்படிக்காமலே விட்டுவிட்டேன். நண்பர் ஒருவரோடு பேசிக்கொண்டு இருக்கும்போது சூஃபியும் சுஜாதாவும் என்பது அண்மையில் வெளியான ஒரு மலையாள திரைப்படம் என தெரியவந்தது. அப்படியானால் கெளதம சித்தார்த்தன் எழுதியது திரைவிமர்சனமாக இருக்கும், முதலில் படத்தை பார்த்துவிட்டு பிறகு விமர்சனத்தை படிக்கலாம் என திட்டமிட்டேன்.
நேற்று மதிய உணவுக்கு பிறகு சூஃபியும் சுஜாதாவும் திரைப்படத்தை பார்த்தேன். ஒரு அதிகாலை பொழுதில் கதை துவங்குகிறது. சிறுகாடு போன்ற பின்புலத்தில் ஒரு பாதை, பாதையின் முடிவில இரண்டு விளக்கு எரிந்து கொண்டிருக்கிறது. இடி இடிக்கிறது. காற்று வீசுகிறது. மரத்திலிருந்து இலைகள் விழுகிறது. ஒரு கதாபாத்திரம் அந்த பதையில் நடந்து செல்கிறது. நடந்து செல்வது ஆணா பெண்ணா தீர்மானமான முடிவு வருவதற்கு முன்பாக, வீசிய காற்றில் பழுத்த இலையொன்று காற்றில் மிதந்து செல்வதை பார்க்கிறோம். மிதந்து செல்லும் பழுத்த இலை ஒரு கட்டிடத்துக்கு செல்லும் பழைய படிக்கட்டுகளில் விழுந்து புரண்டு இறுதியில் காற்றில் பறந்து செல்கிறது. முடிவாக அந்த கதாபாத்திரம் ஒடை அல்லது சிற்றாறு ஒன்றில் இறங்கி நடக்கும் பிண்ணனியில் பழுத்த இலை அந்த நீரோட்டத்தில் விழுந்து நீர் செல்லும் போக்கில் மிதந்து செல்கிறது.
நீரிலிருந்து நிலத்தில் கால் வைக்கும்போதுதான் அந்த கதாபாத்திரம் ஆண் என்றும் அவன் ஒரு முஸல்மான் என்று நமக்கு தெரிய வருகிறது. அவன் மேலும் நடந்து சென்று ஒரு மரத்தடியின் கீழ் செடிகளுக்கு இடையேயிருக்கும் நடுகல் அல்லது சமாதி போன்ற ஒன்றை வணங்குகிறான். அப்போது அவனுக்கு பக்கத்தில் ஒரு நாவல் பழம் விழுகிறது. மேலே அண்ணாந்து பார்த்துவிட்டு அந்த பழத்தை எடுத்து சாப்பிடுகிறான். அப்பொழுது அந்த கட்டிடத்தினுளிருந்து ஒரு பெரியவர் சன்னல் வழியே அவனை பார்க்கிறார். யாரென கேட்கிறார். நான் சூஃபி என பதில் கூறுகிறான்.
சூஃபி வந்திருப்பது ஒரு பள்ளிவாசல். அந்த பெரியவர் அந்த பள்ளிவாசலின் தற்போதைய இமாம். மரத்தடியில் சூஃபி வணங்கியது அவனுடைய குருநாதரின் சமாதி. அவன் பத்து வருடங்களுக்கு பிறகு அவன் அங்கு வந்திருக்கிறான் என்பதெல்லாம் அவர்களின் உரையாடலிருந்து நமக்கு தெரியவருகிறது. இமாம் பாங்கு சொல்ல தயாராகிறார். நான் சொல்கிறேன் என சூஃபி முன்வருகிறான். இமாம் சலிப்போடு இங்கு பத்துபேர் வந்தாலே பெரிய விசயம் என்கிறார். பத்துப்பேர் போதுமா என்று கேட்டபடியே சூஃபி பாங்கு சொல்ல தயாராகிறான்.
சூஃபியின் பாங்கு ஒலிக்கேட்டு கடையில் டீ குடிக்கும் இஸ்லாமியர்கள் ஆச்சரியப் படுகின்றனர். ஒரு வீட்டு வாசலில் கோலமிடும் மத்திய வயதான பெண்மணி பாங்கு சொல்லும் குரலை கேட்டதும் யோசனையோடு அதை கவனிக்கிறார். சந்தையிருக்கும் மக்களும் குரலை இனம் காணுகின்றனர். அந்த நீர்வழியை கடந்து தொழுகைக்கு ஆட்கள் வர தொடங்குகின்றனர்.
பத்து பேர் வருவார்களா என்ற நிலைமாறி நிறைய பேர் தொழுகைக்கு வந்துள்ளனர். இமாம் தொழுகையை தொடங்குகிறார். சூஃபி முதல் வரிசையில் இருந்து தொழுகிறான். அனைவரும் நின்ற நிலையிருந்து உட்கார்ந்து முழங்காலிட்டு முன்னே தரையில் தலைவைத்து தொழுகின்றனர். சூஃபியும் தரையை தொட்டு தொழுகிறான்.
பள்ளிவாசலுக்கு வெளியே உடல் சுத்தம் செய்யும் நீர் தொட்டி அருகே தரையிலிருந்த தவளையொன்று தண்ணீரில் தாவி குதிக்கிறது. தரையில் தலைவைத்து தொழ தொடங்கிய சூஃபி மறுபடியும் எழவேயில்லை. உடனிருந்தவர்கள் அவனை திருப்பி தரையில் படுக்க வைக்கின்றனர். இமானின் கை சூஃபின் மூச்சுக்காற்றை பரிசோதிக்கிறது.
சூஃபி சுழன்று சுழன்று நடமாடுகிறான். அந்தரத்தில் மிதக்கிறான். கணவன் மற்றும் குழந்தையோடு படுத்திருக்கும் ஒரு பெண் கனவு காண்கிறாள். அந்தரத்தில் மிதந்த சூஃபி தரையில் வீழ்கிறான். அந்த பெண் திடுக்கிட்டு எழுகிறாள்.
பள்ளிவாசலில் சூஃபி இறந்து விட்டதாக அறிவிக்கின்றனர். அந்த செய்தியை எல்லாருக்கும் சொல்ல சொல்கின்றனர். சுஜாதாவின் கணவனுக்கும் சொல் என்று ஒரு குரல் சொல்கிறது. இந்த தொடக்க காட்சிகள் எல்லாமே படத்தில் சுமார் பத்து அல்லது பன்னிரெண்டு நிமிடங்களுக்குள் வந்துவிடுகிறது.
அதிகாலை கனவில் சூஃபி அந்தரத்திலிருந்து வீழ்வதை கனவு கண்டவள்தான் சுஜாதா. அவள் வசிப்பது துபையில். செய்தி அறிந்த அவள் கணவன் அவளை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறான். அப்போது பழைய கதை விரிகிறது.
சுஜாதா யார், சூஃபிக்கும் சுஜாதாவுக்குமான உறவு என்ன, சூஃபிக்கும் சுஜாதாவுக்கு கலைசார்ந்து சில ஒற்றுமைகள் உண்டு அது என்ன கலை, சூஃபிக்கும் அவனது குருவுக்கும்மான பந்தம் எப்படிப்பட்டது இப்படியான எல்லா கேள்விகளுக்குமான பதில்களே சூஃபியும் சுஜாதாவும் திரைப்படம்.
படத்தின் பெரும்பகுதி வசனம் இல்லாமல் காட்சிகளே கதை சொல்கின்றன. தொடக்கம் முதல் இறுதிவரை இசை மயமாக இருக்கிறது. உணர்வுபூர்வமாக படத்தோடு ஒன்றி போய்விட்டேன்.
சூஃபி மரணிக்குமிடம் ஒரு பள்ளிவாசல். அது அவன் வாழ்வில் ஓர் அங்கம். அங்குதான் அவன் முதலில் இறையை தொழ தொடங்கினான், அங்குதான் அவன் குருநாதரிடம் இசை கற்றான், அங்குதான் சுஜாதாவை சந்தித்தான். அந்த இடத்தில்தான் அவன் வாழ்வின் மகிழ்ச்சியான பொழுதுகளையும் துயரமான பொழுதுகளையும் இனம் கண்டுக்கொண்டான்.
ஒரு இறை நம்பிக்கையாளனுக்கு அவன் இறைவனை தொழும்போதே மரணம் வாய்க்கப் பெற்றால் அதுவே அவனுக்கு மோட்சம், குருபக்தி மிகுந்த சீடன் குருவோடு மகிழ்ச்சியாக வாழ்ந்த இடத்திலே அவனுக்கு மரணம் சம்பவிக்கபெற்றால் குருவின் ஆசியைபெற்றதாக எண்ணக்கூடும், காதலியை முதன்முதலில் சந்தித்த இடத்திலேயே மரணத்தை சந்திக்கும் வாய்ப்பு எத்தனை காதலனுக்கு வாய்க்கும். இந்த மூன்று அம்சமும் சூஃபின் மரணத்தில் இருக்கிறது. அதனால் சூஃபியின் மரணத்தை மகத்தான மரணம் என்று கருதலாம் என்று எனக்கு தோன்றுகிறது. சூஃபிக்கு யார்மீதும் துவேசமில்லை. துவேசமிருந்தால் எதற்கு பத்து வருடங்கள் கழித்து மீண்டும் அங்கு வருகிறான்.
சூஃபி அறிமுகமாகும்போது பழுத்த இலை காற்றில் பறந்து ஆற்றின் நீரில் சங்கமித்ததும், குருவை வணங்கும்போது மரத்திலிருந்து மரணித்து விழுந்த கனியை எடுத்து அவன் விருப்பத்தோடு உண்பதும், அவன் தரையில் தலையை வைத்து தொழ தொடங்கும்போது தரையிலிருந்து தண்ணீரில் துள்ளிக்குதிக்கும் தவளை இதெல்லாம் அவனின் மரணத்தை முன்கூறத்தானோ.
மரணம் பற்றிய எண்ணங்கள் விரிந்துகொண்டே செல்கிறது. கொடும்நோயில் மாந்தர்கள் திரளாக செத்தும் விழும் காலத்தில் மரணத்தை அசைபோடாமல்தான் வாழமுடியுமா என்ன. காலையில் தோன்றிய எண்ணத்திற்கு பதில்போல் சூஃபின் மரணத்தை பார்க்கிறேன். சூஃபின் மரணம் மகத்தானதுதான் என்று எனக்கு தோன்றுகிறது.
சூஃபியும் சுஜாதாவும் படக்குழுவினருக்கு பாராடுகளும் நன்றிகளும்.
இந்த படம் அமேசான் பிரேமில் உள்ளது. எழுத்தாளர் கெளதம சித்தார்த்தன் இந்தப்படம் பற்றி விரிவான விமர்சம் எழுதியுள்ளார். வாய்ப்புள்ளவர்கள் படம் பார்த்துவிட்டு அந்த விமர்சனத்தையும் படிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

21.07.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரைப்படங்கள் 2022.

  2022 - நான் பார்த்த படங்கள்.   01.      சனவரி : Intolerable Cruelty – Joel coen. 02.      The worst person in the world – Joachim T...