10.12.2021

பதிவு - 47

 செம்புலம் - இரா.முருகவேள்.

எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது.
- இரா.முருகவேள்.
Once Upon a Time in Anatolia என்ற துருக்கியப் படத்தை பார்த்தபோது, இப்படியும் கதை சொல்ல முடியுமா என எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. கொலை செய்யப்பட்டவனின் உடலைத்தேடி செல்லும் பயணம் மிகவும் நிதானமாக செல்லும். வழக்கமான துப்பறியும் படம்போல், அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பு ஏதும் இருக்காது. ஆனாலும் நம் மனம் படத்தை விலகாது.
இரா.முருகவேளின் "செம்புலம்" நாவலைப் படிக்கும்போதும் எனக்கு மேற்குறிப்பிட்ட பட அனுபவமே ஏற்பட்டது.
இந்த நாவல் நான்கு பகுதிகளாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் பகுதி ஒரு துப்பறியும் கதையாக துவங்குகிறது.
இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் புறத்திலும் மனிதர்களின் அகத்திலும் தலைமுறைகள் கடந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது.
மூன்றாவது மிக முக்கியமானது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவாக பதிவு செய்துள்ளது. பிரச்சனைகளின் வேர்களை நீக்க முயலாமல், பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் செய்து கொடுத்தாலே போதும் என்று செயல்படும் இந்த அமைப்புகளால் உண்மையில் யாருக்குத்தான் லாபம்.
நான்காவது பகுதியில், முதல் மூன்று பகுதிகளில் தவறவிட்ட அல்லது அந்த பகுதிகளுக்கான ஆதார உண்மை இருக்கிறது. அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்ககூடியதாக இருக்கிறது.
செம்புலம் துப்பறியும் வடிவில் சொல்லப்பட்ட அரசியல் நாவலாகும். தொடர்ந்து படிக்க தூண்டும் மிக எளிமையான மொழிநடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இதில் பயன்படுத்தப் பட்டுள்ள நாட்டுபுற கதைக்கு ஏற்ப அட்டைப்படம் அருமையாக வரையப்பட்டுள்ளது.
பொன்னுலம் பதிப்பகம் இந்நாவலை(முதல் பதிப்பு 2017) சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் Dhan Vel அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.06.2021.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...