2.29.2024

பதிவு. 77

புத்தரின் தம்மபதம் அறவழி

பாலி மூலத்திலிருந்து தமிழ் செய்தவர் – நடவாலியூர் சோ.நடராஜன்.
வெளியீட்டாளர் – போதி.பெ.தாட்ஸ்மேன்.
சார்பதிவாளர் அலுவலக விசயமாக நண்பருக்கு தெரிந்த ஒரு எழுத்தரின் அலுவலகத்திற்கு சென்றேன். எங்களுக்கு தேவையான தகவல்களை பொறுமையாக விளக்கி சொன்னார். விடைபெறும்போது அவரது முகவரி அட்டையையும் கொடுத்தார், அதில் அவர் பெயர் தாட்ஸ்மேன் என்று இருந்தது அது எதோ தொழில் சார்ந்த பெயர் என நினைத்துக் கொண்டேன்.
இரண்டு மாத இடைவெளியில் மறுபடியும் அவரை சந்திக்க சென்றோம். இப்பொழுதும் முன்புபோலவே எங்கள் சந்தேகங்களுக்கு பொறுமையாக பதில் சொன்னார். அப்பொழுதுதான் அவர் அலுவலக சுவற்றில் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் இருப்பதை கவனித்தேன். இது எனக்கு சற்று வித்தியாசமாக பட்டது.
தேநீர் அருந்த சென்றபோது அவரிடம் புத்தர் மற்றும் வள்ளலார் படங்கள் குறித்து கேட்டேன். அவர் மிகவும் ஆர்வமாகி பேசதொடங்கினார். புத்தரின் போதனைகள் குறித்தும் அவருக்கும் புத்த போதனைகள் மேல் ஏற்பட்ட ஈர்ப்பு குறித்தும், புத்தருக்கும் வள்ளுவருக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்தும், வள்ளலாரின் மேன்மைகள் குறித்தும் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொன்னார். எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. இப்படி ஒரு மனிதரை இந்த இடத்தில் நான் எதிர்பார்க்கவே இல்லை.
தாட்ஸ்மேன் ஒருமுறை மலேசியா என்றபோது அங்கு விமான நிலையத்தில் “புத்தரின் தம்மபதன் அறவழி” என்ற சிறுநூலை பார்த்து வியந்து வாங்கி வந்துள்ளார். அந்த புத்தகத்தின் கருத்துகள் மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற நோக்கில் சுமார் ஆறாயிரம் பிரதிகள் பதிப்பித்து விலை இல்லாமல் மக்களுக்கு கொடுத்துள்ளார். எனது நண்பருக்கு ஏற்கனவே அந்த புத்தகத்தை கொடுத்துள்ளார் என்ற செய்தியை அப்பொழுது அறிந்தேன். அவரை விட்டு விலகி வந்த உடனே நண்பர் சொன்னார் தாட்ஸ்மேன்–னு சரியாதான் பேரு வச்சிருக்காருன்னு, Thoughts Man-ஐதான் தமிழில் தாட்ஸ்மேன் என வைத்துள்ளார் என்பது எனக்கு அப்பொழுதுதான் புரிந்தது.
புத்தரின் தம்மபதம் அறவழி புத்தகத்தை படிக்க தொடங்கியதுமே எனக்குள் தோன்றியது திருக்குறளுக்கு இந்த கருத்துகளுக்கு இருக்கும் ஒற்றுமைதான். திருக்குறளை சமணம் துறவி எழுதினார் என ஒரு கருத்து உண்டு என்பது தெரியும். ஆனால் இது புத்தரின் கோட்பாட்டோடு ஒத்து போகிறதே என வியந்தபடியே படித்து முடித்தேன். ஆதி கருத்து யாருடையதாக இருக்கும் என்பதை அறியும் ஆவல் எனக்குள் தோன்றியது. யார் காலத்தால் முந்தையவர்கள் என பார்க்க கூகுள் செய்து பார்த்தேன். அதன்படி,
மகாவீரர் – பொ.ஊ.மு. 599 – 527.
புத்தர் – பொ.ஊ.மு. 563 – 483.
வள்ளுவர் – பொ.ஊ.மு. 31 அல்லது ஐந்தாம் நூற்றாண்டுக்கு முன். சரியான ஆண்டு தெரியவில்லை.
மகாவீரர் சமணமத்தில் 24-வது அருகன். ஏற்கனவே 23 மூன்று பேர் பின்பற்றி வந்த கருத்துக்களை வளப்படுத்துகிறார். அவருக்கு பின் வந்த புத்தர் மகாவீரின் கருத்துக்களை வளப்படுத்தி வேறு ஒரு மார்க்கமாக பிரிகிறார். புத்தர் சொன்ன அறவழி கருத்துக்களை செம்மை படுத்தி வள்ளுவர் ஒரு அறநூலாக திருக்குறளை இயற்றியுள்ளார் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தேன்.
குறிப்பாக மூவரும் சொல்வது: புறதோற்றத்தை விட அகம் முதன்மையானது, கள்ளுண்ணாமை, புலால் மறுத்தல், சத்தியம் பேசுதல் என எல்லாமே ஒத்து போகிறது.
அந்தணன் என்போன் அறவோன் – வள்ளுவர்.
பிராமணத் தாய் வயிற்றில் உதித்தவன் என்பதனால் மாத்திரம் ஒருவனை நான் அந்தணன் என்று கூறுவதில்லை. எல்லாப் பிராணிகளுடைய தோற்றமும் முடிவும் தெரிந்தவன், பற்றற்றவன், நன்னெறி படர்வோன், அறிவொளி பெற்றவன், அவனே அந்தணன் என்று கூறுவேன். – புத்தர்.
தம்மபதம் இயல் இயலாக எழுதப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு இயலும் சொல்லும் கருத்துக்கள் பல அதிகாரங்களில் சொல்லப்பட்டு தெளிவாக வரிசைப் படுத்தப்பட்டு இருக்கிறது. இது பக்கத்தால் சிறு புத்தகம் ஆனால் பெரும் அறிவுச்செல்வம். அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.
தாட்ஸ்மேன் தம்மபதம் படிக்கும்போது திருக்குறளையும் பக்கத்திலேயே வைத்து படிக்க வேண்டும் என்று சொன்னதின் அர்த்தமும் புரிந்தது.
நவாலியூர் சோ.நடராஜன் மிகவும் சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். நேரடியாக தமிழில் எழுத்தப்பட்டது போலவே இருக்கிறது.


- 25.12.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

திரை.24 / Santosh

  Santosh / Sandhya Suri / 2024 / Hindi இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்டுள்ள இந்தி மொழி திரைப்படம் சந்தோஷ். இதனை இயக்கியவர் சந்தியா சுரி....