2.29.2024

திரை. 22

 திரைப்பட விழா அனுபவம் – 1

சென்னை திரைப்பட விழாவில் படம் பார்ப்பது என்பது என்னளவில் அது ஓர் உலக சுற்றுப்பயணம். பல ஆண்டுகளாக தொடர்ந்து பார்த்து வருகிறேன். சில ஆண்டுகளில் கலந்து கொள்ள முடியாமலும் போயிருக்கிறது. இந்த ஆண்டு முழுவதும் பார்க்கும் சூழல் இருந்ததினால் டிசம்பர் மாதம் வேறு எந்த படங்களும் பார்க்க கூடாது என திட்டமிட்டேன், ஆனாலு இடையில் இரண்டு படங்கள் பார்த்தேன். அவை இரண்டும் தமிழ், மலையாளம் என்பது ஆறுதலாக இருந்தது.
திரைப்பட விழா தொடங்க இரண்டு நாட்கள் முன்பாக டிஸ்கவரி புக் பேலஸில் நடந்த தோழர் வசந்த சுசீலாவின் நினைவஞ்சலி கூட்டத்திற்கு சென்றேன். அவர் என் முகனூல் நண்பர் என்றாலும் அவரைப்பற்றி அதிகம் தெரியாது. அந்த நிகழ்வில் அவருடைய நண்பர்களின் பேச்சிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.
தோழர் சுசிலா சிறந்த மனிநேயம் கொண்டவர், வழக்கறிஞர், அரசியல் தெளிவுள்ள களப்போராளி என அவரின் பிம்பம் என்னுள் உயர்ந்து கொண்டே சென்றது. ஊருக்கெல்லாம் ஓடி ஓடி உதவிய ஒருவருக்கு சரியான நேரத்தில் உதவி கிடைக்காமல் உயிர் இழந்துள்ளார் என்பது பெரும்சோகமாக இருந்தது. அன்று இரவு என்னால் சரியாக உறங்கவே முடியவில்லை. அவருக்கு ஏன் அப்படி நடந்தது என்ற கேள்வி என்னுள் ஓடிக்கொண்டே இருந்தது. மறுநாள் பகலில் நண்பர்களை தேடிபோயி வேறு விசயங்களை பேசினாலும் உள்ளுக்குள் அந்த கேள்வியும் சோகமும் இருந்துகொண்டே இருந்தது. இரண்டாவது நாள் இரவும் தூக்கம் வர நெடுநேரமாகி போனது.
மறுநாள் காலை சென்னை திரைப்பட விழாவுக்கு செல்லும்போது உடலும் மனமும் சோர்ந்து காணப்பட்டது. அன்று பகலில் நான்கு படங்கள் பார்த்தேன். முதல் இரண்டு படங்களும் பிடித்து இருந்தது. ஆனாலு மனதுக்குள் தோழர் சுசிலாவுக்கு ஏன் அப்படி நிகழ்ந்தது, அவர் இருந்தால் இன்னும் எத்தனைபேர் பயன்பெறுவார்கள் என்றெல்லாம் மனதுக்குள் ஓடிக்கொண்டே இருக்கிறது. மாலையில் இன்றும் சரியாக தூங்க முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் என்னுள் எழுந்தது. திரைப்படவிழாவின் தொடக்க விழா நடந்து கொண்டு இருக்கும்போது சத்தியம் தியேட்டர் வளாகத்துள்ளே நான் நடந்து கொண்டே இருந்தேன். விழா முடிந்தது என்பதை நண்பர் மூலம் தெரிந்துக்கொண்டுதான் திரையரங்கினுள் சென்றேன்.
திரைப்பட விழாவின் தொடக்க படமாக Perfect Days என்ற ஜப்பானிய திரைப்படம் திரையிடப்பட்டது. இந்த படத்தினை ஜெர்மன் இயக்குனர் Wim Wenders இயக்கியுள்ளார். இந்த படத்தின் நாயகன் அலாரம் அடித்து அதிகாலையில் எழுகிறான். படுக்கையை சுருட்டி வைத்தல், இரவு பாதியில் படித்த புத்தகத்தை எடுத்து வைத்தல், பல் துலக்குதல், முகசவரம் செய்தல், பால்கனியில் இருக்கும் செடிகளுக்கு தண்ணீர் தெளித்தல், குளித்தல், டோக்கியோ நகர கழிவறை சுத்தம் செய்யும் பணியாளருக்கான சீருடையை அணிதல், வேலைக்கான உபகரணம் மற்றும் கார் சாவியுடம் வீட்டை விட்டு வெளியே வருதல், வெளியே வந்ததும் உடனடியே அண்ணாந்து வானத்தை பார்த்து ரசித்தல், தானியங்கி இயந்திரத்தில் பணம் போட்டு குளிர்பானம் எடுத்தல், காரில் அமர்ந்து காரின் டேப்பில் கேசட்டை போட்டு இசையை ஒலிக்க விடுதல், குளிர் பானத்தை ஒரு மிடறு குடித்துவிட்டு காரை இயக்க தொடங்குகிறான். வசனமே இல்லாமல் காட்சி கோவையாக ஒரு மனிதரின் அன்றாம் தொடங்குவதை பார்க்க பார்க்க என்னை மறந்து படத்துக்குள் சென்று விட்டேன்.
ஜப்பான் என்றால் ஜென் தத்துவம் நினைவுக்கு வரும். எதை செய்கிறாயோ அதில் நீ முழுமையாக இரு என்பற்கு ஏற்ப இந்த திரைப்படத்தின் நாயகன் தினசரி செய்யும் வேலைகளை புதிதாக செய்வது போல் ஆவர்மாக செய்கிறான். இருப்பதை கொண்டு மகிழ்ச்சியாக வாழும் கலையை அறிந்தவனாக இருக்கிறான். நான் மேலே விவரித்தது அதிகாலை மட்டுமே, அவன் வேலைக்கு சென்று அங்கு கழிவறையை சுத்தம் செய்யும் காட்சிகளில் கூட அவன் முகத்தில் அசூசை ஏற்படுவதில்லை. நாம் வீட்டை சுத்தம் செய்வதுபோல் பொது கழிவறையை சுத்தம் செய்கிறான், வேலை முடிந்து பொது குளியலறைக்கு சென்று ஆற அமர குளிந்த்துவிட்டு வந்து, உணவகத்தில் உணவு அருந்துகிறான். மாலையில் மதுக்கடைக்கு சென்று மதுக்குடிக்கிறான். இரவு தூங்க செல்லும் புத்தகம் படிக்கிறான்.
இப்படி குழப்பம் இல்லாமல் செல்லும் வாழ்வில் ஏதோ குழப்பம் ஏற்பட போகிறது என எதிர்பார்த்து காத்திருந்தால் அப்படி அல்லாமல் வேறு வேறு உணர்வுபூர்வமான தருணங்கள் கவித்துவ காட்சிகளாக படத்தில் பல இருக்கின்றன. கழிவறை சுத்தம் செய்யும் தொழிலாளியாக இருந்தாலும் அவனுக்கு இயற்கையை ரசிக்க தெரிகிறது, அந்த அபூர்வ கணங்களை படம் பிடிக்க தெரிகிறது, அந்த படங்களை வரிசைப்படுத்தி பாதுகாக்க தெரிகிறது. இசை தெரிகிறது, இலக்கியம் தெரிகிறது, இதையெல்லாம் விட அவனால் சக மனிதனை நேசிக்கவும் முடிகிறது. இதனால் இந்த நாயகனையும் இந்த படத்தையும் எனக்கு மிகவும் பிடித்து போகிறது.
Perfect Days படத்தை பார்த்துவிட்டு வந்த இரவு நன்றாக தூங்கினேன். கனவில்கூட மென்மையான உணர்வுகளே கனவுகளாக வந்தது. இந்த திரைப்படத்தினால் உடனடியாக என் மனம் சாந்த நிலைக்கு சென்றதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். இதன் பிறகு தோழர் சுசிலாவின் வாழ்வு பற்றி நினைக்கையில் அவர் சிந்தனைகளை பின்பற்றி, அவரைப்போல சகமனிதர்களில் உதவி தேவைப்படுவோருக்கு உதவுவதே நான் அவருக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது.
சென்னை உலக திரைப்பட விழாவின் தொடக்க விழா படத்தை பார்த்ததுமே இந்த ஒரு படம் போதும் இந்த விழாவில் கலந்து கொண்டதுக்கு என எனக்குள் தோன்றியது. - 26.12.2023.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...