திமிங்கல வேட்டை – ஹெர்மன் மெல்வில் / மோகன ரூபன்.
பெருந்தொற்று காலக்கட்டத்தில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷணனின் இலக்கிய பேருரைகளை கேட்டபோதுதான் ஹெர்மன் மெல்வில்லின் மோபிக் டெக் என்ற நாவல் பற்றி தெரிந்து கொண்டேன். இந்தநாவல் குறித்த எஸ்.ராவின் உரை எனக்கு ரொம்பவும் பிடித்துபோனது. அதை கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்று அல்லது நான்கு முறை கேட்டு இருக்கிறேன். அந்த நாவலின் கதைச்சுருக்கம் தமிழில் திமிங்கல வேட்டை என்ற பெயரில் வெளியாகி இருப்பதாக எஸ்.ரா தன் உரையில் கூறியிருந்தார். அந்த புத்தகத்தை தேடிப்பிடித்து இந்த புத்தக கண்காட்சியில்தான் வாங்கினேன்.
மோபி டிக் நாவல் சுமார் 170 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது. இது ஏற்கனவே கேட்ட கதை. இந்த புத்தகம் நாவலின் கதைச்சுருக்கம் மட்டுமே. படிக்க எப்படி இருக்குமோ என்ற தயக்கத்தோடு படிக்க ஆரம்பித்தேன். நாவலின் முதல் அத்தியாமே என்னை உடனே உள்ளே இழுந்துக்கொண்டது. நேரடியாக தமிழில் எழுதப்பட்டது போன்ற மொழிப்பெயர்ப்பை மோகன ரூபன் சிறப்பாக செய்துள்ளார்.
இந்த நாவலில் கதைச்சொல்லியின் பெயர் இஸ்மாயில். பள்ளிக்கூட ஆசிரியரான இவர் திமிங்கவேட்டைக்கு போகிறார். உடன் சென்றவர்கள் அனைவரும் கடலில் மூழ்கி இறந்துவிட இவர்மட்டும் உயிர் பிழைத்து வந்து இந்த கதையை சொல்கிறார்.
திமிங்கல வேட்டையில் யாரெல்லாம் பெயர் பெற்றவர்கள், அதற்கான முன் தாயாரிப்புகள் என்ன, மாலுமிகளுக்கான சம்பளம் எப்படி நிர்ணயம் செய்யப்படுகிறது, கப்பலில் கேப்டன் மற்றும் உதவி கேப்டன்களின் வேலைகள் என்ன என்ன, அவருக்கு யாரெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள், கடலின் காலநிலைகள் எப்படி இருக்கும், திமிங்கல வேட்டை எப்படி நடக்கும், கொல்லப்பட்ட திமிங்கலத்தின் உடலில் இருந்து எப்படி எண்ணெய் காய்ச்சி எடுத்தார்கள், மோபிடிக் என்ற வெள்ளை திமிங்கலத்தின் கதை என்ன, அதற்கும் கப்பலின் கேப்டன் ஆகாப்புக்கும் இருக்கும் தொடர்பு என்ன, ஆகாப் திமிங்கலத்தை வேட்டையாடினாரா இல்லை திமிங்கலம் ஆகாப்பை வேட்டையாடியதா, கப்பல் ஏன் கடலில் மூழ்கியது என எல்லாவற்றையும் கதையாக இஸ்மாயில் நமக்கு சொல்கிறார்.
வெள்ளை திமிங்கலம் என்பது திமிங்கலத்தை மட்டும்தான் குறிக்கிறாதா..? இயற்கையை மனிதனால் வெல்ல முடியுமா.? என்ற கேள்விக்கான பதிலை யோசிக்க தூண்டுவதே இந்த நாவலின் அடிநாதமான இருக்கிறது.
இது நாவலின் கதைச்சுருக்கம் என்றாலும் படிக்க சுவராசியம் குறையவில்லை. கடலைப்பற்றி எழுதப்பட்ட நாவல்களில் இதற்கென ஒரு சிறப்பான இடம் என்றும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக