3.25.2022

பதிவு. 51

 தஞ்சை ப்ரகாஷ் சிறுகதைகள்.

சில எழுத்தாளர்களின் பெயர்களை மட்டுமே நமக்குத் தெரியும். அவர்களின் எந்த எழுத்தையும் படித்திருக்க மாட்டோம். எனக்கு அப்படியான ஒரு எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ். அண்மையில் அவருடைய சிறுகதைகள் தொகுப்பை படித்தேன். அந்த தொகுப்பில் மொத்தம் 31 சிறுகதைகள் இருக்கின்றன. தொகுப்பாசிரியர் பொன். வாசுதேவன். டிஸ்கவரி புக் பேலஸ் இந்த புத்தகத்தை வெளியிட்டுள்ளது.
இந்த கதைகளை இவ்வளவுகாலம் படிக்காமல் போனாயே, நீயெல்லாம் என்ன இலக்கிய வாசகனா என்ற கேலிக்குரல் என்னுள் கேட்கிறது.
தஞ்சை ப்ரகாஷ் சிறந்த கதைச்சொல்லி, மொழியை வசப்படுத்திய கலைஞன். பிராமண சமூகத்தை பிண்ணனியாக கொண்டகதையை படிக்கும்போது இவர் பிராமணரோ என்றும், கள்ளர் சமூக பிண்ணனியாக கொண்ட கதையை படிக்கும்போது இவர் கள்ளரோ என்றும், கிருஸ்துவ குடும்ப பிண்ணனியான கதைகளை படிக்கும்போது இவர் கிருஸ்துவரோ என்றும், முஸ்லீம் குடும்ப பிண்ணனியான கதையை படிக்கும்போது இவர் முஸ்லீமோ என்று எண்ணும்படியாக மொழியை கையாண்டுள்ளார்.
இவர் கதைகளில் மனித நேயம் மிக்கவர்களும், குரூர எண்ணம் கொண்டவர்களும், விபச்சாரிகளும், அரசு ஊழியர்களும், திருடர்களும் என சமூகத்தின் அனைத்து தட்டு மக்களும் வருகிறார்கள். சில கதைகளில் நிறைவேறாத காமம் பொங்கி வழிகிறது. கதாப்பத்திரங்களின் உரையாடல் வக்கனையாக இருக்கிறது. இந்த கதைகளை படிப்பது ஒரு பேரனுபவமாக இருக்கிறது.
திண்டி, அங்கிள், ஜானுப் பாட்டி அழுதுகொண்டிருக்கிறாள், நாகம், கொலைஞன், நியூஸன்ஸ், பள்ளத்தாக்கு, சோடியம் விளக்குகளின் கீழ், மேபல், வடிகால் வாரியம், பற்றி எரிந்த தென்னை மரம், கடைக்கட்டி மாம்பழம், வெட்கங்கெட்டவன், பொறா ஷோக்கு இவையெல்லாம் எனக்கு பிடித்த கதைகள். ஒரு தீவிர இலக்கிய வாசகன் தஞ்சை ப்ரகாஷ் கதைகளை தவற விடக்கூடாது என்று எண்ணுகிறேன். 17.10.2021.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...