குறத்தியம்மன் – மீனா கந்தசாமி.
தமிழக அரசியல்வாதிகளில் மிகச்சிறந்த சனநாயகவாதி என்று போற்றப்படும் அண்ணாவின் ஆட்சிக்காலத்தில்தான் கீழவெண்மணி படுகொலைகள் நடைப்பெற்றது. விவசாய கூலிகள் சம்பள உயர்வு கேட்டார்கள் என்பதற்காக பண்ணையார்கள் ஒன்று கூடி 44 உயிர்களை உயிரோடு எரித்துக் கொன்றார்கள். இதற்காக எந்த பண்ணையாரும் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவே இல்லை.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு (எனக்கு தெரிந்த அளவில் மட்டும்) தமிழில் இரண்டு நாவல்களும், ஆங்கிலத்தில் ஒரு நாவலும் வெளிவந்திருக்கிறது. இந்த மூன்றையும் படித்து இருக்கிறேன்.
முதலாவது இந்திரா பார்த்தசாரதி எழுதிய குருதிப் புனல். இரண்டாவது சோலை சுந்திரப்பெருமாளின் செந்நெல். மூன்றாவதாக மீனா கந்தசாமி ஆங்கிலத்தில் எழுதிய The Gypsy Goddess. இதை பிரேம் தமிழில் குறத்தியம்மன் என மொழிப்பெயர்பு செய்துள்ளார். இந்த பதிவு குறத்தியம்மன் பற்றியது.
முதலில் மொழிப்பெயர்ப்பாளர் பிரேம் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். நேரடியாக தமிழில் எழுதப்பட்ட நாவல் இது என்று சொல்லும் அளவுக்கு சிறப்பாக மொழிப்பெயர்ப்பு செய்துள்ளார். எந்த இடத்திலும் மொழிப்பெயர்ப்பு நாவலை படிக்கிறேன் என்ற உணர்வே எனக்கு தோன்றவில்லை.
இ.பாவின் குருதிப்புனல் ப்ராயிடிய பார்வையோடு எல்லா சிக்கல்களுக்கும் அவன் பாலியல் பிரச்சனையே காரணம் என்று எழுதியிருப்பார். நாவல் படிக்க சுவராசியமாக இருந்தது என்றாலும் அந்த நாவல் கள உண்மையை முழுமையாக சொல்லவில்லையே என்று வருத்தமாக இருந்தது.
சோலை சுந்திரப்பெருமாளின் நாவல் முழுக்க முழுக்க உண்மைக்கு நெருக்கமாக இருந்தாலும் படைப்பாக அது எனக்கு எனக்கு நெருக்கமாக இல்லை. அதை மறுபடியும் ஒருமுறை படித்துப் பார்க்க வேண்டும்.
மீனா கந்தசாமியின் குறத்தியம்மன் நாவல் நேரடியாக அங்கிருந்த அரசியலையும் அசலான மனிதர்களையும் நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. 44 உயிர்கள் கொல்லப்படுவதற்கு முன்பாக, களத்தில் பிரச்சனைகள் மெல்ல மெல்ல வளர்ந்து விஸ்வரூம் எடுத்தது எப்படி என்பதை விளக்கியதோடு, கீழ்வெண்மணியில் விவசாய கூலிகளான தலித்துக்கள் எப்படியெல்லாம் நெருக்கடிக்களுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். காவல்துறையும் அரசியல்வாதிகளும் அதை எப்படி எதிர்கொண்டார்கள் என்பதை நேர்மையாக சொல்கிறது இந்த நாவல்.
மீனா கந்தசாமி நன்றாக கள ஆய்வு செய்து எல்லாவற்றையும் அறிவுபூர்வமாகவும் உணர்வுபூர்வமாகவும் அறவுணர்வோடும் இந்நாவலை ஒரு முழுமையான படைப்பாக உருவாக்கி இருக்கிறார்.
இந்த நாவலின் சொல்முறை பற்றியே தனியாக எழுதவேண்டும். ஒரு பின்காலனிய எழுத்தாளர் வாசகனோடு உரையாடும் வடிவில் இந்நாவல் எழுதப்பட்டு இருக்கிறது. பின்காலனிய சிந்தனைகள், பின்நவீனத்துவ சிந்தனைகள், தொன்ம கதைகள், வரலாறுகள், மனித உளவியல் என எல்லாவற்றைப் பற்றியும் நாவல் பேசுகிறது. குரூரம் நிறைந்த வாழ்க்கை சூழலைப் பற்றி பேசும் இப்படைப்பில், நாவலை சொல்லும் எழுத்தாளரின் கூற்றுகள் எள்ளல் தன்மையோடு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக