2 comments
ரமாவும் உமாவும்
குறைவாக எழுதினாலும் தரமாக எழுதக்கூடியவர் திலீப் குமார். அவரின் கடவு சிறுகதை தொகுப்பு மிகவும் பிரபலமான ஒன்று. கடவு சிறுகதை தமிழில் எழுதப்பட்ட உலதரமான சிறுகதைகளில் ஒன்று. தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மை சமூகமான குஜராத்திகளின் வாழ்க்கையை பிண்ணனியாக கொண்டு சொல்லும் கதைகளை திலீப் குமார் எழுதினாலும், அதில் வெளிப்படுவது, எல்லா இன மத மனிதர்களும் சந்திக்கும் வாழ்க்கைப்பாடுகள்தான்.
இப்போது ரமாவும் உமாவும் சிறுகதை தொகுப்பு குறித்து சில வார்த்தைகள். இந்த தொகுப்பில் மூன்று சிறுகதைகளும் இரண்டு நாடகங்களும் இருக்கின்றன.
ரமாவும் உமாவும் மற்றும் அவர்கள் வீட்டு கதவு இரண்டும் நாடகங்கள். ஒன்று பெண்ணியம் சார்ந்தும் மற்றது உணவு அரசியல் சார்ந்தும் எழுதப்பட்ட படைப்பாகும். இரண்டும் சமகாலத்தில் பெரும் சிக்கலை சந்தித்துக்கொண்டு இருக்கும் சூழலில் அந்த கருத்துக்களை அடைப்படையாக கொண்டு மிகவும் நாகரீகமாகவும் நேர்மையாகவும் கலைப்படைப்பாகவும் இந்த நாடகங்களை திலீப் குமார் எழுதியிருக்கிறார். கருத்துக்களை அடைப்படையாக கொண்டு எழுதினாலும், பிரச்சாரமோ அல்லது அறிவுரையோ சொல்லாமல் சிறப்பான படைப்பாக மாற்றியதில் திலீப் குமாரின் மேதமை வெளிப்படுகிறது.
ஒரு குமஸ்தாவின் கதை சிறுகதையும் மத அரசியலை மிக தெளிவாக படம்பிடிக்கிறது. மதத்தின் பேரால் அப்பாவிகள் கொலைச்செய்யப்படுவதை ஒரு குமஸ்தாவின் ஒரிரு நாள் வாழ்வை விளக்கி எழுதுவதின் மூலமே, அவர்களின் வேதனையை நமக்குள் இறக்கி விடுகிறார். காவிய சோகம் நிறைந்த சிறுகதை இது. இந்த சிறுகதையைத்தான் அருண் கார்த்திக் நசீர் என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். அது வெகுமக்களை சென்றடையாமல் திரைப்படவிழா படமாகி போனதும் துயரம்தான்.
கடவுளையும் மனிதனையும் பாத்திரங்களாக கொண்டு எழுதப்பட்ட கதைகளில், நான் படித்த அளவில் புதுமைப்பித்தனின் “கடவுளும் கந்தசாமி பிள்ளையும்” சிறுகதைக்கு இணையான சிறுகதை “ஒரு எலிய வாழ்க்கை”. இதில் எலியும் கடவுளும் உரையாடுகிறார்கள். இறுதியில் யார் வென்றார்கள் என்பதுதான் முடிவாகும். வாழ்வின் நிலையாமையை பேசும் இச்சிறுகதை தமிழின் முதன்மையான சிறுகதைகளில் ஒன்றாகும்.
நா காக்க அல்லது ஆசையும் தோசையும் சிறுகதை வறுமையைப்பற்றி பேசினாலும் நம்மை சிரிக்க வைக்கிறது. திலீப் குமாரின் நகைச்சுவை மிக எளிமையாக அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது.
வாசகனை மிரள வைக்காமல் மிக எளிமையான மொழியில் தன் கதைகளை திலீப் குமார் அற்புதமாக எழுதியுள்ளார்.
இந்த தொகுப்பினை க்ரியா பதிப்பகம் சிறப்பான முறையில் பதிப்பித்துள்ளது.
இதன் முதல் பதிப்பை சந்தியா பதிப்பகம் 2011-லும் இரண்டாம் பதிப்பை க்ரியா பதிப்பகம் 2017-லும் வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக