8.16.2022

பதிவு. 55

 நீண்ட கால இடைவெளிக்கு பிறகு அண்மையில் நோர்வீஜியன் வுட் நாவலை படித்து முடித்தேன். ஜப்பான் எழுத்தாளர் ஹாருகி முரகாமி எழுதியது. 492 பக்கங்கள்.

ஒரு கல்லூரி மாணவனின் வாழ்க்கையில் சுமார் மூன்று ஆண்டுகள் கால அளவில் நடக்கும் சம்பங்களையே கருப்பொருளாக இந்நாவல் கொண்டுள்ளது.
பதின்ம வயதில் ஏற்படும் காதல்கள், பாலியல் இச்சைகள், இசை கேட்டல், நண்பனிம் மரணத்தை எதிர்கொள்ளல், தோழியும் காதலியுமானவளின் மனபிறழ்வு, எதிலும் ஒழுங்கை கடைபிடிக்கும் அறைத்தோழன், மிக இளம் வயதிலேயே அதிகாரத்தின் சுவை அறிந்து அதை நோக்கி பயணிக்கும் மனிதன், பகுதி நேர வேலைகள், இலக்கியம் படித்தல், தொடர்ந்து நிறைய கடிதங்கள் எழுதுதல், ஊர் சுற்றல் என அவனுக்கு அந்த மூன்று வருட வாழ்வில் எத்தனை எத்தனை அனுபவங்கள். நாம் எல்லோரும் வியக்கும்படியான வாழ்க்கை அவனுக்கு அமைந்து இருக்கிறது.
நண்பனின் மறைவுக்கு பின் அவன் காதலி இவன் காதலியாகிறாள் ஒருத்தி, 13 வயது இளம்பெண் 31 பெண்மணியின் இன்பவாழ்வை மிக எள்தாக கொட்டி கவிழ்கிறாள் இன்னொருத்தி, பாலியல் பற்றி பேசியபடி உடலோடு உடல் பிண்ணிக்கொள்ளலாம் ஆனால் உறவு வேண்டாமென மறுக்கும் மற்றொருத்தி, எந்த வகையிலும் அவன் வாழ்க்கை முறையோடு ஒத்து போக முடியாத ஒருத்தி அவனையே தீவிரமாக காதலிக்கும் ஒருத்தி இந்த நான்கு பெண் கதாபாத்திரங்களும் வாழ்வின் பல ரகசியங்களையும் சிக்கல்களையும் புதிர்களையும் ஆச்சரியங்களையும் நமக்கு புரிய வைக்கிறார்கள்.
உண்மையில் இந்த நாவல் நவீன கிளாசிக்குதான். மனித மனங்களின் பல வகைமாதிரிகள் இந்த நாவலில் விரவி இருக்கிறார்கள். சின்ன காதபாத்திரமும் நம் சிந்தையை கவர்கிறது.
காவியங்களின் இயல்புகளில் ஒன்று எளிமை என்பார்கள். முரகாமி இந்த நாவலை இளம் வாசகனும் புரிந்துக்கொள்ளும் எளிய மொழிநடையில் எழுதியுள்ளார். ஆனால் அவர் நம்முன்னால் எழுதிக்காட்டும் உலகம் அல்லது வாழ்க்கை அவ்வளவு எளிமையானது அல்ல.
க.சுப்ரமணியன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்த்து உள்ளார். சிறப்பான மொழிபெயர்ப்பு படிக்க இலகுவாக இருக்கிறது.
இந்நாவலை சிறப்பான முகப்பு ஓவியத்துடன் எதிர் வெளியீடு பதிப்பகம் பதிப்பித்துள்ளது. முதல் பதிப்பு ஜீன் 2014-ல் வெளியாகி இருக்கிறது.
இந்நாவல் படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் லிவி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். 09.06.2022.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

புத்தகங்கள் 2024

  இந்த ஆண்டில்(2024) நான் படித்த புத்தகங்கள்: நாவல்: 01. ஹமார்ஷியா – கண்ணன் ராமசாமி. 02. ஆலம் – ஜெயமோகன். 03. வேட்டை நாய்கள் பாகம்.1 – நரன்....