8.16.2022

பதிவு. 59

வெட்டாட்டமும் நோட்டாவும்
நீண்ட நாட்களுக்கு பிறகு விறுவிறுப்பான ஒரு நாவலைப் அண்மையில் படித்து முடித்தேன். அந்த நாவல் ஷான் கருப்புசாமியின் “வெட்டாட்டம்”. இந்த புத்தகம் யாவரும் பப்ளிஷர்ஸ் வெளியீடாக 2017 ஜீலையில் வெளியாகி இருக்கிறது.
ஒரு துப்பறியும் கதையைப்போல் அடுத்த அடுத்த திருப்பங்கள் நிறைந்த கதை இது. திரைப்பட பாணியில் காட்சிகள் அடுக்கப்பட்டிருந்ததை நினைத்து வியந்து ஒரு நண்பரிடம் இந்த நாவல் குறித்து பேசினேன். இந்த கதையை ஏற்கனவே தமிழில் படமா எடுத்து விட்டார்கள் என்று அவர் சொன்னார். எனக்கு உடனே நாவலை முடித்துவிட்டு அந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகிவிட்டது. சுமார் ஒரு வார கால அளவில் நாவலை படித்து முடித்தேன். நாவல் அது எடுத்துக்கொண்ட தளத்திற்கு ஏற்ப சிறப்பாகவே எழுதப்பட்டிருந்தது. ஷானின் மொழிநடை மிக இயல்பாக, எந்த சிடுக்குகளும் இல்லாமல் இருந்தது.
இந்த நாவலைப் படமாக எடுக்கும்போது சிலவற்றை நீக்க வேண்டும், சிலவற்றை நீளமாக எழுத வேண்டும், சிலவற்றை முன்பே கூறவேண்டும் என்று என் மனதுக்குள் குறித்துக்கொண்டேன். அது என்ன என்பதை இறுதியில் எழுதுகிறேன்.
வெட்டாட்டம் நாவல் நோட்டா என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் இயக்குனர் ஆனந்த் சங்கர். படத்தின் திரைக்கதையை இயக்குனரும் நாவலாசிரியரும் சேர்ந்து எழுதி இருக்கிறார்கள். நாவலுக்கு மிக நெருக்கமாகவே திரைப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் நாவல் தந்த சுவாரசியத்தை படம் கொடுக்க வில்லை. ஏன் என்ற கேள்விக்கு பதில் ஒற்றை வரியில் சொல்லக்கூடியது அல்ல. ஆனால் இது ஏன் இப்படி நிகழ்ந்தது என யோசித்துப் பார்க்க நிறைய விசயங்கள் இருப்பதாக தோன்றுகிறது.
இது அந்த படத்தை குறைசொல்லும் நோக்கில் எழுதப்படவில்லை. நான் வியந்து படித்த பிரதி படமாகும்போது, ஏன் அவ்வளவு சிறப்பாக இல்லை என்ற எண்ணத்தின் வெளிப்பாடகவே இதை பார்க்க வேண்டும் என விரும்புகிறேன். நடிகர்கள் தேர்வில் விநோதன், கயல்விழி மற்றும் மகேந்திரன் பாத்திரங்களுக்கு பொருத்தமாக அமைந்ததுபோல் வருண், வாங் மற்றும் அவனுக்கு போன்றவர்களுக்கு அமையவில்லை. குறிப்பாக அவன் அடையாளம் ஏதுமில்ல கூலிக்கொலைக்காரன். அவனை வலிந்து முஸ்லீமாக காட்டியிருக்க தேவையில்லை. நர்மதாவை குழந்தையாக மாற்றியிருக்கவும் வேண்டியதில்லை. விநோதன் என்ற அரசியல்வாதியை இன்னும் உண்மைக்கு நெருக்கமான அரசியல்வாதியாயின் பிரதிநிதியாக உருவாக்கி இருக்கலாம்.
இப்போது நாவலை முடித்ததும் என்னுள் தோன்றிய எண்ணங்கள் :
1. மகேந்திரன் விநோதனின் கடந்த கால காதலை தவிர்த்துவிட வேண்டும். அதற்கு பதிலாக மகேந்திரன் மாற்று அரசியல் பார்வை உள்ளவர் என்றும் அந்த பார்வை என்ன என்பது அழுத்தமாக இருக்க வேண்டும்.
2. சுவாதியின் கதாபாத்திரம் இன்னும் கொஞ்சம் கூடுதலாக எழுதப்பட வேண்டும். தூரத்தில் இருந்து பார்க்கும்போது ரொம்ப கெட்டவனாக தெரிந்த வருணின் வாழ்வை அவள் நெருக்கமாக பார்க்கும்போது, அவன் அப்படி ஆனதிற்கு அவன் மட்டுமே காரணமில்லை என்ற புரிதல் தோன்றி அதுபின் காதலாக மாறவேண்டும். அதை காட்சிகளாக மாற்ற வேண்டும்.
3. நாவலில் கதை போக்கில் மகேந்திரன், வாங், சில்வியா மற்றும் பல்வேறு பெயர்களில் செயல்படும் அவன் எல்லோரும் அவர்கள் வரும்போது அவர்களின் முன்கதை சொல்லப்பட்டிருக்கும் ஆனால் படத்தில் இவர்களை எல்லாம் முன்பே அறிமுகம் செய்துவிட வேண்டும். குறிப்பாக முதல் காட்சியில் அவனின் பிறந்தநாளுக்கு அவர்கள் வாழ்த்து சொல்வதுபோல் இருக்கலாம்.
தான் எழுதிய கதைக்கு தானே திரைக்கதை எழுதும் வாய்ப்பு எல்லா எழுத்தாளர்களுக்கும் அமைந்து விடுவதில்லை. அந்த வகையில் ஷான் பெருமைப்படலாம். ஷான் கருப்புசாமிக்கு பாரட்டுக்களும் வாழ்த்துக்களும்.

ஒரு நாவலை படமாக இயக்க முன்வந்த ஆனந்த் சங்கருக்கும் போற்றுதலு உரியவரே ஆவார். இவர் மேலும் மேலும் நாவல்களையும் சிறுகதைகளையும் படமாக உருவாக்கும் காலம் அமையட்டும். இவருக்கும் என் பாராட்டுகளும் நன்றிகளும். 16.08.2022.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...