10.08.2022

பதிவு. 60

 புனலும் மணலும் – ஆ.மாதவன்.

தாமிரபரணி ஆற்றில் மணல் எடுத்து வந்த லாரியிலிருந்து தண்ணீர் ஒழுகிக்கொண்டு இருந்தது. அது நதியின் ரத்தமாகவே எனக்குப்பட்டது. அதன்பிறகே ஆற்றிலிருந்து மணல் எடுப்பதை தடுக்க வேண்டும் என்று போராட ஆரம்பித்தேன்.
- ஒரு நேர்காணலில் தோழர் நல்லக்கண்ணு.
பல ஆண்டுகளாக படிக்க வேண்டும் என தேடிக்கொண்டிருந்த புனலும் மணலும் நாவலை இன்று படித்து முடிந்தேன். படிக்க வேண்டிய முதன்மையான தமிழ் நாவல்கள் என பலரின் பட்டியலில் இடம்பெற்ற நாவல் இது.
இந்த நாவலை படித்து முடித்ததும் தோழர் நல்லக்கண்ணு சொன்னதே என் நினைவுக்கு வந்தது. அவர் இதற்காக போராட ஆரம்பிப்பதற்கு முன்பே இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது. கேரளாவில் சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பே ஓடிக்கொண்டு இருக்கும் நதியிலிருந்து மணலை எடுத்து வந்து கரையில் குவித்து விற்பனை செய்துள்ளார்கள். அந்த தொழிலை மேற்பார்வையிடும் அங்குசாமி மூப்பனே இக்கதையின் நாயகன். அவன் மனைவி தங்கம்மை, தங்கம்மையின் முதல் திருமணத்தில் பிறந்த பங்கி, அங்குசாமியை போலவே அனாதையான தாமோதிரன் இந்த நான்கு கதாப்பாத்திரங்களை கொண்டு மனித மனதின் புதிர்களை ஆராய்கிறார் ஆ.மாதவன்.
சிறுவயதில் தூத்துக்குடியை விட்டு வெளியேறி உறவுகளின் தொடர்பு இல்லாத திருவனந்தபுரத்தில் மூட்டை தூக்கும் சுமையாளாக வாழ்வை துவங்கிய அங்குசாமி, வாலிபம் கடந்த வயதில் விதவை திருமணம் செய்துக்கொள்ளும் அவன், தன்னைப்போலவே தன்னிடம் வரும் தாமோதிரனை அரவணைத்துக் கொள்ளும் அவன், ஏன் பங்கியை மட்டும் கைவிடுகிறான். அவள் அழகாக இல்லை என்பது மட்டுதான் காரணமா. அங்குசாமியின் செயல் புதிராக இருக்கிறது.
ஆற்று மணலை அள்ளுகிறார்களே இதனால் என்ன அழிவு வருமோ என புலம்பவில்லை. போராடவில்லை. ஆனால் அதற்கு சாட்சியான படைப்பு இது. இன்று சுற்றுசூழல் சார்ந்து ஏற்பட்டு வரும் மாற்றத்திற்கு இந்த படைப்பு ஆதார ஆவணமாகிறது.
ஆ.மாதவனின் மொழி மிகவும் யாதார்த்தமானது. திருவனந்தபுரத்து வரட்டாரத்தின் பேச்சு மொழி. எல்லாவற்றிருக்கும் மெளன சாட்சியாக இருப்பதை போன்ற அமைதியான மொழி. மிகவும் நிதானமாக செல்லும் ஆற்று நீரைப்போல் இந்த நாவல் நமக்குள் மிக நிதானமாக உள் நுழைகிறது. முடிவில் அது ஏற்படுத்தும் தாக்கம் தலைக்கீழானது.
இந்த நாவலின் முதல் பதிப்பு 1974-ல் வெளியாகியுள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகம் நவீன கிளாசிக் நாவல் வரிசையில் சிறப்பாக பதிப்பதித்து 2006-ல் வெளியிட்டுள்ளது.
இந்த நாவலை படிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த நண்பர் Livin -க்கு என் மனமார்ந்த நன்றிகள். 05.09.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...