குன்றத்தூரும் சேக்கிழாரும்.
நேற்று நண்பரின் திருமண வரவேற்புக்காக குன்றத்தூர் சென்றேன். மண்டபத்தேடி சென்றுக்கொண்டு இருந்தபோது வழியில் ஒரு பெரிய குளத்தைப் பார்த்தேன். நீர் இல்லை இருந்தாலும் பார்க்க தூண்டியது. பக்கத்தில் எதாவது பழமையான கோவில் இருக்குமென நினைத்துக்கொண்டே நடந்தேன். நான் சாமி கும்பிடுவதில்லை என்றாலும் செல்லும் இடங்களில் இருக்கும் பழமையான அல்லது மக்கள் திரள் கூடக்கூடிய கோவில்களுக்கு செல்வதை பழக்கமாக கொண்டுள்ளவன்.
திருமண வரவேற்புக்கு இன்னும் நேரம் இருக்கிறது, இது என்ன கோவிலாக இருக்கும் போய் பார்க்கலாமா என யோசித்தப்படியே நடந்தேன். குளத்தினுள் ஒரு கோவில் இருக்கிறது. தூரத்தில் இருந்து பக்திப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கிறது. குளம் முடியும் இடத்தில் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கோவிலைத்தேடி குளத்தின் பக்கவாட்டிலே சென்றேன். நான் சென்று சேர்ந்தது நாகேஸ்வரன் கோவில். இது எங்கோ கேள்விப்பட்ட பெயராக இருக்கே என்று எண்ணியபடியே கோவிலை சுற்றி வந்தேன். மக்கள் கூட்டம் இல்லை. கோவில் சீரமைப்பு பணிகள் நடந்து கொண்டு இருந்தது. காலை மாலை நடைப்பயிற்சிக்கு ஏற்ற இடம் என்று நினைத்தப்படியே கோவிலை விட்டு வெளியே வந்தேன்.
கோவிலுக்கு எதிரே அலங்கார மின்விளக்குகள். விரைவில் கோவிலுக்கு குடமுழுக்கு நடைபெற இருப்பதை சொல்லும் விளம்பர தட்டிகள் கண்ணில் பட்டது. பக்கத்தில் வேறு எதும் கோவில் இருக்கிறதா என்று பார்த்தவாறு நடந்தேன். சேக்கிழார் பெயரில் ஓர் கடை. பக்தி நூலகளை படிக்கும் இடம் என்று எதேதோ கண்ணில் படுகிறது. சற்று தூரம் நடந்ததும் சேக்கிழார் மணிமண்டபம் என்று ஓர் இடம் வந்தது. உள்ளே செல்லலாமா வேண்டாமா என ஒரு கணம் நிதானித்து பின் உள் சென்றேன்.
சேக்கிழார் மண்டபம் ஓர் பெரிய வளாகத்தினுள் தாரளமான இடவசதியோடு இருந்தது. உள்ளே சென்றேன். எதோ ஓர் பக்தி பாடலை ஓதுவார்கள் ஓதிய ஒலிகள் ஒலித்துக்கொண்டு இருந்தது. சுவர்களில் சேக்கிழாரின் வாழ்க்கை குறிப்புகள். ஒவ்வொன்றாக படித்தேன். குன்றத்தூரில்தான் சேக்கிழார் பிறந்துள்ளார். சோழமன்னனிடம் மந்திரியாக வேலைப் பார்த்துள்ளார். திருநாக்கேஸ்வரம் கோவிலைப்போலவே சிவனுக்கு ஆலையம் அமைத்து வட நாகேஸ்வரம் என பெயரிட்டுள்ளார்.
63 நாயன்மார்களின் கதைகளை சொல்லும் திருத்தொண்ட புராணம் என்னும் பெரிய புராணத்தை எழுதிவரும் இவரே. அந்த அறுபத்து மூவரின் வரலாறை எழுத அவர் படித்த நூல்களின் விபரங்களை குறித்துள்ளார்கள். கடைசி குறிப்புக்கு முன்னுள்ள குறிப்பில் சாதி வித்தியாசம் இல்லாமல் எல்லாரும் சிவனின் அடியார்களாக வாழமுடியும் என்று பெரிய புராணத்தை எழுதியவர் என்று சேக்கிழாரை புகழ்ந்து சொல்லிவிட்டு, அடுத்த குறிப்பில் இந்த மண்டபத்தையும் கோவிலையும் பராமரிப்பவர்கள் செங்குந்த மரபினர் என்று உரிமை கோரலை படிக்கும்போது மென்மையாக புன்னகைத்துக் கொண்டேன்.
சேக்கிழார் மணிமண்டப வளாகத்தினுள் ஒரு நூலகம், மற்றொரு தியான மண்டபம் சுற்றிலும் நல்ல நீளமான நடைப்பாதை, நடைப்பாதைக்கு பக்கத்தில் பசுமையான செடிகல், புற்கள் என நன்றாக பராமரித்து வைத்துள்ளார்கள்.
நண்பரின் மண்டபத்தை கண்டு பிடித்து பார்த்தால் இன்னும் மணமக்கள் வரவில்லை. மறுபடியும் பக்தி பாடல் ஒலிக்கும் திசைநோக்கி நடந்தேன். சிவாஜி கணேசனின் உருவம் பொதித்த சலூன் கடை, அகலமான வீதி, வீதியின் முடிவில் கோவில், வேறு ஒரு உலகத்திற்குள் வந்துவிட்டது போன்ற பிரமை எனக்கு. நாளைமறுநாள் நடக்க இருக்கும் முடமுழுக்கு விழாவிற்கா யாகம் வளர்க்கும் யாகசாலைக்குள் நுழைந்தேன். இப்போதுதான் தயார் செய்துகொண்டு இருந்தார்கள். சென்னைக்கு பக்கத்தில் இப்படி ஓர் ஆன்மீக பூமியா என வியந்தேன். எங்கும் மக்கள் கூட்டம். ஒருவர் மட்டும் செருப்பு காலோடு உலவிக்கொண்டு இருந்தார். மறதியில் வந்தவரா இல்லை மறுதலிக்க வந்தவரா தெரியவில்லை. அந்த சிறு கோவிலில் பூசை முடியும் தருவாயில் மக்கள் தீப ஆராதனையை பார்த்துக்கொண்டு நிற்கிறார்கள். அவர்களை வேடிக்கைப் பார்த்தபடி நான் வெளியேறி மண்டபத்தை நோக்கி நடந்தேன்.
07.09.2022.
07.09.2022.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக