3.31.2018

துளி . 161

                           தரிசனம்
நேற்று இரவு
என் அறைக்கு
கடவுள் வந்திருந்தார்

சாப்பாட்டு நேரம் என்பதால் 
சாப்பிடலாமே என்றேன்

பேராவலோடு கேட்டார்
இட்லி கிடைக்குமா

நேற்றுதான் இட்லி செய்தேன் 
அதனால் இன்று 
உப்புமா செய்துள்ளேன்

கடவுள் தயக்கத்தோடு
என்னை பார்த்தார்

உப்புமா உடலுக்கு நல்லது 
சாப்பிடுங்கள் என்றேன்
உடனே உட்கார்ந்து விட்டார் 
சாப்பாட்டு தட்டு முன்

பரிமாறிக் கொண்டிருக்கும்
போது கடவுள் கேட்டார்
தொட்டுக்கொள்ள
வாழைப்பழம்
கிடைக்குமா

நாட்டு சக்கரையை
தூவியபடி சொன்னேன்
அருமையாக இருக்கும் சாப்பிடுங்கள்

வேகமாக சாப்பிட
ஆரம்பித்தார் கடவுள்
தாளமுடியா பசிபோலும்

சாப்பிட்டு முடித்து ஏப்பம் 
விட்டபடியே தயக்கத்தோடு
கடவுள் கேட்டார்
பாலில்லா டீ அல்லது காபி கிடைக்குமா

அதைவிடவும் இது நல்லது
என்றபடி வெந்நீர் டம்ளரை
அவர் முன் வைத்தேன்

மிதமான சூட்டிலிருந்த
வெந்நீரை நிதானமாக
குடித்து முடித்ததும்
சிரித்தபடியே கேட்டார்

என் கோரிக்கைகள்
எதையுமே நிறைவேற்ற
மாட்டாயா நீ

சிரித்தபடியே நானும்
கடவுளிடம் கேட்டேன்

வழிப்பாட்டுத் தலங்கள் 
அனைத்திலும் உம்மை
நோக்கி வைக்கப்பட்ட 
கோரிக்கைகளையெல்லாம் 
நிறைவேற்றி விட்டீரோ

கடவுள் நிதானமாக
என்னை மேலும்
கீழும் பார்த்தார்

உம்மோடு நிறைய
உரையாட வந்ததேன்
ஒற்றை கேள்வியால் 
எல்லாவற்றையும் 
நாசமாக்கி விட்டாய் வருகிறேன்
உணவுக்கு நன்றி 
என்றபடியே கதவை அடித்து 
சாத்திவிட்டு வெளியேறினார் கடவுள்

விக்கித்து போய்நின்றேன்
அடுத்த முறை வரும்போது 
கடவுளிடம் கேட்க வேண்டும்

நீண்ட உரையாடலுக்கா
வந்தீரா இல்லை
நீண்ட உபதேசம் செய்ய
வந்தீரா என்று....

                                                      30.03.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...