படத்தொகுப்பு: கலையும் அழகியலும் – ஜீவா பொன்னுசாமி
திரைப்படம் எவ்வாறு உருவாகிறது அல்லது ஒரு திரைப்படத்தை உருவாக்க என்னவெல்லாம் தெரிந்து இருக்க வேண்டும் என்று கேள்வியை எழுப்பினால் பலவகையான பதில்கள் கிடைக்கும். முறையாக திரைப்பட பள்ளியில் படிப்பது, திரைப்படங்களை பாடமாக பார்ப்பது, திரை ஆளுமைகளின் அனுபவங்களை கேட்பது அல்லது படிப்பது அல்லது அவர்களின் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வது என சொல்லிக்கொண்டே போகலாம்.
திரைப்பட உருவாக்கம் சார்ந்த புத்தகங்களை படிப்பதன் வாயிலாகவும் கற்றுக்கொள்ளலாம். அதற்கு ஆங்கிலத்தில் நிறைய புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் சில முக்கியமான புத்தகங்கள் தமிழில் நேரடியாகவும் மறைமுகமாக மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்து இருக்கிறது. குறிப்பாக துறை சார்ந்து திரைக்கதை. இயக்கம், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என வகைமைகளில் புத்தகங்கள் வெளியாகியுள்ளன.
அந்த வகையில் படத்தொகுப்பு குறித்து வெளியாகியுள்ள ஜீவா பொன்னுசாமியின் “படத்தொகுப்பு: கலையும் அழகியலும்” என்ற இந்த புத்தகம் மிகவும் முக்கியமானதாகும்.
ஜீவா பொன்னுசாமி இந்த புத்தகத்தில் படத்தொகுப்பின் வரலாற்றில் ஆரம்பித்து படத்தொகுப்புன் நவீன உத்திகள் வரையிலும் பயணிக்கிறார். அதேசமயம் திரைத்துறையின் அடைப்படைகளை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் விளக்கி எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் இருபது பகுதிகளாக பிரிக்கப்பட்டு, அதன் உள்ளே இன்னும் சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மிகவும் சுவராசியாமான ஒரு கதைச்சொல்லிபோல் படத்தொகுப்பை அறிமுகம் செய்து, அதன் தொழிற்நுட்ப அம்சங்களை விளக்கி, படத்தொகுப்பின் விதிகள், காட்சிகளின் படத்தொகுப்பு, காட்சி கோர்வைகளின் படத்தொகுப்பு, அதன் ஐந்து கூறுகள், காட்சி துணுக்குகளின் தொடர்ச்சி என மிக லாவகமாக விளக்கி சொல்லிக்கொண்டு செல்கிறார்.
அத்துடன் பாடல் காட்சிகளில் சண்டை காட்சிகளில் படத்தொகுப்பு எப்படி செய்ய வேண்டும், காட்சியை படத்தொகுப்பு ஒலியை எப்படி ஒலிப்படத்தொகுப்பு செய்ய வேண்டும், எந்த வகையான படத்துக்கு என்ன வகையான காட்சி துணுக்குகளை தேர்வு செய்ய வேண்டும் எனவும் விளக்குகிறார்.
இந்த புத்தகத்தில் மூன்று படங்களின் முதல் ஐந்து நிமிடங்களின் காட்சிகள் எப்படி படத்தொகுப்பு செய்யப்பட்டு இருக்கிறது, அது ஏன் அப்படி செய்யப்பட்டு இருக்கிறது என்பதை விளக்கியுள்ள விதம் அருமையாக இருக்கிறது.
திரைப்பட கல்வி கற்கும் மாணவர்களுக்கு இது பாடப்புத்தகமாக வைக்கதகுந்த புத்தகமாகும்.
இந்த புத்தகத்தினை நிழல் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்த புத்தகத்தின் முதல் பதிப்பு 2018-ல் வெளியாகியுள்ளது.