11.30.2024

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

 

இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.

 

ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை அழித்து எதனை உருவாக்குகிறோம் என்பதில்தான் மானுட மேன்மைகளும் கீழ்மைகளும் வெளிப்படுகின்றன. இதை சொல்லவே எல்லா கலைப்படைப்புகளும் முயல்கின்றன. மகாபாரத கதையில் இது வீரியமாக வெளிப்பட்டு இருக்கிறது.

 

காலமாற்றத்தினால் கருத்து மாற்றமும் ஏற்படுகிறது. ஒரு புறம் போர் வீரத்தின் அடையாளம் என்றால் மற்றொரு புறம் அது மானுடத்திற்கு எதிரானது. போர் என்றால் அழிவுதான். மகாபரத கதையிலும் அழிவுதான். அதுவும் பேரழிவு.

 

நவீன எழுத்தாளர்கள் மகாபாரத கதையை மறு உருவாக்கம் செய்து நாவல்கள் எழுதியுள்ளார்கள். தமிழ் மொழியில் சிலர் எழுதியதையும் மலையாளம், கன்னடம், குஜராத்தி மொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட மகாபரதம் சார்ந்த பல படைப்புகளை படித்து இருக்கிறேன். இதில் பெரும்பாலும் பாண்டவர்கள் போரில் வெல்ல வேண்டும் என்ற அவ நம்முள் தோன்றிவிடும். பேரழிவுக்கு பிறகு வெற்றி வாகை சூடிய அவர்களின் மனநிலை என்ன என்பது நமக்கு தெரியாது. சில படைப்புகளில் சிறு கோடிட்டு காட்டியிருப்பார்கள்.

 

மலையாள எழுத்தாளர் பி.கே.பாலகிருஷ்ணனின் “இனி நான் உறங்கட்டும்” நாவல் தொடங்கும் இடமே பாண்டவர்கள் வெற்றிவாகை சூடியபின் அறியணை ஏற இருக்கும் தருணம்தான்.  அதிலும் குறிப்பாக தருமன், திரெளபதி மற்றும் குந்தியின் நினைவுகள் ஊடாக கர்ணனின் வாழ்வையும் சாவையும், போர்களத்தின் பேரழிவையும் பற்றி பேசுகிறார்.

 

மாபெரும் வெற்றியை ஈட்டியவர்கள் மாபெரும் இன்பத்தை அனுபவிப்பதற்கு பதிலாக மாபெரும் துன்பத்தில் வீழ்கிறார்கள். ஏனெனில் போரினால் ஏற்பட்ட துன்பம் அளவிடமுடியாதது. இந்த நாவலை படித்து முடிக்கும்போது மனம் எந்த வகையிலான போரினையும் வெறுக்க ஆரம்பிக்கிறது.

 

கதாபாத்திரங்களின் நினைவுகளை காட்சிப்பூர்வமான விவரணை செய்து எழுதியுள்ளார். மிகவும் கவனமான படிக்க வேண்டிய படைப்பாக இருக்கிறது.  

 

ஆ.மாதவன் சிறப்பாக மொழிப்பெயர்த்து உள்ளார். மத்திய அரசு நிறுவனமான சாகித்திய அகாதெமி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.                                                                         



30.11.2024



 

 

 

துளி. 398

மரணம் சிலருக்கு தனிமையிலிருந்து சிலருக்கு நோய்மையிலிருந்து சிலருக்கு முதுமையிலிருந்து சிலருக்கு உடல் பிரச்சனைகளிலிருந்து சிலருக்கு மன சங்கடங்களிலிருந்து மிக சிலருக்கு இவை எல்லாவற்றிடமிருந்தும் விடுதலை. 19.11.2024.

பதிவு. 84 (புனைவு என்னும் புதிர் - உலக சிறுகதைகள் - 1)

 புனைவு என்னும் புதிர்

உலக சிறுகதைகள் - 1
விமலாதித்த மாமல்லன் / ஆர்.சிவக்குமார்.
இந்த தொகுப்பில் 15 உலக சிறுகதைகள் இருக்கிறது. பல்வேறு மொழிகளை சார்ந்த கதைகள். இதனை ஆங்கிலம் வழியாக ஆர்.சிவக்குமார் மிகவும் சிறப்பாக மொழிபெயர்த்து இருக்கிறார்.
விமலாதித்த மாமல்லன் இந்த சிறுகதைகளை எடுத்துக்கொண்டு அந்த படைப்பு எதனால் சிறந்த படைப்பாக இருக்கிறது என்பதை எல்லா வகை வாசகரும் புரிந்து கொள்ளும் விதமாக மிகவும் எளிமையாக விளக்கி கூறியுள்ளார்.
ஒரு காதாபாத்திரம் பயன்படுத்தும் உடை, அது உலவும் இடம், அது செய்யும் செயல் இவையெல்லாம் அந்த படைப்பில் தரும் பொருள் என்ன என்பதை விமலாதித்த மாமல்லன் விளக்கியுள்ள விதம் ஒரு பாடமாகவே இருக்கிறது. 11.11.2024

All reacti

துளி. 397

பழமைக்கும் புதுமைக்கும் இடையே சிக்கிக்கொண்ட சிறு பறவை நான். 17.10.2024.

சிறுகதை. 2 (நம்பிக்கை)

நம்பிக்கை.

                                                    

முருகன் காலைக்கும் மதியத்துக்குமான இடைப்பட்ட நேரத்தில் காலை உணவை சாப்பிட்டு முடித்தான். காலதாமாக சாப்பிட்டதினால் உடலும் மனமும் மந்தமாக இருந்தது. சாப்பாட்டு பாத்திரங்களை விட்டு சற்றுதள்ளி உடலை கீழே சாய்த்தான். வெளியில் வெயில் உக்கிரமாக மாறிக்கொண்டுப்பதை இங்கிருந்தே உணரமுடிந்தது. இன்னும் சற்றுநேரத்தில் அறையின் காற்றாடியிலிருந்து வெப்பக் காற்றுவீச தொடங்கிவிடும். இந்த நாளை எப்படி கடத்துவது என்று யோசித்தப்போது அவனின் அலைப்பேசி ஒலித்தது.

முருகன் படுத்தப்படியே கையை மட்டும் நீட்டி அலைப்பேசியை எடுத்து அழைப்பது யாரென பார்த்தான். சந்திரன் அழைக்கிறான். எடுக்கலாமா வேண்டாமா என ஒரு கணம் யோசித்தான். பிறகு சந்திரனின் அழைப்பை ஏற்றுக்கொண்டான்.

 

ஹலோ.

 

நல்லா இருக்கீங்களா...?

 

நல்லா இருக்கேன் சந்திரன்.

 

நீங்க எப்படி இருக்கீங்க...?

 

நல்லாயிருக்கேன்.

 

எப்படி போயிட்டு இருக்கு...?

 

ஏதோ போயிகிட்டு இருக்கு

 

முருகரே இப்படி சொன்னாஎப்படி.

எங்க சந்திரன். என்னோட எல்லா திட்டமும் தோத்துகிட்டு இருக்கு.

 

உங்களுக்குமட்டுமா. உலக முழுக்க எல்லாருக்கும் இதானே நெலம.

 

அது என்னமோ உண்மைதான். பணம் இருக்கறவனுக்கு பிரச்சனை இல்ல. நம்மளமாதிரி ஆளுங்க நெலம என்னாவுறது. சாதாரண நாட்களிலேயே சினிமாவில் வாய்ப்பு தேடிகிட்டு இருக்கவனுக்கு ஏகப்பட்ட பிரச்சனை. அப்ப ஒரு அடின்னா. இப்போ நாலு அடியாள இருக்கு.

 

அது உண்மைதான். சினிமாவுல மத்தவங்களவிட உதவி இயக்குனர்களின் நெலம இன்னும் சிக்கலானதுதான். ஆமா நம்ம யூனியன்ல மளிகை பொருட்கள் கொடுக்கிறாங்களே.

 

கொடுக்கிறது தெரியும். நான் தான் யூனியன்ல மெம்பர் இல்லையே.

 

நானும் தாங்க மெம்பர் இல்லைதான், நம்ம டக்ளஸ் தெரிமில்ல.

 

ஆமா. அவன்தான் ஊருக்கு போயிட்டானே.

 

ஊர்லதான் இருக்காப்ல.

 

அவருகிட்ட யாரோ ஒருத்தர் யூனியனில் மெம்பரா இல்லனாலும் பரவாயில்ல, வரசொல்லுங்க உதவி பொருட்கள் கொடுக்கிறோம் அப்படின்னு சொல்லியிருக்காராம். என்ன போய் வாங்கிக்க சொன்னாப்பல. எனக்கு கொஞ்சம் தயக்கமா இருக்கு நீங்க போய் வாங்கிக்கிறீங்களா.

 

இல்லங்க... மெம்பரா இல்லாமா அவங்க முன்னாடி போய் நிக்க எனக்கும் சங்கடமா இருக்கு...

 

உண்மைதான். எனக்கும் அதான் பிரச்சனை. சரி அதவிடுங்க. அப்பறம் என்ன பண்ணுறீங்க.

 

இப்பத்தான் சாப்பிட்டேன். சும்மா படுத்திருக்கேன். நீங்க என்ன பண்ணுறீங்க.?

 

சமையல் செய்யனும்.

 

நீங்க சமைச்சாச்சா என்ன சாப்பாடு...?

 

என்ன சாப்பாடு என்று இழுத்தான் முருகன்.

 

என்ன இழுக்குறீங்க

 

ஒன்னுமில்ல. நைட் அம்மா உணவகத்துல சப்பாத்தி சாப்பிட்டு காலைக்கும் சேத்துவாங்கிட்டு வந்தேன். அததான் இப்போ சாப்பிட்டேன். மதியத்துக்கு சமையல் செய்யனும்.

 

ஓ... ரெண்டு வேலையும் அம்மா உணவகத்திலேயே முடிச்சிடுறீங்களா.

 

என்னாப்பன்னறது நெலம அப்படி ஆயிடுச்சு. முன்னெல்லாம் வாரத்துல ஒருநாளு ரெண்டுநாளுதான் அங்க போவேன். இப்போ தெனம்போற மாதிரி ஆயிடுச்சு.

 

இதுல தப்பு என்ன இருக்கு. நம்மளமாதிரி ஆளுக்காத்தானே அம்மா உணவகம் திறந்திருக்காங்க.

 

முருகன் சிரித்தப்படியே நல்லா சமாதானம் சொல்லுறீங்க சந்திரன்.

 

சந்திரனும் சிரித்தான்.

 

சந்திரன் உங்ககிட்ட ஏற்கனவே சொன்ன கதையை இந்த டைம்ல எழுதிடனும்னு நெனைக்கறேன்.

 

வாவ்... நல்ல விசயங்க. அப்போ சொன்னத மொதல்ல எழுதியிடுங்க. தேவப்பட்டா நாம மறுபடியும் டிஸ்கஸ் பண்ணுவோம்.

 

சரிங்க எழுதிட்டு சொல்றேன்.

 

சரிங்க என்றபடி சந்திரன் போனை துண்டித்தான்.

 

முருகன் ஒரு கணம் அலைப்பேசியையே பார்த்தான். உதட்டில் சிறுபுன்னகையை தவழவிட்டபடி உற்சாகமாக எழுந்து உட்கார்ந்தான்.

 

***           ***         ***

 

சந்திரன் தறியுடன் நாவலை வாசித்துக் கொண்டிருக்கிறான். கதையில் சம்பள உயர்வுக்கான போராட்டம் நடக்கிறது. ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நீடிக்கிறது. தறியோட்டும் தொழிலாளர்கள் வறுமையின் பிடியில் வாடுகிறார்கள். பசினால் தொழிலாளர்கள் சோர்ந்துவிடக்கூடாதே என சங்கத்துகாரர்கள் கவலைக்கொள்கிறார்கள்.

 

சந்திரனுக்கு தண்ணீர் தாகம் எடுக்கிறது. நாவலை மூடிவைத்துவிட்டு எழுந்து சென்று தண்ணீர் குடிக்கிறான். வெளி எதிரியோடு போராடுவது எளிது. உள்ளிருக்கும் பசியோடு இறுதிவரை போராட முடியுமா என்ற சிந்தனை அவனுள் ஓடுகிறது. வயிற்றை தடவி பார்க்கிறான். காலையில் சாப்பிடாதினால் வயிறு உள்ளொடுங்கி கிடக்கிறது. இந்த ஊரடங்கு தொடங்கியது முதல் சந்திரன் காலை உணவு சாப்பிடும் பழக்கத்தை கைவிட்டுவிட்டான். படிப்பது அல்லது எழுதுவது காரணமாக இரவு தூங்க நடுசாமம் கடந்துவிடுகிறது. காலை கண் திறந்து பார்த்தால் சூரியன் சுட்டெரித்து கொண்டிருக்கும். மொபைலை எடுத்து நேரம் பார்த்தான். பதினோரு மணியாகிறது. இன்னும் கொஞ்சம் நேரம் கழித்து சாப்பாடு வாங்க போகலாமென படிக்க உட்காருகிறான். அப்போது அவனுடைய அலைப்பேசி ஒலிக்கிறது. அலைப்பேசியை எடுத்து யாரென பார்க்கிறான். முருகன்தான் அழைக்கிறான். அலைப்பேசியை ஆன் செய்து காதில் வைக்கிறான்.

 

சொல்லுங்க முருகன்.

 

ஹலோ சந்திரன் என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க.

 

புத்தகம் படிச்சிக்கிட்டு இருக்கேன்.

 

பரவாயில்ல நீங்க ஜாலியா இருக்கிங்க.

 

சந்திரன் சிரித்தப்படியே அப்படிலாம் ஒண்ணுமில்ல முருகன்.

 

சமைச்சிட்டீங்களா..

 

எங்க சமைக்கறது, கரண்டடுப்பு ஒர்க் ஆகல.

 

அய்யோ அப்பறம்.

 

அப்பறம் என்ன மோகன் ஸ்டியோவாசல தர இலவச உணவ வாங்கித் தான் சாப்பிடுறேன். நீங்க என்னா பண்ணுறீங்க.

 

இந்த ஊரடங்கு நாம செய்யக்கூடாதுன்னு நெனைக்கறதையெல்லாம் செய்யவைக்குதே.

 

பணமில்லாதவனுக்கு மொதல்ல காணமபோறது அவனோட சுயமரியாதைதான்.

 

சரியா சொன்னீங்க சந்திரன்.

 

ம்.

 

நான் கூட இன்னைக்கு டைரக்டர் யூனியன் வரைக்கும் போனேன்.

 

என்ன விசயம்.

 

உதவிப் பொருட்கள் வாங்கத்தான்.

 

அன்னைக்கு வேணாம்னு சொன்னீங்க.

 

அன்னைக்கு வேணாம்னுதான் சொன்னேன். அப்படியே இருக்க முடியலையே. என் ரூம்மெட், அதான் சச்சின் கபடி குழு டைரக்டர் மணிகண்டன் இருக்காருல.

 

ஆமாம்.

 

அவரு யூனியன் மெம்பர். அவருடையத போய் வாங்கிக்க சொல்லி கட்டாயப்படுத்தினார். சரி நம்மள தேடி வரத ஏன் வேண்டாம்னு சொல்லனு. அதான் போய் வாங்கிகிட்டு வந்தேன்.

 

எப்படி போனீங்க

 

நடந்துதான்.

 

இந்த வெயில் நேரத்திலா..?

 

ஆமாம்.

 

இப்பதான் போயிட்டு வந்தேன்.

 

என்னடாது முருகனுக்கு வந்த சோதனை.

 

சோதனைதான். சரியான வெயில். அதுல நடந்துபோறதே பெரும்பாடு. வரும் போது அரிசி மூட்டைய தூக்கிட்டு வரப்போ மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு சந்திரன். எதுக்காக சென்னைக்கு வந்தோம். ஏன் நம்ம வாழ்க்கை இப்படியே இருக்கு. நம்ம கையில் காசு இருந்தா ஊருக்கு போயிருக்கலாம். இப்போ வேலயில்ல, கைல காசு இல்ல. இது எப்ப முடியும்னு தெரில.

 

முருகன் மனச தளர விடாதீங்க. ஒம்பதாவது படிக்கும் போது லைப்ரரில உக்காந்து யோசிச்சிங்களே இன்னைக்கு நான் மத்த சாதனையாளர்களோட வாழ்க்கை கதையை படிக்கறேன். நாளைக்கு என்னுடைய சாதனைக் கதைய மத்தவங்க படிக்கனும்னு அத மறுபடியும் நெனைச்சுங்க.

 

சிரித்தப்படியே முருகன் சொல்கிறான். சந்திரன் அத நான் நெறைய பேர்கிட்ட சொல்லியிருக்கேன் ஆனா நீங்க மட்டும்தான் அத அடிக்கடி எனக்கு ஞாபகபடுத்திகிட்டே இருக்கிங்க.

 

அது வெறும் வார்த்தையில்லை முருகன்.

 

உண்மைதான் சந்திரன்.

 

கதை எழுத போறதா சொன்னீங்களே எழுதுனீங்களா?

 

யோசிச்சுகிட்டு இருக்கேன். அடிக்கிற வெயில எதையுமே யோசிக்க முடியல. பகல ரூம்ல இருக்கவே முடியல. அவ்வளவு வெக்கையா இருக்கு.

 

உங்க ரூம் ஆஸ்பெட்டாக்ஸ்ல. ரொம்ப கொடுமையாதான் இருக்கும். பகல்ல மட்டுமில்லாம ராத்திரியும் வெக்கையா இருக்குமே.

 

ஆமாங்க. ராத்தி தூங்க பன்னெண்டு மணியாயிடுது. கண்ணெல்லாம் எரியுது.

 

கடைக்கு எதும் வேலை வருதா

 

எங்கங்க.

 

எல்லாரும் வீட்ல இருக்கறதுனால யாரும் இப்போ புதுசா எதும் தைக்க வரதில்ல. பேசாம கடை வைக்காம இருந்திருக்கலாமோன்னு தோணுது. ரூம் வாடகை, கடை வாடகைன்னு ரெண்டு வாடகை கொடுக்கனும். கந்துக்கு பணம் கட்டனும். எப்படி சமாளிக்கறதுன்னே தெரில.

 

கவலபடாதீங்க. கையில் ஒரு பைசா இல்லாமா உங்க உழைப்பால ஒரு கடைக்கு மொதலாளியா ஆயிருக்கிங்க. ஒரு வருசம் தாக்கு பிடிச்சியிருக்கிங்க. அதுவே சாதனைதான்.

 

நான் இதுக்காகவா சென்னைக்கு வந்தேன். தப்பு பண்ணிட்டேன். சான்ஸ் தேடிக்கிட்டே இருந்திருக்கனும். கல்யாண ஆசையில கொஞ்சம் கொழம்பிட்டேன்.

 

கல்யாணம் ஆசப்படுறது தப்பா என்ன...?

 

தப்பு இல்லதான். ஆனா சினிமாக்காரன்னு சொன்னாலே பொண்ணு தரமாட்டேங்கறாங்களே. அதான் டைலர் கடைவச்சா அந்த தொழில காமிச்சு கல்யாணம் பண்ணியிடலாம்ன்னு நெனைச்சேன். மொதல்ல சினிமான்னா வேண்டாம்னு சொன்னாங்க, இப்ப வயசு அதிகம், படிப்பு இல்லன்னு புதுபுது காரணமா சொல்றாங்க.

 

இந்த பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்ல முருகன். சினிமாவுல வேலப்பாக்குற நெறையபேருக்கு இருக்கு. நானும் தான் ஐஞ்சு வருசமா பொண்ணு தேடிக்கிட்டு இருக்கேன். தேடித்தேடி கலச்சி போயி இனிமே படம் பண்ணியிட்டு கல்யாணம் பண்ணிக்கலாம்னு கதைய ரெடி பண்ணி சொல்லலாம்னு ரெடியானேன். ஊரடங்கு போட்டு ஊட்ல உக்கார வச்சிட்டாங்க.

 

ஆமாம். நீங்க லைக்காவுல ஒருத்தருக்கு கத சொன்னீங்களே. அவர் இப்போதொடர்புல இருக்காரா.

 

தொடர்புல  இருக்காரு. அவருக்கு கத புடிச்சிடுச்சியிருக்கு. மேலிடத்துல ஒருத்தருக்கு மாச கடைசில சொல்ல சொன்னாரு. அதுக்குள்ள இப்படி ஆயிடுச்சே.

 

அதுக்கப்பறம் அவர்கிட்ட பேசுனீங்களா.

 

பேசினேன். கொரோனா முடிஞ்சி பாத்துக்கலாம்னு சொல்லியிட்டாரு.

 

ஏங்க நமக்கு மட்டும் இப்படி நடக்குது.

 

ஏன்னா, நாம சராசரி ஆட்கள் மாதிரி வாழலையே. நமக்கு வெற்றி வந்தாலும் தோல்வி வந்தாலும் பெருசு பெருசுத்தான் வரும்.

 

சரிங்க... யூனியன் போயிட்டு வந்தத சொல்லத் தான் கூப்பிட்டேன். அங்க நம்ம சையத்த பாத்தேன்.

 

ஓ... என்ன சொல்லுறாரு சையத்...?

 

எல்லாருக்கும் உள்ள பிரச்சனைத் தான் அவருக்கும். இன்னும் ரூம்க்கு வாடகை கொடுக்கல. அவரு யூனியன்ல தற்காலிக மெம்பருன்னுட்டு உதவிபொருட்கள் தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

 

அவசரகாலத்து உதவிக்கு என்னங்க தற்காலிகம் நிரந்தரம்ன்னு சொல்லிக்கிட்டு.

 

நீங்க சொல்றது சரிதான். அப்படிலாம் யாரு பாக்கிறா கொடுக்காம இருக்க ஒரு காரணம் அவ்வளவு தான். வேறென்ன.

 

வேற என்ன சொன்னாரு.

 

அவரும் ஒரு புது தயாரிப்பாளர்கிட்ட கதை சொல்லி ஓக்கே பண்ணி வச்சியிருந்தாராம். இப்போ அந்த தயாரிப்பாளர் கொரோனா முடிஞ்சி பாத்துக்கலாம்ன்னு சொல்லியிட்டாராம்.

 

அடகொடுமையே. இது மாதிரி எத்தன பேர் வாழ்க்கை கனவு கலைஞ்சு போச்சோ.

 

நெறைய பேரோட கனவ இந்த கொரோனா கலைச்சிசுச்சு.

 

சரிங்க சந்திரன் சாப்பாடு வாங்க கிளம்புங்க டைம் ஆயிடுச்சு.. நாம நாளைக்கு பேசலாம்.

 

சரிங்க முருகன்... என்று சொல்லிவிட்டு சந்திரன் இணைப்பை துண்டித்தான். கழிவறைக்கு சென்று வந்து, சட்டையை எடுத்துபோட்டுக் கொண்டான். கைக்குட்டயை எடுத்து முகத்தில் கட்டிக்கொண்டு வெளியேவந்து அறையை பூட்டினான்.

 

***         ***           ***

 

மதிய உணவுக்கு பிறகு அறையில் உட்கார்ந்து இருக்கவே முடியவில்லை. வெப்பக் காற்றினால் உடல் எரிகிறது. முருகன் எழுந்து சட்டையை அணிந்து கொண்டு அறையை பூட்டிவிட்டு சாவியை மறைவிடத்தில் வைத்துவிட்டு மாடியிலிருந்து கீழே இறங்கினான். பக்கத்து சந்திலிருக்கும் அந்த சிறிய வேப்பமர நிழலை நோக்கி நடந்தான். மர நிழல் குளுமையாக இருந்தது.

மெல்லிய காற்று உடலை தழுவி சென்றது. உடலுக்கும் மனதுக்கும் குளுமையாக இருந்தது. கிராமத்தில் என்றால் ஒரு கயிற்று கட்டிலை கொண்டு வந்துபோட்டு அதில் படுத்துக்கொள்ளலாம். வெயில் நேரத்தில் வேப்பமர நிழலில் படுத்துறங்கினால் உடம்புக்கு நல்லது என்று பாட்டி சொல்லும். இந்த வெயிலில் பாட்டி எப்படி இருக்கிறதோ, இந்த ஊரடங்கில் பாட்டி இறந்து போனால் ஊருக்கு செல்வது எப்படி என்ற எண்ணம் தோன்றியதும். அவனுக்கே அவன் மேல் கோவம் வந்தது.

நல்லாயிருக்கும் போது ஏன் சாவைப் பற்றி நினைக்க வேண்டும். எண்ணத்தை திசைமாற்ற அலைப்பேசியை எடுத்து அழைத்தவர்கள் பேசியவர்கள் பட்டியலை பார்த்தான். பட்டியலில் சந்திரன் பெயர் வந்ததும், கடைசியாக இரண்டு முறை சந்திரன் அழைத்த போதும் தாம் பேசவில்லை என்பது அவன் நினைவுக்கு வந்தது. உடனே சந்திரனுக்கு அழைத்தான். சோதிக்காமல் அவனும் உடனே எடுத்துவிட்டான்.

 

சொல்லுங்க முருகன்.

 

சாரி சந்திரன், நீங்க கூப்பிட்டப்ப வேலையா இருந்தேன். அதான் எடுக்க முடியல.

 

அதனால் என்னங்க. வேலயிருக்கிறப்போ அதான முக்கியம்.

 

என்னங்க குரல் ரொம்ப டல்லா இருக்கு. சாப்டீங்களா இல்லையா..?

 

சாப்டேன். கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஊருக்கு பேசினேன். ஊர்ல உடன் பங்காளி அண்ணன் ஒருத்தர் இறந்துட்டாரு. ஊர்ல இருந்தா இன்னை முழுக்க அந்த வீட்டு வாசல்ல தான் இருக்கனும். அதுக்கு போக முடியலையேன்னு நெனைச்சிகிட்டு இருந்தேன்.

 

ஓ...

 

போனவாரம் சொந்தத்துல ஒருத்தர் திடீரென உடம்பு சரியில்லாமா இறந்து போனார். அதுக்கும் போக முடியல. என்ன வாழ்க்கை இது.

 

கொடுமைதான்.

 

இப்பதான் ஊர்ல யாரும் திடீரென செத்திட்டா என்ன பண்ணறதுன்னு நெனைச்சு பாத்தேன். சாவ மறக்கத்தான் உங்களுக்கு போன் பண்ணேன். நீங்களும் சாவபத்திதான் யோசிச்சுகிட்டு இருக்கிங்க. என்ன ஒற்றும. நான் வேணும்ன்னா அப்பறமா கூப்பிடட்டா.

 

இல்ல... பரவாயில்ல பேசுங்க முருகன்.

 

நம்ம நண்பர்கள் வேற யார்கிட்டேயும் பேசுனிங்களா.?

 

ம். பேசுனேன்.

 

நம்ம சையத் ரூம காலிபண்ணிட்டு ஊருக்கு போயிட்டாரு.

 

ஏன்.?

 

மூனு மாசமா வேல இல்ல. இனி வேல ஆரம்பிக்க எப்படியும் ஆறுமாசம் ஆகும். அதுவரையில் ரூமுக்கு வாடகை கொடுக்கறது கஷ்டம். ரூம்க்கு கொடுத்த அட்வான்ஸ் கழிஞ்சு போயிடுச்சி அதனால சாமன்கள கொண்டு போயி அவங்க அண்ணன் வீட்ல போட்டுட்டு ஊருக்கு போயிட்டாரு. வேல ஆரம்பிச்சா பிறகு வந்து புது ரூம் பாத்தகலாம்னு சொன்னாரு.

 

நல்ல ஐடியாத்தான். ரூம் அட்வான்ஸ் முடிஞ்சதும் வீட்ட பூட்டிடுவேன்னு வீட்டு ஓனர் சொன்னதா நம்ம செந்தில்கூட சொன்னாரு. நெறைய பேருக்கு இந்த பிரச்சன. எனக்கும் அட்வான்ஸ் கழிஞ்சிடுச்சு வீட்டு ஓனர் என்ன சொல்லப் போறார்னு தெரியல.

 

வசமா சிக்கிட்டோம். சமாளிச்சுதான் ஆகனும். பாக்கலாம் காலம் மாறாமலா போயிடும்.

 

காலம் மாறும். மாறாம எங்கபோவுது. மாறப்ப நம்ம நெலம எப்படி இருக்கபோவுதோ. அதான் கவல வேறென்ன.

 

சரி விடுங்க. அதபத்தி பேசுனா அது போய்கிட்டே இருக்கும்.

 

என்னவேல திடீர்னு பிஸியாயிட்டீங்க.

 

ம்... சந்திரன்... நம்ம மார்த்தாண்டம் இருக்காருல

 

யார சொல்லுறீங்க?

 

வாடக வீடு படத்துல ஹீரோவா நடிச்சாரே!

 

ஆமாம். ஆமாம். தெரியுது சொல்லுங்க.

 

அவரு இப்போ ஒரு படம் எடுக்கிறாரு.

 

இந்த டைம்லையா.

 

ஆமாம். என் கடைக்கு பக்கத்துல எடுத்தாரு. பாத்து பேசினேன். என்ன ஒரு சின்ன கேரக்டர்ல நடிக்கவச்சாரு.

 

ஓ... எப்படி எடுக்குறாரு...

 

ரொம்ப சிம்பிளா... மொபைல் போன்ல.. ஆனா ரொம்ப தெளிவா இருக்காரு.. மொதல்ல நடிக்க தான் போனேன். நா சின்ன சின்ன ஐடியா கொடுத்தேன். அது அவருக்கு புடிச்சு போயிடுச்சு, உடனே என்னகூட இருந்து உதவி பண்ணுங்கன்னு சொல்லியிட்டாரு. ஒரு வாரமா அவர் கூடத்தான். அதான் உங்க போனகூட எடுக்க முடியல.

 

நல்லது. இந்த மாதிரி சின்ன படங்கள்ல வேல பாக்குறப்பத் தான் நாம நெறையா கத்துக்க முடியும்.

 

அவரே ஹீரோவ நடிக்கறதால நான் தான் எல்லாத்தையும் பாத்துக்கறேன். அவருக்கு என் வேல புடிச்சு போயிடுச்சு. முருகன் உங்களுக்கு எல்லாமே தெரியுது ஏன் இன்னும் டைக்ராகல அப்படி கேக்குறாரு.

 

சூப்பருங்க..

 

சீக்கிரமா கதைய ரெடி பண்ணி டைரக்டரா ஆகுங்க அப்டினு என்ன நல்லா என்கரேஜ் பண்றாரு.

 

நல்ல விசயம் தானே. சீக்கிரம் கதைய ரெடி பண்ணுங்க.

 

ஆமாம். சந்திரன். புதுசா ஒரு ஐடியா பிடிச்சிருக்கேன். டைட்டில் கூட ரெடி. ஒரு படத்தோட ஹீரோ அவரே என்ன பாத்து அப்படி சொன்னது எனக்கு ரொம்ப உற்சாகமாக இருக்கு.

 

ம். நீங்க ஏற்கனவே ரெடி பண்ண கதை என்னாச்சு.

 

அது அப்பறம். இப்போ சின்ன பட்ஜெட்டில ஒரு கத ரெடி பண்ண போறேன்.

 

முருகன் நா ஒண்ணு சொன்னா தப்பா நெனைச்சுக்க மாட்டீங்களே.

 

சொல்லுங்க சந்திரன்.

 

சச்சின் கபடிகுழு சூட்டிங் போயிட்டு வந்தப்பவும் இப்படித்தான் ரொம்ப ஆர்வமா சொன்னீங்க. ஆர்வமா கதை எழுத ஆரம்பிச்சிங்க அப்பறம் பாதியில விட்டுடீங்க.

 

அப்ப கடைவச்சி கல்யாணம் பண்ணிடலாம்னு ஆர்வமா இருந்தேன். அதுதான் நடக்காம போச்சே. இப்ப நமக்கு வேற ஆப்சன் இல்ல. இப்பவும் என்ன சினிமாத்தான் காப்பத்துது. சச்சின் கபடிகுழு படத்துல வேல செஞ்சப்ப எனக்கு பெருசா சம்பளம் இல்லை. ஆனா அந்த டைரக்டரோட உதவியாளத்தான் இப்போ சாப்பாட்டு பிரச்சனை இல்லாம இருக்கு.

மார்தாண்டன் என்ன என்கரேஜ் பண்றதுக்கு காரணமும் சினிமாத்தான். நல்ல கதை ரெடி பண்ணினா அவரே கூட நடிக்கலாம். இந்த வாய்ப்ப மிஸ் பண்ணக்கூடாதுன்னு நெனைக்கிறேன்.

 

நல்ல விசயங்க. உங்க கிட்ட புடிச்சதே இதுதான். நா அடிக்கடி சொல்லுறது தான். ஒன்பதாவது படிக்கும் போது லைப்ரரில உக்காந்து யோசிச்ச அந்த முருகனோட மனநிலைய மறந்துடாதீங்க. எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

 

கண்டிப்பா, இந்தமொற கதைய எழுதி முடிக்கறேன். கொரோனா முடிஞ்சதும் படம் எடுக்கறேன்.

 

மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் முருகன்.

 

நன்றி சந்திரன். இப்போ நீங்க ரெஸ்ட் எடுங்க நாம நாளைக்கு பேசுவோம்.

 

சரிங்க.

 

முருகன் இணைப்பை துண்டித்தான். அலைப்பேசியை சட்டைப் பைக்குள் வைத்தான். பேசும் போது தெரியாத வெப்பத்தை இப்போது உணர்ந்தான். கைக்குட்டையை எடுத்து முகத்தையும், கழுத்து பகுதியை துடைத்தான். சமதளத்தில் பரவும் நீரைப்போல் அவன் மனதுக்குள் ஓர் தெளிவு படர்வதை, அவனால் உணர முடிந்தது.

 

நன்றி : நடுகல் இணைய இதழ், செப்டம்பர் 2024.நம்பிக்கை

 

 


 

 

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...