4.30.2020

பதிவு . 37

தறியுடன்... – இரா.பாரதிநாதன்.
உழைக்கும் மக்களுக்காக களத்தில் அமைதிவழியில் போராடினாலே, போராளிகள் அரச வன்முறைக்கு ஆளாகநேரிடும். இப்படியான சூழலில் மக்களுக்காக போராளிகள் ஆயுதங்களை தேர்ந்து எடுத்துவிட்டால், அரசால் அவர்கள் ஒடுக்கப்படுவதும், ஒழிக்கப்படுவதும் சர்வநிச்சயமாகும்.
இந்திய ஒன்றியத்தின் காவல் துறையால் அதிக ஒடுக்குதலுக்கும் இழப்புகளுக்கும் உள்ளானவர்கள் நக்சல்பாரி இயக்கத்தினர். அவர்கள் எப்படி மக்களை அரசியல் மயப்படுத்தினர், அதற்காக அரசு அவர்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தியதுஎன்பதைப்பற்றி சில தன்வரலாறுகள், பல நீதிமன்ற குறிப்புகள், உண்மையாகவும் உMண்மைக்கு புறம்பாகவும் நிறைய பத்திரிக்கை செய்திகள் உள்ளன. இதுப்பற்றிய இலக்கிய படைப்புகள் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்தால் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை இல்லாமல் செய்யும் படைப்பே இரா.பாரதிநாதனின் தறியுடன் நாவல் என்றால் அதுமிகையாகாது.
சேலம் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் ( 1980 களில் ) வாழும் விசைத்தறி தொழிலாளர்களின் வாழ்க்கை பாடுகளையும், அவர்களுக்காக சங்கம் அமைத்து போராடிய போராளிகளின் பாடுகளையும் இந்த நாவல் மிகசிறப்பாக பதிவுசெய்துள்ளது. மேலும் போராட்டம் நடத்தியவர்களை தறி முதலாளிகளும் அரசாங்கமும் எப்படி ஒடுக்கியது என்பதையும் சொல்கிறது.
அரசியல் நாவல் என்றாலும் அரசியல் பிரச்சாரம் மேலோங்காமல் இருக்கிறது. தொழிலாளர்கள். போராளிகள், முதலாளிகள், காவல்துறையினர், சிறைத்துறையினர் என்று எல்லோரும் அவரவர் வர்க்கமாகவே இருப்பதை இருப்பதாகவே நேர்மையாக பதிவு செய்கிறது.
போராளிகளுக்கும் மக்களுக்குமான உறவு மிக இயல்பாகவே இருக்கிறது. இந்த நாவலில் வரும் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் ரத்தமும் சதையுமாக நம்முள் பதிவாகின்றனர். அதனால் அவர்கள் மகிழ்ச்சியடையும்போது நாமும் மகிழ்ச்சியடைகிறோம், அவர்கள் துன்பப்படும்போது நாமும் துன்பப்படுகிறோம்.
அதிக பக்கங்கள் கொண்ட நாவல் என்றாலும் நாம் மிகவிரைவில் வாசித்துவிடுவோம். கதை அந்த அளவுக்கு விறுவிறுப்பாக செல்கிறது. நாவலாசிரியர் குறைந்த சொற்களில் மன உணர்வுகளையும், சமூக இயல்புகளையும். அதிலிருக்கும் அரசியல் உண்மைகளையும் முரண்களையும் மிகச்சிறப்பாக சொல்லி செல்கிறார்.
இந்நாவலை பொன்னுலம் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இந்த நாவலின் முதல் பதிப்பு 2014 சனவரியில் வெளியாகியுள்ளது.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் வேலூ சாரை நன்றியோடு நினைத்துக்கொள்கிறேன்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        24.04.2020.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு . 85 ( இனி நான் உறங்கட்டும் )

  இனி நான் உறங்கட்டும் – பி.கே.பாலகிருஷ்ணன் / ஆ.மாதவன்.   ஒன்றினை அழித்து பிறிதொன்றினை உருவாக்குவதே மானிட வளர்ச்சி அல்லது நாகரிகம். எதனை...