உலக அரசியல் சினிமா (பதினாறு இயக்குனர்கள்) – யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடல். தொகுப்பு : தினேஷ்.
முன்னுரை :
உலக சினிமாக்கள் குறித்து தமிழில் பல புத்தகங்கள் வெளிவந்து இருக்கிறது. அவற்றில் சிலவற்றை படித்திருக்கிறேன். குறிப்பாக இயக்குனர் செழியன் ஆனந்த விகடன் இதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான “உலக சினிமா” வரிசை புத்தகங்கள், ஓவியர் ஜீவாவின் “திரைச்சீலை” மற்றும் எஸ்.ராவின் “அயல் சினிமா” போன்றவை உலக சினிமா அறிமுகத்தை தந்தவை என்றால் விஸ்வாமித்திரனின் “குருதி படிந்த மானுடம்” மற்றும் இ.பா.சிந்தனின் “அரசியல் பேசும் அயல் சினிமா” போன்றவை உலக படங்களில் எப்படியெல்லாம் அரசியல் பேசியிருக்கிறார்கள் என்று தெரிந்துக்கொள்ள உதவிய புத்தகங்கள் எல்லாம் என் நினைவுக்கு வருகிறது.
இப்போது படிக்க தொடங்கி இருக்கும் புத்தகம் யமுனா ராஜேந்திரனின் “உலக அரசியல் சினிமா (பதினாறு இயக்குனர்கள்) இந்த புத்தகத்தில் 16 படங்கள் குறித்து பேசியிருக்கிறார். அந்த 16 படங்களையும் ஒவ்வொன்றையும் பார்த்துவிட்டுதான் அந்த உரையாடல்களை படிக்க வேண்டும் முடிவு செய்து இருக்கிறேன். வாரம் ஒரு படத்தைப் பார்த்து கட்டுரையையும் படித்து விட்டு வந்து இங்கு ஒரு பதிவு எழுதுவதாக திட்டம். இந்த புத்தகம் குறித்து மட்டும் சுமார் 18 பதிவுகள் வரும்.
இந்த புத்தகத்தில் யமுனா ராஜேந்திரனுடன் இந்த பதினாறு படங்கள் குறித்து அம்சவள்ளி உரையாடிவற்றை தினேஷ் தொகுத்துள்ளார். இதில் இரண்டு முன்னுரைகள் இருக்கிறது.
முதலாவதாக நிலம், குருதி, ஒளி என்ற தலைப்பில் அம்சவள்ளியும் தினேஷ்-ம் சேர்ந்து எழுதியுள்ள முன்னுரை இருக்கிறது. இன்று சினிமா உருவாக்கம் கற்றுக்கொள்ள பெரும் முதலீடு தேவை என்ற சூழல் உருவாகிவிட்டது. சினிமா உருவாக்கம் என்பது தொழிற்நுட்பம் மட்டுமல்லவே, அதன் ஆன்மாவான கதை திரைக்கதை எதனை அடிப்படையாக கொண்டு இருந்தால் சமூகத்துக்கு பயனளிக்கும். அதை இந்த பதினாறு படங்களை பார்த்து இந்த உரையாடலை படிப்பதின் மூலம் எப்படி அறிந்துக் கொள்ளமுடியும் என்று விளக்குவதுடன் இந்த புத்தகத்தின் நோக்கத்தையும் தெளிவாக உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.
இரண்டாவதாக யமுனா ராஜேந்திரனின் மூன்றாவது உலக சினிமா என்ற கட்டுரை முன்னுரையாக இருக்கிறது. அதென்ன மூன்றாவது உலக சினிமா, அப்படியானால் எது முதல் உலக சினிமா, எது இரண்டாவது உலக சினிமா என்ற கேள்விகள் எழுதுவது இயல்பாகும். இந்த கேள்விகளுக்கான பதிலை வரலாற்றுப்பூர்வமான ஆதாரங்களுடன் விளக்கமாக அதே சமையம் மிக எளிமையாகவும் அழகாவும் வரையறை செய்துள்ளார். இந்த வரையறையின் அடிப்படையில்தான் இந்த புத்தகத்தில் உள்ள திரைப்படங்களை தேர்வு செய்துள்ளதாக பதிவு செய்துள்ளார். இந்த இரண்டு முன்னுரைகளுமே புத்தகத்தை படிக்க ஆவலை தூண்டுகிறது.
01. lumumba - Raul Peeck.
காங்கோ நாட்டைச் சேர்ந்த லூம்பா என்ற புரட்சியாளரின் வாழ்வை சொல்லும் படமே லூம்பா. இந்த படத்தை ராவுல் பெக் இயக்கியுள்ளார். படம் 2000 ஆண்டில் வெளியாகியுள்ளது.
படத்தின் தொடக்கமே இராணுவ வண்டியில் மூன்று உடல்களை புதைக்க எடுத்து செல்கிறார்கள். புதைத்த உடல்களை மூன்று நாட்களுக்கு பிறகு மறுபடியும் தோண்டி எடுத்து துண்டு துண்டாக வெட்டி அமில கரைசலில் கரைக்கிறார்கள். அந்த மூன்று பேர் யார், அவர்களை ஏன் இப்படி செய்தார்கள், இப்படி செய்ய சொன்னவர்கள் யார் என்ற கேள்விகளுக்கான விடையே லூம்பா திரைப்படமாகும்.
லூம்பாவின் அரசியல் வாழ்வு சுமார் இரண்டு ஆண்டுகள் மட்டுமே. அதில் பெரும்பகுதி சிறைவாசம், மிக குறைந்த பகுதி (65 நாட்கள்) பிரதமர் பதவி. லூம்பா கொலை செய்யப்படும் போது அவருக்கு வயது 35 மட்டுமே.
சுமார் இருநூறு ஆண்டுகள் பெல்ஜியத்தின் காலனியாக இருந்த காங்கோவை இரண்டே ஆண்டுகளில் சுந்தந்திரம் பெற்ற நாடாக மாற்ற முயன்ற லூம்பா காங்கோ மக்களை திரட்டி போராடி பதவிக்கு வருகிறார். அவர் பிரதமர் பதவி ஏற்கும்போது ஆற்றும் உரை அவர் யார் என்பது உலகு காட்டுகிறது. லூம்பா எப்படி மாபெரும் தலைவன் என மக்கள் உணரும் முன்னமே அவருடைய எதிரிகளான அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பெல்ஜியம் நாடுகள் உணர்ந்து விடுகின்றன. அதனால்தான் அவரை உடனே கொல்ல திட்டம் தீட்டுகிறார்கள். திட்டத்தை நிறைவேற்றவும் செய்கிறார்கள்.
லூம்பாவின் வாழ்வை சொல்லும் இப்படம் மிகச்சிறப்பாக காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. குடியரசு தலைவர், பிரதமர், ராணுவ மந்திரி மூவருக்கும் வேறுவேறு நோக்கங்கள். யாரையும் பகைத்துக்கொள்ள விரும்பாத தலைவர், பதவிக்காக எதையும் செய்ய நினைக்கும் ராணுவ மந்திரி, இவர்களுக்கிடையே நாட்டின் சுந்தந்திரம் முக்கியமானது என்று கருதிய லூம்பா வீழ்த்தப்படுகிறார்.
வளர்ந்த நாடுகள், நாகரிகமான சமூகம் என சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவும் பிரிட்டனும் எப்படியெல்லாம் மூன்றாம் உலகநாடுகளை சுரண்டுகிறது, எதிர்ப்பாளர்களை எவ்வளவு குருரூரமாக கொன்று போடுகிறது என்பதற்கு சாட்சியாக காங்கோவும் லூம்பாவும் இருக்கிறார்கள்.
ராவுல் பெக் 1990-ம் ஆண்டியில் லூம்பா பற்றி ஆவணம் படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இவர் இந்த படத்திற்காக நிறைய ஆய்வுகள் செய்து இப்படத்தை எடுத்துள்ளார். அதனால்தான் படம் உண்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் நம் மனதை தொடுகிறது.
காங்கோவின் அன்றைய அரசியல் சூழ்நிலை, லூம்பாவின் வாழ்வு, லூம்பாவிற்கு பின்னான காங்கோ நிலை என அனைத்தையும் புரிந்துக்கொள்ள யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்தியுள்ள உரையாடல் பேருதவியாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
02. Sur / The South –
Fernando Solonas.
அர்ஜெண்டினாவில் 1970-களின் இறுதியிலும் 1980-களில் தொடக்கத்திலும் சர்வாதிகாரம் ஆட்சி செய்கிறது. அப்பொழுது நிறைய அரசியல் போராளிகளை சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 1983-ல் சர்வாதிகாரம் வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பல அரசியல் போராளிகள் விடுதலை அடைகிறார்கள்.
சுமார் ஐந்து ஆண்டுகள் சிறைவாசம் முடிந்து வெளியே வரும் மனிதன்தான் இக்கதையின் நாயகன் ப்ளோரேல். அவன் நேராக வீட்டுக்கு செல்லாமல் இரவில் அந்த பகுதியை சுற்றி வருகிறான். அவன் ஏன் உடனே வீட்டிற்கு செல்லவில்லை. இரவு சுற்றி வரும்போது அங்கு என்ன நடக்கிறது என்பதைப் பற்றித்தான் இப்படம் பேசுகிறது.
அரசியல் செயல்பாட்டின் காரணமாக சிறைக்கு சென்ற ப்ளோரேலின் மனைவிக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருக்கிறது. மனைவி தனக்கு துரோகம் இழைத்துவிட்டாள் என்று கருதும் காரணத்தினாலே அவளை சந்திக்க விரும்பாமல் அவன் இரவெல்லாம் வெளியில் அலைகிறான்.
இரவில் வெளியில் அலையும் ப்ளோரேலோடு அவனுடைய நண்பர்களுடன் உரையாடிக்கொண்டு இருக்கிறான். ஆனால் அந்த நண்பர்கள் இறந்து போனவர்கள். அது எப்படி சாத்தியம் என்றால் அந்த மாயத்தன்மைதான் இந்த படத்தின் சிறப்பாகும்.
அந்த மாயத்தன்மை இந்த படத்தில் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது என்று புரிந்துக்கொள்ள யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்தியுள்ள உரையாடல் மிகவும் உதவியாக இருக்கிறது.
இயக்குனர் பெர்னாண்டோ சொலான்ஸ்-ன் திரைப்பட உருவாக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அரசு போராடும் மக்களை சிறைப்பிடித்து சித்தரவைதைக்கு உள்ளாக்கும் காட்சிகளை தூர காட்சிகளாகவே படம் பிடித்துள்ளார். அரசால் துன்பத்தை அனுபவிக்கும் மனிதனின் துயரை கடத்த அதுவே போதுமானதானதாக இருக்கிறது. இறந்தவர்களின் வருகையை காட்சிப்படுத்தும்போது குறைந்த ஒளியில் பரவியிருக்கும் புகை நடுவே நடமாடும் மனிதர்கள், அவர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் இசை, அந்த உலகத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வை தருகிறது.
அரச வன்முறையையும் அதனால் சிக்கலாகும் ஆண் பெண் உறவுகளைப் பற்றியும் இப்படம் பேசுகிறது. இப்படத்தில் பயன்படுத்துள்ள இசை கோவை மனதை மயக்குகிறது.
03. A Twelve-Year Night
(2018) – Alvaro Brechner.
சென்னை திரைப்பட விழாவில் இந்த படத்தை ஏற்கனவே பார்த்து இருக்கிறேன். அதனால் இந்த படத்துக்கான உரையாடலை முதலில் படித்துவிட்டு பிறகு படத்தை மறுபடியும் இன்று பார்த்தேன்.
சிறைக்கொடுமைகள் சார்ந்து தோழர் தியாகுவின் சுவருக்குள் சித்திரங்கள், சி.ஏ.பாலனின் தூக்குமர நிழலில், ஹென்ரி ஷாரியாரின் பட்டாம்பூச்சி போன்ற புத்தகங்களை படித்திருக்கிறேன்.
சிறையை கொடுமைகளை மையப்படுத்திய, குறிப்பாக இரண்டாம் உலகப்போர் பிண்ணனியில் நாசிகளின் கொடுமைகளை சொல்லும் பல திரைப்படங்களை பார்த்திருக்கிறேன்.
உலகில் எந்த நாடானாலும் அரசியல் போராளிகளை சிறைக்குள் வைத்து சித்தரவதைகள் செய்வது காலம்காலமாக நடந்து வருகிறது. ஆனாலும் மனிதன் போராடாமல் இருப்பதில்லை. எத்தனை கொடுமைகள் இழைத்த போதிலும் தன் உரிமை வாழ்வுக்காக தொடர்ந்து போராடியே வருகிறான். தொடர்ந்தும் போராடுவான். அப்படியான மூன்று போராளிகளின் சிறை வாழ்வை சொல்லும் உருகுவே நாட்டு படமே இந்த பன்னிரெண்டு வருட இரவு (A Twelve-Year Night). கவித்துவமான தலைப்பு. ஆனால் உள்ளுக்குள் சிறைக் கொடுமைகள் காட்சிகளாக இருக்கிறது.
எத்தனை வகையான கொடுமைகளை பார்த்தாலும் கேட்டாலும் எதாவது ஒரு புது கொடுமைகளை பாசிச அரசுகள் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறது. சின்ன சின்ன அறைகள், அதீத சத்தங்கள், வெப்பத்தை உமிழும் விளக்கடியில் படுக்க வைப்பது, ஈரத்துணியை முகமூடியாக மாட்டுவது, சூரிய ஒளியையே காணவிடாமல் செய்வது… நினைக்கும்போதே வலியை உணர செய்யும் கொடுமைகள். இதில் மூன்று போராளிகள். ஒருவர் கால்பந்தாட்ட வீரர், இன்னொருவர் கவிஞர், மற்றொருவர் அரசியல் ஆர்வலர். இவர்கள் என்ன அரசியல் செயல்பாட்டுக்காக உள்ளே வந்தார்கள். இவர்கள் பிற்காலத்தில் என்ன செய்தார்கள் என்பதைத்தான் இப்படம் சொல்கிறது.
இருளையும் ஒளியையும் பயன்படுத்தி இருக்கும் விதம் நுட்பமாக இருக்கிறது. பிண்ணனி இசை மனதை என்னவோ செய்கிறது.
யமுனா ராஜேந்திரனோடான அம்சவள்ளியின் உரையாலில் இந்தப்படம் எப்படி உலகம் முழுமைக்கும் பொருந்துவதாக இருக்கிறது என்பதை மிக சிறப்பாக விளக்கியுள்ளார்கள்.
04. Dancer In The Dark –
Lars Von Trier.
அமெரிக்கா ஒரு சொர்க்கம் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. ஆனால் அங்கும் அவதிப்படும் மக்கள் வாழ்ந்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை பல படைப்புகள் வழி கேள்வி பட்டிருப்போம். அதற்கு பல அரசியல் காரணங்களும் பொருளாதார காரணங்களும் இருக்கின்றன. ஒரு அகதியின் வாழ்வை முன்வைத்து அமெரிக்காவின் சட்டத்தையும் அந்த மக்களின் மனநிலையும் நம்முன் வெளிச்சம் போட்டு காட்டும் படமே லார்ஸ் வான் ட்ரையரின் “டான்சர் இன் தி டார்க்”.
சென்னை திரைப்பட விழாவில் லார்ஸ் வானின் ட்ரையரின் ஏண்டிகிரிஸ்ட் (Anti Christ 2009) படத்தைப் பார்த்துவிட்டு இப்படி எல்லாம் கூட படம் எடுக்க முடியுமா என்று மிரண்டுபோய் நின்ற நாட்கள் என் நினைவுக்கு வருகிறது. இவர் தான் எடுத்துக்கொண்ட விசயத்தின் தீவிரத்தை மிக துல்லியமாக பதிவு செய்யக்கூடியவர் என்பதற்கு இந்த படமும் சாட்சியாக இருக்கிறது.
செக்கோஸ்லோவேகியா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு அகதியாக வரும் செல்மாதான் கதைநாயகி. அவளுக்கு ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் இருவருக்கும் மரபு ரீதியாக அவர்களை தாக்கும் கண் பார்வை குறைபாடு நோய் இருக்கிறது. தன் பார்வையை காப்பற்ற முடியாவிட்டாலும் தன் மகனின் கண் பார்வையை மீட்டுவிட வேண்டும் என்று தொழிற்சாலையில் தீவிரமாக உழைத்து காசு சேர்க்கிறாள். அவள் மகனின் பார்வை குறைப்பாடு சரிசெய்யப்பட்டதா.. செல்மாவின் வாழ்வு என்னவானது என்பதே இப்படமாகும்.
செல்மாவுக்கு இசையின் மீது குறிப்பாக சத்தங்கள் மீது ஈடுபாடு இருக்கிறது. அவள் நாட்டிய நாடகத்தில் நடிக்க விரும்புகிறாள். அவளுடன் வேலை பார்க்கும் தோழி அவளுக்கு மிகவும் உதவியாக இருக்க, அவள் தங்கி இருக்கும் வீட்டின் உரிமையாளரும் அமெரிக்க காவல்துறையில் வேலை பார்ப்பவருமான அந்த வீட்டின் தலைவன் இவளுக்கு பெரும் உபத்திரமாக இருக்கிறான். அவனில் செயல்படுவது முழுக்க முழுக்க அமெரிக்க மனம். அவர்கள் அகதிகளை எப்படி பார்க்கிறார்கள், கம்யூனிஸ்டுகளை எப்படி வெறுக்கிறார்கள் என்பதற்கான குறியீடு அவன்.
படம் உருவாக்கம், படத்தில் இசை, பாடல், நடனம் எல்லாமே அந்த கதைக்கு மேலும் மேலும் வலு சேர்க்க கூடியதாக இருக்கிறது. அவையெல்லாம் நம்மை படத்தோடு உணர்வுபூர்வமாக இணைத்துக் கொள்ள உதவியாக இருக்கிறது.
யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடுவதன் வழி டாக்மீ இயக்கம் பற்றி புரிதல் உருவாகிறது. எப்படி சினிமா எடுக்க வேண்டும் என்று லார்ஸ் வானின் ட்ரையரின் அறிக்கை மிகவும் சிறப்பு வாய்ந்தாகும். நடிகர்களுக்கு ஒப்பனை தேவையில்லை, ஸ்டியோவின் செட்டுகளில் படம் பிடிக்க கூடாது, ஸ்டேட்டிக் கேமிரா நுட்பத்தை பயன்படுத்தக்கூடாது, கேமிராவை தாங்கியில் வைத்து பயன்படுத்த வேண்டாம் என்று பலவிதிகளை கூறுகிறார். இவையெல்லாம்தான் சினிமாவை குறைந்த முதலீட்டில் தயாரிக்க உதவுபவைகள். குறிப்பாக சுதந்திரமாக சினிமா எடுக்க விடும்புகிறவர்களுக்கு தேவையான ஆலோசனைகள் இவை எனலாம்.
05. Ghware Bairey Aaj –
Aparna Sen.
பத்திரிக்கையாளர் ஞாநி நடத்திய “தீம்தரிகட” இதழில் “மிஸ்டர் அண்ட் மிஸஸ் அய்யர்” திரைப்பட விமர்சனம் படித்துவிட்டு, சத்யம் திரையரங்கில் அந்த படத்தை பார்த்து வியந்து இருக்கிறேன். படம் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தது. இந்து முஸ்லீம் பிரச்சனையை மிகவும் நேர்த்தியாக பேசிய படம் அது. அப்போது அறிமுகமான பெயர் அபர்ணா சென். அவருடைய மற்ற படங்களையும் பார்க்க வேண்டும் என்ற திட்டம் இன்னும் திட்டமாகவே இருக்கிறது.
காய்ரே பாய்ரே ஆஜ் திரைப்படமும் மத அரசியலையே பேசுகிறது. இடதுசாரிகளுக்கும் இந்துத்துவவாதிகளுக்கும் எது முதன்மையான பிரச்சனையாக இருக்கிறது, திருமணம் ஆன பெண்ணிற்கும் மற்றொரு ஆணுக்கும் இடையேயான உறவு, கல்லூரியில் ஒன்றாக படித்து சுமார் இருபது வருடங்களுக்கு பிறகு சந்திக்கும் இரு நண்பர்களின் அரசியல் முரண் சார்ந்த உரையாடல், நிலக்கரி சுரங்க விபத்தில் பெற்றோரை இழந்து கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லும் சிறுமியின் கதை, தலித் சமூகத்தில் பிறந்து பார்ப்பன சமூக சூழலில் வளரும் பெண்ணின் கதை, பதின்பருவத்தில் நண்பர்களாக இருந்து வளர்ந்ததும் மதம் காரணமாக பிரிந்தவர்களின் கதை, பிரிவு இயல்பானது அல்ல மத அரசியல் நஞ்சால் பிரிக்கப்பட்டுள்ளோம் என்ற புரிதலுக்கு வந்தவனின் கதை என பல அடுக்குகளை கொண்ட படம் இதுவாகும்.
சமகால அரசியலில் நாம் யாரை எதிர்க்க வேண்டும் யாருடன் நட்பாக இருக்க வேண்டும் என்ற உரையாடலை தெளிவாக பேசுகிறது. மிகத்தீவிரமான அரசியலை பேசினாலும் மனிதர்களின் உணர்வுகளை அவர்களின் உணர்ச்சிபூர்வமான தருணங்களை மிக அழகாகவும் ஆழமாகவும் காட்சிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் அபர்ணா சென். பாடலும் இசையும் உணர்வுபூர்வமாக நம் மனதை தொடுகிறது. பாடல் வரிகள் தாகூரின் கவிதை வரிகள் என்பதினால் கவித்துவமாகவும் பொருள்பொதிந்ததாகவும் இருக்கிறது.
இவ்வளவு தெளிவான அரசியல் பேசிய படம் தணிக்கை சான்றிதழ் பெற்றது எப்படி, காய்ரே பாய்ரே என்றால் என்ன, இது எப்பொழுது எழுதப்பட்ட கதை, இதற்குமுன் இதை யார் படம் எடுத்தார், அதிலிருந்து இந்தப் படம் எங்கு வேறுபடுகிறது, இந்த படத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன, இந்திய சினிமாவில் அபர்ணா சென்னின் இடம் என்ன, இந்த படத்தில் சமகால நாயகர்கள் யார் யார் வருகிறார்கள், அவர்களுடைய அரசியல் நிலைப்படுகள் என்ன என்ன..? இந்த எல்லா கேள்விகளுக்கும் யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்தும் உரையாடல் பதில் அளிக்கிறது.
06. La Chionise – Jean
Luc Godard.
ழான் லுக் கோதார்த் இந்தப்பெயரை பல வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் அவருடைய எந்த படத்தையும் பார்த்தது இல்லை. அவர் மரணமடைந்த பிறகு தமிழ் ஸ்டியோ இயக்கம் ஏற்பாடு செய்த திரையிடலில் ஒரே நாளில் அவருடைய நான்கு திரைப்படங்கள் பார்த்தேன். அவருடைய எந்த படத்தையும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் புரிந்துக்கொள்ள முயல்கிறேன்.
அந்த திரையிடலில் பார்த்த படங்களில் ஒன்றுதான் இந்த லா சைனீஸ் படம். இந்த படம் புரட்சியில் வன்முறையின் இடம் என்ன என்பதைப் பற்றி விவாதிப்பதாக மட்டுமே புரிந்துக்கொண்டேன். படம் பார்த்த பிறகு யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நடத்திய உரையாடலை படித்தேன். இந்த ஒரு படத்துக்குள் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா என்ற வியந்துபோனேன். மறுபடியும் லா சைனீஸ் படத்தைப் பார்த்தேன். படம் இப்போது ஓரளவு விளங்குகிறது.
தாஸ்தாவஸ்கியின் கதையை அடைப்படையாக கொண்டு, இருபதாம் நூற்றாண்டிலில் நடைப்பெற்ற ரஷிய புரட்சி, சீன புரட்சி, வியட்னாம் பிரச்சனை, உலகநாடுகள் மீது அமெரிக்கா செலுத்தும் ஆதிக்கம் என பல விசயங்களையும் விவாதிக்கிறது இப்படம். புரட்சியில் வன்முறையின் பாத்திரம் என்ன என்ற கேள்வியை பற்றிய விவாதம் இப்படத்தின் மையமாக இருக்கிறது. அரச வன்முறைக்கு எதிராக சில நபர்கள் வன்முறையை கையில் எடுப்பதற்கும், மக்கள் கூட்டம் அரசுக்கு எதிராக வன்முறையை கையில் எடுப்பதற்கும் உள்ள வேறுபாடு என்ன.. அதில் எது சரியானது.. சமூக மாற்றம் வன்முறை இல்லாமல் சாத்தியம்தானா..? பல கேள்விகளை எழுப்பி நம்மை சிந்திக்க தூண்டுகிறது.
இத்திரைப்படத்தின் கதை பெரும்பாலும் ஒரு வீட்டிற்குள்ளேயே நடக்கிறது. ஐந்து பிரதான கதாபாத்திரங்களும் மிகக்குறைவான சில உதரி காதப்பாத்திரங்களும் கதைக்குள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இடையேயான உரையாடல்தான் இப்படம் என்பதினால் வசனங்களை புரிந்துக்கொள்ள மொழியறிவு அவசியாமாகிறது. அதனால் இந்த படத்தை இன்னும் சிலமுறை பார்த்தால் மட்டுமே முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும் என நினைக்கிறேன்.
கோதார்த்தின் படங்கள் இதுவரை நான் பார்த்து வந்த திரைப்பட பாணியில் இருந்து விலகி வேறொன்றாக இருக்கிறது. அதனால் அந்த திரைப்படத்தை புரிந்துக்கொள்ள அதிக உழைப்பு தேவைப்படுகிறது என நினைக்கிறேன்.
07. The Two Popes –
Fernando Meirelles.
இயேசு கிருஸ்துவை எனக்கு பிடிக்கும். அதற்கு காரணம் மதமில்லை. இயேசு தான் உண்மை என்று நம்பியவற்றை மக்களிடம் பரப்பினார். அரசு அவரை கைது செய்து சிறையில் அடைக்கிறது. தான் சொன்னது தவறு என்று மன்னிப்பு கேட்டால் விடுதலை, மறுத்தால் மரணதண்டனை என்ற நிலை வரும்போதும் மன்னிப்பு கேட்காமல் மரணத்தை தேர்ந்தெடுத்த இயேசுவை எனக்கு பிடிக்கும். ஏனெனில் ஒரு உண்மையான அரசியல் செயல்பாட்டாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற என் ஆவலே இதற்கு காரணமாக இருக்கலாம்.
இப்படியான இயேசுவின் பெயரை சொல்லித்தான் மதவாதிகள் அதிகாரமும் பொருளாதரமும் நிறைந்த, பலம் பொருந்திய மத நிறுவனங்களை உருவாக்கினார்கள். அந்த நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இருக்கும் இரண்டு பாதிரியார்களின் வாழ்வு பற்றிய கதையே இந்த படமாகும்.
வாட்டிக்கன் நகர தலைமை பொறுப்பில் இருக்கும் போப் இறந்துவிட அவருக்கு அடுத்த போப்பை எப்படி தேர்ந்து எடுக்கிறார்கள். அந்த தேர்வில் வெற்றிப் பெற்றவர் எப்படி பதவி ஏற்கிறார். அவரின் அன்றாட வேலைகள் என்ன என்ன என்று போப்பின் வாழ்வையும், அவர் வாழும் இடத்தின் பிரமாண்டத்தையும் மிக அழகாக காட்டியுள்ளார்கள்.
ஜெர்மனியில் பிறந்து இப்போது வாட்டிக்கனின் தலைமை போப்பாக இருப்பவரை பார்த்து தன் பதிவியை துறக்க அர்ஜெண்டினாவில் இருந்து ஒரு பாதிரியார் வருகிறார். இருவருக்கும் உரையாடல்கள் தொடங்குகிறன.
அர்ஜெண்டினாவில் இராணுவ ஆட்சியில் மக்கள் கொல்லப்பட்டபோதும் காணாமல் ஆக்கப்பட்டபோதும் நம் நிறுவனம் ஆட்சியாளர்கள் பக்கமே நின்றது. இது நடந்து பல பத்து ஆண்டுகள் ஆனாலும் மக்களின் மரணத்திற்கு துணை நின்ற குற்றவுணர்ச்சி என்னுள் இருக்கிறது. அதனால் இந்த பொறுப்பில் இருந்து விலக விரும்புகிறேன் என்று அர்ஜெண்டினா பாதிரியார் சொல்கிறார்.
நான் ஜெர்மனியில் இருக்கும்போது 17 சிறுவர்களை பாதிரியார்கள் பாலியல் வன்கொடுமை செய்த விவாகாரம் தெரிந்தும் நிறுவனத்தின் பக்கமே நின்றது எனக்கும் குற்றவுணர்ச்சியாக இருக்கிறது என வாட்டிகன் தலைமை போப் சொல்கிறார்.
இந்த இரண்டு பாதிரியார்களின் குற்றவுணர்ச்சியை முன்வைத்து கிருஸ்துவ மத நிறுவனங்களின் அரசியலையும், அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தாலும் அவர்களும் மனிதர்களே, அவர்களின் தனிமையையும் இந்த படம் தெளிவாக பேசுகிறது.
அர்ஜெண்டின அரசியல் வரலாற்றையும், வாட்டிக்கன் தலைமை பொறுப்புக்கு மூன்றான் உலக நாடுகளை சேர்ந்தவர்கள் பதவிக்கு வந்தபோது நேர்ந்த மாற்றங்களையும், தென் அமெரிக்க நாடுகளை சேர்ந்த மார்சியவாதிகள் இன்று கடவுள் கோட்பாட்டை எப்படி பார்கிறார்கள் என்பதையும், சில காட்சிகளின் நுண் அரசியலை புரிந்துக் கொள்ளவும் யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்திய உரையாடல் மிகவும் உதவியாக இருக்கிறது.
சிட்டி ஆஃப் காட் படத்தை எடுத்த இயக்குனர்தான் இந்த படத்தையும் எடுத்துள்ளார். அந்த படம் வன்முறை சார்ந்த வாழ்வை விறுவிறுப்பாக சொல்லியது என்றால், இந்த படம் குற்றவுணர்ச்சிக்கு ஆளான இரண்டு வயோதிகர்களின் வாழ்வை மிக நிதானமாக சொல்கிறது. ஆனால் இரண்டும் படத்திலும் இயக்குனர் தான் பேசும் அரசியலுக்கு நேர்மையாக இருந்துள்ளார்.
08. Pan’s Labyrinth –
Guilellarmo Del Tord.
தேவதை கதைகள் மற்றும் பேய்கதைகள் எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால் இதுவரை பார்த்த பேய்கதைகள் பெரும்பாலும் நம்மை மிரள வைப்பதிலேயே குறியாக இருக்கும். அது சில தருணங்களில் நிகழவும் கூடும். இந்த கதைகளை வைத்து தீவிரமான அரசியல் பேசமுடியும் என்பதை நிரூபிக்கும் படமே பானஸ் லேபிரின்த். இந்த படத்தை மெஸிக்கோ இயக்குனர் குல்லெர்மோ டெல் டோரோ இயக்கியுள்ளார்.
படத்தில் இரண்டு கதை அடுக்குகள் இருக்கிறது. ஒன்று பாசிசத்தை எதிர்த்து போராடியபடி காட்டில் இருக்கும் போராளிகள். அவர்களை அழிக்க முகாம் அமைத்துள்ள இராணுவத்தினர். காட்டிற்கு முயல் பிடிக்க சென்ற அப்பாவிகளை போராளிகள் என்று கருதி சுட்டுக்கொல்லும் இராணுவ கேப்டன். அந்த குரூரமான கேபடனின் கூடாரத்திற்குள் வேலையாளாகவும் மருத்துவராகவும் இரண்டு போராளிகள் ஊடுருவி இருக்கிறார்கள். இப்போது வெல்லப் போவது யார்..?
மற்றொன்று அந்த இராணுவ கேப்டனின் (மனைவியின் முதல் தாரத்து குழந்தை) மகளுக்கு அதீத பலம்கொண்ட தேவதைகளின் மாயஜால உலகோடு இருக்கும் தொடர்பு. அந்த மாயஜால உலகில் இளவரசி அவள்தான் என்று அவளை தேவதைகள் வழிநடத்துகிறது. உண்மையில் அந்த உலகின் இளவரசியாக மாறினாளா இல்லையா..? இந்த இரண்டு கதைகளுமே நம்மை ஈர்த்துக்கொள்கிறது.
இந்த கதைகளுக்குள் இருக்கும் அரசியல் என்ன..? எதனால் இந்த கதையில் மாயாஜால உலகம் வருகிறது..? அது பேசும் அரசியல் என்ன..? இந்த இயக்குனரின் மற்ற படங்களில் இருக்கும் பொதுதன்மை என்ன…? தென் அமெரிக்க படங்கள் பெரும்பாலும் ஏன் ஸ்பானிஷ் மொழியிலேயே எடுக்கப்படுகிறது..? இந்த கேள்விகளுக்கான பதில், யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நடத்தும் உரையாடலில் இருக்கிறது.
09. Reds –
நான் படிக்க விரும்பும் புத்தகங்களின் பட்டியலில் எப்பொழுதும் பல புத்தகங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று ஜான் ரீடின் “உலகைக் குலுக்கிய பத்துநாட்கள்”. ரஷ்யாவில் புரட்சி நடக்கும் போது அங்கு இருந்த ஒரு அமெரிக்க செய்தியாளரின் அனுபவ குறிப்பு அது என்ற அளவில் மட்டுமே அந்த புத்தகம் பற்றி எனக்குத் தெரியும்.
நேற்று வாரன் பெட்டியின் ரெட்ஸ் படம் பார்த்தேன். இதற்குமுன் அந்த படம் குறித்த எந்த செய்தியும் நான் கேள்விப்பட்டு இருக்கவில்லை. படம் ஆரம்பித்த கொஞ்சநேரத்தில் எனக்கு தோன்றியது அமெரிக்காவில் கம்யூனிசம் கட்ட முயன்றவரின் கதையாக இருக்குமோ என்று, சற்று நேரம் கழித்து அமெரிக்க தொழிலாளர்கள் மத்தியில் சங்கம் அமைக்க முயன்ற இரு இத்தாலியை தொழிலாளிகளுக்கு அமெரிக்காவில் மரணதண்டனை கொடுத்து கொன்றார்களே அதுப்பற்றிய கதையோ என்று தோன்றியது, பாதிப்படம் வரும்போதுதான் முழுமையாக தெரிந்தது உலகை உலுக்கிய பத்துநாட்கள் எழுதியவரின் கதை இது என்று. தூர தேசத்தில் எதிர்பாராமல் தன் நண்பனை சந்தித்த மகிழ்ச்சியாக இருந்தது.
ஜான் ரீடின் காதல், செய்தியாளாராக பணி அனுபவம், ரஷ்யாவில் புரட்சி நடக்கும்போது அங்கு சென்றது, அந்த அனுபவம் பற்றி புத்தகம் எழுதுதல், பிறகு அமெரிக்க வந்தபின் அவர் கொண்ட நெருக்கடிகள், அமெரிக்காவில் கட்சி அமைக்க ரஷ்யாவின் அனுமதியை பெற மறுபடியும் ரஷ்யாவுக்கு பயணம், ரஷ்யாவில் கம்யூச கட்சி அங்கத்தினருடன் உரையாடல், மறுபடியும் அமெரிக்கா திரும்ப சட்டத்துக்கு புறம்பான வழி பயணம், பின்லாந்தில் சிறை, ஜான் ரீடை மீட்க லெனின் 50 பேராசிரியர்களை விடுதலை செய்தல், அரபு நாடுகளுக்கு பயணம், எதிரியின் தாக்குதலில் மீண்டு வருதல், உடல்நல கேட்டால் மரணம் அடைதல் என பல அனுபவங்கள் கொண்ட வாழ்க்கை அவருடையது.
ரெட்ஸ் சிறப்பான வாழ்க்கை வரலாறு படம். அதே வகையில் கம்யூனிசம் சார்ந்த சிறப்புகளையும் விமர்சனங்களையும் உள்ளடக்கிய படம். 1917-ல் நடந்த கதையை சுமார் 63 ஆண்டுகளுக்கு 1980 படம் எடுக்கிறார்கள். அவர்கள் காட்டும் அமெரிக்காவும் ரஷ்யவும் பழமையோடு இருக்கிறது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகர்கள், காட்சி படுத்திய விதம் எல்லாம் வியக்க வைக்கிறது. இயக்குனராகவும் நடிகராகவும் வாரன் பெட்டி மிரட்டி இருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
இந்த படம் கதைகளனாக கொண்ட காலத்திலும் அதற்கு பிறக்கான காலத்திலும் சமகாலத்திலும் அமெரிக்காவில் கம்யூனிசம் சார்ந்த பார்வை என்னவாக இருக்கிறது, ரெட்ஸ் படத்தில் அமெரிக்க சார்ந்த காட்சிகள் பெரும்பாலும் வீட்டுக்குள்ளும் நண்பர்கள் சந்திக்கும் உட்புற காட்சிகளாக இருக்க, ரஷ்யா சார்ந்த காட்சிகள் பெரும்பாலும் வெளிப்புற காட்சிகளாகவும் மக்கள் கூட்டம் நிறைந்த விரிந்த காட்சிகளாகவும் இருக்க என்ன காரணம், அதன் அரசியல் பார்வை என்ன, படம் வெளிந்த காலத்திலும் சோவியத் உடைவுக்கு பிறகான காலத்தில் படம் சொல்லும் கருத்துக்களை எவ்வாறு எதிர்கொள்வது, தன் சொந்த அனுபவங்கள் என்ன, படம் சார்ந்த தன் மதிப்பீடு என்ன என்பதை மிக எளிகையாகவும் விரிவாகவும் யமுனா ராஜேந்திரன் அம்சவள்ளி உரையாலில் வெளிப்படுத்தி உள்ளார். இந்த உரையாடல் இப்படத்தை இன்னும் நுட்பமாக புரிந்துக்கொள்ள உதவியாக இருக்கிறது.
10. Missisipi Burning –
Alan Parker.
ஐக்கிய அமெரிக்காவின் மாகாணங்களில் ஒன்றான மிஸ்ஸிஸிப்பியில் 1964-ல் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
கதையின் தொடக்கத்தில் ஒரு காரில் இரண்டு வெள்ளையின ஆண்களும் ஒரு கறுப்பின ஆணும் பயணம் செய்கிறார்கள். அவர்களை ஒரு கும்பல் தாக்கி கொன்று, அவர்களது உடல்களை காணாமல் ஆக்கிவிடுகிறது. அவர்களை கண்டுபிடிக்க இரண்டு வெள்ளையின எஃப்.பி.ஐ ஆபீஸர்கள் வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட உடல்களை இவர்கள் கண்டு பிடித்தார்களா இல்லையா என்பது படத்தின் மீதி கதையாகும்.
வெள்ளையின அதிகாரிகளிடம் இனவெறி மற்றும் நிறவெறி எந்த அளவுக்கு இருக்கிறது என்பதை இந்தப்படம் வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது. கறுப்பின மக்கள் அச்சத்துடனே வாழ்கிறார்கள். எஃப்.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ளும் தருணங்களில் எல்லாம் அவர்கள் உண்மையை சொன்னால் எங்களுக்கு ஆபத்து என்றே சொல்கிறார்கள் அல்லது பயத்துடன் அப்படி நடந்துக் கொள்கிறார்கள்.
படமாக்கப்பட்ட விதம் மற்றும் இசை அற்புதமாக இருக்கிறது. நடிகர்கள் தேர்வும் அவர்களின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது.
இந்த படம் குறித்து யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நடத்திய உரையாடலை வாசிக்கும்போது இந்த படத்தில் இரண்டு முக்கியமான அம்சங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது தெரியவருகிறது. ஒன்று படத்தின் தொடக்கத்தில் காரில் வரும் மூவரில் இருவர் கருப்பினத்தை சேர்ந்தவர்கள். மற்றொன்று அந்த மாகாண கருப்பின மக்கள் தங்களைப் பாதித்த பிரச்சனைகளுக்குக்காக தொடர்ந்து போராடி இருக்கிறார்கள். இந்த படத்தில் காண்பிப்பதுபோல் அவர்கள் பயந்துக்கொண்டு இருக்கவில்லை. உண்மை இப்படி இருக்க இயக்குனர் ஏன் இதெயெல்லாம் மாற்றி எடுத்தார், அதற்கு கருப்பின மக்களின் எதிர்வினைகள் என்ன, எதனால் இந்த படம் முக்கியமானதாக இருக்கிறது, ஒளிப்பதிவின் சிறுப்பு என்ன, இசையின் முக்கியத்துவம், நடிகர்களின் நடிப்புத்திறன், அவர்கள் கதையுடன் கொண்ட ஈடுபாடு என்ன என பல விசயங்களை விளங்கிக்கொள்ள இந்த உரையால் பேருதவியாக இருக்கிறது.
11. La Haine – Mathieu
Kassovitz.
ஒரு பார்வையாளனாக இதுவரை பார்த்த பத்து படங்களில் இருந்து இந்தப் படம் சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கலவரம் அதில் போலீஸின் தாக்குதலுக்கு உள்ளான ஒருவன் மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் இருக்கிறான். இந்த பிண்ணனியில் மூன்று இளைஞர்களின் வாழ்வை பிந்தொடர்ந்து செல்கிறது. இதுவே இப்படத்தின் கதையாகும்.
அந்த மூன்று இளைஞர்கள் யாரின் பிரதிநிதியாக இருக்கிறார்கள். இந்த படம் பேசும் அரசியல் என்பது வெறும் போலீஸ் போராளி பிரச்சனை மட்டுமல்ல என்பது மட்டும் புரிகிறது. சரளமாக கெட்டவார்த்தை பேசுகிறார்கள், போதைப் பொருட்கள் பயன்படுத்துகிறார்கள், துப்பாக்கியோடு அலைகிறார்கள் இவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என யோசித்தவாறு, ஆங்கில மொழி புலமை நன்றாக இல்லாததினால் புரிந்தும் புரியாமல் படத்தைப் பார்த்து முடித்தேன்.
யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்திய உரையாடலை படித்தப்பிந்தான் என்னால் லா ஹெய்ன் படத்தை முழுமையாக புரிந்துக்கொள்ள முடிந்தது. அந்த மூன்று இளைஞர்களும் பிராசில் வாழும் அகதிகள். யூத, ஆப்பரிக்க மற்றும் இஸ்லாமிய இனத்தின் பிரதிநியாக அவர்கள் இருக்கிறார்கள். மதவெறுப்பும் இனவெறுப்பும் எப்படியெல்லாம் காவல்துறைக்குள் ஊடுருவி இருக்கிறது. அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன, கலவரத்தில் அடிப்பட்டு ஆபத்தான நிலையில் இருப்பவனுக்கும் இவர்களுக்குமான உறவு என்ன, இவர்களின் இருப்பிடம் ஏன் நகரத்துக்கு வெளியே தனித்தீவாக இருக்கிறது. அகதிகளை பிரான்ஸ் அரசு எவ்வாறு கையாளுகிறது என்பதை எல்லாம் இந்த உரையாடல் மூலம் உணர முடிகிறது. அவர்களுக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
12. Daughters of the Dust
– Julie Dash.
ஆப்ரிக்காவிலிருந்து அடிமைகளாக கொண்டுவரப்பட்ட கருப்பின மக்களை அமெரிக்காவில் பல இடங்களில் குடியமர்த்தி அவர்களின் உழைப்பை சுரண்டி வாழ்ந்தார்கள், தங்களை நாகரீகமானவர்கள் என்று சொல்லிக்கொண்ட வெள்ளை இனத்தவர்கள். இடம் பெயர்க்க பட்டாலும் கருப்பின மக்களின் நம்பிக்கைகள் தொடரத்தான் செய்கிறது. அப்படி தென் அமெரிக்க தீவு ஒன்றில் வாழந்த கருப்பின மக்கள் குழு ஒன்றின் கதையைத்தான் இந்தப்படம் பேசுகிறது.
தென் அமெரிக்க தீவிலிருந்து வட அமெரிக்காவிற்கு செல்ல விரும்பும் மனிதர்களின் மனவோட்டங்களையும், அந்த தீவிலேயே வாழ விரும்பும் மக்களின் மனவோட்டங்களையும் மிக அழகியலாக காட்சிப் படுத்தியுள்ளார்கள். இன்னும் பிறக்காத குழந்தை தன் மூதாதயர்களின் கதையை நமக்கு சொல்கிறது.
இந்த படத்தில் பிறக்காத குழந்தை, சிறுவர்கள், ஆண்கள், பெண்கள், ஆதி ஆப்ரிக்க தெய்வ வழிபாடு, இஸ்லாமிய மதம் இவற்றை சுவீகரிக்க வரும் கிருஸ்துவ மதம் எல்லாம் இருக்கிறது. கடல் சார்ந்த காட்சிகள் மிகவும் அர்த்தம் பொதிந்ததாக இருக்கிறது. படம் முழுமையாக புரியாவிட்டாலும் படத்தை விட்டு விலக முடியாத காட்சி அமைப்புகள் மனதை கவர்கிறது.
யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடுவதிலிருந்து ஆப்பரிக்க மக்கள் எப்படி எல்லாம் அடிமை படுத்தப் பட்டார்கள், அவர்களை எந்த அளவுக்கு கொடுமைக்கு ஆளாக்கினார்கள், அதற்கு எதிராக கருப்பின மக்களின் போராட்ட வடிவங்கள் என்ன என்ன, கருப்பின மக்களின் கொண்ட்டாட்டங்கள் என்ன, அடிமையாக்கப்பட்ட மக்களின் வாழ்வை சொன்ன படங்கள் என்ன என பல விசயங்களை தெரிந்துக் கொள்ளவும் புரிந்துக் கொள்ளவும் உதவியாக இருக்கிறது.
13. It Must Be Heaven –
Elia Suleiman.
சென்னை திரைப்பட விழாக்களில் தவறவிடக்கூடாத நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனிய படங்களை கருதுவேன். அப்படங்களில் அரசியல் தெளிவாக இருக்கும் என்பதே பிரதான காரணமாகும். இஸ்ரேலையும் பாலஸ்தீனத்தையும் பிரிக்கும் அந்த உயரமான சுவர் அதிகார, இன ஆணவத்தின் அடையாளம். மானுடத்தின் அவமானங்களில் ஒன்றாக அதைக் கருதுகிறேன். தூரத்தில் வாழ்ந்தாலும் எப்போதும் பாலஸ்தீன மக்களின் வலியை உணர முடிகிறது. அந்த மக்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் வெளிபடுத்திய சில படங்களை பார்த்து இருக்கிறேன்.
இயக்குனர் எலையா சுலைமானின் இட் மஸ் பி ஹெவன் படமும் பாலஸ்தீனிய நிலத்தைவிட்டு அகதியாக அலைகழியும் வாழ்வை வாழும் ஒரு படைப்பாளியின் கதையை சொல்கிறது. பட உருவாக்கம் மிகவும் சிறப்பாக இருக்கிறது. துயர வாழ்வைப் கதைக்களமாக கொண்டாலும் படத்தில் இருக்கும் எள்ளல் அனைவரையும் ஈர்க்க கூடியது. இப்படத்தின் பிரதான கதாப்பாத்திரம் பேசும் வசனங்களை ஓரிரு பக்கங்களில் எழுதிவிடலாம். ஒளிப்பதிவும் இசையும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. பொருள் புரியாவிட்டாலும் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள அரபி மொழி பாடல்கள் நம் உணர்வோடு கலந்து விடுகிறது. இப்படத்தை பெரும் திரையில் பார்த்திருந்தால் பேரனுபவமாக இருந்திருக்கும்.
யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நிகழ்த்தியுள்ள உரையாடல் மூலம் இஸ்ரேல் என்ற நாடு எப்போது, என்ன காரணத்தினால் உருவானது, வரலாற்றில் இல்லாதிருந்த இஸ்ரேல் உருவானது முதல் பாலஸ்தீன மக்கள் படும் துயரம் என்ன, பாலஸ்தீனத்தில் இயங்கும் இயக்கங்கள் என்னென்ன, அவற்றின் அரசியல் குறிக்கோள்கள் என்னென்ன, இஸ்ரேலிய வலதுசாரிகளின் தற்போதைய மனப்போக்குகள் என்ன, எலையா சுலைமானின் நான்கு திரைப்படங்கள் குறித்து குறிப்பாக அதன் காட்சி மொழி குறித்தும், அவற்றின் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
14. The Travelling
Players – Theo Anglrpoulos.
என்னைக் கவர்ந்த பெயர்களில் ஒன்று தியோ ஆஞ்சலோபெலாஸ். ஆனால் இவருடைய படங்கள் எதையும் பார்த்ததில்லை. முதல் முறையாக இந்தப்படத்தைதான் பார்த்தேன். படத்தின் கால அளவு மூன்று மணி நேரம் நாற்பத்தி இரண்டு நிமிடங்கள். இதனாலே இந்த படம் பார்ப்பது கொஞ்ச நாட்கள் தள்ளிப்போனது. இந்த படத்தை ஒரே சமயத்தில் பார்க்க முடியவில்லை மூன்று தவணையாக பார்த்து முடித்தேன்.
படத்தில் பெரும்பகுதி மெளனமாக இருக்கிறது. பின்னணி இசையும் குறைவுதான். நீள நீளமான காட்சித் துணுக்குகள். நாடக கலைஞர்கள் குழு ஒன்றின் பயணத்தின்னூடாக அந்த நாட்டின் அரசியல் பேசப்படுகிறது. அதில் கம்யூனிஸ்ட்கள் வேட்டையாடப் படுகிறார்கள். இந்த அளவில்தான் எனக்கு இப்படத்தின் கதை புரிந்தது. நிறைய புரியவில்லை என்றாலும் படமாக்கப்பட்ட விதம் நம்மை படத்தை விட்டு விலகாமல் இருக்க செய்கிறது.
படம் எப்போ முடியும் யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடியதை படிக்கலாம் என காத்திருந்து படம் முடிந்த உடனே அவர்களின் உரையாடலை படித்தேன். இந்த உரையாடலில் ஆஞ்சலோபெலாஸ் இயக்கிய திரைப்படங்களின் சிறப்பு என்ன, அவரின் அரசியல் பார்வை என்ன, அவர் ஏன் நீளமான காட்சித் துணுக்குகளை தேர்ந்து எடுத்துக்கொண்டார், மற்றவர்களில் இருந்து இவர் வேறுபடும் புள்ளி எது, காலமாற்றத்தை காட்ட இவர் பயன்படுத்திய உத்தி என்ன, அதன் பின்னுள்ள அரசியல் என்ன, கிரீக் நாட்டின் அரசியல் என்ன, இப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள நாடகம் எத்தகையது என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தது. 15. The Seventh Continent – Michael Hanake.
நவீன வாழ்க்கை முறையில் மனிதர்கள் தனித்தனி தீவுகளாகி விட்டார்கள். அதுவும் எல்லோருடைய கைகளுக்கும் அலைபேசி வந்ததும், ஒரே வீட்டில் இருக்கும் மனிதர்கள் கூட தனித்தனி தீவுகளாகி விட்டார்கள். இக்காலத்தில் எல்லாமே அவசர கதிக்கு போனதினால் எல்லாருக்கும் அக நெருக்கடிகளும் அதிகமாகிவிட்டது. இந்த மனநிலையும் அதனால் ஏற்படும் விளைவுகளையும் மையப்படுத்தி சுமார் 34 ஆண்டுகளுக்கு முன்பே மைக்கேல் ஹெனகே The seventh continent (1989) என்ற படத்தை எடுத்துள்ளார்.
இந்த படத்தில் நல்ல வேலையில் இருந்து நிறைய சம்பாதிக்கக்கூடிய கணவன் மனைவி மற்றும் அவர்களுடைய பெண் குழந்தை மூவரும் மிகவும் திட்டமிட்டு தங்களை இல்லாமல் ஆக்கிக்கொள்கிறார்கள் என்பதே கதையாகும். இயக்குனர் மைக்கேல் ஹெனகே இதை மிகவும் காட்சிப்பூர்வமாக சொல்லியிருக்கிறார்.
நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் முதலில் மனிதர்களுக்கு உதவுகிறது. முடிவில் அவர்களை அடிமைகளாக மாற்றி விடுகிறது. இதற்கு பின்னால் இருக்கும் அரசியல் மிகவும் கொடூரமானதாகும். இந்த படத்தின் கதை பெரும்பாலும் வீட்டிலுல் வெளியிலும் நடைபெறுகிறது. அப்பொழுதெல்லாம் மனிதர்களை விட மனிதர்களை ஆட்டுவிக்கும் பொருட்களை நாம் கவனிக்கும்படி பொருட்களை முன்னணியில் வைத்து காட்சி படுத்தியிருப்பார் இயக்குனர். படத்தின் இறுதி காட்சிக்கு முன்பாக அந்த பொருட்களை அடித்து நொறுக்குவார்கள். இந்த காட்சி மட்டும் சுமார் பத்து நிமிடம் ஓடும். நம் வாழ்வின் அபத்தங்களை இதுபோல் அடித்து நொறுக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். ஆனால் அது முடியாது. அதுதானே வாழ்வின் சூட்சுமம்.
யமுனா ராஜேந்திரனிடம் அம்சவள்ளி இப்படம் குறித்து உரையாடியதை படிக்கும்போது என்னுள் பல கதவுகள் திறக்கப்படுவதை உணர முடிகிறது. நவீன ஐரோப்பிய சமூகத்தின் வாழ்க்கை முறை அல்லது தொழில் வளர்ச்சி அவர்களை எங்கே கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது என்பதையும், இந்த படத்திற்கு ஏன் ஏழாவது கண்டம் என பெயரிட்டார்கள் என்றும், மைக்கேல் ஹெனகேயின் திரைப்படங்கள் குறித்தும், அவர் படம் பேசும் அரசியல் குறித்தும், படத்தில் இருக்கும் கதாபாத்திரங்களின் மனநிலைகள் குறித்தும் விரிவாக பேசியிருக்கிறார்கள். இந்த உரையினை படித்தப்பின் மறுபடியும் ஒருமுறை இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குகிறார்கள்.
16.
State Of
இந்த இயக்குனரின் பெயரையே இப்போதுதான் கேள்விபடுகிறேன். ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இப்படம் இப்பொழுதும் அர்த்தம் மிகுந்ததாக இருக்கிறது. படமும் காட்சி பூர்வமாக இருக்கிறது. பாசிச அரசாங்கத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் போராளிகள் குறித்து பல படங்கள் பார்த்திருந்தாலும் இது வேறுமாதிரியாக இருக்கிறது. இயக்குனர் இரண்டு தரப்பும் (அரசு மற்றும் போராளிகள்) உரையாடுவதை காட்சி படுத்துவதின் வழியே யார் சனநாயகத்தை மதிக்கிறார்கள் கடைப்பிடிக்கிறார்கள் என்பதை மிக அழகாகவும் அர்த்தபூர்வமாகவும் பதிவு செய்துள்ளார்.
1970 ஆண்டுகளில் தென் அமெரிக்க நாடானா பாராகுவே நாட்டில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது. ஒரு போராளி குழு அரசு அதிகாரிகள் மூவரை கடத்துகிறார்கள். அதில் ஒருவர் அமெரிக்கர். அதாவது மூன்றாம் உலக நாடுகளுக்கு நிதி உதவி செய்யும் அமைப்பை சேர்ந்தவர் என்ற போர்வையில் அமெரிக்காவின் கையாளாக செயல்படுபவர். அவர் அரசை எதிர்ப்பவர்களையும் அமெரிக்காவை எதிர்ப்பவர்களை பல குரூரமான வழிமுறைகளில் அழித்து ஒழிக்கும் பணியில் இருந்தவர். இவருக்கும் போராளிகளுக்கும் இடையே நடக்கும் உரையாடல் மூலம் அமெரிக்காவின் குரூர முகம் தோலுரித்து காண்பிக்கப்படுகிறது. போராளிகள் இவரை விடுதலை செய்ய வேண்டுமானால் சில நிபந்தனைகளை அரசுக்கு விடுக்கிறார்கள். போராளிகளின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டதா..? அந்த அமெரிக்கர் விடுதலை செய்யப்பட்டரா என்பதே கதையின் முடிவாகும்.
அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளில் உள் விவகாரங்களில் எப்படியெல்லாம் தலையீடு செய்தது/செய்துவருகிறது, தன்னை உலகின் தலைசிறந்த சனநாயகவாதி என காட்டிக்கொள்ளும் அமெரிக்கா மூன்றாம் உலக நாடுகளில் சனநாயகத்தை எப்படியெல்லாம் படுகொலை செய்தது/செய்கிறது என்பதையும் அந்த அரச பயங்கரவாதம் கலைப்படைப்புகளில் எப்படியெல்லாம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது என்பதையும், இந்த விசயங்களை கோஸ்டா காவ்ரஸ் தன் படங்களில் எப்படி காட்சிப்படுத்தியுள்ளார், எப்படியெல்லாம் உரையாடியுள்ளார், அவருடைய திரைப் பயணம் எப்படியெல்லாம் இருக்கிறது, அவருடைய முன்னோடிகள் யார், அவரை பிந்தொடர்ந்து செல்லும் இயக்குனர்கள் யார் என பல விசயங்களை யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி நடைத்திய உரையாடல் மூலம் அறிந்துக்கொள்ள முடிந்தது. இருவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
முடிவுரை :
உலக அரசியல் சினிமா இந்த புத்தகத்தின் மூலமாக பதினாறு இயக்குனர்களின் பதினாறு படங்களை பார்த்ததும். அப்படங்கள் படங்கள் குறித்தும், அந்த இயக்குனர்களின் பிற படங்கள் குறித்தும், அவர்களுடைய அரசியல் பார்வை குறித்தும் யமுனா ராஜேந்திரனுடன் அம்சவள்ளி உரையாடியதை படித்ததும் நல்ல அனுபவமாக இருந்தது.
திரைப்பட கல்லூரியில் பாடமாக வைக்கவேண்டிய புத்தகம் இது என்று கருதுகிறேன். இந்த புத்தகத்தில் யமுனா ராஜேந்திரன் சொல்லியுள்ள விசயங்களை சொல்லியுள்ள விசயங்களை நாமே கண்டைய பல ஆண்டுகள் தேடிய அலைய வேண்டியிருக்கும். அவ்வளவு விசயங்கள் இந்த புத்தகத்தில் இருக்கிறது. அவர் சேகரித்துள்ள பெரும் அறிவும் வெளிப்படும் அளவுக்கு அம்சவள்ளி இந்த உரையாடல்களை சிறப்பாக நடத்தியுள்ளார். இவர்கள் இருவருக்கும், இந்த உரையாடல்களை தொகுத்த தினேஷூக்கும் மற்றும் இந்த புத்தகத்தை வெளியிட்ட பேசாமொழி பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
இந்த புத்தகம் குறித்த கடைசி பதிவு இதுவாகும். வாரம் ஒரு படம் வீதம் 16 வாரங்களில் / நான்கு மாதங்களில் எழுதி முடிக்க திட்டமிட்டிருந்தேன். ஆனால் எட்டு மாதங்கள் கழிந்து முடிந்திருக்கிறது. இந்த பதிவுகளை தொடர்ந்து படித்து கருத்து சொன்ன, பதிவிட்ட, தங்கள் பக்கத்தில் பகிர்ந்த மற்றும் விருப்ப குறியிட்ட நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
பேசாமொழி பதிப்பகம் இந்த புத்தகத்தை
சிறப்பாக பதிப்பித்து இருக்கிறது. இப்புத்தகத்தின் முதல் பதிப்பு 2022 சனவரியில் வெளியாகி
இருக்கிறது.
முற்றும். 17.04.2023
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக