ஆழி சூழ் உலகு – ஜோ.டி.குருஸ்.
நவீன இதிகாசம்.
பல ஆண்டுகளாக படிக்க வேண்டிய நாவல்களின் பட்டியலில் இருந்த ஜோ.டி.குருஸின் ஆழி சூழ் உலகு நாவலை இந்த மாதம்தான் படித்து முடித்தேன். நாவலைப் பற்றி கேள்விப் பட்டிருந்ததை தாண்டியும் நாவல் சிறப்பாக இருக்கிறது.
அந்த மூன்று மீனவர்களும் தூத்துக்குடிக்கு அருகேயுள்ள ஆமந்துறை கிராமத்தை சார்ந்தவர்கள். அவர்களின் வாழ்க்கை கதையின் ஊடாக அந்த கிராமத்தின் கதையையும், அங்கு வாழும் மீனவர்களின் வாழ்க்கை கதைகளையும், அங்கு இறைப்பணி செய்த/செய்யும் பாதிரியார்களின் கதைகளையும், மீன்பிடி தொழிலில் ஏற்பட்ட மாறுதல்களையும் இந்த நாவல் விரிவாக பேசுகிறது.
கடலுக்குள் மீன்பிடிக்க சென்ற தம்பி கரைதிரும்பும் முன் நோயில் இறந்த அண்ணனின் உடலை அடக்க செய்து விடுகிறார்கள். கூட பிறந்த உடன்பிறப்பின் முகத்தை கடைசில் பார்க்க முடியாமல் போகும் தம்பி. கணவன் இறந்த பின் மற்றவர்களின் வற்புறுத்தலுக்காக கணவனின் தம்பியை மணந்துகொள்ளும் பெண். மகன் பாம்பு கடித்து இறந்து விட அவன்மீது கொண்ட பாசத்தினால் இன்னும் முப்பது நாட்களுக்குள் மகனிடம் போய் சேருவேன் என்று சூளுரைத்து அதுபோலவே மரணிக்கும் தாய்.
தங்கையும் அவள் கணவனும் நோயில் இறந்துவிட அவளுடைய மூன்று பெண்குழந்தைகளை வளர்ப்பதற்காக தான் குழந்தை பெறாமலே வாழும் அண்ணன். அவனை புரிந்துக்கொண்டு அவனுக்கு துணை நிற்கும் அவன் மனைவி.
சமூகத்திற்கு எல்லாவகையிலும் உதவி செய்யும் நோக்கில் வாழும் பாதிரியார், தன் சுயலத்திற்காகவே இறைப்பணி செய்யும் பாதிரியார், பல கனவுகளுடன் பாதிரியாராக படிக்க சென்றவன் ஒரு பெண்ணின் மீதான காதலால் அந்த படிப்பை பாதியில் நிறுத்திய ஒருவன், தன் காதல் கைகூடாதினால் கன்னியாஸ்திரியான ஒருத்தி.
தன் காமத்திற்கு இடையூராக நின்றவனை வெட்டிக்கொன்ற ஒருவன், தன்னை காதலித்து ஏமாற்றியவனை ஆண்டுகள் பல கடந்தும் பழிவாங்கும் ஒருத்தி, படித்த டீச்சருக்குக்கும் படிக்காத மீனவனுக்கும் இடையே ஏற்படும் பாலியல் உறவு, சித்தியோடும் அவள் மகளோடும் பாலியல் உறவில் இருக்கும் ஒருவன்.
கோடீஸ்வரினின் பிள்ளை மீனவனாவதும், கடனுக்கு கருவாடு வாங்கி விற்றவன் மாபெரும் கோடீஸ்வரன் ஆவதும், தன்னிடம் விசுவாசமாக இருக்கும் தொழிலாளியின் மனைவியை பலாத்காரம் செய்யும் ஒருவன், தனக்காக அடிப்பட்டு இறந்தவனின் பிள்ளையை தன் பிள்ளையாய் வளர்க்கும் ஒருவன் என எண்ணிலடங்கா கதாபாத்திரங்கள் ரத்தமும் சதையுமாக இந்த நாவலில் உலவுகிறார்கள். மனிதர்களின் ஒவ்வொரு குணவகைக்கும் ஒரு காதாபாத்திரம் இந்த நாவலில் இருக்கிறது. இதனாலே இந்த நாவலை ஒரு நவீன இதிகாசம் என்று சொல்கிறேன்.
மீனவ கிராமங்களுக்குள் ஏற்படும் அடிதடிகள் கலவரங்கள், மீன்பிடி தொழிலில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள், துறைமுகம் வந்ததினால் கடலில் ஏற்பட்ட மாற்றங்கள். 1933 முதல் 1985 வரையிலான காலகட்டத்தில் மீனவ கிராமங்களிலும் கடலிலும் வாழ்க்கையிலும் ஏற்பட்ட மாற்றங்களை இந்நாவல் தெளிவாக சொல்கிறது.
ஜோ டி குருஸின் முதல் நாவல் இது என்பது ஆச்சரியமாத்தான் இருக்கிறது. முன்பின்னாக கதை சொன்னாலும் குழப்பமில்லாமல் கதை சொல்கிறார். ஒவ்வொரு கதாபாத்திரத்தின் கதையையும் எங்கு தொடங்கி எங்கு முடிக்க வேண்டும் என்பதில் மிக நுட்பமாக செயல்பட்டு இருக்கிறார். கூடுதலாக ஒரு வார்த்தையைக்கூட பயன்படுத்தாமல் சொல்ல வந்த உணர்வை கச்சிதமாக சொல்லிவிடுகிறார். ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்கும் இருக்கும் உளவியலையும் அழகாக படம்பிடித்து காட்டிவிடுகிறார். அதனால் ஏற்படும் முரண்களும் சிக்கல்களும் கதைக்கு வலு சேர்க்கிறது.
பரதவர்களின் வட்டார வழக்கு முதலில் படிக்க கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் கதையை படிக்க படிக்க அது எளிமையானதாக மாறிவிடுகிறது.
இந்த நாவலை தமிழினி பதிப்பகம் சிறப்பாக பதிப்பித்து வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு நவம்பர் 2004-ல் வெளியாகியுள்ளது.
இந்த நாவலை படிக்கும் வாய்ப்பை உருவாக்கி தந்த தோழர் பீட்டர் துரைராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
27.04.2023.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக