இரண்டு நாவல்கள்சில படைப்பாளிகளின் பெயரை கேள்விபட்ட உடனே அவர்களுடைய படைப்பை படிக்கும் வாய்ப்பு கிடைக்கும் சிலநேரங்களில் அப்படி நடக்காது. மலையாள எழுத்தாளர் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பே கேள்வி பட்டிருந்தாலும் அவருடைய எந்த படைப்பையும் சென்ற வாரம் வரை படித்ததில்லை.
அண்மையில் இயக்குனர் ராம் “பரந்து போ” பட சம்மந்தமாக திரை விமர்சகர் பரத்வாஜ் ரங்கனுக்கு கொடுத்த நேர்காணலில் கே.ஆர்.மீராவின் படைப்புகள் குறித்தும், குறிப்பாக யூதாஸின் நற்செய்தி நாவல் குறித்தும் பேசியிருந்தார். அந்த உரையை கேட்டபின் மீராவின் படைப்புகளை உடனே படிக்க வேண்டும் என்ற ஆர்வம் பெருகியது.
நண்பர் பால்ராஜிடம் கே.ஆர்.மீராவின் ‘’அந்த மரத்தையும் மறந்தேன் மறந்தேன் நான்’’ என்ற நாவல் இருந்தது. அதை வாங்கி உடனே படிக்க ஆரம்பித்தேன்.
திருமணமாகி குழந்தை இல்லாமல் வாழும் பெண்ணை தேடி அவளது முன்னால் காதலன் வருகிறான். இப்படி ஆரம்பித்த கதை அந்த பெண் யார், அவளுக்கு சிறுவயதில் நடந்த துர் சம்பவம் அதனால் அவள் உடலும் மனமும் படும் இன்னல்கள், அவள் காதல் வயப்பட்ட தருணம், அந்த காதலில் இருந்து விலகி வந்த தருணம், இன்று அவளை தேடி வந்திருக்கும் முன்னால் காதலனின் வாழ்க்கை முறை, அவனது குடும்பமும் சமூகமும் அவனை பார்க்கும் விதம் என விளக்கியபடியே செல்கிறது. முடிவில் அந்த முன்னால் காதலர்களின் வாழ்வு என்னவானது என்பதே கதையின் முடிவாகும்.
எளிய மனிதர்களின் காதல் கதையாக இருக்கும் நாவலில் குடும்ப அமைப்புக்குள் இருக்கும் வன்முறையை துல்லியமாக படம் பிடித்து காட்டுகிறார். இதுவரையிலான கதை சரடு எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அடுத்து காதலர்களின் முடிவு என்ன என்பதில் எனக்கு குழப்பம் இருக்கிறது. அதற்காகவே அந்த நாவலை மறுபடியும் ஒருமுறை படிக்க வேண்டும் என தீர்மானித்துள்ளேன்.
இந்த நாவலை சிற்பி பாலசுப்ரமணியம் சிறப்பாக மொழிப்பெயர்த்துள்ளார்.
அடுத்ததாக யூதாஸின் நற்செய்தி நாவலை படிக்க தொடங்கினேன். அந்த நாவல் என்னை பெரிதும் கவர்ந்துள்ளது. இயக்குனர் ராம் இந்த நாவலை தனக்கு பிடித்த நாவல் என்று சொன்னதன் காரணமும் புரிகிறது. இந்த நாவலும் ஒரு காதல் கதையாக இருக்கிறது. ஆனால் அதே சமயம் தீவிரமான அரசியல் கதையாகவும் இருக்கிறது.
இந்திய ஒன்றியத்தில் 1975 ஆண்டு கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலத்தில் அரசியல் போராளிகளை காவல்துறை எப்படி வேட்டையாடி கொன்று குவித்தது என்பதற்கு ஆதாரமாக காவல்துறையின் சித்தரவதை முகாம் ஒன்றை மையமாக கொண்டு இக்கதையின் நாயகனும் நாயகியும் உருவாக்கப்படுள்ளார்கள்.
நாயகியின் அப்பா காவல்துறை அதிகாரி, நாயகியின் காதலன் அந்த சித்தரவதை முகாமில் வதைப்பட்டவன் இவர்கள் இருவருக்கும் எப்படி காதல் உருவாகியது. அவர்கள் காதல் சேர்ந்ததா இல்லையா என்பது கதையின் முடிவாகும்.
இந்த நாவலில் பிரேமா என்ற பெண்ணின் காதல் கதை அவளுடைய பதினைந்தாவது வயதில் தொடங்கி முப்பதந்தாவது வயதுவரை சொல்லப்படுகிறது. இதில் முன்னும் பின்னுமாக அவசரநிலை காலத்தில் காவல்துறையினர் அரசியல் போராளிகள் மீது நிகழ்த்திய வன்கொடுமைகள், அந்த கொடுமைய நிகழ்த்திய காவலர்கள் அதற்கு சொன்ன காரணங்கள், அரசியல் போராளிகளின் குடும்ப துயரங்கள் என அனைத்தையும் சுமார் 112 பக்கங்களில் ஆசிரியர் சிறப்பாக சொல்லிவிடுகிறார்.
பிரேமாவின் காதல் கதையை சொல்லும் அதே வேளையில் முன்னும் பின்னுமாக சென்று யூதாஸின் அரசியல் கதையையும் அதனால் அவன் அனுபவித்த வன்கொடுமைகளையும் சொல்கிறார். வன்கொடுமை நிகழ்த்திய காவலர்களின் வாழ்க்கை கதையும், அவர்கள் பக்க ஞாயமும் சொல்லப்படுகிறது. ஒருவகையில் உணர்வுபூர்வமான காதல் கதையாகவும் மற்றொருவகையில் வலிமிகுந்த அரசியல் போராளியின் கதையாகவும் இன்னொருவகையில் குடும்ப அமைப்பின் வன்முறையை சொல்லும் கதையாகவும் இந்தநாவல் விரிகிறது.
ஒடுக்குமுறை இருக்கும்வரை போராட்டமும் போராட்டம் இருக்கும்வரை போராளியும் இருப்பான் என்பதை சொல்லும் இதே நாவல் தப்பு செய்தவன் தண்டணை பெறுவான் என்ற விதிவாதத்தையும் வலியுறுத்துகிறது. வாழ்க்கை என்பது அப்படி இருப்பது இல்லை. விதிவிலக்குகள் உண்டு.
போராட்டம் இருக்கும் என்பதை ஏற்றுக்கொள்ளும் என்னால் தண்டனை கிடைக்கும் என்பதை ஏற்க முடியவில்லை. எனினும் எல்லோருக்கும் தெரிந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு பல்வேறு பார்வை கோணத்தில் இந்த கதையை சொல்லியுள்ள விதம் எனக்கு பிடித்திருக்கிறது.
இந்த நாவலை மோ.செந்தில்குமார் சிறப்பாக மொழிபெயர்த்துள்ளார்.
இந்த இரண்டு நாவல்களையும் எதிர் வெளியீடு பதிப்பகம் சிறப்பான முறையில் வெளியிட்டுள்ளது.
21.07.2025.
