பி.எஸ்.விநோத்ராஜின் கூழாங்கல் திரைப்பட அனுபவங்கள் – அரவிந்த் சிவா.
தமிழ் இலக்கியத்தில் தன் வரலாறுகள் நிறைய இருக்கிறது. துறை சார்ந்த அனுப பதிவுகளும் நிறைய இருக்கிறது. ஆனாலும் இன்னும் எழுதாத அனுபவங்கள் அதைவிட அதிகமாக இருக்கிறது. ஒருமுறை நண்பர் சிவா அடுக்குமாடி குடியிருப்பு வாழ்வு சார்ந்து எதாவது நாவல் இருக்கிறதா என கேட்டார். அடுக்குமாடி குடியிருப்பை மையபடுத்திய படைப்பு எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஒருவேளை இருந்தாலும் அது பெரும் கவனத்தை பெறவில்லை.
கேரளாவில் இருந்து காவலர், பாலியல் தொழிலாளி, திருடன், கன்னியாஸ்திரி, பழங்குடி பெண் என பலரின் வாழ்க்கை அனுபவங்கள் புத்தகங்களாக வந்துள்ளது. அதோடு ஒப்பிட நம்மிடம் குறைவாகவே இருக்கிறது.
தமிழ்திரைத்துறை சார்ந்து நிறைய பேர் தங்கள் வாழ்க்கை அனுபவத்தை எழுதியுள்ளார்கள். குறிப்பாக உதவி இயக்குனர் வாழ்வு சார்ந்து நவீன், திருவாரூர் பாபு ஆகியோர் எழுதியுள்ளனர். அந்த வரிசையில் பி.எஸ்.விநோத்ராஜின் கூழாங்கல் திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அரவிந்த் சிவா தன் அனுபவங்களை இந்த புத்தகத்தில் சிறப்பாக பதிவு செய்துள்ளார்.
உதவி இயக்குனருக்கும் இயக்குனருக்குமான உறவு, படபிடிப்பு தளத்தில் ஏற்படும் உடல் மற்றும் மன நெருக்கடிகள், மகிழ்ச்சிகள், வாழ்க்கை பாடங்கள், எதிர்காலத்தில் இயக்க போகும் படத்துக்கு தேவையான திரைப்பாடங்கள், மனிதர்களில் இத்தனை விதங்களா என வியக்க வைக்கும் சம்பவங்கள், பகுத்தறிவு கொண்டு உடனே விளங்கி கொள்ளமுடியாத ஆச்சரியங்கள், நாம் உண்மையாக உழைக்கும்போது அதற்கு உதவ வரும் மனிதர்கள், உழைப்பிற்கு கிடைத்த பாராட்டுகள் என அனைத்தையும் மிகவும் சுவராசியமாக எழுதியுள்ளார் அரவிந்த் சிவா. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
அரவிந்த் சிவா தன்னைப்பற்றியும், இயக்குனர் விநோத்ராஜுக்கும் அவருக்குமான உறவு குறித்தும், திரைப்பட ஆர்வம் ஏற்பட்ட தொடக்கபுள்ளி, அதை அவர் வளர்த்து எடுத்த விதம் இவைகுறித்தும் இன்னும் கொஞ்சம் விளக்கமாக எழுதியிருக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக