இன்று காலை நவம்பர் மாத காலச்சுவடு இதழில் வெளியான ஒரு சிறுகதையும் ஒரு கட்டுரையும் படித்தேன். அப்போது எனக்குள் தோன்றிய எண்ணங்களின் சிறு குறிப்பே இப்பதிவாகும்.
முதலில் சுஜா செல்லப்பன் எழுதிய "அகலாது அணையாது" சிறுகதையை படித்தேன். கதையின் தலைப்பு என்னை ஈர்க்கவில்லை என்றாலும் முதல் வரியிலேயே கதையை தொடங்கிய விதம் எனக்கு பிடித்து இருந்தது. கதையை படித்த பிறகு இந்த தலைப்பு கதைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக உணர்ந்தேன்.
நவீன கால இளம் பெண், அவள் அணியும் உடை சார்ந்து, அவள் அடையும் மன சங்கடங்களே கதையின் கருவாகும். அதை தொடங்கிய விதமும் வளர்த்து சென்ற வழிமுறையும் சிறப்பாக இருக்கிறது. மனதின் ஆசைகளையும் சங்கடங்களையும் மிக எளிமையாகவும் அழகாகவும் எழுதி சென்றவர் கதையினை முடித்த விதம் எனக்கு உவப்பாக இல்லை. கதை சட்டென பாதியில் முடிந்த உணர்வையே தருகிறது.
அடுத்து கட்டுரை, லாவண்யா சுந்தராஜனின் 'அதே ஆற்றில்" சிறுகதை தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் கார்த்திக் ராமசந்திரன் பேசிய உரையே "உறைந்த காலத்தில் சந்தித்தல்" என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியாகியுள்ளது. இந்த தலைப்பே பலகதைகளை சொல்லும் கவித்துவ வரியாக இருக்கிறது.
கா.ரா உரையின் தொடக்கத்தில் இந்த தொகுப்பு எட்டு இரட்டை சிறுகதைகள் அடங்கியது என்கிறார். அதென்ன இரட்டைச் சிறுகதை என்று ஆர்வத்துடன் படிக்க ஆரம்பிக்கிறேன்.
அடுத்து இந்த உரையில் கிரேக்க தத்துவ அறிஞர் ஹெரக்லிடஸின் " ஒருவர் இரண்டாம் முறை அதே ஆற்றில் இறங்க இயலாது. ஏனெனில் இரண்டாம் முறை அவரும் நதியும் அதே தன்மையுடன் இருப்பதில்லை" என்ற மேற்கோளை குறிப்பிடுகிறார். எனக்கு சட்டென வேறு ஒரு நினைவு வருகிறது. இன்னும் கூடுதலாக கட்டுரையின் இல்லை உரையின் மீதான ஆர்வம் கூடுகிறது.
"நீ வலது காலை வைக்கும்போது இருந்த நதி, இடது காலை வைக்கும்போது இருப்பதில்லை" என புத்தர் சொன்னதாக படித்துள்ளேன். எப்படி இருவருக்கும் ஒரே மாதிரியான சிந்தனை வியந்தபடி தொடர்ந்தேன்.
புராண மற்றும் தொன்ம கதைகளை மறு ஆக்கம் செய்தவர்கள் அதை எப்படி எல்லாம் செய்துள்ளார்கள் என்பதை நான்கு வகைமாதிரிகளை சொல்லி, அவற்றில் லாவண்யா சுந்தராஜனின் சிறுகதைகள் எந்த வகைமைக்குள் வருகின்றன, அவற்றின் சிறப்புகள் என்ன, போதாமைகள் என்ன என எல்லாவற்றையும் சிறப்பாக கூறி உரை முடிக்கிறார்.
வரும் புத்தக கண்காட்சியில் வாங்க புத்தகங்கள் பட்டியலில் இந்த சிறுகதை தொகுப்பையும் சேர்த்து கொள்கிறேன்.
இந்த நாளை இனிமையாக்கிய சிறுகதை ஆசிரியர் சுஜா செல்லப்பனுக்கும் கட்டுரையாளர் கார்த்திக் ராமசந்திரன் இருவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்.
06.12.2024
All reac
Face
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக