3.30.2026

பதிவு. 94



வாடாமல்லி – கண்மணி குணசேகரன்.

இன்று நான் படித்து முடித்த புத்தகம் கண்மணி குணசேகரனின் “வாடாமல்லி” சிறுகதை தொகுப்பாகும். இதில் மொத்தம் ஆறு சிறுகதைகள் இருக்கிறது. இந்த கதைகள் அனைத்தும் நடுநாடு (கடலூர் மாவட்டம்)-ல் விருத்தாசலம் நகருக்கு பக்கத்தில் உள்ள மணகொல்லை கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் வாழும் விவசய குடிகளின் வாழ்க்கைப் பாடுகளை சொல்கிறது.
ஒரு நாடக குழுவில் உதவியாளனாக இருப்பவனின் இல்லற சிக்கல்(அம்போகம்), புது தொழில் செய்ய தொடங்கி அதில் பெரும் நட்டம் அடைந்து அதில் இருந்து மீண்டு உதறி தொழிலாளியானவனின் வாழ்க்கை கதை(இரும்பு ராசி), தனது மனைவிக்கு திருமணத்திற்கு முன்பு மற்றொருவன் மீது இருந்த காதலை அறியும் ஆண்களின் மனநிலைகள்(பச்சைக்கிளி & வாடாமல்லி), காதலித்து கைபிடித்த கணவன் துரோகம் இழைத்ததை அறிந்த மனைவியின் மனநிலை(வெட்டுக்காடு), பஞ்சாயித்து தேர்தலில் எல்லோரும் பணம் கொடுத்தாலும் நான் கொடுக்க மாட்டேன் தான் நியாமானவன் அதனால் மக்கள் தனக்கு ஓட்டு போடுவார்கள் என நம்பி ஏமாந்த நபரின்(வாளி) கதை என பலரின் வாழ்க்கை பாடுகள் இந்த கதைகளில் இருக்கிறது.
இந்த ஆறு கதைகளில் நாலு கதைகள் கணவன் மனைவி உறவு சார்ந்த அகச்சிக்கல்களை பேசுகிறது, ஒரு கதை புறவாழ்வினால் ஏற்படும் பணம் நெருக்கடிகளையும் அதனால் ஏற்படும் மன நெருக்கடிகளையும் பேசுகிறது. இந்த கதையில்(இரும்பு ராசி) வரும் கணவன் மனைவி உறவுதான் அதிகமும் புரிதல் உள்ளதாக இருக்கிறது. மற்றொரு கதையில் மனைவின் சந்தேக புத்தியால் ஏற்படும் நெருக்கடிகள் ஒரு புறமும் பஞ்சாயித்து தேர்தலில் தோற்கடிக்கப்படுவதினால் ஏற்படும் நெருக்கடிகள் இன்னொரு புறமும் சூழ அந்த கணவன் திக்குத்தெரியாமல் தவிக்கிறான்.
இந்த புத்தகத்தின் பின்னட்டையில் உள்ள குறிப்பு சொல்வது மாதிரி இந்த கதைகள் அனைத்திலும் கண்ணீர் வழிந்தோடுகிறது. அன்பின் பொருட்டும், அவமானத்தின் பொருட்டும், அவமதிப்பின் பொருட்டும், புரிதல் இன்மையின் பொருட்டும் கண்ணீர் சிந்தப்படுகிறது அல்லது சிந்தவைக்கப்படுகிறது.
எழுத்தாளர் கண்மணி குணசேகரனின் எழுத்து நடை மிகவும் எளிமையானது. ஆனால் அவர் எழுதி காட்டும் வாழ்க்கை எளிமையானது அல்ல. அவர் கதைகளில் அந்த வட்டாரத்தின் மொழியும் வாழ்வும் இரண்டற கலந்துள்ளது. இதுதான் அவரின் மிகப்பெரிய வெற்றி என கருதுகிறேன். இந்த ஆறுகதைகளின் வடிவமும் ஒரே மாதிரியாக உள்ளது. இது எனக்கு சற்று ஏமாற்றமாக இருக்கிறது.
இந்த புத்தகத்தினை சிறப்பான அட்டைப்படத்துடன் தமிழினி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு 2019 ஆண்டு வெளியாகியுள்ளது.
இந்த புத்தக வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் பொன்.கர்ணன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

- 04.03.2026.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...