10.12.2021

பதிவு - 47

 செம்புலம் - இரா.முருகவேள்.

எந்தத் துப்பறியும் கதையை விடவும் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பலமடங்கு ஆழமும், கூர்மையும், குரூரமும் கொண்டது.
- இரா.முருகவேள்.
Once Upon a Time in Anatolia என்ற துருக்கியப் படத்தை பார்த்தபோது, இப்படியும் கதை சொல்ல முடியுமா என எனக்கு பிரம்மிப்பாக இருந்தது. கொலை செய்யப்பட்டவனின் உடலைத்தேடி செல்லும் பயணம் மிகவும் நிதானமாக செல்லும். வழக்கமான துப்பறியும் படம்போல், அடுத்து என்ன, அடுத்து என்ன என்ற பரபரப்பு ஏதும் இருக்காது. ஆனாலும் நம் மனம் படத்தை விலகாது.
இரா.முருகவேளின் "செம்புலம்" நாவலைப் படிக்கும்போதும் எனக்கு மேற்குறிப்பிட்ட பட அனுபவமே ஏற்பட்டது.
இந்த நாவல் நான்கு பகுதிகளாக கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
முதல் பகுதி ஒரு துப்பறியும் கதையாக துவங்குகிறது.
இரண்டாம் பகுதி ஒரு குறிப்பிட்ட நிலபரப்பில் புறத்திலும் மனிதர்களின் அகத்திலும் தலைமுறைகள் கடந்து ஏற்பட்டு வரும் மாற்றங்களை பதிவு செய்கிறது.
மூன்றாவது மிக முக்கியமானது. அரசு சாரா தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகளை விரிவாக பதிவு செய்துள்ளது. பிரச்சனைகளின் வேர்களை நீக்க முயலாமல், பிரச்சனையால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் செய்து கொடுத்தாலே போதும் என்று செயல்படும் இந்த அமைப்புகளால் உண்மையில் யாருக்குத்தான் லாபம்.
நான்காவது பகுதியில், முதல் மூன்று பகுதிகளில் தவறவிட்ட அல்லது அந்த பகுதிகளுக்கான ஆதார உண்மை இருக்கிறது. அந்த உண்மை நம்மை நிலைகுலைய வைக்ககூடியதாக இருக்கிறது.
செம்புலம் துப்பறியும் வடிவில் சொல்லப்பட்ட அரசியல் நாவலாகும். தொடர்ந்து படிக்க தூண்டும் மிக எளிமையான மொழிநடையில் நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
இதில் பயன்படுத்தப் பட்டுள்ள நாட்டுபுற கதைக்கு ஏற்ப அட்டைப்படம் அருமையாக வரையப்பட்டுள்ளது.
பொன்னுலம் பதிப்பகம் இந்நாவலை(முதல் பதிப்பு 2017) சிறப்பாக வெளியிட்டுள்ளது.
இந்நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் Dhan Vel அவர்களுக்கு என்மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

24.06.2021.


பதிவு - 46

 மங்கலத்து தேவதைகள் - வா.மு.கோமு.

நவீன வாழ்க்கை மனித உறவுகளில் பலவிதமாக (நல்லதும் கெட்டதுமாக) மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. குறிப்பாக ஆண் பெண் உறவில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுத்தி உள்ளது.
அப்படியான பிரச்சனையை அல்லது உறவைத்தான் வா.மு.கோமு தனது "மங்கலத்து தேவதைகள்" நாவலில் பதிவு செய்துள்ளார்.
இந்த நாவல் சமகால ஆண் பெண் பாலியல் உறவின் ஆவணமாக இருக்கிறது. இதையெல்லாம் நாவலில் பதிவு செய்யத்தான் வேண்டுமா என ஒழுக்க கண்ணாடி போட்ட மனம் துணுக்குறுவதை தவிர்க்க முடியாதுதான்.
ஒரு உறவிலிருந்து மற்றொரு உறவிற்கு தாவி செல்லவும், அப்படி பிரிய நேர்ந்த உறவை நினைத்து குற்றவுணர்ச்சி ஏதும் இல்லாமல் வாழவும் நவீன மனித மனம் தயாராகிவிட்டது.
இந்நாவலை உயிர்மை பதிப்பகம் 2011 ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிட்டுள்ளது.
இந்த நாவல் வாசிப்பை சாத்தியமாக்கிய நண்பர் Dhan Vel -க்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

20.06.2021.





பதிவு - 45

 சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட காதல் காவியமான சரத் சந்தரின் தேவதாஸ் நாவலை அண்மையில் படித்து முடித்தேன். ரோமியோ ஜீலியட், அம்பிகாவதி அமராவதி போல் ஒன்று சேரதாத காதலர்களான தேவதாஸ் பார்வதியின் கதை இது.

பார்வதியின் கதாபாத்திரம் மிகவும் துணிச்சல் மிக்க பாத்திரம். அவள்தான் தன்காதலை தேவதாஸிடம் நேரடியாக சொல்கிறாள். அப்பா, அம்மாவின் ஆசைக்காக தேவதாஸ் பாருவின் காதலை நிராகரிக்கிறான். அவளை விட்டு பிரிகிறான். பிரிவின் துயரில்தான் அவளை எவ்வளவு காதலிக்கிறோம் என்பது அவனுக்கே புரிகிறது. அவன் திரும்பி பாருவிடம் வரும்போது காலம் கடந்து விடுகிறது. ஒருமுறை தவறான முடிவு எடுத்ததினால் அவனின் வாழ்வே பாழாகிறது. இந்த தவறுகளை இன்றும் மனிதர்கள் சாதிக்காக, மதத்துக்காக, பணத்துக்காக என்று செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.
காதலின் துயரத்தில் வீழ்ந்த தேவதாஸ்மீது காசுக்காக காமத்தை விற்கும் சந்திரமுகி காதலில் விழுகிறாள். தன்னை தேடி வருவதினாலே அதன் அருமை தெரியாத தேவதாஸ் மறுபடியும் ஒரு தவறான முடிவை எடுத்து சந்திரமுகியை விலகி செல்கிறான். இப்போது சந்திரமதி காதலின் துயரில் வீழ்கிறாள்.
தேவதாஸ் படித்த பணக்கார வீட்டுப்பிள்ளை. அதனாலேயே அவன் வாழ்வில் பிரச்சனைகள் குறுக்கிடுகின்றன. பிரச்சனைகளை எதிர்கொள்ளும் சிந்தனைவலிமை இல்லாத தேவதாஸ் சிக்கலில் சிக்கி சீரழிகிறான். பாருவின் காதலையும், சந்திரமுகியின் காதலையும் சரியாக புரிந்து கொள்ளமுடியாத தேவதாஸ் கடைசியில் ஓர் மழைநாள் இரவில் பார்வதியின் வீட்டு முன்பு மரணித்து போகிறான்.
தேவதாஸ் என்றாலே கூடவே ஒரு நாய் என்ற தோற்றம் மனதில் தோன்றும். இந்த கதையில் அப்படி ஒரு நாயே கிடையாது. திரைப்படம் உருவாக்கிய பிம்பம் போலும் நாய். ஏன் நாயை தேர்ந்து எடுத்தார்கள் என்றும் நன்றி மறவாத சீவன் அது என்பதினாலா...
இந்த தேவதாஸ் கதையை தழுவி இரண்டு இந்தி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஒன்று ஷாருக்கான், ஐஸ்வரியா, மாதுரி தீட்சித் நடித்த தேவதாஸ் படம். பிரமாண்டமான தயாரிப்பு. மற்றொன்று இயக்குனர் அனுராக் காஷ்பின் "தேவ் டி" படம். எளிமையான ஆனால் மிகவும் நவீனத்துவ பார்வைக் கொண்ட படம். பழைய கதையை சமகாலத்திற்கு ஏற்றார்போல் எப்படி படம் எடுக்க வேண்டும் என்பதற்கு முன் உதாரணமான படம். இந்த படமே என்னை மிகவும் கவர்ந்தது.
தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளில் வெளிவந்துள்ள பழைய தேவதாஸ் படங்களையும் பார்க்க வேண்டும்.

08.05.2021.





திரை - 09

அன்பைத் தேடி அலைபவன்.
அன்பைப்போல் வன்முறை ஏதுமில்லை இந்த வரியை எங்கோ படித்ததாக நண்பர் சொன்னார் சில ஆண்டுகளுக்கு முன்பு அது அப்படியே என் மனதில் ஒட்டிக்கொண்டது. அதை அவ்வப்போது யோசித்துப் பார்ப்பதுண்டு. நேற்று HER படம் பார்த்ததும் இந்த வரி மறுபடியும் நினைவுக்கு வந்தது.
சிலருக்கு அன்பு செலுத்த மனிதர்கள் இருக்கிறார்கள். சிலர் அன்பு செலுத்த ஆட்களைத்தேடி அலைகிறார்கள். அப்படி தேடி அலைவதினால் மட்டும் அன்பு கிடைத்துவிடும் என்ற உத்திரவாதமுமில்லை. நவீன தொழிற்நுட்பமான செயற்கை நுண்ணுயிர் அறிவியலில் இதுக்கு ஒரு வழிகிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்ற யோசனையின் விளைவுதான் HER திரைப்படமாகும். அப்படி கிடைக்கும் உறவு என்றும் நிலைத்து இருக்கும் என்றும் சொல்வதற்கில்லை. ஆனாலும் ஒரு மனிதனுக்கு தான் அன்பு செலுத்தவும், பதிலுக்கு தன்மீது அன்பு செலுத்தப்படவும் ஓர் உயிர் தேவையாத்தான் இருக்கிறது.
சமகாலத்தில் இயற்கையைப்போல் அன்பும் சுருங்கிக்கொண்டே வருகிறது போலும். அதனால்தான் அன்பை தேடி அலைபவர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே செல்கிறதோ. சமகால மனிதனை அவனது நிழல்போலவே தனிமையையும் அவனைத் தொடர்ந்து கொண்டே வருகிறது. தனிமையை கொல்வது அல்லது தனிமையோடு உறவாடுவது எது அவனுக்கு சாத்தியம்.

04.05.2021.

4.30.2021

துளி - 321

 நிழலாய் தொடரும்

மரணத்தை

விலகி செல்ல வைக்கிறது

உன் நினைவுகள்...

01.02.2021.

துளி - 320

 தருணங்கள்

எல்லா தருணங்களிலும்
என்னால்
உண்மையை பேசமுடிவதில்லை
எல்லா தருணங்களிலும்
என்னால்
நம்பிக்கையோடு இருக்க முடிவதில்லை
எல்லா தருணங்களிலும்
என்னால்
தோழமையோடு பழக முடியவில்லை
எல்லா தருணங்களிலும்
என்னால்
காதலொடு இருக்க முடிவதில்லை
எல்லா தருணங்களிலும்
என்னால்
சுயநலமற்று இருக்க முடிவதில்லை
ஆனாலும்
எல்லா தருணங்களிலும்
மனிதனாக இருக்க முயல்கிறேன்.

01.01.2021.

துளி - 319

 அவன்

புறக்கணிக்கப் படும்போது
பிறக்கிறது புது வருடம்
புறக்கணிப்பு புதிதுயில்லை
அவனுக்கு
புறக்கணிப்பை புறக்கணித்து
புறப்படுகிறான்
புதிய பாதையில்
புதிய நம்பிக்கையோடு...

01.01.2021.

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...