4.27.2019

பதிவு . 23

எங் கதெ – இமையம்
‘’ மனிதன் மகத்தான சல்லிப் பயல் “ - ஜி.நாகராஜன்.
இமையத்தின் கதைகளம் பெரும்பாலும் கடலூர் மாவட்ட கிராம வாழ்வு சார்ந்து இருக்கும். புறக்காட்சிகள் துலக்கமாக இருக்கும். ’’ எங் கதெ ‘’ நாவல் அல்லது நெடும்கதையும் அங்குதான் நிகழ்கிறது. ஆனால் இதில் அக உணர்வு சார்ந்து மேலோங்கியுள்ளது.
இமையம் ஒரு மனிதனின் கதையை சொல்வதினூடாக சமூகத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் மிக நேர்மையாக தன் படைப்புகளில் தொடர்ந்து ( கால் நூற்றாண்டு ) பதிவு செய்து வருகிறார்.
ஒரு ஆண் திருமண பந்தத்துக்கு வெளியே ஏற்படுத்திக்கொண்ட உறவினால் அடையும் இன்பம் துன்பம் பற்றிய கதைதான் இது என்றாலும் மனித உறவுகளின் சிக்கல்களையும், குடும்பம் தரும் பாதுகாப்பையும் இந்த கதையில் காணலாம்.
ஒரு குற்றவாளி தன் பக்க நியாயத்தை வாக்குமூலம் கொடுப்பதுபோல இந்த கதையின் நாயகன் (விநாயகம்) தனக்கும் கமலாவுக்கும் இருந்த உறவின் கதையை தொடக்கம் முதல் இறுதி வரை சொல்கிறான். பதின் பருவத்தில் மட்டுமல்லாமல் எல்லா காலத்திலும் மனிதர்கள் காதல் அல்லது காமம் சார்ந்து ஈர்ப்போடுதான் இருக்கின்றனர். இதனாலேயே வாழ்வு ஒரே சமயத்தில் மகிழ்ச்சியாகவும், துன்பமாகவும் இருக்கிறது.
விநாயகத்தின் வாழ்விலும் அப்படிதான் முதலில் எது அவனுக்கு பெரும் மகிழ்சியை தந்ததோ அதுவே பிறகு பெரும் துன்பத்தையும் பரிசளிக்கிறது. எதை கண்டு அவன் கொலைவெறிக்கு உள்ளாகிறானோ, அதுதான் பிறகு அவனை விலகி செல்லவும் தூண்டுகிறது.
வாசிக்க தொடங்கியதும் ஒரே மூச்சில் வாசித்துவிட தூண்டும் வகையில் இமையம் சிறப்பாக கதை சொல்லியுள்ளார். ஆனால் வாசித்து முடித்த பின் வாழ்வு சார்ந்து நம்முள் ஏற்படும் சிந்தனை ஒரே நாளில் முடிந்துவிடாது. வழக்கம் போல் க்ரியா பதிப்பகம் இந்நூலை சிறப்பாக பதிப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...