12.31.2022

பதிவு.65

 காரைக்காலம்மையார் பாடல்கள்

மனிதந்தான் கடவுளைப் படைத்தான் என்று முழுமையாக நம்புகிறேன். அதேவேளையில் கவிதை மற்றும் கதைச் சுவைக்காக உலகையே ஆண்டவந்தான் படைத்தான் என கூறும் பக்தி இலக்கியங்களையும் படிக்க விரும்புகிறேன். இதே காரணத்திற்காக சில தேர்ந்த சமய சொற்பொழிவாளர்களின் சொற்பொழிவுகளையும் ஆர்வமுடன் கேட்கிறேன்.
காரைக்காலம்மையார் பாடல்கள் என்ற இந்த புத்தகத்தில் மூத்த திருப்பதிகம் 1&2, திரு இரட்டை மணிமாலை மற்றும் அற்புதத் திருவந்தாதி என்ற நான்கு சிறுநூல்கள் அடங்கி இருக்கிறது.
நவீன இலக்கிய விமர்சகர் ந.முருகேசபாண்டியன் இந்த பாடல்களை தொகுத்தோடு உரையும் எழுதியுள்ளார். நான்கு வரி பாடல்களுக்கு இவரும் நான்கு அல்லது ஐந்து வரிகளில் சிறப்பாக உரை எழுதியுள்ளார்.
மூத்த திருப்பதிகம் 1&2 இரண்டிலும் தலா பதினொரு பாடல்கள் இருக்கின்றன. இந்த பாடல்களில் எல்லாம் சிவன் நடனமாடும் இடம் என சொல்லப்படும் சுடுகாடும், சுடுகாட்டில் வாழும் பேய்களும், அவற்றின் விளையாட்டுகளும், பிணம் எரியும் நெருப்பு மற்றும் புகை இவற்றை பிண்ணனியாக வைத்து, சிவன் நடனமாடும் விதத்தையும், அவன் நடனம் ஆடும்போது அவன் உடுப்புகளும், ஆபரணங்களும் என்ன என்ன தோற்றம் தருகின்றன என்ற வர்ணனைகளும் இடம்பெறுகிறது.
பாடல்கள் முழுமையாக புரியாவிட்டாலும் உரையின் மூலம் பாடல்களின் கற்பனை புரியும்போது பிரமிப்பாக இருக்கிறது.
வெண்மதிக்கு பயந்த இருள் எல்லாம் ஒன்றாக கூடி சிவனின் கழுத்தில் மருவாக இருக்கிறதாம், சுடுகாட்டில் எரியும் நெருப்பின் பிண்ணனில் சிவன் நடனமாடுவதால் அவன் சிவப்பாக தெரிகிறானா அல்லது சிவனின் சிவந்த உடலின் செம்மைதான் தீச்சுடரின் சிவப்பாக ஒளிகிறதா என்றும், உடலின் பாதியாக இருக்கும் நிலமகள் பார்வதி, தலையில் இருக்கும் சலமகளான கங்கை இருவரில் உனக்கு யாரை பிடிக்கும் சிவனே என கேட்கிறார். இப்படியாக வியந்தும் நயந்தும் எள்ளலோடும் சிவனைப் பார்த்து கேள்விகளை எழுப்புகிறார் காரைக்காலம்மையார்.
இந்த பாடல்களுக்கு இன்னும் கொஞ்சம் விரிவான உரையும், உரைவிளக்கமும் எழுதலாம் என்றே தோன்றுகிறது. நிறைய கிளைக்கதைகள் வெறும் குறிப்புகளாகவே இருக்கிறது.
இந்த பாடல்கள் குறித்தும் புனிதவதி என்ற காரைக்காலம்மையார் குறித்தும், ஆன்மீக உலகில் பெண்களின் நிலை என்னவாக இருந்தது, அதை புனிதவதி எப்படி கடந்தார், கவிதையில் அவருடைய இடம் என்ன என்று விளக்கி ந.முருகேசபாண்டியன் ஆழமான தொகுப்புரை ஒன்றும் எழுதியுள்ளார். அவருக்கு பாராட்டுகளும் நன்றிகளும்.
இந்த புத்தகத்தை டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சிறப்பாக வெளியிட்டுள்ளது. இதன் முதல் பதிப்பு ஆகஸ்ட் 2019-ல் வெளியாகியுள்ளது. 29.12.2022.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...